*சிவமயம் சிவயநம*
*ஆரூர் (திருவாரூர்)*திருத்தலம்.
அருள்மிகு *அல்லியம்பூங்கோதை அம்மை உடனுறை புற்றிடங்கொண்டார்*
*தல மரம்: வில்வம்*
*குளம்: கமலாலயம்*
பதிகங்கள்: *சித்தந்தெளி -1 -91 திருஞானசம்பந்தர்*
*பாடலனான் -1 -105 திருஞானசம்பந்தர்*
*பவனமாய்ச் -2 -79 திருஞானசம்பந்தர்*
*பருக்கையானை -2 -101 திருஞானசம்பந்தர்*
*அந்தமாய் உலகாதியும் -3 -45 திருஞானசம்பந்தர்*
*சூலப்படையானை -4 -19 திருநாவுக்கரசர்*
*காண்டலேகருத் -4 -20 திருநாவுக்கரசர்*
*முத்துவிதான -4 -21 திருநாவுக்கரசர்*
*படுகுழிப்பவ்வத் -4 -52 திருநாவுக்கரசர்*
*குழல்வலங்கொண்ட -4 -53 திருநாவுக்கரசர்*
*குலம்பலம் -4 -101 திருநாவுக்கரசர்*
*வேம்பினைப் -4 -102 திருநாவுக்கரசர்*
*எப்போதும் -5 -6 திருநாவுக்கரசர்*
*கொக்கரை -5 -7 திருநாவுக்கரசர்*
*கைம்மான மதகளிற்றி -6 -24 திருநாவுக்கரசர்*
*உயிராவண -6 -25 திருநாவுக்கரசர்*
*பாதித்தன் -6 -26 திருநாவுக்கரசர்*
*பொய்மாயப் -6 -27 திருநாவுக்கரசர்*
*நீற்றினையும் -6 -28 திருநாவுக்கரசர்*
*திருமணியை -6 -29 திருநாவுக்கரசர்*
*எம்பந்த -6 -30 திருநாவுக்கரசர்*
*இடர்கெடு -6 -31 திருநாவுக்கரசர்*
*கற்றவர்க -6 -32 திருநாவுக்கரசர்*
*ஒருவனாய் -6 -34 திருநாவுக்கரசர்*
*இறைகளோடிசைந்த -7 -8 சுந்தரர்*
*குருகுபாய -7 -37 சுந்தரர்*
*பத்திமையு -7 -51 சுந்தரர்*
*பொன்னும்மெய் -7 -59 சுந்தரர்*
*கரையுங் -7 -73 சுந்தரர்*
*அந்தியும் நண்பகலும் -7 -83 சுந்தரர்*
*மீளாஅடிமை -7 -95 சுந்தரர்*
*கைக்குவான் முத்தின் -9 -18 பூந்துருத்தி நமம்பி காடநம்பி*
*விரிகடல் பருகி -11 -7 சேரமான்பெருமாள்*
முகவரி: திருவாரூர் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610001
தொபே. 04366 242343
இது *சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் எண்பத்தேழாவது* ஆகும்.
*திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே* என்னும் *அப்பர் சுவாமிகள் தேவாரப் பகுதியால்* அறியலாம்.
இவ்வூரில் *பூங்கோயில், அரநெறி, பரவையுண்மண்டளி என்னும் மூன்று பாடல் பெற்ற கோயில்கள்* இருக்கின்றன.
இவற்றுள் *புற்றிடங்கொண்டார் (வன்மீகநாதர்) எழுந்தருளியிருக்கும் திருக் கோயிலே பூங்கோயில்* எனப் பெயர்பெறும்.
இதுவே *திரு மூலட்டானம் எனவும் வழங்கப்பெறும். இதற்கு முப்பத்துநான்கு பதிகங்கள்* இருக்கின்றன.
*அரநெறி, நமிநந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக் கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும்*.
இச்செய்தியைத் *திருநாவுக்கரசு பெருந்தகையார் இவ்வூர்த் திருவிருத்தத்தில் "நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடறியுமன்றே" எனச்சிறப் பித்துள்ளனர்*.
இது, கோயில் *திருவிசைப்பாப் பதிகம் பாடிய கண்டராதித்த சோழதேவரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது*.
இதற்கு *அப்பர் அருளிய பதிகங்கள் இரண்டு உள்ளன*.
இக்கோயில் *இரண்டாம் பிராகாரத்தில் மேற்குமுகமாக இருக்கின்றது*.
*பரவையுள் மண்டளி, பரவைநாச்சியார் தமது மாளிகையின் ஒரு பகுதியில் மண்ணால் சிறுகோயில் கட்டி, அதில் இறைவனை எழுந்தருளுவித்து நாளும் வழிபட்ட கோயிலாகும்*.
இது *சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற சிறப்புடையது*.
இது *தெற்குக் கோபுரத் திற்கு அண்மையில் இருக்கின்றது*.
(ஒருகாலத்து *வருணன் இந்நகர்மீது அனுப்பிய கடலை உண்டமைபற்றி இத்தலத்துக்குப் பரவையுண் மண்டளி என்னும் பெயரெய்தியது என்றும் கூறுபவர்)*.
ஆக, இத்தலத்திற்கு *முப்பத்தேழுபதிகங்களும், வேறு திரு முறைகளில் பல பாடல்களும்* இருக்கின்றன.
இத்தலத்தின் *தேரும், திருவிழாவும், திருக்கோயிலும், திருக்குளமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப் பாடப்பெற்றுள்ளன*.
*திருக்குளமும் திருக்கோயிலும், செங்கழுநீர் ஓடையும் தனித்தனி ஐந்துவேலிகள் பரப்புடையன*.
*பிறக்க முத்திதருவது, தியாகேசர் எழுந்தருளிய ஏழுவிடங்கத் தலங்களுள் முதன்மைபெற்றது*.
*பஞ்ச பூதத் தலங்களில் பிருதிவித் தலமாயுள்ளது*.
*திருமகளால் பூசிக்கப் பெற்றது*.
இங்குள்ள *தேவாசிரிய மண்டபத்திலிருந்த அடியவர்களைக் கண்டுதான் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையை அருளினார்*.
அவர் *விருத்தாசலத்தில் மணிமுத்தாநதியில் இட்ட பொன்னை மிகப்பெரிய கமலாலயம் என்னும் திருக்குளத்திலிருந்து எடுத்துப் பரவையார்க்குக் கொடுத்த பழம்பதி இதுவேயாகும்*.
அவர் *பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது*.
இச்செய்தியை *அடியேற்கு எளிவந்த தூதனை*என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும்.
*காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற அவர் `"மீளா அடிமை" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது*, இத்தலத்தில்தான்.
*நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார், விறன்மிண்ட நாயனார் இவர்கள் முத்திபெற்றதும் இப்பதியிலேதான்*.
*இத்தலம் சோழமன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் தலங்கள் ஐந்தனுள் ஒன்றாகும்*.
*ஒருகுலத்துக்கு ஒருமகன் உள்ளான் என்பதையும் ஓராது ஓரான்கன்றுக்காகத் தன் மகனது உயிரைப் போக்கிய மனுநீதிச் சோழன் ஆண்டதும் இப்பதியேதான்*.
*திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்* என்று *சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய்மலர்ந் தருளியிருப்பதால்* இப்பதியின் பெருமையை அளவிடுவார் யார்? இதை *விரிப்பின் அகலும். தொகுப்பின் எஞ்சும்*.
*பெரியபுராணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பு என்னும் பகுதி படித்து இன்புறுதற் குரியதாகும்*.
*திருவாதிரைத் திருவிழா*
*பழங்காலத்தில் இவ்விழா பெருஞ் சிறப்புடன் கொண்டாடப்பட்டுவந்தது*.
அவ்விழாவை *அப்பர் சுவாமிகள்* கண்டுகளித்து, அதன் சிறப்பை *முத்து விதானம்* என்று தொடங்கும் ஒரு தனித் திருப்பதிகத்தினால் *ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக்* கூறியருளியிருக்கிறார்கள்.
*பங்குனி உத்திரத் திருவிழா*
இது *மாசிமாதம் அத்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெறும், திருவிழாவாகும்*.
*இவ்விழா நினைவிற்கு வரவே ஒற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் சூளுறவையும் மறந்து, திருவாரூர்க்குப் புறப்பட்டார் என்று பெரியபுராணம் செப்புகின்றது*.
அதனால் *இவ்விருவிழாக்களும் பழங்காலமுதல் நடந்துவரும் சிறப்புடையனவாதலை நன்கறியலாம்*.
*பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருப்பெயர்கள் வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், திருமூலட்டான நாதர்*.
*இறைவியாரின் திருப்பெயர் அல்லியம்பூங்கோதை அம்மை. யோக நிலையில் தனிக்கோயிலில் கமலாம்பிகையாக எழுந்தருளியுள்ளார்*.
*இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராசர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர்*.
*பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்*.
*மார்கழித் திருவாதிரையும் பங்குனி உத்திரமும் இவரை வழிபடற்குரிய சிறந்த நாள்கள் என்று அறிஞர்கள் உரைத்துள்ளனர்*.
இவர் எழுந்தருளியிருக்கும் இடம் *தேவசபை என்றும், இவருக்குத் தென்றல்காற்றுவரும் கல்சன்னல் திருச்சாலகம் என்றும், இவருக்குரிய கொடி தியாகக்கொடி என்றும், இவருடைய தேருக்கு ஆழித்தேர் என்றும், இவரை எழுந்தருளப்பண்ணும் பிள்ளைத் தண்டுகள் திருவாடுதண்டு, மாணிக்கத்தண்டு* என்றும் பெயர் பெற்றுள்ளன.
இவர் *சந்நிதியில் நந்திதேவர் நின்ற திருக்கோலத்தில்* உள்ளார்.
இத்தலத்து வழிபாட்டுக் காலங்களுள் *திருவந்திக்காப்பு* மிக்க விசேடமுடையது.
இவருடைய *நடனம் அஜபாநடனம், புயங்க நடனம்* எனப் பாராட்டப்படும்.
*ஷ்ரீ கமலை ஞானப்பிரகாச சுவாமிகள் தருமை ஆதீனத்தை நிறுவிய ஷ்ரீ குருஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்த அருள்மிகு சித்தீச்சுரம் திருக்கோயில், ஆலயத்தின் வடபால்* உள்ளது.
*தலவிநாயகர் வாதாபிவிநாயகர்*.
1. *திருவாரூர் மும்மணிக்கோவை*
*இது அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனாரால் இயற்றப்பெற்றது*.
*பதினோராந் திருமுறையில் உள்ள நூல்களுள் ஒன்றாய் விளங்கும் சிறப்புடையது*.
2. *கமலாலயச் சிறப்பு*
*இது சிதம்பரம் மறைஞான சம்பந்தரால் இயற்றப்பெற்றது*.
3. *திருவாரூர்ப் புராணம்*
*நிரம்ப அழகியதேசிகருடைய மாணாக்கராகிய அளகைச் சம்பந்தர் என்பவரால் செய்யப்பெற்றது*.
4. *திருவாரூர் உலா*
*அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் இயற்றப்பெற்றது*.
5. *தியாகராச லீலை*
*திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது, இது முற்றுப்பெறாத நிலையில் உள்ளது*.
6. *திருவாரூர் நான்மணிமாலை*
இதை அருளியவர் *குமரகுருபர சுவாமிகள்*.
7. *தியாகராசப் பள்ளு*
இதை *ஆக்கியோர் பதினாறாம் நூற்றாண்டில் விளங்கியிருந்த கமலைஞானப்பிரகாசர் ஆவர்*.
8. *திருவாரூர்ப் பன்மணிமாலை*
*இலக்கண விளக்கம் இயற்றிய திருவாரூர் வைத்தியநாததேசிகரால் ஆக்கப்பெற்றது*.
9. *திருவாரூர் ஒரு துறைக்கோவை*
இது *வெறிவிலக்கு என்னும் ஒரு துறையை வைத்துக்கொண்டு நானூறு பாடல்களால் ஆக்கப்பெற்றதொரு நூல். இதன் ஆசிரியர் கீழ்வேளூர்க் குருசாமி தேசிகர் என்பர்*.
10. *திருவாரூர்க் கோவை*
இது *எல்லப்ப நயினார் என்னும் புலவரால் பாடப்பெற்ற சொற்சுவை பொருட்சுவை நிரம்பிய நூல்*.
11. *கமலாம்பிகை பிள்ளைத்தமிழ்*
*தருமை ஆதீனத்து அடியார் கூட்டங்களில் ஒருவராய் விளங்கியிருந்த சிதம்பர முனிவரால் இயற்றப்பெற்றது*.
இவைகளன்றித் *திருவாரூர் மாலை, கமலாம்பிகை மாலை, முதலான நூல்களும், காளமேகப்புலவர் முதலானோரின் தனிப் பாடல்களும் இருக்கின்றன*.
*கமலாலயத்தின் வடகிழக்கு மூலையில் மாற்றுரைத்த பிள்ளையாரின் திருக்கோயில் இருக்கின்றது*.
*திருவாரூர்த் தேரழகு* என்னும் உலக வழக்கு இவ்வூர்த் தேரின் சிறப்பைத் தெரிவிப்பதாகும்.
*தலப்பெருமையை விளக்கும் புராணப்பாடல்* ஒன்று பின் வருமாறு:
*திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால் இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ*.
*திருவாரூர்ப் புராணம் தலமகிமைச் சுருக்கம்*.
*கல்வெட்டு*
இத்திருக்கோயிலில், *பிற்காலச் சோழ மன்னர்களுள், முதலாம் பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் (அ) கங்கைகொண்ட சோழன், முதலாம் இராஜாதிராசன் முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன், இவர்கள் காலங்களிலும், பிற்காலப் பாண்டியர்களுள் மாறவர்மன் குலசேகரதேவன், மாறவர்மன் ஷ்ரீவல்லபன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களுள் கேசவப்பநாயக்கர் மகனார்*.
*அச்சுதப்பநாயக்கர் முதலானோர் காலங்களிலும் பொறிக்கப் பெற்ற அறுபத்தைந்து கல்வெட்டுக்கள்* இருக்கின்றன.
இக்கல்வெட்டுக்களுள் *வன்மீகநாதரின் பெயர் புற்றிடங் கொண்டார் என்றும், தியாகராசரின் பெயர் வீதிவிடங்கர், திருவாரூர் உடையார் வீதிவிடங்க மாதேவர் எனவும், அம்மையார் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் என்றும், அரநெறிக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், திரு அரநெறி உடையார் என்றும், பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமண்டளியுடைய மகாதேவர்* என்றும் குறிக்கப்பட்டனர்.
*அரநெறிக்கோயில்*
இக்கோயிலைக் *கற்றளியால் கட்டியவர், கோயில் திருவிசைப்பா (பதிகம்) பாடிய கண்டராதித்த சோழதேவரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியார் ஆவர்*.
இத்திருக்கோயில் *அரநெறி உடையார்க்குத் திருநொந்தா விளக்கு இரண்டினுக்குக் குரு காலன் திருமூலட்டானத் தொண்டர் மேன்மங்கலத்தில் மூன்றுவேலி நிலத்தை முதல் இராஜராஜ தேவரின் ஆட்சியாண்டு இருபது, நாள் இருநூற்று ஏழில்* கொடுத்துள்ளார்.
*முதலாம் இராஜாதிராஜரின் இருபத்தேழாம் ஆண்டில் அரநெறி உடையார்க்கு அணுக்கியார் பரவை நங்கையார் தீபங்குடி மேல்மங்கலம் கிராமத்தில் வழி பாட்டிற்காக நிலம்* கொடுத்திருந்தனர்.
*ஏனைய கோயில் கல்வெட்டுக்களில் கண்ட செய்திகள்*
*கோனேரின்மைகொண்டான் திருவாரூர் மூலத்தான முடையார்க்குத் திருப்போனகத்திற்கும் தான் பிறந்த நாளில் விழா எடுப்பதற்கும் நிலம் விட்டிருந்தான்*.
*கங்கைகொண்ட சோழனது மகனாகிய முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் பூண்டிக்கூத்தன் செம்பியன் மூவேந்தவேளான், வீதிவிடங்க தேவர்க்கு அணிகலன்கள் அளித்திருந்தான்*.
*அவன்மீது நான்கு பாடல்கள் பாடப்பெற்றுள்ளன*.
*வீதிவிடங்கப் பெருமானின் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம் இவைகளைப் பொன்வேயுமாறு, கங்கைகொண்ட சோழனது இரண்டாவது மகனாகிய விசயராஜேந்திரன், வேளாக்கூத்தனாகிய செம்பியன் மூவேந்த வேளானுக்குக் கட்டளையிட்டிருந்தனன்*
.
*தன்மகன் வீரசோழ அணுக்கன்மீது வீர அணுக்கவிஜயம் என்னும் நூலை எழுதிய பூங்கோயில் நம்பிக்கு, இவ்வேந்தன் நிலம் அளித்திருந்தான்*.
*இவ்வேந்தன் காலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டுப் புறக்குடி உடையான் சுற்றி ஆதித்தனான சோழ விச்சாதர விழுப்பரையன் இசைபாடுவோர்க்கும், கோயிலுக்கு எண்ணெய்க்கும் ஆகப் பொன் கொடுத்திருந்தான்*.
*குலோத்துங்கன் கல்வெட்டு ஊர்ச்சபையார் தேவாசிரயன் மண்டபத்தில் கூடிக் கோயில் காரியங்களைக் கவனித்துவந்ததைக் குறிப்பிட்டுள்ளது*.
*மூன்றாங் குலோத்துங்கனுடைய கல்வெட்டு, புதுநீர்வரு வழியிலுள்ள விநாயகர் ஆலயத்தைத் திருப்பணி செய்வித்து, நாள் வழிபாட்டிற்கு நிலம் அளித்திருந்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளது*.
*மூன்றாம் இராஜேந்திரன் திருக்கோயிலுக்கு முன்புள்ள திருமாளிகை விநாயகப் பிள்ளையார் கோயிலை எடுப்பித்தான்*.
*இங்ஙனம் சோழ மன்னர்களேயன்றிப் பிற்காலப் பாண்டியர்கள் முதலானோர்களும் நிலம் முதலியவற்றை உதவியுள்ளனர்*.
*இசைஞானியார்*
*சிவநெறிக்குரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திநாயனாரின் அரும்பெறல் தாயார் இசைஞானியார் என்பதையும், அவ்வம்மையார் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாசாரியாருடைய மகளார் என்பதையும் அவர் திருவாரூர்ப் பதியினர் என்பதையும் ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது*.
இச்செய்தி *சேக்கிழார் பெரியபுராணத்தில் இசைஞானியார் புராணத்தில் காணப் பெறாததாகும்*.
*மனுநீதிச்சோழன்*
*விக்கிரம சோழதேவரின் ஐந்தாம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு பெரியபுராணத்தில் கூறப் பெற்றுள்ள மனுநீதிச்சோழனின் செயலை உறுதிப் படுத்துவதோடு, அம்மனுநீதிச்சோழனின் மந்திரியாயிருந்தவன் உபயகுலாமலன் என்பதையும், அவன் சோழமண்டலத்தில் இங்கணாட்டுப் பாலையூரினன் என்பதையும் அம்மந்திரியின் வழியில்வந்த பாலையூர் உடையான் சந்திரசேகரனாதி வீதி விடங்கனான குலோத்துங்கசோழ மாபலிவாணராயன் என்பவன் விக்கிரமசோழன் காலத்தவன் என்பதையும், அவன் வேண்டுகோளின்படி, அவன் வம்சாதியாக வருகிற மாளிகை மனையில், நாள்தோறும் அடியார்க்கு அமுது இடப் பெற வேண்டுமென்று மந்திரியாகிய குலோத்துங்க சோழ மாவலிவாணராயன் அரசனிடம் விண்ணப்பித்துக்கொள்ள, அரசனும் (விக்கிரம சோழனும்) அதற்கு இசைந்தருளியதை உணர்த்துவதாகும்*.
*நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செய்கிற சூரியபுத்திரன் மநு, தன் புத்திரன் ஏறிவருகிற தேரில் பசுவின்கன்றகப்பட்டு, வருத்தமுற, அதன் மாதாவான சுரபி கண்டு துக்கித்து மநுவின் வாசலின் மணியை எறிய, அதுகேட்டு மநு தன் மந்திரி இங்கணாட்டுப் பாலையூருடையான் உபயகுலாமலனைப் பார்த்து நீசென்று இதனை அறிந்து.... வாயிற்புறத்து ஒரு பசு மணி எறியாநின்றது என்று சொல்ல அதுகேட்டு மநு புறப்பட்டுப் பசுவையும் பட்டுக்கிடந்த.....படி வினவித் தன் புத்திரன் பிரியவிருத்தனைத் தேரிலே ஊர்ந்து குறுக்கவென்று உபய குலா மலனுக்குச் சொல்ல அவன் சந்தாயத்தோடும் புறப்பட்டுத் தன் செவிகளைத் தரையிலே குடைந்துகொண்டு துக்கித்தானாய், மநுதானே புறப்பட்டுத் தன் புத்திரனைத் தானே தேரிலே ஊர்ந்து குறுக்க, அப்போதே நாம் அவனை அநுக்கிரகித்து, கன்றுக்கும் மந்திரிக்கும், மநு புத்திரனுக்கும் ஜீவன்கொடுக்க, அதுகண்டு மநு சந்தோஷித்துக் கன்றினை எடுத்துக்கொண்டு பசுவுக்குக் காட்டி, குடு..... அபிஷேகம் பண்ணி`` எனத் தொடர்கின்றது*.
*திருவாரூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு*
*முதல் இராஜராஜன் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர் எனவும், முதலாம் இராஜாதிராஜன் காலத்தில், அதிராஜேந்திர வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர் எனவும், முதற் குலோத்துங்கசோழன் காலத்தில் செயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர் எனவும் வழங்கப்பட்டு வந்தது*.
*வீதிகளுக்குப் பெயர்கள்*
இவ்வூர் வீதிகளுக்கு ஆன்றோர்களால் இடப்பெற்றிருந்த பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளன.
அவைகளாவன
*திருவடிப்போது நாறிய திருவீதி, ராஜராஜன் திருவீதி, குலோத்துங்கன் திருவீதி* என்பனவாகும்.
*திருச்சிற்றம்பலம்*🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment