Thursday, April 27, 2017

Miracle - Periyavaa

!! "காஞ்சி மகா குருவின் கருணை"!!  

பல்லயம் போடு

பெரியவாளிடம் வினோதமான ப்ரார்த்தனையோடு வந்தாள் ஒரு அம்மா……..தன்னுடைய குண்டுப்பையனை அழைத்துக் கொண்டு!

" பூணல் போடற வயஸாச்சு…பெரியவா! இந்த என் பிள்ளையாண்டான் குண்டோதரன் மாதிரி எத்தனை ஸாப்ட்டாலும் "இன்னும் பசிக்கறது, இன்னும் பசிக்கறது"ங்கறான்….

….இவனுக்கு ஸாதம் போட்டு கட்டுப்படியாகல பெரியவா. ஆத்துல எப்பவுமே ஒரு கச்சட்டி ஸாதம், தயாரா வெச்சுக்க வேண்டியிருக்கு…..பாக்கறவால்லாம் 'குண்டா ! குண்டா!'ன்னு கேலி பண்றா ! பெரியவாதான் பரமேஶ்வரனாச்சே! இந்த குண்டோதரன் பசியை தீத்து வெக்கணும்…."

அழுது கொண்டே அவருடைய பாதங்களில் விழுந்தாள்.

பெரியவா மற்றவர்களை குசலப்ரஶனம் விஜாரித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அந்த அம்மாவை கூப்பிட்டார்…

"ஒங்க க்ராமத்ல,…. மாரியம்மன் கோவில் இருக்கோ?"…..

"இருக்கு பெரியவா"

"அம்பாளுக்கு பால் பல்லயம், தயிர் பல்லயம், சக்கரைப் பொங்கல் பல்லயம் போட்டு நைவேத்யம் பண்ணு. நெறைய பழங்கள், வெத்தலை பாக்கு படைக்கணும். அப்றமா, பல்லயம் போட்ட அந்த அன்னத்தை, ஒம்பையனை ஸாப்ட சொல்லு. பண்றியா?"

பல்லயம் என்றால், ஸமைத்த உணவுப் பண்டங்களை ஸ்வாமி எதிரில் பெரிய இலை போட்டு பரிமாறுவது.

" பெரியவா உத்தரவு…ஒடனே பண்ணிடறேன்"

நமஸ்காரம் பண்ணிவிட்டுச் சென்றாள்.

உடனேயே மாரியம்மன் கோவிலில் பல்லயம் போட்டாள். பையனைக் கூப்பிட்டாள்…

" வாப்பா, இந்த எலைலேர்ந்து ஒனக்கு வேணுங்கறதை எடுத்து ஸாப்பிடு"….

'ஆஹா! அம்மா! இத்தனையும் எனக்கா! '….

ஆவலோடு இலைக்கு அருகில் சென்று பார்த்தவன், அடுத்த க்ஷணம்,

" ஐயோ, அம்மா! எனக்கு ஸாதமே வேணாம்….!"

கூச்சலிட்டபடி அங்கிருந்து ஓடி விட்டான்!

அம்மாக்காரிக்கு ஒன்றும் புரியவில்லை!

வீட்டுக்கு போனபின் அம்மா கேட்டாள்……

"ஏண்டா ப்ரஸாதம் ஸாப்டாம ஓடிட்டே?"

"ஐயோ !அம்மா! ப்ரஸாதமா அது? ஒரே ரத்தமும் மாம்ஸமும்-னா அங்க இருந்தது! பயம்மா இருந்துதும்மா!"

மறுநாள் காலை பெரியவாளை தர்ஶனம் பண்ண, பையனுடன் வந்தாள் அந்த அம்மா.

" பெரியவா சொன்ன மாதிரி பல்லயம் போட்டுட்டேன். பிள்ளையாண்டான் அத ஸாப்ட மாட்டேன்னுட்டான்! எல்லாம் ஒரே ரத்தமா, மாம்ஸமா தெரிஞ்சுதாம்! ரொம்ப பயந்துட்டான் பெரியவா!.."

"ஸெரி…. ஆத்துக்குப் போயி, அவனோட துணிமணி, புஸ்தகம், நோட்டு, பேனா, பென்ஸில், படுக்கை, தலகாணி எல்லாத்தையும் ஊருக்கு வெளில தூ…க்கிப் போட்டுடு. அவனுக்கு எண்ணை தேச்சு, மங்கள ஸ்நானம் பண்ணி வெச்சு, புது ட்ரெஸ் போட்டு, மாரியம்மன் கோவில்ல அர்ச்சனை பண்ணு. அப்றமா ஆஹாரம் குடு. ஸெரியாய்டுவான். கவலப்படாத போ!.."

ப்ரஸாதம் தந்தார்.

பெரியவா சொன்ன அத்தனையையும் செய்தாள். பையன் ஸமத்தாக கோவிலுக்கு போனான், வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளையும் போல் ஸாப்பிட ஆரம்பித்தான்! பசி, பசி என்ற நச்சரிப்பு இல்லை!

மாலை தர்ஶனம் பண்ண வந்தபோது, விபூதி ப்ரஸாதம் குடுத்தார்.

" சீக்ரமா பையனுக்கு பூணூல் போடு"

அந்த அம்மா கண்ணீரோடு நமஸ்கரித்தாள்.

இதில் யாருக்கும் விளங்காத புதிர் என்னவென்றால், பையனுக்கு பசியை உண்டாக்கியது எது? துர்தேவதை என்றால், பல்லயம் போட்ட ப்ரஸாதங்கள் அவனுக்கு மட்டும் வித்யாஸமாகத் தெரிவானேன்? அவனுடைய பொருட்களை எல்லாம் ஏன் தூக்கி போட சொன்னார்?

ஆர்யாம்பா வயிற்றில் பிறந்த பரமேஶ்வரனின் மறு அவதாரத்தின் அபார ஶக்தியை, அந்த மாரியாம்பாவே அறிவாள்!!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

No comments:

Post a Comment