சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
( 3 )
🌸 திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர். 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரிபுவன வீரேச்சுரம், திருவாரூர் வன்மீகனின் திருக்கோபுரமும் அமைந்துள்ள இரண்டு மாடங்களில் மாமன்னவன் குலோத்துங்கன், அவனது இராஜகுரு ஈஸ்வர சிவர் எனும் சோமேஸ்வரர் ஆகிய இருவருடைய உருவச்சிலைகளும் கல்வெட்டுப் பொறிப்புகளோடு இன்றும் உள்ளன.
கலைநயத்தால் மட்டுமின்றி வரலாற்றுப் பெருமையாலும் இத்திருக்கோபுரம் தன்னிகரிலாப் பெருமையோடு திகழ்கின்றது.
கிழக்குக் கோபுரத்தினை ஒத்த மேற்குக் கோபுரம் கி.பி. 15. ஆம் நூற்றாண்டுக் கலைப்பாங்குடன் அமைந்துள்ளது.
முதல் தளம் வரை கருங்கற் பணியாகத் திகழும் இக்கோபுர வாயிலின் இரண்டு பக்கங்களிலும் நாட்டிய மங்கையர் மற்றும் புராணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
கோஷ்ட தேவதைகள் இடம் பெறவில்லை. எந்த மன்னனின் பணி என்பதைக் காட்டும் தெளிந்த சான்றுகள் இதுவரைக் கிடைக்கவில்லை.
இக்கோபுரத்தின் மேற்பகுதியில் காணப்படும் வண்ணச் சுதை சிற்பங்கள் கலை நயமிக்க நேர்த்தியானவை என்பதை நேரில் சென்று அனைவரும் பார்க்க வேண்டும்.
வடக்குஸகோபுரம் தஞ்சை நாயக்க மன்னன் செவ்வப்பன் காலத்தில் எடுக்கப்பட்டதாகும். கருங்கற் பணியாக முதல் தளம் வரை அமைந்துள்ள இத்திருக்கோபுரத்தில் சிற்பங்கள் இடம்பெறவில்லை.
இக்கோபுர வாயிலின் கீழ்புறத்தில் இரண்டு மாடங்களில் செவ்வப்ப நாயக்கனின் கருங்கல் சிலையும், அவனது காலத்தில் இத்திருக்கோயில் நிர்வாகத்தில் சிறப்பிடம் வகித்த மண்டாரத்தின் உருவச் சிலையும் இடம் பெற்றுள்ளன.
செவ்வம்ப நாயக்கனின் கல்வெட்டுக்கள் சில இத்திருக்கோயிலில் இடம் கொண்டுள்ளன. தெற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் அமைந்துள்ள கோபுரங்கள் சற்று சிறியனவாக பிற்காலப் பணிகளாகத் திகழ்கின்றன.
இரண்டாம் மதிலின் கிழக்குக்ஸகோபுரம் சோழர் காலத்துப் பழமையான கோபுரமாகும். உயரம் குறைந்த கோபுரமாக இருப்பினும் குறிப்பிடத்தக்க சிற்பச் சிறப்புகள் இடம் பெறவில்லை.
இதே மதிலின் மேற்கு வாயிலாகத் திகழும் மேற்கு இரண்டாம் கோபுரம் கருங்கற்பணியாகத் திகழ்கிறது.
இதனை விஜயநகர மன்னர் இரண்டாம் தேவராயர் காலத்தில் (கி.பி. 1422---1446) தெட்சிண சமுத்திராபதி லக்கன்ன தன்ன நாயக்கன் என்பவன் பெயரில் நாகராசர் என்பவர் எடுத்ததாக இக்கோபுர வாயிலில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கன்னட கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.
மூன்றாம் மதிலின் ஒரே வாயிலான அணுக்கன் திருவாயில் கோபுரம் சோழர்கால கட்டுமானமாகும். பலமுறை திருப்பணிகளுக்குட்பட்டதால் பல்வேறு பிற்கால கலை அம்சங்களையும் இக்கோபுரத்திலுள்ளதை கண்ணுற்றுப் பார்க்க வேண்டும்.
புற்றிடங் கொண்ட பரமனின் பூங்கோயிலுக்கு இணையாக அமைந்துள்ள தியாகராசர் திருக்கோயில் மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழனால் அவனது உளம் கவர்ந்த நங்கை பரவை என்ற பெண்ணணங்கின் வேண்டுகோளுக்காக எடுக்கப்பட்ட கற்றளியாகும்.
இடைக்கால ச் சோழர்களின் அழகிய கட்டிடப் பணியை இக்கற்றளியில் காணமுடியும்.
நீலோத்பலாம்பாள் மற்றும் கமலாம்பாள் திருக்கோயில்களாகிய இரண்டு திருக்காமக் கோட்டங்களும் சோழர்களின் சீரிய படைப்புகளாயினும் பிற்காலத் திருப்பணிகளுக்குப் பலமுறை இலக்கணத்தால் பல்வேறு கலைநயங்களையும் இணைத்துச் சுவைக்க முடிகிறது.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment