Wednesday, February 15, 2017

Venkateswara suprabhatam


Courtesy: http://verygoodmorning.blogspot.in/2006/12/4.html

இதோ "ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்".

நம் எல்லாருடைய இல்லங்களிலும் ஒலிக்கும் பாடல்.
விடியற்காலையில் (அல்லது நாம் லேட்டாக எழுந்த பின்னர் :-) )
இதை ஒலிப் பேழையில் போட்டு நம்மில் எத்தனை பேர், எத்தனை முறை கேட்டிருக்கிறோம்!

எம்.எஸ் மற்றும் வேறு பல இசைவாணர்கள் பாடியதோ, இல்லை கோவில் அர்ச்சகர்கள் முழங்குவதோ,
எதுவாயினும் சரி; கேட்கும் போதே 
நம்மைச் சுண்டி இழுப்பது இது.

மிகவும் பல பயனுள்ள தகவல்களை இந்தத் தோத்திரம் உள்ளடக்கி உள்ளது. எனவே வரிகளுக்குப் பொருள் தெரிந்து கேட்பதோடு மட்டும் இல்லாமல், ஆழ்வார் பாசுரங்களோடு பொருத்திப் பார்க்கும் போது, அதன் சுகமே தனி!

எம்பெருமான் சுப்ரபாதத்துக்குப் பொருள் உரைக்கலாம் என்பது எண்ணம். வழக்கம் போல, உங்கள் ஆதரவும், அன்பும் அளிக்க வேண்டுகிறோம்.

ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம் - 1

| கெளசல்யா சுப்ரஜா ராமா |

விடிகாலை சுமார் 3:00 மணி. கூட்டம் அதிகம் இல்லை!
குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம்!

இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலுக்கு அருகே!
கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாமும் நிற்கிறோம்.
துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகரும், ஜீயரும் பூட்டின் சாவியை, துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றனர்.
அன்னமாச்சார்யரின் பூபாள ராகப்பாடல் தெலுங்கில் இசைக்கப்படுகிறது; பின்னர் ஆழ்வாரின் ஈரத் தமிழில் திருப்பள்ளியெழுச்சி; 
சுப்ரபாதம் எல்லாம் அப்பறம் தான்!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்தே ஒலிக்கின்றன;
திருக்கதவம் திறக்கப்படுகிறது!

இருப்பினும் திரை போடப்பட்டுள்ளது!!
கோபூஜை முடிந்து, பசுவுடன், இடையனுக்குத் தான் முதல் தரிசனம் தருகிறான் வேங்கடவன்! அந்தணருக்கு அல்ல!

உள்ளே சயன மண்டபத்தில், தொட்டிலில் தூங்கும் போகஸ்ரீநிவாசனை எழுப்புகிறார்கள்;
அன்றைய நாளின் முதல் தரிசனமாக, சுப்ரபாத சேவை 
என்கிற விஸ்வரூப தரிசனம்!

வெள்ளை ஆடையும், துளசி மாலை மட்டும் உடுத்தி இறைவன்!
மிகவும் எளியவனாக, கள்ளச் சிரிப்போடு காட்சி தருகிறான்.
தமிழில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி 
எழுச்சியும் பாடப்படுகிறது!

அனுதினமும், 
(மார்கழி மாதம் தவிர)
திருமாமணி மண்டபத்தில், துவார பாலகர்கள் முன்னே சுப்ரபாதம் ஓதப்படுகிறது.

எல்லா நாளுமே திருப்பாவை உண்டு தான்!
ஆனா, பிற நாட்களில், பூசையின் போது, தமிழ்/ வடமொழி, இரண்டுமே ஓதப்படும்!
மார்கழியில், வடமொழி தவிர்த்து, தமிழ் மட்டுமே! அதுவும் முதன் முதலிலேயே!

வாருங்கள் எல்லாரும் சொல்லத் தொடங்கலாம்..."கெளசல்யா சுப்ரஜா ராமா பூர்வா..."

கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே 
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

(இரண்டு முறை)

கோசலை குமரா ஸ்ரீராமா பொழுது புலர்கின்றதே
தெய்வீகத் திருச்சடங்குகள் செய்ய எழுந்தருள் புருடோத்தமா...

கெளசல்யா சுப்ரஜா = கோசலை பெற்றெடுத்த திருமகனே!

விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்க இராமனும், இலக்குவனும் சென்ற போது, இள வயது; தாய் தந்தையரை முதல் முறையாகப் பிரிந்திருக்கும் நிலை; அதனால் தான் முதலில் தசரதன் அனுப்பத் தயங்கினான்; இதையெல்லாம் மனத்தில் நினைத்தார் முனிவர்; என்ன தோன்றியதோ அந்தக் கோபக்கார முனிவருக்கு! தாய் அன்பு காட்டத் தொடங்கி விட்டார்!
மிக்க வாஞ்சையுடன் ஒரு தாய் எழுப்புவது போல எழுப்புகிறார்;
ஆதி கவியான வால்மீகியின் இந்த ராமாயண சொற்றொடரைத் தான், பெரும்பாலும் எல்லாப் பெருமாள் சுப்ரபாதங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்!

ராம = ராமா
ராம என்பது சர்வ மங்களத்தைக் குறிக்கும் சொல்; ஈசனும் இந்த "ராம" என்பதையே மனத்துள் ஜபிப்பதாக சகஸ்ரநாமம் சொல்கிறது; (ஸ்ரீ ராம ராம ராமேதி...);
காசியில் மரிப்போர் காதுகளில் ஈசன் இதையே ஓதி நல்லுலகம் சேர்ப்பதாக ஐதீகம்.
"சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்", என்று கம்பரும் பேசுகிறார்.

பூர்வா ஸந்த்யா = அதிகாலை, சிற்றஞ் சிறுகாலை
பிரம்ம முகூர்த்த வேளை என்பார்கள்; சூர்யோதயத்துக்கு இரண்டரை நாழிகை முன்பாக!
Approx 3:30-4:00; ஆன்மிகப் பணிகளுக்கு மிகவும் உன்னதமான வேளை இது!
ப்ரவர்த்ததே = தொடங்குகின்றதே

உத்திஷ்ட = எழுந்திரு 
நர ஸார்தூல = நரர்களில் (மனிதர்களில்), புலியைப் போன்றவனே
ராமன் மனிதனாய் வாழ்ந்து காட்டிச் சென்றான்; சர்வ சக்தியுள்ள கடவுளாகத் தன்னை வெளிக் காட்டவில்லை.
கர்த்தவ்யம் = உன் கடமைகள்
தைவ மாஹ்நிகம் = தெய்வீகமானவை, அணிகலனாய் அமைபவை
உன் நித்யக் கடமைகள் நின்றால் உலகம் என்னவாகும்? அதனால் கடமையைக் காட்டி எழுப்புகிறார்!
(நாம் கூட முக்கியமான வேலை என்றாலோ, விசா நேர்காணல் என்றாலோ, அலாரம் வைக்காமலேயே எழுந்து விடுகிறோமே! கடமையே என்று எழுந்து விடுகிறோம் அல்லவா?:-)

திரு வேங்கடவனின் திருப்பாதங்களே சரணம் .

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த 
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
(இரண்டு முறை)

எழுந்தருள் எழுந்தருள் கருடக்கொடி 
ஏந்தும் கோவிந்தனே
எழுந்தருள் திருமகள் தலைவா 
மூவுலகும் செழித்தோங்கவே

உத்திஷ்டோ உத்திஷ்ட = எழுந்திரு எழுந்திரு
சிறு பிள்ளை அல்லவா; அதான் இத்தனை முறை "உத்திஷ்ட" என்று சொல்ல வேண்டியுள்ளது போலும்! :-)

கோவிந்த = கோவிந்தா
கோ+விந்தன்=உயிர்களாகிய பசுக்களைக் காப்பவன்; பெருமாளின் மிக முக்கியமான நாமங்களாவன: அச்சுதா, அனந்தா, கோவிந்தா!!

