Wednesday, February 15, 2017

Regaining eyesight like Sundarar - Periyavaa

ஸ்ரீ மகா பெரியவா 

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பொறியாளர், எல்லாப் புலன்களும் ஒழுங்காக இருந்ததால், படித்துப் பட்டம் பெற்று பதவியும் பெற்றார். இடையில் ஓர் இடி. பார்வை போய்விட்டது; மருத்துவர்கள் மருந்து போட்டார்கள். ஆனால்,போன பார்வை மருந்துக்குக் கூட வரவில்லை.

மகாஸ்வாமிகள் சென்னையில் முகாம். பொறியாளாரால் சுவாமிகளைப் பார்க்க முடியாது தான். ஆனால்,சுவாமிகளின் தெய்வீகக் குரலை கேட்க முடியுமே? செவிப்புலன் பழுதபடவில்லையே? அத்துடன், சுவாமிகளால் இவர் பார்க்கப்பட முடியும்...

நாள் தவறாமல், ஆறுமாத காலம், பெரியவாள் பூஜைக்குச்சென்று கொண்டிருந்தார். பொறியாளர் வரிசையில் நின்று,தினமும் தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொள்வார். உதவிக்காக உடன் வருபவர்கள், 'பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்' என்று மெய்யுருகப் பிரார்த்திப்பார்கள்.

பேசும் தெய்வம்-மற்ற எல்லா அடியார்களுடனும் பேசும் தெய்வம்-இவருக்கு மட்டும் பதில் சொன்னதில்லை; வேதனை, இல்லை, பரிசோதனையா? பத்து நாட்கள் பயங்கரமாகப் போர் செய்யாமலே இராவணனை இராமபிரான் மாய்த்திருக்க முடியாதோ?

ஆனால், அவனுக்கு உயிர் போகும் நொடி வரும்வரை,காலத்தை கடத்த வேண்டியிருந்தது.

கட்டுமானப் பொறியாளருக்குக் கண் பார்வை கிடைக்கவேண்டிய புண்ணிய தருணம் வந்து விட்டது போலும்.

ஒருநாள், தேவார இசைப்பணிபுரியும் காஞ்சி வரதஓதுவார்என்ற அடியார், பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்தார். பார்வையில்லாத பொறியாளரை அருகில் வைத்துக்கொண்டு, ஓதுவாருடன் ஒரு சம்பாஷணை.

பெரியவா கேள்வி: சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக்கண்பார்வை ஏன் போனது?

ஓதுவார் விடை: இறைவனுக்குக் கொடுத்திருந்த வாக்கைத் தவறினார்.

"எந்த ஊரில் பார்வை இழந்தார்?"

"திருவொற்றியூர் காலடிப்பேட்டை."

"பிறகு என்ன செய்தார்?"

"அவ்விடத்திலிருந்து, திருமுல்லைவாயில் சென்று, 'அமுக்கு மெய்கொடுதிருவடி அடைந்தேன்' என்ற பதிகம் பாடி விண்ணப்பம் செய்தார்.'

"அடுத்ததாக என்ன செய்தார்?"

"திருவெண்பாக்கம் என்ற தலத்துக்குச் சென்று, பதிகம் பாடினார். இறைவன் சிறிது கருணை காட்டி ஊன்றுகோல் அருளினார்."

"அப்புறம்?"

"காஞ்சிபுரம் சென்று ஏகம்பனை வேண்டினார். ஆலந்தான் உகந்து..என்ற பதிகம் பாடி, இடது கண் பார்வை பெற்றார். அருகிலேயுள்ள ஓணக்காந்தன் தளி திருக்கோவிலுக்குச் சென்று, பொருள் பெற்றார். பின்னர் காஞ்சிப் பகுதியிலேயே உள்ள திருமேற்றள அனேகதங்காவதம் சென்று கயிலயங்கிரி நாதனைத் துதித்தார்.

"அடுத்து?"

"திருவாரூர் சென்றார். மீளா அடிமை... என்று தொடங்கும்பதிகம் பாடி, புற்றிடங்கொண்டானை வழிபட்டு, உருகி, உருகிவேண்டினார். வலதுகண் பார்வையும் பெற்றார்...."

மௌனம்.

"பரமேஸ்வரன் அனுக்ரஹத்தாலே பார்வை கிடைக்கும். இல்லையா?"

"ஆமாம்"

பொறியாளரைக் கூப்பிட்டு,'சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன 
ஸ்தலங்களுக்கெல்லாம், இந்த ஓதுவாரையும் அழைச்சிண்டு போ. அந்தந்த ஸ்தலங்களுக்கான பதிகங்களை இவர் பாடுவார்.

"சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஊன்றுகோல் கொடுத்த ஈஸ்வரன் புரசவாக்கம் கங்காதரேசுவரர் கோவிலில் இருக்கார். முதல்லே,ஓதுவாருடன் போய், அவரை தரிசனம் பண்ணு;அர்ச்சனை செய்... முக்கண்ணன் அருளினால் பார்வை கிடைக்கும்...."

மகாப்பெரியவாளின் ஆணைப்படி யாத்திரை நடந்தது.

பெரியவா வாக்குப்படி பலனும் கிடைத்தது.

உம்மாச்சி தாத்தாவுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம்.தேவாரமும் தெரியுமா? சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா?

No comments:

Post a Comment