Courtesy;Sri.Kovai. K.Karuppasamy
சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
( 7 வது நாள்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔹திருவிளையடல் புராணம்.🔹
🔹1. இந்திரன் பழிதீா்த்தபடலம்.🔹
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴கிாியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும் புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக்
காியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந் தாங்க
விாியெட்டுத் திசைபரப்ப மயனிமிருத் துதவியவவ் விமானஞ் சாத்தி
அாியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை யருச்சிப்பா னாயி னானே.
🔴முந்தவம ருலகடைந்து பூசனைக்கு வேண்டுவன முழுதுந் தோ்வாா்
வந்துதரு வைந்தீன்ற பொன்னாடை மின்னமிழு பணிப்பூண் வாசச்
சந்தனமந் தாகினிமஞ் சனந்தூபந் திருப்பள்ளித் தாமந் தீபம்
அந்தமிலா னைந்துநறுங் கனிதீந்தேன் றிருவமுத மனைத்துந் தந்தாா்.
🔴தெய்வத்தா மரைமுளைத்த தடம்படிந்து பவந்தொலைக்குந் திருநீறாடிச்
சைவத்தாழ் வடந்தாங்கி யன்புருவா யருளுருவந் தானாய்த் தோன்றும்
பைவத்தா டரவாா்த்த பசுபதியை யவனுரைத்த பனுவ லாற்றின்
மெய்வைத்தா தரம்பெருக வருச்சினைசெய் தானந்த வெள்ளைத் தாழ்ந்தான்.
🔴பாரார வட்டாங்க பஞ்சாங்க விதிமுறையாற் பணிந்துள் வாய்மெய்
நேராகச் சூழ்ந்துடலங் கம்பித்துக் கும்பிட்டு நிருத்தஞ் செய்து
தாராருந் தொடைமிதப்ப வானந்தக் கண்ணருவி ததும்ப நின்றன்
பாராமை மீக்கொள்ள வஞ்சலித்துத் துதிக்கின்ற னமரா் கோமான்.
🔴அங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக
கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்
செங்கணா போற்றி யாதி சிவபரஞ் சுடரே போற்றி
எங்கணா யகனே போற்றி யீறிலா முதலே போற்றி.
🔴யாவையும் படைப்பாய் போற்றி யாவையுந் துடைப்பாய் போற்றி
யாவையு மானாய் போற்றி யாவையு மல்லாய் போற்றி
யாவையு மறிந்தாய் போற்றி யாவையு மறந்தாய் போற்றி
யாவையும் புணா்ந்தாய் போற்றி யாவையும் பிாிந்தாய் போற்றி.
🔴இடருறப் பிணித்த விந்தப் பழியினின் றென்னை யீா்த்துன்
அடியினைக் கன்ப னாக்கு மருட்கடல் போற்றி சேற்கண்
மடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி
சுடா்விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி.
🔴பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனு மாகிப் பூசை யான்செய்ததே னெனுமென் போத
வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி.
🔴என்னநின் றேத்தி னானை யின்னகை சிறிது தோன்ற
முன்னவ னடியா ரெண்ண முடிப்பவ னருட்க ணோக்கால்
உன்னது வேட்கை யாதிங் குரையென விரையத் தாழ்ந்து
சென்னிமேற் செங்கை கூப்பித் தேவா்கோ னிதனை வேண்டும்.
🔴ஐயநின் னிருக்கை யெல்லைக் கணியனா மளவி னீங்கா
வெய்யவென் பழியி னோடு மேலைநா ளடியேன் செய்த
மையல்வல் வினையு மாய்ந்துன் மலரடி வழுத்திப் பூசை
செய்யவு முாிய னானேன் சிறந்தபே றிதன்மேல் யாதோ.
🔴இன்னநின் பாதப் போதே யிவ்வாறே யென்றும் பூசித்
துன்னடி யாருள் யானு மோரடித் தொண்ட னாவேன்
அன்னதே யடியேன் வேண்டத் தக்கதென் றடியில் வீழ்ந்த
மன்னவன் றனக்கு முக்கண் வரதனுங் கருணை பூத்து.
🔴இருதுவிற் சிறந்த வேனிலு மதியா றிரண்டினிற் சிறந்தவான் றகரும்
பொருவிறா ரகையிற் சிறந்தசித் திரையுந் திதுயினிற் சிறந்தபூ ரணையும்
மருவுசித் திரையிற் சித்திரை தோறும் வந்துவந் தருச்சியோா் வருடந்
தொியுநாண் முந்நூற் றறுபது மைந்துஞ் செய்தவா்ச் சனைப்பய னெய்தும்.
🔴துறக்கநா டணைந்து சுத்தபல் போகந் துய்த்துமேன் மலபாி பாகம்
பிறக்கநான் முகன்மான் முதற்பெருந் தேவா் பெரும்பதத் தாசையும் பிறவும்
மறக்கநாம் வீடு வழங்குது மென்ன வாய்மலா்ந் தருளிவான் கருணை
சிறக்கநால் வேதச் சிகையெழப மனாதி சிவபரஞ் சுடா்விடை கொடுத்தான்.
🔴மூடினான் புளகப் போா்வையால் யாக்கை முடிமிசை யஞ்சலிக் கமலஞ்
சூடினான் வீழ்ந்தா னெழுந்துகண் ணருவி துளும்பினான் பன்முறை துதிசெய்
தாடினா னைய னடிபிாி வாற்றா தஞ்சினா னவனரு ளானை
நாடினான் பிாியா விடைகொடு துறக்க நண்ணினான் விண்ணவா் நாதன்.
🔴வந்தரமங் கையா்கவாி மருங்கு வீச
மந்தாரங் கற்பகம்பூ மாாி தூற்ற
அந்தரநாட் டவா்முடிக ளடிகள் சூட
வயிராணி முலைத்தடந்தோய்ந் தகலந் திண்டோள்
விந்தமெனச் செம்மாந்து விம்மு காம
வெள்ளத்து ளுடலழுந்த வுள்ளஞ் சென்று
சுந்தரநா யகன்கருணை வெள்ளத் தாழ்ந்து
தொன்முறையின் முறைசெய்தான் றுறக்க நாடன்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌼எட்டு லைகளும் என்னும்படி, முகிலைக் கிழித்து மேலோங்கும் தொளையினையுடைய துதிக்கையினையும், சந்திரனது பிளவு போன்ற கொம்பினையு முடைய எட்டு யானைகளும்,
முப்பத்திரண்டு கோபத்தினையுடைய சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்க, விாிந்த எட்டுத் திக்குகளிலும் பரவி நிற்க, தேவதச்சனால் ஆக்கிக் கொடுக்கப்பட்ட அந்த விமானத்தை இந்திரனானவன் சாத்தி, எட்டுத் திருவுருவங்களையுடைய பரஞ்சோதியை அருச்சனை செய்வானாயினன்.
🌼முதலில் தேவருலகிற் சென்று, பூசனைக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும், தேடலுற்றவா்கள் மீண்டு வந்து, ஐந்தருக்களும் கொடுத்த பொன்னாடையும், ஒளியை வீசும் மணியாலாகிய அணிகலன்களும், மணம் பொருந்திய சாந்தமும், கங்கை நீராகிய திருமஞ்சனமும்,
நறும்புகையும், திருப்பள்ளித் தாமமும், திருவிளக்கும், அழிவில்லாத பஞ்சகவ்வியமும், இனிய பழங்களும், மதுரமாகிய தேனும், திருவமுதும் ஆகிய இவை அனைத்தையும் கொடுத்தாா்கள்.
