சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(37)*
💐 *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* 💐
---------------------------------------------------------------------
*திரிலோக சோழன் செயிர்தீர்ந்த படலம்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தெய்வப் பொன்னித் திருநதியாற் சூழப்பெற்ற சோழ நாட்டிலே திரிலோகத்திலு முள்ளாரும் துன்பம் அடையாதபடி காத்தமையால், திரிலோக சோழராசன் என பெயர் பூண்டான்.
அவன் புரிந்து வரும் போது, அனைவருந் திருநீறுங் கண்டிகையும் பூண்டு சித்தாந்த சைவக் கேள்வி யுடையராய்ச் செல்வராய் வாழ்ந்தனர்.
அங்ஙனம் வாழும்போது நேபாள நாட்டிலிருந்து கல்வியில் வல்ல காபால மதத்தவர் சிலர் வந்து கலத்தனர். அப்போது சிவநிசி. அந்நாளில் பிராமணரும் அடியவருந் திருவிடைமருதூரிற் சிவபிரானைத் தரிசிக்கப் போயிருந்தனர். அப்போது சோழனும் அத்தலத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.
சோழன் வந்திருப்பதை அறிந்து கொண்ட காபாலமத வேதியரும் அங்கே வந்து, ஆலயத்திலே அரசனை எளிதிற் சந்தித்து ஆசீர்வாதஞ் செய்தான்.
அரசன் அவ்வேதியர் புறவேடப் பொலிவையும், தேககாந்தியையும் மதித்து அகத்தை மதியாதவனாய் அஞ்சலிசெய்து யாரென்று வினவினான்.
அதற்கு *"இவ்வரசன் நமது வழிபடுவவன்"* என்று கருதி அவருள்ளே ஒரு விருவித்தன் "மகாராசாவே! நாங்கள் வாழ்வது நேபாள நாட்டில். உமது தேசவளப்பமும் புழையும் கேள்வியுற்று உம்மைப் பார்க்கும் பொருட்டு இங்கே வந்தோம். மேலும் அதிரகசியமாய் உமக்கு உபதேசிக்கத்தக்கது ஒன்றுண்டு" என்ற சொன்னான்.
அதற்குச் உடன்பட்டச் சோழன் தனியாக அவனை வணங்கினான். அப்போது அவ்விருத்தன், "ஆராயும் வழி மகளிரைப்புணர்தலே இன்பமாகும். அதனால் உயிர்கள் அபிவிருத்தியாகின்றன.இதனையன்றி, உலகத்தைச் சிருட்டிப்பதற்கு ஒரு கடவுள் இருப்தாக அறிவிலார் கூறுவர். கடவுளைக் கண்டவர் யார்! கண்ணாற் காண்பது தானே மெய்யாகும்!. காணப் பெறாதது பொய்தானே!, ஆதலால் உலகத்துக்கு வேறான கடவுள் என்பவன் ஒருவன் இல்லை. மரத்துடன் மரம் உராயும்போதும், சூரிய காந்நக்கல்லில் சூரியகிரணந் தொடும் போதும் அக்கினி தோன்றுதல் போலப் புணர்ச்சிக் கண்ணே உலகந் தோன்றும். அங்ஙனமாகலிற் புணர்ச்சியே பொருளாம். அதற்கு மகிமை தருவது சுராபானமே. இதனையும் பொருளாகக் கொள்ளக் கடவீர்" என்று பொய்யை மெய்யாகக் கூறினான்.
அக்காபால மதத்தின் ஆபாச மார்க்கத்தை அரசன் விரும்பி அறிவழிந்து, மறை முறை பிறழ்ந்து, மதுநுகர்ந்து வருணாச்சிரமங்கடந்து மடவாரோடு கூடி இன்பம் அநுபவித்து ஒழுக்கமுடையாரை வருத்திக் காபால மதத்தவரே களிப்படையும்படி கொடுங்கோல் செலுத்தினான்.
*"மன்னவரெனப்படி மன்னுயிரப்படி"* என்றபடி குடிகளும் விதி விலக்கின்றி ஒழுகினார்கள்.
இங்ஙனம் சோணோடு முறை திறம்பிய செய்கையைப் பிரமதேவர் நோக்கி, நாரதமுனிவரை அழைத்து அவ்வரசனைத் திருந்தும்படி ஏவினார்.
அப்பொழுது முனிவர் அரசன் சபையை அடுத்துக் கமண்டலத்தின் ஜலத்தை பஞ்சாக்ஷரத்தை உச்சரித்து, அவன் முகத்திலே தெளித்தனர்.
உடனே அரசன் துன்மதபோகம் ஒழிந்து, முனிவரை வணங்க, அக்காலையில் முனிவர் திருவருணோக்கம் செய்து, திருநீறு கொடுக்க,அதனை ஏற்று அரசன் அணிந்து பணிந்தவளவில், "உனது தீவினை நோய்க்கு மருந்து, *"மேலைச் சிதம்பரத்திற் சிவபெருமான் திருவடிகளை வழிபடுதலே"* என்று முனிவர் சொல்லி மறைந்தனர்.
அரசனை முனிவர் திருத்திய முறையை அறிந்த காபால மதத்தினர் அந்நாட்டைவிட்டு ஓட்டமெடுத்து போய் விட்டனர்.
அரசனும் கோவை திருப்பேரூர் சார்ந்து காஞ்சிமா நதியில் படிந்து சுவாமியையும் அம்மையையும் தொழுது, துதித்துப் பிழைகள் ஒழிந்து, சிலநாள் அங்கே தங்கிப் பல திருப்பணிகள் செய்து விடை பெற்று சோழநாட்டை உற்று மனுநூல் வழியே செங்கோல் செலுத்தி, சைவ சமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டான்.
திருச்சிற்றம்பலம்.
*கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment