பெரியவா சரணம் !!
வெறித்த மாடு ! சட்னு ....அந்த ரெண்டு டின் ஜலத்தையும் கொணூந்து மாட்டுக்கு வைங்கோ!...."
நாம் ரோடுகளில் செல்லும் மாட்டு வண்டிகளை பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த அம்பாரத்தை சுமந்து, இழுக்க முடியாமல் இழுத்து, போறாததற்கு, மாட்டுக்காரனிடம் சவுக்கடியும், காலால் அவன் கண்ட இடத்தில் விடும் உதையையும் வாங்கிக் கொண்டு, வாயில் நுரை தள்ளிக்கொண்டு செல்லும் காளை மாடுகளை நாம் எவ்வளவு தூரம் அக்கரையோடு கவனித்திருக்கிறோம் என்பது தெரியாது.
முன்பெல்லாம் பஸ் வஸதி கூட அவ்வளவாக இல்லாத போது, பெரியவாளை தர்ஶனம் பண்ண, பல ஊர்களிலிருந்தும், க்ராமங்களில் இருந்தும் பக்தர்கள் பலர், குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டிகளில் வருவார்கள்.
பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை எவ்வளவு விஜாரிக்கிறாரோ, அவ்வளவு அவர்கள் வந்த வண்டிகளில் பூட்டியுள்ள காளை மாடுகளின் க்ஷேமத்தை கவனிப்பார்.
"மாட்டை அவுத்து விட்டுட்டு, அதுகளுக்கு மொதல்ல தண்ணி காட்டுங்கோ! மரத்தடீல.. சித்த நெழல்ல கட்டிப் போட்டு, பில்லு போடுங்கோ!.."
இதுதான் பெரியவா, வண்டி கட்டிக் கொண்டு வரும் பக்தர்களிடம் தவறாமல் கூறுவது!
பெரியவா, தன்னுடைய 84-வது வயஸில், ஆந்த்ரா, கர்நாடகா, மஹாராஷ்டிர மாநிலங்களில் பாத யாத்ரை பண்ணிக் கொண்டிருந்த ஸமயம்!
மஹாராஷ்டிர க்ராமம் ஒன்றின் வழியாக கூண்டு வண்டியைப் பிடித்துக் கொண்டு பெரியவாளும், சில பாரிஷதர்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
ஸூர்ய பகவான் 'தன் மனங்குளிர' பெரியவாளை தர்ஶனம் செய்து கொண்டிருந்தான்.
அப்போது யாருமே எதிர்பாராத க்ஷணத்தில், எங்கிருந்தோ ஒரு மாடு வெறித்தனமாக, கண்மண் தெரியாமல் ஓடி வந்தது! கட்டியிருந்த கயிறையும் தறியோடு பிய்த்துக் கொண்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஆக்ரோஷமாக இங்குமங்கும் ஓடியது! யாரும் நடுவில் புகுந்து ஒன்றும் செய்ய முடியவில்லை! பாரிஷதர்களுக்கோ குலை நடுங்கியது! பெரியவாளை நோக்கியல்லவா ஓடி வருகிறது!
"சட்னு ....அந்த ரெண்டு டின் ஜலத்தையும் கொணூந்து மாட்டுக்கு வைங்கோ!...."
பெரியவாளின் குரல் மந்த்ரமாக ஒலித்தது.... மாட்டுக்கு!
பாரிஷதர்கள், கைவஸம் வைத்திருந்த ரெண்டு டின் ஜலம் முழுவதையும் அப்படியே மாடு வரும் திசையில் வைத்து விட்டு ஓடி வந்தார்கள்.
ஆஶ்சர்யம்!
'என் வழிக்கு வந்தால், குத்திக் கிழித்து விடுவேன்! 'என்பது போல் அத்தனை வெறியோடு வந்த மாடு, டின்னில் இருந்த ஜலத்தை பார்த்ததும், அத்தனை ஆக்ரோஷமும் "காக்கா உஷ்" என்று காணாமல் போக, 'மளக்-மளக்'கென்று ஜலத்தைக் குடித்தது. நமக்கே இந்த பயங்கர தாகம், அனுபவமான ஒன்றுதானே! அதற்குள், மாட்டுக்காரன் பின்னாலேயே ஓடி வந்தான். அது ஜலம் குடித்து தாகஶாந்தி ஆனதும், மாட்டோடு வந்து, பெரியவாளை நமஸ்காரம் செய்தான்.
"ஸ்வாமிஜி மஹராஜ்! மன்னிக்கணும். இந்த க்ராமத்திலும், இதன் சுற்றுவட்டார க்ராமங்களிலும் கடுமையான வறட்சி, பஞ்சம்! தண்ணீரே கிடைப்பதில்லை..... "
மராட்டியில் கூறினான். அவனுக்கு சில பழங்களை ப்ரஸாதமாக அனுக்ரஹித்தார்.
அத்தனை பேருமே... மாட்டின் வெறித்தனத்தை மட்டுமே பார்த்தார்களே தவிர, அந்த வெறிக்கான காரணத்தை, அந்த மாட்டுக்கும் 'அன்னை' யானவள் மட்டுமன்றோ அறிவாள்!
கடுமையான, தாங்க முடியாத தாகத்தால் தண்ணீருக்கு பறந்திருக்கிறது அந்த வாயில்லா ஜீவன்! எந்த பாஷையில் பேசும்? தனக்கு வேண்டியதை கேட்கும்?
மனிதனுக்கு "உண்மையான அன்பு" எனும் பாஷை மட்டும் தெரிந்தால்... தனியாக கடவுள் என்பவரை அவன் ஏன் தேடிப் போக வேண்டும்?
இதில் பெரிய விஷயம் என்னவென்றால், பாத யாத்ரை போகும் வழியில் உள்ள தண்ணீர் பஞ்சத்தால், பெரியவாளுக்காக எங்கிருந்தோ... ரெண்டே ரெண்டு டின் ஜலத்தை கஷ்டப்பட்டு ஸேகரித்து வைத்திருந்தார்கள். அது அப்படியே மாட்டின் வயிற்றுக்குள் சென்றுவிட்டது!
உண்மைதானே! எந்த அம்மாவாவது, தன் குழந்தை தாகத்தால் தவிக்கும் போது, தனக்கென்று ஜலத்தை எடுத்து வைத்துக் கொள்ளுவாளா?
இப்போதும் கூட, கை,கால் இருக்கும் மனிதர்களுக்கு 'தான-தர்மம்' பண்ணுவதை விட, ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலோ, தெருக்களிலோ... ஸிமென்ட் தொட்டியில் தினமும் ஜலத்தை விட்டு வைத்தால், பூர்த்த தர்மமாக, மாடு, நாய், பறவைகள் போன்ற வாயில்லா ஜீவன்களின் தாஹத்தை தீர்க்க, அதுவும் இந்தக் கொளுத்தும் வெய்யிலில், மிகப் பெரிய புண்யமாக இருக்கும். அரஸாங்கம் கூட, இதை ஒரு தர்ம கார்யமாக செய்யலாம்.
------------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
No comments:
Post a Comment