உத்திஷ்ட = எழுந்திரு

கருட த்வஜ = கருடக் கொடி உடையவனே
எம்பெருமானின் கொடியில் கூட கருடன் தான்; திருமலை பிரம்மோற்சவப் பதிவில் தான் பார்த்தோமே இந்தக் கொடியேற்றத்தை;
உத்திஷ்ட = எழுந்திரு
அட, மொத்தம் ஐந்து "உத்திஷ்ட"!

இன்னுமா எழவில்லை?

(நாம தான் கேள்வி நல்லா கேப்போமே; நாம் எழும் போது தானே கஷ்டம் தெரியும் :-)வீட்டில் அம்மா நம்மை எழுப்பும் போது "எழுந்திரு, எழுந்திரு" என்று எத்தனை முறை எழுப்புகிறார்கள்? நாம் எத்தனை முறை புரண்டு புரண்டு படுக்கிறோம்? நம் ராமன் எப்படி?
குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள்.

கமலா காந்தா = தாமரை மலரில் உள்ளவள் விரும்பும் நாயகனே
தாமரை மீது மலர்ந்து அருளும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி! அலைமகளைக் காந்தம் போல் தன் பால் ஈர்ப்பவன் ஆயிற்றே! லட்சுமிகாந்தன் என்று தானே அவன் பெயர்!

த்ரைலோக்யம் = மூன்று உலகுக்கும் 
(பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம்)
மங்களம் குரு = மங்களம் கொடுக்க 
ராம=மங்களம் என்று பார்த்தோம். அந்த மங்களத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உலகுக்கு அளிப்பதே அவன் கடமை; 
அதனால் தான் தனக்காக, தன் படிப்புக்காக எழச்சொல்லாது, உலக நலனுக்காக எழச் சொல்கிறார்.

இப்படிச் சொன்னால், அவனால் எழாமல் 
இருக்க முடியாதல்லவா?:-)

தயா சிந்து நாயகா, வேங்கடவா, திருக்கண் மலர்க!

திரு வேங்கடவனின் திருப்பாதங்களே சரணம் ..


கெளசல்யா சுப்ரஜா ராமா (3) - அம்மா எழுந்திரு!

பெரும்பாலான வீடுகளில் அம்மா தான் முதலில் எழுவாங்க! சில சமயங்களில் அம்மாவுக்கு முடியலைன்னா, அப்பா எழுந்து காபி போட்டுத் தருவதும் உண்டு!

பாசமுள்ள பல வீடுகளில், அம்மா எழுந்து அடுக்களையில் உருட்டும் சத்தம் கேட்டால் போதும், அப்பாவும் எழுந்து விடுவார், மற்ற வீட்டு வேலைகளைச் செய்ய!

வளர்ந்தும் வளராத சிறு பிள்ளைகளும், ஒரு சில நேரங்களில் அம்மாவுக்கு ஒத்தாசை செய்ய எழுந்துடுங்க!

அட... இது நம்ம வீட்டு விஷயம் போலவே இருக்குதுங்களா?

திருமலைக் கோயிலும் நம்ம வீடு மாதிரியே தாங்க!

அன்னை அலர்மேல் மங்கை முதலில் எழ, மார்பில் உள்ள உயிரே எழுந்து விட்டது, என்று அப்பனும் உடனே எழுந்து விடுகிறான்!

சென்ற பதிவில் "உத்திஷ்ட, உத்திஷ்ட" என்று ஐந்து முறை சொல்லியும் இன்னும் துயில் எழவில்லை நம் அப்பன்!

(முந்தைய பதிவுக்குச் சென்று, சுலோகமும் பொருளும், இன்னொரு முறை பார்த்து வரணும் என்று நீங்கள் நினைத்தால், மேலே சொடுக்கவும்)
சரி, இவன் எழுவதாகத் தெரியவில்லை! இதற்கு ஒரே வழி!

இப்போ அன்னையை எழுப்புவோம்!

அவள் எழுந்தவுடன் பாருங்கள், அவனும் கிடுகிடு என்று எழுந்து விடுவான்!

ஒரு வீட்டுக்கு மட்டும் அம்மாவான நம் தாயாருக்கே அவ்வளவு வேலைன்னா,
சகல உலகங்களுக்கும் அம்மா, ஜகன்மாதா எனப்படுபவள், அன்னை அலைமகளுக்கு எவ்வளவு வேலை இருக்கும்!

உலகக் குடும்பத்தின் ஆனந்தமே அவள் கையில் தானே உள்ளது!

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

மாத சமஸ்த ஜகதாம் = சகல உலகங்களுக்கும் தாயே, ஸ்ரீ மகா லக்ஷ்மி!
சமஸ்த ஜகங்களுக்கும் மாதா = ஜகன் மாதா! பூவுலக உயிர்கள், மனிதர் மட்டும் இல்லை; தேவர், கின்னரர், கிம்புருடர், நாகர், பாதாள உலகினர், அசுரர் என்று அனைத்து தரப்பினருக்கும் அவளே அன்னை; நரகாசுரனின் அன்னையும் அவள் தானே! குழந்தைகள் செய்யும் தவற்றை எல்லாம் பொறுத்தருள எம்பெருமானிடம் சதா சர்வ காலமும் முறையிட்டு, அவன் சினம் தணிக்கும் அன்புத் தாய் ஆயிற்றே! (என்ன செய்வது சில சமயம், அவளுக்கும் தர்மசங்கடங்கள், நம் போன்ற பிள்ளைகளால்:-)

மது கைடபாரே = மது, கைடபன் என்ற கொடியவரை அழித்து, (வேதம் மீட்ட) பெருமாள்
முன்னொரு நாள், பிரம்மனிடம் இருந்து வேதங்களைக் களவாடினர் மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள்; ஹயக்ரீவனாய் தோன்றி அவர்களை வதைத்து, உலகுக்கே ஞானத்தை மீட்டுத் தந்தான் இறைவன்; "ஞான ஆனந்த மயம் தேவம்" என்று கல்விக்கு அரசனாய் இன்றும் வணங்கப்படுகிறான் ஹயக்ரீவன்!

வக்ஷோ விஹாரிணி = அவன் திருமார்பில்(வக்ஷ ஸ்தலத்தில்) கொலு இருப்பவளே!
அந்த ஞானகுருவான பெருமாளின், திருமார்பை அலங்கரிப்பவளே! அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவளே! "அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்", என்று முதலில் உன்னைச் சொல்லி விட்டுப், பின்னர் தானே அவனைச் சொல்கிறார்கள்! அவன் மார்பில் ஸ்ரீவத்ச மச்சமாய் இருக்கும் தாயே!
(வசந்த விகார் என்று சொல்வது போல, வக்ஷ விகார் = மார்பில் உறைபவள்)

மனோகர திவ்ய மூர்த்தே = அழகும் ஐசுவரியமும் நிறைந்தவளே!
மனோகரம் = மனத்தை லயிக்கச் செய்யும் அழகு! அழகு மட்டுமா? திவ்ய மூர்த்தி = திவ்யமான ஐசுவரியமும், குணநலன்களும் உடையவள் நம் அன்னை! சும்மாவா சொல்கிறார்கள், "அவள் மகாலட்சுமி போல" என்று!

ஸ்ரீ ஸ்வாமினி = சுவாமியின் இல்லத் தலைவியே!
தர்மன் ஒருவன் என்றால் உடன் சக தர்மினி; "பகவானே! பகவதியே!" என்று சொல்வது போல், சுவாமிக்கு சுவாமினி!வேங்கட வீட்டின் இல்லத்தரசி!

ச்ரித ஜன, ப்ரிய தான சீலே = நாடி வரும் அன்பருக்கு, அவர்கள் விரும்புவதை வாரி அளிக்கும் தூயவளே!
ச்ரித ஜனங்கள் = நாடி வரும் அன்பர்கள்; இவர்கள், தாயிடம் ஒடி வரும் குழந்தைகள் போல; பசுவிடம் ஒடி வரும் கன்றைப் போல!
ப்ரிய = விருப்பப்பட்டதெல்லாம்; தான சீல = வாரி வாரி தானம் கொடுக்கும் வள்ளல் போல!
தொலை தூரத்தில் கன்றைக் கண்ட பசுவுக்கு எப்படி பால் தானாக வழிகிறதோ, அதே போல் நாங்கள் உன் அருகில் வருவதற்கு முன்பே, எங்களுக்கு அருள் கொடுக்க எண்ணும் தாயே!

ஸ்ரீ வேங்கடேச தயிதே = திருவேங்கட நாதனின் தர்ம பத்தினியே
தவ சுப்ரபாதம் = இனிய பொழுதாய் விடிய,எங்கள் அம்மா, நீ கண் மலர்க!

ஆண்டாளும் இதே தான் செய்கிறாள் பாருங்கள்!
"எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்" என்று முதலில் சொல்லிப் பார்க்கிறாள்! ஹூம்...ஒன்றும் நடக்கவில்லை!

அடுத்து, "குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்" என்று சொல்கிறாள்!
நந்தகோபாலனுக்கு "எழுந்திராய்", என்று சொன்னவள், யசோதைக்கு மட்டும் "அறிவுறாய்" என்று சொல்லக் காரணம் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!

இதோ யசோதை "விழித்து" விட்டாள்; கோகுலமே "எழுந்து" விட்டது!

அதே போல்,

தயா சிந்து நாயகி, எழுந்து விட்டாள்!
தயா சிந்து நாயகா, அப்பா வேங்கடவா, திருக்கண் மலர்க!

திரு வேங்கடவனின் திருப்பாதங்களே சரணம் ..

கெளசல்யா சுப்ரஜா ராமா (4) - அம்மா தயாநிதி!

யாராச்சும் சூரியன் உதித்த பின்னரும் வானத்தில் நிலாவைப் பாத்திருக்கீங்களா? அப்படிப் பாக்கலீன்னா இன்னைக்கு இந்தப் பதிவில் காணலாம்!

சென்ற பதிவில் "அன்னை-சகல உயிர்களுக்கும்", அவளை எழுப்பினோம்!

இன்றும் அன்னை மீது தான் பாடல். 
வெளியூரில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது, குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் பரிசுப்பொருள் வாங்கிச் செல்வோம் இல்லையா?

ஒரு சிலர் அம்மாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக இரண்டு பரிசுகள் வாங்கிச் செல்வார்கள்! ஊர் அறிய ஒன்று; தனியாக அடுக்களையில் ஒன்று "நைசாகத்" தரப்படும்! :-)

அது போலத் தான் நேற்றும் இன்றும், இரண்டு பாடல்கள், ஜகன் மாதா ஸ்ரீ மகாலக்ஷ்மியின் மீது!

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே |

விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே ||

தவ சுப்ரபாதம் = மங்களமான காலைப் பொழுதாக மலரட்டும்!

சுப்ரபாதம்=சு+பிரபாதம்=சுகமான காலை

அரவிந்த லோசனே = தாமரை போன்று 
சிவந்த, குளிர்ந்த கண்களைக் கொண்டவளே

அரவிந்தம்=தாமரை; லோசனம்=கண் 
தாமரையை எதற்குக் கண்களுக்குச் சொல்கிறார்கள்? காலையில் திறந்து இரவில் மூடிக்கொள்வதாலா? இருக்கலாம்!

ஆனால் இங்கு அன்னையின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு (pink) ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும். 
அவ்வளவு தெய்வீக அழகு!

பவது பிரசன்ன முக = உன் முகம், எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும்
சந்திர மண்டலே = சந்திரனைப் போல் முகம் கொண்டவளே
"வதனமே சந்திர பிம்பமோ" என்று தானே ஒரு பிரபலமான பாடல்; சந்திரன் அமைதியாக ஒளிர்வான்; அது போல் அன்னையும் அடக்கமாக, அமைதியாக, இதழ்க் கோட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை பூத்து, சிரித்த முகமாய் இருக்கிறாள்!

அது சரி, அதான் காலை புலர்கின்றதே! இன்னும் சிறிது நேரத்தில் நிலவு போய் விடும் அல்லவா? கவலை வேண்டாம்! சூரியன் வந்தாலும் இந்த நிலா மறையாது! அன்னையின் முகநிலாவுக்கு தேய்வு தான் உண்டோ?

விதி சங்கர் இந்திர வனிதாபிர் = பிரம்மா (விதி), சங்கரன் (சிவபெருமான்), இந்திரன்
ஆகியோரின் மனைவியர் எல்லாம்
வனிதா=பெண்
விதியைத் தலையில் எழுதும் கடவுள் = பிரம்மன்; இவர் மனைவியான கலைமகளும் (சரஸ்வதியும்),

சங்கரன் = சிவபிரான்; ஈசனின் அன்பு மனைவி, அன்னை மலைமகளும் (பார்வதியும்),
இந்திரன் மனைவியான சசிதேவியும் (இந்திராணி),

அர்ச்சிதே = (உன்னை) அர்ச்சிக்கிறார்கள்.
அன்னைக்கும், மற்ற தெய்வங்களின் மனைவியருக்கும் அவ்வளவு தோழமை பாருங்கள்; விரும்பி நன்மொழிகளால் அர்ச்சனை செய்கிறார்கள்! அதுவும் நம் அன்னை யார்?

அண்ணனின் மனைவி என்பதால், 
பார்வதிக்கு அண்ணி;
கணவரின் (பிரம்மா) அம்மா என்பதால், சரஸ்வதிக்கு மாமி;
கணவரின் (இந்திரன்) தலைவர் என்பதால், சசிதேவிக்குத் தலைவி;
இப்படிப் பிறந்த வீடும், புகுந்த வீடும், எல்லாரும் அன்னை மகாலக்ஷ்மியிடம் அன்பு பாராட்டுகிறார்கள்!

விருஷ சைல நாத= விருஷபாசலம் என்னும் திருமலைக்கு நாதன்
திருமலையில் உள்ள ஒரு மலைக்கு விருஷபாசலம் என்று பெயர்! ஏழு மலைகள் என்னன்ன என்று பின்னர் ஒரு சுலோகத்தில் வருகிறது, அப்போது பார்ப்போம்!

விருஷப+அசலம்=விருஷப மலை; விருஷபன் என்ற ஒரு அசுரனின் நினைவாக! அசுரனின் பேரில் பெருமாளுக்கு மலையா? இது தனிக் கதை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்!

அதை எதற்கு இங்கு சொன்னார்கள்? வேறு ஒரு மலையைச் சொல்லி இருக்கலாமே? இது தாயார் சுலோகம் அல்லவா? அவள் தான் அசுரன், தேவன் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்க மாட்டாளே! மாத; சமஸ்த ஜகதாம்! கருணைக் கடல் அல்லவா அவள்!!

தயிதே, தயா நிதே = அவனின் விருப்பமான மனைவியே! தயா நிதியே!
தயிதே = Beloved; பெருமாளின் அன்பே ஆருயிரே! தயா+நிதி = கருணை+செல்வம். அன்னை கருணைச் செல்வமானவள்!

அவள் தானே எல்லாச் செல்வத்துக்கு அதிபதி! அவளே ஒரு செல்வமா?
ஆமாம்! காருண்ய லக்ஷ்மி! அஷ்ட லட்சுமிகளில் ஒருவள் காருண்ய லக்ஷ்மி.

எத்தனை செல்வம் வந்தாலும் போனாலும், இந்தக் காருண்யம் மட்டும் என்றும் நிலைத்து நிற்கும்! அதனால் தான் ஒரு மகாகுரு, திருமலை எம்பெருமான் மீது தயா சதகம்என்று ஒரு நூறு பாடல் பாடினார்!

இவ்வளவு பெருமைகள் கொண்ட அம்மா, உனக்கு இனிய காலை வணக்கங்கள்!

திரு வேங்கடவனின் திருப்பாதங்களே சரணம் ..

No comments:

Post a Comment