Monday, March 13, 2017

Tiruvarur temple part11

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(11)*
🌺 *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.*🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கடலரசனாகிய வருணனிடம் திருமகள் வளர்ந்து வந்தாள். 

திருமால் மதுகைடபர் என்ற அசுரர்களை வென்ற வரலாற்றைக் கேட்டு அவரையே  மணந்து கொள்ள வேண்டும் என்று, இத்தலம் அடைந்து திருமூலட்டானேசுவரரை வழிபட்டுத் தவம் செய்து வந்தாள். 

இறைவன் காட்சி தந்து அவ்வாறே வரமருளினர். திருமகள் என் பெயரால் இந்நகரம் வழங்க வேண்டுமென்றும் விண்ணப்பித்தாள். அதுமுதல் இத்தலம் கமலாலயம் என்று அழைக்கப் பெறுகிறது.

ஒரு காலத்தில் கோடி முனிவர்கள் வந்து தரிசித்தபொழுது வன்மீகநாதர் கோடியளவான  திருவுருவங்களைக் கொண்டு காட்சியளித்தனர். முனிவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி வழிபாடாற்றினர். சிவப்பேறு எய்தினர்.

திலீபன் மகனாகிய அசன் என்னும் அரசன் நால்வகைச் சேனையுமின்றி அரசாளும் முறை என்ன என்று குல கருவாகிய வசிட்டனை வினவினான்.

அதற்கு வசிட்டன், திருவாரூர் சென்று வன்மீகநாதரை வழிபட்டு அவரருளால் துர்க்கையை நிலைபெறுவித்து வழிபாடு செய்யின் அது இயலும் என்று கூறினார். அசன் அரசனும் திருவாரூர் சென்று வழிபாடு செய்தவனானான். 

அசன் மகனாகிய தசரதன் ஆட்சிக் காலத்தில் உரோகிணி நட்சத்திரத்தை ஊடறுத்துச் சனி செல்வதைச் சோதிடர் மூலமாக அறிந்து, சனியைத் தடுக்கவெனச் சனி மண்டலத்தை அடைந்தான்.

சனியைக் கண்டு தேவரீர் உரோகினியை ஊடறுத்தால் உலகம் பஞ்சம் உண்டாகுதலைச் சந்திக்கும். ஆதலால் நூற்று நான்கு யுகம் வரையும் உரோகினியை ஊடறுத்தல் ஆகாது. 

என் வார்த்தையை மீறின் என்வாளுக்கு இரையாவீர் என்றான். சனி அரசன் துணிவைக் கண்டு மெச்சிக் கருணைகூர்ந்து அவன் வேண்டிய வரத்தையும், கூடுதலாக மேலும் சில வரங்களையும் கொடுத்தான்.

இதனைத் தெரிந்துவிட்ட இந்திரன் தசரதன் நட்பைப்பெற வேண்டித் தன் உலகிற்கு அழைத்து விருந்தியற்றி உனக்கு ஏதாவது குறையுள்ளதோ என்றான் என்னரசாட்சி இனிமையாய்ச் செல்லுகின்றது. ஆனால், பிள்ளையில்லாக்குறை பெரிதாயிருக்கின்றது என்றான்.

அப்படியாயின் கமலாலயம் சென்று வன்மீகநாதரை வழிபட்டால் நீ எண்ணியது எய்துவாய் என்ன தசரதன் அவ்வாறே வந்து வழிபட்டு இறைவன் அருள்பெற்றுச் சென்று யாகஞ் செய்து இராமன் முதலிய நால்வரையும்  பெற்று இன்பம் எய்தினான்.

அவ்வாறே சித்தீசன் என்னும் அரசனும் புத்திரப்பேறு எய்தினான். குலிசேசன் என்னும் அரசன் பாரணைப் புண்ணிய காலத்தில் துருவாச முனிவருக்கு ஊன் கலந்த சோற்றையிட்டான். 

துருவாசர் சபித்தார்.

அச்சாபத்தை இத்தலத்து வன்மீகநாதரை வழிபட்டுப் போக்கி உய்ந்தான். அவ்வாறே மன்மதன், மேனகை முதலியவர்களும் வழிபட்டுச் சாபம் நீங்கினர்.

பசுவைத் தேடிக் கொண்டு வணிகன் ஒருவன் வன்மீகரை வலம்வர அதனால் மறுமையில் மன்னனாயினான் இராமன், குசன், லவன், சமற்காரன் என்னும் அரசன். கோகருணர் என்னும் முனிவர் ஒருவர் கேமசருமன் முதலியவர்களும் வழிபட்டுப் பேறு பெற்றனர்.

          திருச்சிற்றம்பலம்.
*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment