Wednesday, February 22, 2017

Bhaskareswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம். 
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌸 *மனநோய் போக்கியருளும் மகேசன்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
அரசவனம்.

சூரிய பகவான் இங்கு மணலைக் குவித்து லிங்கத்தை உருவாக்கி பூஜித்தார்.

அம்மணல் குவியல் உருகியது. பிரகாசவுருவகம் பெற்று சுயம்புவாக லிங்கவுரு தோன்றியது.

சூரியன் வழிபட்டதால் இந்த லிங்கத்திற்கு பாஸ்கரேஸ்வரர் ( பாஸ்கரன்- சூரியன்) எனப் பெயர். தமிழில்-- பரிதியப்பர் (பரிதி -- சூரியன்).

காவிரியின் தென்கரைத் தேவாரத் தலங்களுள் நூற்று ஒன்றாவது தலம். திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. 

சூரியன் வந்து மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம்.

தவம் புரிவதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையில் இருப்பதைக் கண்ட மார்க்கண்டேயர், இங்கு தீவிரமாக தவத்தில் அமர்ந்தார். 

நிஷ்டையில் ஆடாது அசையாது இருந்த அவரைக் கல் என நினைத்து, சகல பிராணிகளும் உரசிச் சென்றன. 

இறுதியில் அவருக்கு காட்சியளித்த ஈசனார், வேண்டும் வரம் யாது? என வினவ,......தில்லையில் பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் அளித்த நடனத் திருக்காட்சியை இத்தலத்திலும் எனக்குக் காட்டியருள வேண்டும்!" என வேண்டினார் முனிவர்.

ஈசனும் அவ்வாறே அம்பலவாணனாக நடனக் காட்சி வழங்கியருளினார்.

தருமாவரம் எனும் நாட்டில் பிரம்மசர்மன் என்பவன் தன் மனைவி சுசிலையோடு வாழ்ந்து வந்தான். பக்கத்து ஊரில் உள்ள சிவன் கோயில் திருவிழாவுக்கு மனைவியுடன் சென்றான்.

திருவிழா நிறைவடைய இரவாகிவிட்டது. விடிந்ததும் ஊர் திரும்பலாம் என எண்ணிய தம்பதியர் ஆலய மண்டபத்தில் படுத்துறங்கினர்.

நடுச் சாமத்தில் சுசிலையின் ஸ்பரிசத்தால் பிரம்மசர்யன் மோக உணர்ச்சிக்கு ஆட்பட்டான். கோயில் மண்டபத்தில் இதற்கு இடமளிப்பது தவறு என்று அறிந்த சுசிலை தயங்கினாள். 

பின்னர், கணவனது விருப்பத்தைத் தடுக்க இயலாமல் உடன்பட்டாள். சற்று நேரம் கழிந்ததும், பிரம்மசர்மன் தன் தவறுக்காக வேதனைப்பட்டான்.

தவறு எனத் தெரிந்தும் தன் கணவனைக் கட்டுப்படுத்தாத சுசிலை மறுபிறப்பில், கிளிப் பிறப்பு பிறந்தாள். பிரம்ம சர்மன் பருந்து வுருவு பெற்றிருந்தான்.

கிருதமாலிகை என்னும் நதிக்கரையில் உரோமசன்மர் எனும் முனிவர் தவம் இயற்றி வந்த இடத்தில் உள்ள மரப்பொந்தில் கிளி வசித்து வந்தது. 

பருந்துவோ, ஒவ்வொரு முறையும் அக்கிளியைப் பிடிக்க முயன்று முயன்று தோல்வியே கண்டது. இதைக் கண்ணுற்ற முனிவர், இரு பட்சிகளின் முற்பிறவி வரலாற்றை உணர்ந்தார் உரோமசன்மர்.

உடனே சூரியன் வழிபட்ட பரிதியப்பர் கோயிலுக்குச் செல்லுமாறு முனிவர் அப்பறவைகளுக்கு ஓதினார்.

இரு பறவைகளும் இங்கு வந்து ஈசனுக்கு அருகே அமர்ந்து வழிபட்டன. ஈசனின் அருளால் அப்பட்சிகள் பழைய வாழ்வைப் பெற்றன.

திரிவேணி சங்கமத்தில் நீராடுவோரின் பாவங்கள் அனைத்தும் தன்னை வந்து சேர்வதால் அதன் பாரப்பளுவை போக்க பிரமதேவனிடம் வழி கேட்டாள்.

காவிரிக் கரையில் சூரியன் வழிபட்ட பரிதியப்பர் தலம் சென்று சூரிய புஷ்கரணியில் ஒருவருட காலம் நீராடி ஈசனைப் பூசனை புரிந்து வந்தால் கங்கையைப் பற்றிய பாரப்பளுப் பாவங்கள் நீங்கிப் போகும் என்று பிரம்ம தேவன் கூறினார். 

கங்கையும் அவ்வாறே பரிதியப்பர் ஆலயம் வந்து நீராடி பூசனை புரிய கங்கையின் பாவப்பளுப் பாவங்கள் நீங்கப் பெற்றாள்.

சூரியன் உருவாக்கிய சூரிய தீர்த்தம் திருக்கோயிலுக்கு நேர் கிழக்கில் இருக்கிறது. இதில் நீராட கண்நோய், மனநோய்களை ஈசன் ஒழித்தொழிக்கிறார்.

ஆலயத்திற்கு மேற்பக்கமாக சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.

தலவிருட்சம் அரசமரம். 

சம்பந்தர் இத்தலம் வந்து ஈசனை பூஜித்து மனமுருகிப் பாடியுள்ளார்.

*ஆசடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்தேத்த*

*மாசடை யாத வெண்ணீறு பூசி மனைகள் பலிதேர்வார்*

*காசடை மேகலை சோர வுள்ளங் கவர்ந்தார்க்கிடம் போலும்*

*பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதிந் நியமமே*
                         என பாடியுள்ளார்.

*"பரிதி நியமத்தார் பன்னிருநாள்*
*வேதமும் வேள்விப் புகையும் ஓவா*
*விரிநீர் மிழலை எழுநாள் தங்கி"*     என்று திருநாவுக்கரசர் தமது கோயில் திருத்தாண்டகத்தில் பாடிப்பரவியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து ஈசனாரை வழிபட்டதை, சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,,,,,,

*"பழுதில் சீர்திருப் பரிதி நன்னியமும் பணிந் தங்கு*

*எழுது மாமறை யாம்பதிகத் திசை போற்றி*

*முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே"*

என குறிப்பிட்டுள்ளார்.

          திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment