Friday, March 3, 2017

Tiruvarur temple part6

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                 *(6)*
☘ *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*சுண்ணச்சுதை சிற்பங்கள்.*
மேலைக் கோபுரத்திலுள்ள பல தொகுதி சுண்ணச்சுதைச் சிற்பங்களில் சிவபுராணக் கதைகள் இடம்.பெற்றுள்ளன. 

இவற்றுள் இக்கோபுரத்தின் தென் திசையில் இடம் பெற்றுள்ள சரபமூர்த்தி சிற்பம் குறிப்பிடத்தக்கதாகும்.

 இரணியனின் ஆணவத்தைக் களைந்த நரசிம்மன், உதிரவெறியால் தேவர்களையே தாக்க முற்பட்ட போது கயிலயம்பதியோன் திருவருளால் அவரது அம்சமான வீரபத்திரர் சிம்புள் எனும் சரபவடிவமெடுத்து நரசிம்மத்தை அழித்தார்

சரபோ உபநிஷத், சரபபுராண அடிப்படையில் அமைந்த சரபவடிவம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிம்ம உடலும், சிறகுகளும் கொண்டு சரபம் விண்ணிலிருந்து இறங்கி நரசிம்மத்தை அழிக்கும் காட்சி  அரிய ஒன்று. கற்சிற்பங்களாலும்,கலைமிகு சுதைகளாலும் ஆரூரின் பெருமைகள் பறைசாற்றி விவரிக்கின்றது.

*சிங்காதனத்து ஓவியங்கள்.*

வரலாற்றுக் காவியங்களைப் பெற்ற பாங்காலும் ஆரூர் திருக்கோயில் சிறந்ததொரு ஓவியக் கருவூலமாகத் திகழ்கிறது. கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் சிங்காதனம் என்ற ஓவியன் தஞ்சை மராத்திய மன்னன் சகஜியின் ஆதரவால் இந்த அற்புதக் கலைக்கூடத்தைப் படைத்தான்

இம்மண்டபத்தின் சுவர்களும், விதானங்களும் சிங்காதனத்தின் தூரிகையின் துணைகொண்டு வண்ணப் பொலிவு பெற்றன. 

மனுநீதிச் சோழனின் மாக்கதையும், முசுகுந்த புராணமும் வண்ணக் கலவையால் பேசுகிறது. இம்மண்டபத்தின் வடக்குப்புறச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும் மனுநீதிச் சோழனின் கதையின் வண்ண ஓவியத் தொகுப்பு,  காலவோட்டத்தில் பொலிவிழந்து மங்கித் தெரிகிறது. ஆனால் விதானத்தில் இடம் பெற்ற முசுகுந்தன் கதை இன்றளவும் புதுப்பொலிவோடு காட்சி தருகின்றது.

தமிழகத்தில் மலர்ந்த நாயக்கர்கள் கால ஓவியப் பாணியில் அமைந்த இந்த ஓவியத் தொகுப்பில் ஒவ்வொரு காட்சிக்கும் கீழ் அக்காட்சி பற்றின விளக்கங்ஙளை தமிழில் வரையப்பற்றிருக்கின்றன. 

இரண்டு இடங்களில் துவங்கும் முசுகுந்த புராணத் தொகுப்பு இடையே சங்கமித்து, பின்பு புதியதொரு கதைத் திருப்பத்துடன் தொடர்கிறது.

தேவர் உலகத்தில் நிகழ்ந்த வாரகலி அரசுடன் சண்டை இந்திரன் முசுகுந்தன் துணை நாடல் முசுகுந்தன் துணையுடன் வெற்றி பெறுதல் போன்ற காட்சிகள் ஒருபுறமும் திருமால் குழந்தை வேண்டி யாகம் செய்தல் சிவனருளால் சோமாஸ்கந்தர் திருமேனி பெறுதல், திருமாலுக்கும் வாரகலி அசுரனுக்கும் சண்டைக்காட்சி அரம்பையர் ஆடுதல் போன்ற காட்சிகள் நன்காகின.

இந்திரனும் திருமாலும் சந்தித்த பின்பு சோமாஸ்கந்தர் திருமேனியை இந்திரன் பெறுதல் ஆகிய காட்சிகளை அடுத்து முதற் தொகுதியும் இரண்டாம் தொகுதியும் இணைந்து புதிய காட்சித் திருப்பம் தெரிகின்றது.

தேவர் உலகத்திற்குச் சென்ற முசுகுந்தன் இந்திரனின் சூழ்ச்சியை வென்று தியாகராஜர் திருமேனியோடு ஆறுவிடங்க மூர்த்திகளையும், திருவாரூருக்கு எடுத்து வருதல் ஆரூரின் பத்து நாள் விழாக் காட்சிகள், திருக்கோயிலமைப்பு, நகரின் முக்கிய மனிதர்கள் கூத்து மற்றும் இசை நிகழ்ச்சிகள், பரத அபிநயங்கள், வாண வேடிக்கைகள், போன்ற பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இவ்வோயத்தின் தொகுப்பு  பதினேழாம் நூற்றாண்டில் ஆரூர் எவ்வாறு இருந்தது, எத்தனை விழாக்கள் நடந்தேறின, மக்களின் உடை, அவர்களின் அணிகலங்கள், வாணவெடி தயாரிப்பதில் அவர்களிடம் மெத்திருந்த திறன், நகரிலுள்ள முக்கிய நபர்கள், கூத்துக்களின் வகை வரிசைப்பாடுகள், இசைக் கருவிகள் பற்றின செய்திகள் ஆகிய அனைத்தையும் இன்று நம் கண்முன்னே நிறுத்திய காலக்கண்ணாடியாகத் திகழ்கிறது.

நாட்டியத்தின் பெயர்கள், வாணங்களின் பெயர்கள், இசைக்கருவிகளின் பெயர்கள், அதை இயக்கயதிற்கானவர்களின் பெயர்கள், போர்ப்படைப் பற்றிய குறிப்புகள், ஆகியனைத்தும் அந்தந்த ஓவியங்களிலிலே எழுதி வரையப்பட்டுள்ளன.

அனைத்திலும் மகுடமாக இவ்வோவியன் தான்படைத்த ஓவியத் தொகுதியில் ஐந்து இடங்களில் தனது ஓவியத்தையும் எழுதி அதனருகே இந்தச் சித்திரம் எழுதுகின்ற சித்திரவேலை  *"சிங்காதனம் சதாசேவை"* என குறிப்பும் காணப்படுவது புதுமையாகும்.

              திருச்சிற்றம்பலம்.
*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*