Monday, March 27, 2017

Kurai onrum illai - Mukkur swamigal

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 7

பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார்.  சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார்.  வந்து சேவை  கொடுக்கிறார்.  அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.  ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார்.  அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான்.  இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை  ஆனால் அவர் ரொம்ப சதுரர் - கெட்டிக்காரர் - பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள்.  உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார்.

உடனே பரமாத்மா கேட்டானாம் - இவ்வளவு கேட்கிறீரே ... நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா? 
உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி? என்றார் பக்தர். 
என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா? பகவான் கேட்கிறார்.
அதைத்  தெரிஞ்சு வச்சுண்டுதான் அதைக் கொடுக்க வந்தேன். 
என்னது அது?
கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன் நீ சஞ்சாரம் பண்ணினாய் அல்லவா .. அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை.. அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்.. என்றார் பக்தர். 
பகவான் பதிலே சொல்லலை.  வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆகவே மனசை சமர்ப்பிக்கணும்.  தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன்.? எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி என்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்.
பூரணனான  அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான்.  இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான்.  நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள், ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது.   
 
திவ்யாபரணங்கள் அவனுக்கு உண்டா? அவற்றை ஏன் தாங்கியிருக்கிறான்?   விச்வமாய்க் காட்சி அளிப்பவனே;  தாமரைக் கண்ணனே, உனக்கு ரூபம் கிடையாது.  ஆயுதம் கிடையாது, ஆகாரம் கிடையாதுன்னு அதைச் சொல்கிறோமே.. அவையெல்லாம் உனக்கு இருப்பதைப் பார்த்துக் கொண்டே சொல்கிறோமே என்று கேட்கலாம். ரூபம் இருக்கிறது என்றால் அது அவன் பொருட்டு அல்ல.  பக்தர்கள் சேவித்து மகிழ்வதற்காகதான் இருக்கிறது. அவனுக்கு ஆயுதங்கள் இருக்கிறது என்று சொன்னால், அவை நம் இடுக்கண் களைய அவன் தரித்தவை.  அவன் பொருட்டு அல்லாமல் நம் பொருட்டு தான் அவன் அவற்றை ஏந்துகிறான்.  ஆபரணங்கள்.  திவ்யமேனியில் இவ்வளவு திருவாபரணங்கள் தரித்திருக்கிறானே. ஆபரணத்துக்கு அழகு செய்யும் பெருமாள்; முன்னழகைக் காட்டிலும் பின்னழகு விஞ்சி நிற்கும் பெருமாள், என்று பராசர பட்டர் ஸ்ரீ ரங்க நாதருக்குக் கட்டியம் சொல்கிறார்.

ஒருத்தர் ஒரு லட்ச ரூபாய் செலவில் பெருமாளுக்கு முத்துக் கொண்டை  செய்வித்தாராம். அதை அணிவித்து கற்பூர ஹாரத்தி காட்டி சேவிக்கிறார்கள் எல்லோரும்.  "ஆஹா" அவன் எவ்வளவு அழகா இருக்கான்" என்கிறார்கள்.  இப்படிச் சொன்ன வார்த்தை ரொம்ப அபசாரமான வார்த்தை.  இந்த முத்துக் கொண்டை இல்லையென்றால் அவன் அழகன்  இல்லையா?

உபசாரமாய்ச் சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லணும்.  "அவன் திருமேனி சம்பந்தப்பட்டதனால் அல்லவோ இந்த முத்துக் கொண்டை இவ்வவளவு சோபை பெற்றது" என்று சொல்ல வேண்டும்.  அதே மாதிரி தான் இந்த ஆத்மாவும்.  அவன் திருவடிக்கு அர்ப்பணமானதினாலேதான் அழகு பெறுகிறது.  இந்த சரீரத்திலே அது உட்கார்ந்து கொண்டுருந்தால் அதற்கு அழகு ஏது?இன்னதால் தான் அவனுக்கு அழகும் தேஜசும் உண்டாகின்றன என்று சொல்ல முடியாத அளவுக்கு சர்வத்தையும்,  தன்னுள்ளே அடக்கி, காத்து, அழிக்கும் படியான ஆற்றல் கொண்டவன் பரமாத்மா. ருக்மிணீ அவனை புவனசுந்தர் என்று அழைக்கிறாள்.  உலகத்திலேயே அழகுடையவன் நீ ஒருவன் தான்.  நீ எல்லா சராசரங்களுக்குள்ளேயும் 
இருப்பதனாலே அவை அழகு பெறுகின்றன.  அதனாலே உலகத்திலே அழகன் நீ ஒருவன்தான் என்று அர்த்தம்.  
ஒருத்தர் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறார்.  நான் அழகன்தான் என்று அவருக்கு தோன்றுகிறது.  அவரைக் காட்டிலும் பல அழகர்கள் இருக்கலாம்.  அப்படியும் அவருக்கு அப்படித் தோன்றுவானேன்?  அவருக்குள்ளேயும் பகவான் அந்தர்யாமியாய் உட்கார்ந்திருப்பதினாலே தான் அப்படித் தோன்றுகிறது. சுயக்ஜன் என்றொரு (மாணவன்) வித்யார்த்தி இருந்தான்.  தினமும் குருவின் வஸ்திரத்தைத் துவைத்து வைப்பது அவன் பொறுப்பயிருந்தது. அதை எடுத்து உதறி குரு தாமே உலர்த்திக் கொள்வார்.  ஒருநாள் அப்படி உதறிய பொது, மாண்டு போன மீன்கள் அதிலிருந்து உதிர்ந்தன.  அவற்றினால் ஏற்பட்ட அசுத்தம் வஸ்திரத்தில் கறை கறையாகப் படிந்திருந்தது.     
ஆற்று நீரில் வஸ்திரத்தை அலசும் பொது அதில் சிக்கிய மீன்களைக் கவனிக்காமல் சேர்த்துப் பிழிந்திருக்கிறான்.   இவ்வளவு அலட்சியாமா என்று குரு கோபித்துக் கொண்டார்.  உடனே சாபம்தான்.  நீ பன்றியாகக் கடவாய் என்று சாபம் கொடுத்து விட்டார்.  மாணவன் நடு நடுங்கி போய்  விட்டான்.  சுவாமி, பன்றி வாழ்க்கையை நினைத்தாலே நடுக்கமாய் இருக்கு. எப்படியாவது சாபத்தை போக்குங்கள் என்று கெஞ்சினான்.  எனக்கு சாபம் கொடுக்கத்தான் தெரியும், போ, என்று சொல்லி விட்டார் குரு.  சாபம் பலிதமாவதற்குள் சக வித்யார்த்திகளிடம் போனான், நடந்ததைச் சொன்னான்.  
ஆசார்யர் சுமுகமாய் இருக்கிற நேரத்திலே அவரிடம் கேட்டு, நான் எந்த இடத்திலே இருக்கேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  நான் இருக்கிற இடத்துக்கு வந்து என்னை அடித்துக் கொன்று விடுங்கள். என்னாலே அந்த வராஹா ஜன்மத்தைத் தாங்க முடியாது என்று வேண்டிக் கொண்டான்.
உடனே அந்த வித்யார்த்திகள், கூட படிச்சதுக்காக நாங்கள் இதைக் கூட பண்ண மாட்டோமா என்றார்கள்.  சாபம் பலித்துவிட்டது.  ஒரு நாள் சாயங்காலம் குரு சந்தோஷமாக இருக்கிறார்.  வித்யார்த்திகள்  அவரிடம் போய் காலில் விழுந்து, சேவித்து கேட்கிறார்கள். சுயக்ஜன் எங்கே பிறந்திருக்கிறான், அவனுக்கு நாங்கள் உதவணும் என்கிறார்கள். 

