Friday, February 10, 2017

Perur temple part39

சிவாயநம..திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(39)*
🍁  *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* 🍁
--------------------------------------------------------------------
*உபதேசப் படலம். (உருத்திராக்கம்.)*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
உருத்திராக்கமாவது, முப்புரத்தவர் வருத்தலினாலே அமரர்கள் தவஞ் செய்ய,அதற்கு இரங்கி, நாம் போய் இமையாது நோக்கினமைபற்றி மூன்று கண்களிலும் நீர்துளித்தன.

அவற்றுள், வலக் கண்ணீரிலே பன்னிரண்டு மரங்களும், இடக்கண்ணீரிலே பதினான்கு மரங்களும், நடுக்கண்ணீரிலே பத்து மரங்களும் உண்டாயின.

இவைகளுக்கு உருத்திராக்க மரங்களென்று பெயர். வெண்ணிறமணி பிராமணர்க்கும், பொன்னிறமணி க்ஷத்திரியர்க்கும், வெண்மை பொன்மை கலந்த மணி வைசியர்க்கும், கருநிறமணி சதுர்த்தருக்கும் உரிமையுள்ளதாகும்.

ஒரு முக மணி சிவரூபமாய் பிரமஹத்தி நீக்கும்.

இருமுக மணி சிவசத்தி ரூபமாய் கோகத்தி நீக்கும்.

மும்முகமணி அக்கினி ரூபமாய் ஸ்திரிகத்தி நீக்கும்.

நான்குமுக மணி பிரமனுருவாய் மாநுடக் கொலை தொலைக்கும்.

ஐம்முக மணி காலாக்கினி உருத்திர ரூபமாய் உணவினாலாகுங் குற்றங்களை ஒழிக்கும்.

ஆறுமுக மணி ஆறுமுகனுருவாய்.வலக்கையிலே தரித்தால் பிரமஹத்திச் சாயையைப் போக்கும்.

ஏழுமுக மணி ஆதிசேடனுருவாய் கொலை, பொருட்களவுகளைத் தீர்க்கும்.

எண்முக மணி விநாயகனுருவாய்  குருதாரகமனம், தானக் கிரகணம், பிறரன்னம் புசித்தல் ஆகிய பாவங்களைக் கெடுக்கும்.

ஒன்பதுமுக மணி வயிரவனுருவாய் பூதாதிகளின் தீங்கும், பாம்புகளின்ஸதீங்கும் நீங்கச் செய்து, செல்வத்தையும், முத்தியையும் கொடுக்கும்.

பத்துமுக மணி விட்டுணுரூபமாய் தீயநாள், கோள், முதலிய தீங்குகளைத் தீர்க்கும்.

பதினோருமுக மணி ஏகாதசருத்திர ரூபமாய் ஆயிரம் வேள்வியின் பயனும், ஒரு லட்ஷம் பசுக்களோடு பெரும் பொருளுந் தானஞ்செய்த பயனும் உண்டாக்கும்.

பன்னிருமுக மணி துவாதசாதித்த ரூபமாய், அசுவமேதப் பயனும் மேருதானப் பயனுங் கொடுக்கும்.

பதின்மூன்றுமுக மணி முருகனுருவாய் இஷ்டகாமிய முதலியவற்றைக் கொடுத்து, தந்தை முதலியோர் கொலை பாவத்தைத் தொலைக்கும்.

பதினான்குமுக மணி எமதுருவும், நினதுருவுமாய் வசியத்தை ஆக்கிச் சிவபுரத்தில் இருத்தும்.

இதனைக் கழுத்தில் அணிந்தால் மந்திரங்கள் பலிக்கும். வெற்றியும் உண்டாகும்.

உருத்திராக்கம் தரித்துச் சற்கிரியைகள் இயற்றினால் ஒன்று அனந்தமாம். தரியாதவர்க்குப் பயனில்லை.

கீழ் மக்களாயினும், பெண்களாயினும், மது மாமிச பக்ஷிணிகளாயினும் உருத்திராக்கத்தை முடிமீது தரித்தாராயின் அவர் பாவம் நீங்கி, இறுதியிலே நமது வடிவத்தைப் பெறுவர்.

சிகையில் ஒன்றும், சிரசில் முப்பத்தாறும், கழுத்தில் முப்பத்திரண்டும், மார்பில் ஐம்பதும், கரத்திற் பதினாறும், மணிக்கட்டில் பன்னிரண்டும், முகமுகமுஞ்சேர இடையே முடித்து மேரு அமைத்து முறையே கொள்ளக் கடவர்.

செபவடம் நூற்றெட்டு, ஐம்பத்தி நான்கு, இருபத்தேழு மணிகளாகக் இருக்க வேண்டும்.

