*சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(34)*
🌸 *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* 🌸
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
*தெய்வயானை திருமணப் படலம்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இமயமலைச் சாரலில்.நரநாரயணரது ஆசிரமத்திலே முருகக் கடவுளைத் திருமணம் புரியக் கருதி, தெய்வயானையம்மை தவஞ் செய்தாள்.
அப்போது, நாரதமுனிவர் மானசிகமாக வணங்கி, "திருப்பேரூரைச் சார்ந்து தவம்புரிவாயாகில் விரைவிலேயே முருகக் கடவுள் மணந்தருளுவார்" என்றுரைத்தார்.
உடனே தெய்வயானையம்மை திருப்பேரூர் சார்ந்து வந்து, திருவுள்ளமானது முருகக் கடவுள் திருமேனியை மருகவும், கண்கள் அரும்பவும், முகங்குவியவும், திருவுருவாடவும்,பஞ்சப் பொறிகள் மறையவும் சித்திர தீபம்போல் அசைவற்றிருந்து தவஞ் செய்தாள்.
அவ்வேளையில், முருகக் கடவுள் எதிர்நிற்க, அவரை வணங்கிய தெய்வயானையம்மை திருநோக்கமும், முருகக் கடவுள் திருநோக்கமும் இசைய, இருவரும் பெருங் காதலுடையவராயினர்.
இக்காதலினச் செய்தியை சிவபெருமான் திருவுளத்துக் கொண்டருளி, இந்திரனை அழைத்து, "தெய்வயானைக்கும் முருகனுக்கும் இத்திருப்பேரூரில் மணஞ் செய்வதற்கு வேண்டியவலகளை விரைந்து செய்வாய் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அப்பொழுது , இந்திரன் எவ்விடத்துக்கும் மணவோலை அனுப்பி, நகரத்தைப் புதுக்கி, மணமண்டபம் நிருமித்துச் சிவபெருமானிடத்து விண்ணப்பஞ் செய்தான்.
பின்பு அம்மண்டபத்திலே, சிங்காசனத்தின் மீது சிவபிரான் வீற்றிருந்தருளி,முருகக் கடவுளைத் திருமணக் கோலத்தோடு வெள்ளையானை மீது வீதிவலம் வரச்செய்து மணமண்டபத்தில் இருக்கும்படி ஆக்ஞாபித்தருளினார்.
அங்ஙனம் ஆசனத்தில் முருகக் கடவுள் இருந்த பின்பு தெய்வயானையம்மையும் அருகே வந்திருந்தனள்.
உருத்திரர் முதலாயினோர் பக்கத்தே இருந்தார்கள். மங்கல வாத்தியங்களும் வாழ்த்தும் முழங்கி ஒலித்தன.
அப்போது இந்திரன், இந்திராணி பசுப்பால் வார்க்க, முருகக் கடவுள் திருவடிகளை விளக்கி, அதனை உள்ளும் பருகி, சிரசுமீதும் தெளிவித்துக் கொண்டு, தெய்வயானை யம்மையைத் தத்தஞ் செய்ய, முருகக் கடவுள் ஏற்றருளி, வியாழபகவான் அக்கினி காரியஞ் செய்து, மதுபருக்கம் அமுதுகளை ஏந்த, அதற்கு முகமலர்ந்தருளி, கன்றோடு காமதேனுச் செல்லுதலை நோக்கி, தெய்வயானை யம்மை வலத்திருக்கைபற்றி, ஏழடியிட்டு, அம்மியில் அக்ஷதை தெளித்து, அத்தேவி பாதமலரைத் தூக்கி வைத்து, சிவபிரான் அஷ்டமூர்த்தத்தில் ஒன்றான அக்கினியை வலஞ் செய்து, தெய்வயானை யம்மை திருக்கையினின்றும் பொரியை ஏற்று, அக்குண்டத்திற் சொரிந்து, பின்னர்த் திருமங்கிலிய தாரணஞ் செய்தருளினார்.
அப்போது தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள்.
சிவபெருமான் ஆணைப்படி குபேரன் அனைவருக்கும் பொருளும், இரத்தினாபரணங்களும், பீதாம்பர முதலியனவும் கொடுத்தான்.
பின்பு திருவீதியிலே, தெய்வயானை யம்மையோடு முருகக் கடவுள் திருவுலாக் கொண்டு, திருக்கோயிலின்கண் ஆசனத்தில் இருந்தருளினார்.
மற்றைய நாளிலுஞ் செய்யுஞ் சடங்குகளை முடித்த பின்னர்ச் சிவபிரான் எல்லோருக்கும் வேண்டும் வரங்களை அருளினார்.
முருகக் கடவுள் தெய்வயானை யம்மையுடன் சிவபிரானும் உமாதேவியாருமாகிய இரு முதுகுரவரிடத்தே இருந்தருளினார்.
திருச்சிற்றம்பலம்.
*கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment