ஸ்ரீ கந்த சஷ்டி கவசம்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும் (35)
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்(40)
பதவுரை
சண்முகம் நீயும்-ஆறுமுகப் பெருமானே நீயும், தனியொளி ஒவ்வும்-ஒப்பற்ற ஒளி வடிவான ஓங்காரமுமாக நின்று திகழ்பவரும், குண்டலியாம் சிவகுகண் தினம் வருக-உடலின் மூலாதாரத்தில் உள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சக்தியாய் விளங்குகின்ற நன்மை பயக்கக்கூடிய முருகனே நீ நித்தம் வருவாயாக.
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்-ஆறு திருமுகங்களும் அவற்றிற்கு சூட்டப்படுள்ள அழகுமிக்க ஆறு கிரீடங்களும்,நீறிடு நெற்றியும்-வெண்ணீறு அணியப் பெற்ற திருநுதலும்(நெற்றி).
நீண்ட புருவமும்-அந்நுதளில் அமையபெற்ற நீண்ட புருவங்களும்,பண்ணிரு கண்ணும்-கருணை பொழியும் பண்ணிரு திருவிழிகளும், பவளச் செவ்வாயும்-பவளம் போன்ற சிவந்த இதழ்களையுடைய திருவாய்கள் ஆறும், நன்னெறி நெற்றியில்-உலகை நன்னெறியில் கொண்டு செல்கின்ற உன்தன் நெற்றியில், நவமணிச்சுட்டியும்- ஒளிவீசும் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட நெற்றி ஆபரணமும், ஈராறு செவியில்-பண்ணிரு திருச்செவிகளிலும், இலகு குண்டலமும்-இலேசான ஒளியுடன் விளங்குகின்ற காதணிகளும், ஆறிறு தின்புயத்தழகிய மார்பில்-வலிமைமிக்க பண்ணிரு புயங்களையடுத்த அழகுமிக்க மார்பில், பல்பூஷணமும்-பல்வேறு வகையான அலங்கார ஆபரணங்களும், பதக்கமும்-ஒளி வீசுகின்ற பதக்கமும், நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்-மிகவும் உயர்ந்த வைரக்கற்களைப் பதித்து பிரகாசிக்கின்ற நவரத்தினங்களாளான மாலையும்,தரித்து-அழகுபெற அணிந்து காட்சியளிகின்ற எம்பெருமானே உம்மை வணங்குகின்றேன்....
No comments:
Post a Comment