குரு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கே ஒரு பன்றி, ஆறு குட்டிகள் போட்டிருக்கும்  அதில் ஐந்து குட்டிகள் கருப்பயிருக்கும்.  ஒரு குட்டி மட்டும் முன்னும் பின்னும் வெள்ளைத திட்டு உள்ளதை இருக்கும் என்று அடையாளம் காட்டுகிறார்.

சீடர்கள், குரு சொன்ன இடத்தில் போய்ப் பார்க்க, அவர் சொன்னபடியே ஆறு குட்டிகளில் ஒன்று மட்டும் வேறுபட்டுத் தெரிந்தது. குரு சொல்லிக் கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொன்னார்கள்.  மற்ற குட்டிகளெல்லாம் ஓடிவிட அது மட்டும் அவர்களின் அருகே வந்தது. எல்லா சிஷ்யர்களும் தடியை ஓங்கிக் கொண்டு தயாரானார்கள்.  அந்தப் பன்றிக்குட்டியோ ஓட ஆரம்பித்தது. . நில்லு, நில்லு,  நீ சொல்லித்தான் வந்திருக்கோம் என்றார்கள்.   அப்போ நான் சொல்லியிருக்கலாம்  ஆனால், இப்போது என்னை அடிக்காதீர்கள்.  என் தாயார் என்னிடம் எத்தனை அன்பாக இருக்கிறாள்.  என்ன பட்டான மேனி இது என்றது பன்றிக்குட்டி.   வித்யார்த்திகள்  விக்கித்துபோய் நிற்கையிலே, என்னை அடிக்கவே அடிக்காதீர்கள் என்று அது ஓடிப் போய்  விட்டது. 

அந்த சிஷ்யர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டு குருவிடமே திரும்பிப் போனார்கள்.  ஆசார்யர், நீங்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பேசாமலிருந்தேன்.  உங்களுக்கு வேண்டுமானால் பன்றி பண்ணுகிற காரியம் அருவருப்பாய் இருக்கலாம்.  ஆனால் அதற்கு அது யோக்யமாய்த்தானே இருக்கு. திருப்தியாத்தானே இருக்கு.  அதனுடைய ஆனந்தத்தை நாம் இல்லாமல் பண்ணி விட முடியுமா என்றார்.  இப்படி ஒவ்வொரு உயிருக்குள்ளேயும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் பகவான் என்பதை தெரிவிப்பது தான் சுயக்ஜன் கதை.  அதனால் தான் அவரவர்க்கு அவரவர் உருவம் உயர்த்தியாகத் தெரிகிறது  அதனாலே எந்த உயிரையும் நாம் அலட்சியம் பண்ணிவிட முடியாது.

பத்து லட்ச ரூபாய்க்கு நோட்டுக்  கட்டாக அடுக்கி வைத்திருக்கு.  நமக்கு அந்த ரூபாய் உயர்த்தியாகத் தெரிகிறது.  அதிலே இரண்டு லட்சம் இருந்தால் உபயோகமாய் இருக்குமே என்று நினைக்கிறோம்.  ஆனால், அங்கேயிருந்து நாலு கட்டெறும்பு வரும். அந்த நோட்டுக் கட்டு மேலே ஊர்ந்து மறுபக்கம் போய்க் கொண்டேயிருக்கும். நமக்கு ரொம்ப உயர்த்தியாய்  உள்ள பொருள், கட்டெறும்புக்குப் பிடிக்கிறதா? அதுக்கு அதன் உயர்வு தெரியவேயில்லை. அப்படியும் ஒரு ஜீவன் உலகத்திலே  ஜீவிக்கிறதில்லையா ?  இதனாலே உலகத்திலே எதுவுமே பரமார்த்தம் இல்லைன்னு தெரியறது.  

பரமாத்மாதான் பரமார்த்தம்.

அவன் அந்தர்யாமியாய் இருந்து, பூரணனாய் இருந்து, பூரணமாய் ஆனந்தம் கொடுப்பதினாலேதான் புவன சுந்தர என்று ருக்மிணீ அவனை அழைத்தாள்.

தொடரும் ...

No comments:

Post a Comment