அநாமிக விரலிற் செபித்தால் நோய் நீங்கும்.

மத்திமை விரலிற் செபித்தால் பகை ஒழியும்.

தர்ச்சனி விரலிற் செபித்தாற் முத்தி சித்திக்கும்.

முத்திகாமிகள் மேல் நோக்கியும், புத்திகாமிகள் கீழ்நோக்கியும், ஒலியாமலும்,பிறர்விழிக்குப் படாமலும் செபிக்கக் கடவர்.

மேருவினைத் தொடுத்துச் செபித்து,மீட்டும் மேரு வரும்போது அதனைக்கடவாது திருப்புதல் வேண்டும்.

ஜபவடந்தவறுதல் முதலியவற்றிற்கு நமது அருட்குறிக்குச் செய்யும் பிராயசித்தத்திலே, அரை வரிசை இயற்றுக.

விரல்,இறை, புத்திர சிவகமணி, சங்குமணி, படிகமணி, முத்து, தாமரைமணி, பொன்மணி, குசைமுடி, உருத்திராக்கம், இவை ஒன்றுக்கொன்று உயர்வாம்.

கிருகத்திலும், பசுக்கோட்டம் பத்து மடங்கு, நதிக்கரை நூறு மடங்கு, ஆலயம் ஆயிரம் மணங்கு, வனம் இலக்ஷம் மடங்கு, மலை கோடி மடங்கு, நமது சந்நதி அளவில்லாமல் செபிப்பவர்க்குப் பயன் உண்டாகும்.

முத்திகாமிகள் இருபத்து ஐந்து மணியும், சுபகாமிகள் இருபத்தேழு மணியும் திரவியகாமிகள் முப்பது மணியும், ஆபிசாரத்துக்குப் பதினைந்து மணியுமாகச் செபவடங் கொள்தல் வேண்டும்.

உருத்திராக்கத்தைத் தரிசித்தவர்க்கு லக்ஷம், பரிசித்தவர்க்கு கோடி, தரித்தவர்க்கு ஆயிரங்கோடி செபித்தவர்க்கு அநந்தம் மடங்கு பயன் உண்டு. இவர்கள் இம்மையில் வெற்றியும், மறுமையில் நமதுருவும் பெறுவர்.

உபசாரமாவது, தேவர்கள் பாற்கடலை.கடையும்போது,வில்வமும் துளவமும் உண்டாயின. 

இவை நமக்கு மகிழ்ச்சி செய்வ. துளவத்தினும் வில்வஞ் சிறந்ததாம். முற்றியதாக இருந்தினும், சருகாயினும், ஈரிலை அல்லது ஓரிலை பொருந்தியதாயினும் விலக்கப் படாது.

செல்வத்தைச் செய்யுந் திருமகள் வாழ்தலால் பலமாம்.

நோய் நீக்க முதலிய இம்மைப் பயனும், முத்திப் பயனுந் தரும். 

நூற்றெட்டு,ஆயிரம் பெயர்களால் வில்வங் கொண்டு, நமதடியில் அர்ச்சித்தவர்க்கு அளவற்ற பயன் உண்டாகும்.

இங்ஙனம் வில்வமாதிகளால் நம்மைப் பூசிப்பதே உபசாரமாம். 

பின்னும் அவ்வுபசாரம் காலையிற் செய்யுங் கடன்களை முடித்துத் திருப்பள்ளித் தாமங் கொண்டு வந்து, பின்பு குளித்துச் சந்திபண்ணி, இடஞ் செய்து, சூரியனிடத்தும் நம்மைப் பூசித்துப் பின்னர் ஐவகைச் சுத்தியுமமைத்து அருட் குறியின் கண், ஆசனமும் மூர்த்தியும் அர்ச்சித்து,மூர்த்திமானாகிய நம்மையுந் தியானித்து, புஷ்பாஞ்சலியினால் ஆவாகித்து, பாத்தியாசமனார்க்கியங் கொடுத்து, பூசை முடியுங்காறும் இருந்தருளவேண்டி, எண்ணெய்க் காப்பு முதலியன அபிஷேகித்து அலங்கரித்து நிவேதித்து தீபாரதனை செய்து கண்ணாடி முதலியன காட்டி, திருவைந் தெழுத்தைச் செபித்து அதனோடு உடல், பொருள், ஆவி மூன்றுந் தத்தஞ் செய்து துதித்தலே ஆகும். இவ்வுபசாரத்தை இயற்றினோர் புத்தி முத்திகளைப் பெறுவர் என்று அருளிச் செய்தனர்.

             திருச்சிற்றம்பலம்.

*கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment