Monday, February 20, 2017

Seshadri swamigal miracles

courtesy:Sri.JK.Sivan

வெளியே அதிகம் தெரியாத ஒரு மஹான்: J.K.. SIVAN

'' இப்பவே ராமேஸ்வரம் போ''

அடிக்கடி நான் உபயோகிக்கும் ஒரு வார்த்தை மஹான்கள் யோகிகளின் பேச்சு பூடகமாகத்தான் இருக்கும். எளிதில் அதன் உள்ளர்த்தம் புரியாது. சேஷாத்திரி ஸ்வாமிகள் பேச்சு பைத்தியம் என்ற பட்டத்தை தான் அவருக்கு வாங்கி தந்தது.

ஒருதரம் நாராயணஸ்வாமி சாஸ்திரியிடம் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகத்தை எடுத்துரைத்தார்.

''மாத்ரு சானா மனாதானம் காகதி. புருஷோத்தம: அஹம் ஸந்யாஸி வேஷண போதயாமி தனஞ்சய:(''கிருஷ்ணா என்னைப் போல இருக்கும் அனாதைகளுக்கு, திக்கற்றவருக்கு என்ன கதி சொல்?''
''அர்ஜுனா, அதற்குத்தானே நான் ஒரு ஸந்நியாசியாக வேஷம் தரித்து ஞான உபதேசம் செய்கிறேன்!'')

ஸ்வாமிகள் சாது சத்திரத் திண்ணைமேல். சாஸ்திரி கீழே தாழ்வார தரையில். என்னென்னவோ புரியாத விசித்திர பேச்சு. நடுவே மேலே சொன்ன ஸ்லோகம்.

சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஒரு பரிசுத்த பூரண சந்ந்யாஸி அவர் உபதேசங்கள் இணையற்றவை என்று நான் சொல்லவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது:

ஒருநாள் காலை 9மணிக்கு சுள்ளென்று வெயில். எங்கோ வெகு தூரம் சென்று நடந்து திரும்பிய சாஸ்திரி சாது சத்திரம் போய் ஸ்வாமிகளை தரிசிக்க எண்ணினார். ''இருப்பாரோ மாட்டாரோ? ஸ்வாமிகள் அனுக்கிரஹம் கிடைத்தால் அதிர்ஷ்டம்'' என்று எண்ணி சென்றபோது அங்கே திண்ணையில் ஸ்வாமிகள் இருந்தார். 
நமஸ்காரம் பண்ணினார் .

''சுவாமி வழியெல்லாம் நடக்கும்போது யோசித்தேன். உங்களை தரிசித்து விட்டு போனால் ஒரு மாச காலம் மனம் சாத்வீகமாக திருப்தியாக இருக்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம்போல குரங்கு சேஷ்டை ஆரம்பித்து விடுகிறதே. என்ன செய்வது. எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் '' என்று மனம் உருகி கேட்டார். சுவாமி பேசவில்லை. போய்விட்டார்.

அன்று மாலையே மூன்று மணிக்கு கம்பத்து இளையனார் கோவில் அருகே ஸ்வாமியை பார்த்துவிட்டு சாஸ்திரி வணங்கினார்.

''நாராயணா, காசிக்கு அப்புறம் போலாம். இப்பவே ராமேஸ்வரம் போ. ப்ரம்ம ஹத்தி தொலையும்''

எதற்கு திடீரென்று இப்படி ஒரு கட்டளை? . சரி ராமேஸ்வரம் போவோம். காசு? செலவுக்கு பணம் வேண்டுமே எங்கே போவேன்? எப்படி ராமேஸ்வரம் போவது?'' என்று அவருக்குள் மனம் எண்ணுகிறதை சுவாமி புரிந்து கொள்ளாமலா இருப்பார். அவருக்கு தெரியாத ரகசியம் உண்டா ?

''ராமேஸ்வரம் போலாம். பணம் எல்லாம் கிடைக்கும். கிடைக்கும். போ '' என்று ஸ்வாமிகள் தானாகவே சொன்னார்.

அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் பன்னீர் வாசனை தூக்கலாக கமகம என்றும் மணக்கும் அரைப்படி அளவு பெரிய விபூதி பாக்கெட் ஒன்றை ஸ்வாமிக்கு அளித்தார். அவரிடமிருந்து அதை தொட்டு வாங்கிக்கொள்ள விருப்பம் அவருக்கு. அத்தனை விபூதியையும் பிரித்து தலையிலும் நெற்றியிலும் உடம்பிலும் பூசிக்கொண்டார் சுவாமி. கிட்டத்தட்ட விபூதி அபிஷேகம். கீழே சிந்தியதையும் தனது தலையிலிருந்து கொஞ்சம் எடுத்தும் சாஸ்திரியின் முகத்தில், கையில் உடம்பில் எல்லாம் தானே விபூதியைப் பூசினார்.

விபூதி கொண்டுவந்தவர் கையை நீட்டி ''எனக்கு சுவாமி '' என்கிறார்.

''சீ போ அப்பால் கழுதை. ஓடு'' என்று அவரை விரட்டினார் சுவாமி.

எதற்கு?? ஏன்?? யாருக்கு தெரியும்?

அந்த மனிதர் சுவாமி கசக்கி தூரத்திலே போட்ட அந்த விபூதி பாக்கெட் காகிதத்தை எடுக்க சென்று குனிந்தார்.

''டேய், அதை தொடாதே. உன்னை பாம்பு கடிச்சிடும். பேசாம போயிடு '' என்ன ஆபத்தோ, எந்த வினையோ, சுவாமி அதை அந்த ஆளிடமிருந்து தான் வாங்கி கொண்டு விட்டாரோ!.

''சரி நாராயணா, நீ இனிமே ராமேஸ்வரம் போலாம்'' என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார் ஸ்வாமிகள்.

சாஸ்திரிகள் திருச்சி போனார். அங்கே அன்றிரவு ஒரு யஞ மண்டபத்தில் உபந்நியாசம் யாரோ நடத்திக் கொண்டிருந்ததை கேட்டார். அங்கே பழைய உத்தியோக அதிகாரி K . நடேச அய்யர் என்பவரை அங்கே பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தார். வெகுநாள் கழித்து பார்க்கும் நல்ல நண்பர்.

'' வாங்கோ எங்க வீட்டுக்கு'' என்று அய்யர் சாஸ்திரியை அழைத்து சென்றார். நல்ல நண்பர்களை உபசரிப்பது அய்யர் வழக்கம். உணவு படுக்கை எல்லாம் வசதியாக அமைந்தது. மறுநாள் கிளம்பும்போது ''இந்தாங்கோ வழிச்செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கோ ''. கையில் சாப்பாடு மூட்டை. பழங்கள். ஒரு வேஷ்டி துண்டு. நூறு ரூபாய் பணம் வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அளித்தார்.

அடுத்த க்ஷணமே சாஸ்திரி ஸ்வாமிகளை தான் நினைத்தார். என்ன தீர்க்க தரிசனம். அவருக்கு ராமேஸ்வர புண்ய தரிசனம் ஸ்நானம் செய்விக்க அருள் புரிந்த ஸ்வாமியை நாமே கரங்கூப்பி வணங்குகிறோம். சாஸ்திரிகள் சுவாமியின் கருணைக்கு நன்றிக்கண்ணீர் விடாமலா இருப்பார்?

Image may contain: 1 person, sitting