Friday, April 21, 2017

Do not die with sadness

வாழ்க்கையில் சில வருத்தங்கள் 
J.K. SIVAN

இந்த உலக வாழ்க்கை சாஸ்வதமானதல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்துப் பார்ப்பதே இல்லை என்பது தான் ஆச்சர்யம்! காலன் வருமுன்னே, கண் பஞ்சடையுமுன்னே, கடை வாய் பால் வழியுமுன்னே குற்றாலத்தானை நினை என்று பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

​சிலருக்கு தங்களது கடைசி நேரத்தில் ''அடாடா நாம் இப்படி வாழ்ந்திருக்கலாமே , வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டோமே'' என்பது போன்ற சில எண்ணங்கள் தோன்றலாம். ​அப்படி நெஞ்சை அரிக்கும் சமயம் நம்மால் ஒன்றும் பண்ண முடியாத நிலையில் அல்லவா இருப்போம்?

தங்கம்மா சேச்சி ​ஒரு நர்ஸ். விசித்ரமானவள். கடைசி கணத்தில் உயிரை இழுத்து பிடித்துக்கொண்டு மன்றாடும் சில நோயாளிகளுக்கு சிச்ருஷை செயது, அவர்களை கவனித்துக் கொண்டவள். சிலரோடு பேசிய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்யத் தவறிய, சில வருத்தங்களை அவளிடம் மனமுருகி கொட்டினதை எழுதி வைத்தாள் . அப்படி சிலர் என்ன வருத்தத்தோடு போய் சேர்ந்தார்கள்?

''எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்தேனே .எல்லாமே வீணாகி விட்டதே?, வாழ்க்கை பாழானதே. தைரியமாக பதில் சொல்லாமல் போனது தவறு, எதிர்த்திருக்கவேண்டும். கோபாலனோடு பேசாமல் இருந்தது தவறு. சுப்புலெட்சுமியை அப்படி துன்புறுத்தி இருக்க வேண்டாம்'' இப்படி எல்லாம் வருத்தங்கள் எத்தனை எத்தனையோ தோன்றும். அதெல்லாம் நிறைய அந்த நர்ஸ் குறித்து வைத்திருந்தாள் .

​மற்றவர்கள் அனுபவம் நமக்கு ஒரு வழிகாட்டி. எனவே தான் ஒரு சிலரின் இத்தகைய எண்ணங்களில் நமக்கு எது உதவும் என்பதை கொஞ்சம் கோடி காட்டுகிறேன். ''அப்போதைக்கு இப்போதே சொன்னேன்'' என்று சொன்ன ஆழ்வார் எவ்வளவு கெட்டிக்காரர்.

நமக்கும் இத்தகைய எண்ணங்கள் தோன்றி மரணப் படுக்கையில் இருக்கும்போது நம்மை ''படுத்தாமல்'' இருக்கவே தான் இது.

​வருத்தம் 1. 
 ''நான் தைரியமாக எனக்கு நானே உண்மையாக வாழ்ந்திருக்கவேண்டும். பிறர் எதிர்ப்பார்த்தது போல் வாழ்ந்திருக்க கூடாது''.

இது இப்போதே நம்மை நாம் விரும்பிய பாதைக்கு இட்டுச் சென்று தைரியமாக வாழ்க்கையை எதிர்நோக்கி காலை எடுத்து முன் வைக்க உதவும். பொய்யான வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.தைர்யம் தேவை. குடும்பத்திலோ, நட்பு வட்டாரத்திலோ என்ன எதிர்பார்க்கிறார்களோ அப்படி எதற்கு வாழவேண்டும். நீ நீயாகவே இரேன்'' என்று எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்களே. இனிமேலாவது இப்போதுமுதல் கேட்போம். நடப்போம்.

வருத்தம் 2.​
​''ஏன் தான் மாங்கு மாங்கு என்று இப்படியெல்லாம் உழைத்ததேனோ?''அத்தனையும் வீணாய்விட்டதே''​

நாம் வாழும் இந்த உலகில் எல்லா கடிகார முள்களும் வேகமாக சுழல்கின்றன. நேரமே யாருக்குமே கிடையாது. பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் பேசவோ, குழந்தைகளுக்கு அப்பா அம்மாவுடன் கொஞ்சவோ நினைத்தால் அது கனவு. நினைவு தெரிந்தநாள் முதல் ஆயாக்கள். யாரோ பாசமற்ற அறிமுகமாகாத முகங்களோடு தான் உறவு. பின்னாலே ஒட்டவே இல்லை என்றால் எப்படி ஓட்டும்? இதிலிருந்த தப்ப என்ன வழி?

எது எனக்கு அவசியம்? எது அத்யாவஸ்யம்? எது முன்னாலே, எது பின்னாலே,என்பதை தேடித் தெரிந்து
கொள்ளவேண்டும். ஜிக்கு என்று கூப்பிடும் மனைவியின் சிவகாம சுந்தரி என்கிற முழுப்பெயர் கூட தெரியாத அவசர கணவர்களுக்கு அவள் பிறந்தநாளா கவனத்தில் இருக்கும்?

சிலர் எப்படி இதெல்லாம் சரியாக ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்? எல்லோருடனும் அன்பாக பழகுகிறார்கள்?

யாருக்காவது ஏதாவது நமக்கு தெரிந்ததை சொல்லவேண்டும், முடிந்ததை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது? எல்லோர் கடிகாரத்திலும் சுழலும் முள்கள் ஒரே ஸ்பீட் தானே. ஆமாம். பில் கேட்ஸ் முதல் பிச்சாண்டி வரை எல்லோருக்கும் 24 x 7x 365 தானே.

எதை எப்போது எப்படி செய்யவேண்டும் என்று தீர்மானம் இப்போதே செய்து கொள்வோம். அதை முடிப்போம். பின்னால் தங்கம்மா சேச்சியிடம் இது பற்றி வருந்தவேண்டாமே.

​வருத்தம் 3 ''பயம், பயம், எதற்கெடுத்தாலும் சொல்வதற்கு செய்வதற்கு பயம்'' இதனாலேயே என் வாழ்க்கை தைர்யம் இல்லாமே அழிஞ்சு போச்சு''

உனக்கு யார் மேலாவது அன்பா? வெளிப்படுத்த பயமா? யார் மேலாவது அருவறுப்பா, அதை வெளியே சொல்ல பயமா? பிடித்ததையும் பிடிக்காததையும் சொல்ல, செய்ய, பயத்தால் வாடாதே.

எல்லாமும் எல்லோரும் இருந்தாலும் எங்கோ தனித்தே ஏங்கி ஏகாங்கியாக வாழ்பவர்களாக இருக்க வேண்டாம். உன்னை சூழ்ந்திருக்கும் கட்டிப்போட்டிருக்கும் பயத்தை உதறித் தள்ளு. மனச்சாட்சியை கலந்து ஆலோசி. எது சரி. எது தவறு என்று அறிந்து செயல்படு. பிடிவாதம் சில நேரம் இப்படி செய்யவிடாமல் கழுத்தறுக்கும். ஜாக்கிரதை.

​வருத்தம் 4. ''கோபாலனோடும் சுப்புவிடமும் ​நட்பாக இல்லாமல், பேச்சு வார்த்தையே இல்லாமல் போய் வி ட்டேனே ''

​வாழ்க்கை வசதிகள் உயர்ந்தவுடன் பழைய ஏழை நண்பர்களை, சாதாரணர்களை இகழவோ, உதறிவிடவோ வேண்டாம். ​ பிரிவு பட்ட நட்பை அவர்கள் வந்து மீட்க காத்திருக்காமல் நானே முயற்சி எடுக்கலாமே. பழசை மறக்கலாமே. சிரிக்கலாமே . இதயத்தை, மனத்தை, விசாலமாக்கிக் கொள்ளலாமே.

வருத்தம் ​5. ''நான் சந்தோஷமாக இருந்திருக்கலாமே?''

​யார் வேண்டாம் என்றது? எதை எடுத்தாலும் தப்பு கண்டுபிடித்து எல்லோரையும் விரட்ட வேண்டாம். யாரையும் புண்படுத்த வேண்டாம். ​​கட்டின வீட்டில் பழுது சொல்வது ரொம்ப தப்பு. முட்டாள்தனம்.​பணம் சந்தோஷத்தை தரவே தராது. எதையோ தேடி அலைந்து அது சுகம் தரும், சந்தோஷம் தரும் என்று நேரத்தை வீணாக்குவது கானல் நீரைத்தேடி ஓடி தாகம் தீர்த்துக் கொள்ள முயல்வதற்கு சமம்.

​துன்பங்களோ, கஷ்டங்களோ வெளியில் இருந்து நம் அட்ரஸ் தேடி வந்து நம்மை சேர்வதில்லை. நமக்குள்ளேயே பிறந்து வளர்வது. ​

​ஒரு அருமையான ஸ்லோகம் தினமும் சொல்கிறோமே .

'காயே ந வாசா மனசேர்ந்த்ரியைர்வா புத்யாத் மனாவா கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி (कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतेः स्वभावात्| करोमि यद्यत् सकलं परस्मै नारायणायेति समर्पयामि||​

​''​​நாராயணா, ​ என் உடலாலும், மனதாலும், புலன்களாலும் புத்தியாலும், ஆத்மாவின் உந்துதலாலும் இயர்கையான என் குணத்தாலும் எதை எப்போது செய்தாலும் அது உனக்கே, என்று உன்திருவடியில் சமர்ப்பிக்கிறேன் ''

அர்த்தம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது பார்த்தீர்களா. இதுபோல் கொள்ளை கொள்ளையாக இருக்கிறது நமக்கு தான் தெரியவில்லை.

No comments:

Post a Comment