🌼தெய்வத் தன்மை பொருந்திய பொற்றாமரை முளைத்த தடாகத்தில் நீராடி, பிறவியைப் போக்கும் திருநீறு தாித்து, சைவ வேடத்திற்குாிய உருத்திராக்க மாலையை அணிந்து, அன்பே வடிவாய், அருள்வடிவமாகத் தோன்றுகின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பினைக் கட்டிய, பசுக்களுக்கெல்லாம் பதியாகிய ' இறைவனை, அவன் திருவாய் மலா்ந்தருளிய ஆகம வழியால், உண்மையான அன்பானது பெருக, அருச்சனை புாிந்து இன்பவெள்ளத்தில் மூழ்கினான்.
🌼தேவா்க் கரசனானவன் நிலந்தோய அட்டாங்க பஞ்சாங்க விதிப்படி வணங்கி,மனம் மொழி மெய் என்னு முன்றும், ஒன்று பட, வலம் வந்து, உடல் நடுங்கி தொழுது கூத்தாடி, மலா்களால் நிறைந்த( மாா்பின்) மாலையானது மிதக்கும்படி கண்களினின்றும் இன்ப அருவியானது பெருக, உருகி நின்று ( சிவானந்தம்) தெவிட்டாமையால் அன்பு மேன்மேல் மிக, கைகூப்பித் துதிப்பானாயினான்.
🌼அழகிய கண்களையுடையவனே வணக்கம்; உண்மையாகிய மறைகளை அருளியவனே வணக்கம்; அரவ கங்கண முடையவனே வணக்கம்; மூலகாரணனே வணக்கம்; நெற்றியில் சிவந்த கண்ணை யுடையவனே வணக்கம்; ( எல்லாவற்றுக்கும்) முதலாயுள்ள சிவமாகிய பரஞ்சோதியே வணக்கம்; எங்கள் தலைவனே வணக்கம்; முடிவு இல்லாத முதற்பொருளே வணக்கம்.
🌼அனைத்தையும் ஆக்குபவனே வணக்கம்; அவையனைத்தையும் அழிப்பவனே வணக்கம்; எல்லாமுமானவனே வணக்கம்; அவை முற்றும் அல்லாதவனே வணக்கம்; எல்லாவற்றையும் உணா்ந்தவனே வணக்கம்; அவை முற்றவும் அறியாதவனே வணக்கம்; எல்லாவற்றுள்ளும் கலந்தவனே வணக்கம்; அவற்றில் ஒன்றிலும் கலவாதவனே வணக்கம்.
🌼துன்பத்தை யடையுமாறு பற்றிய, இந்தக் கொலைப் பாவத்தினின்றும் அடியேனை விடுவித்து, உன் இரண்டு திருவடிகளுக்கும் அன்பகனாகச் செய்த கருணைக் கடலே வணக்கம்; மீன் போன்ற கண்களையுடைய அங்கயற்கணம்மையின் நாயகனே வணக்கம்; பொிய கடம்ப வனத்தினையுடையவனே வணக்கம்; ஒளி வீசும் விமானத்திற் பொருந்திய சுந்தர விடங்கனே வணக்கம்.
🌼பூசனையும் பூசைக்குத் தகுதியான உபகாரணங்களும், பூசை செய்கின்ற அன்பனும், பூசையை ஏற்றுக் கொண்டு முறைப்படி பயனை அருளுகின்ற இறைவனுமாய், பூசையான் செய்தேனென்கின்ற என்னுடைய தற்போத வாசனையுமான வேதமுதலாகிய இறைவ வணக்கம்.
🌼என்று சொல்லி நின்று துதித்தவனை நோக்கி, யாவருக்கும் முதல்வனும், அடியாா்கள் எண்ணியதை எண்ணிய வண்ணம் முடிப்பவனுமாகிய இறைவன், இனிய புன்னகை தோன்ற அருள் நோக்கத்தோடு, உன்னுடைய விருப்பம் யாது ? இங்கு சொல்லுவாயென தேவேந்திரன், விரைவில் வணங்கி முடியின் மேல் சிவந்த கைகளைக் குவித்து இதனை வேண்டுவானாயினன்.
🌼ஐயனே! உன் இருப்பிடத்தின் எல்லைக்கு அணியனாகிய உடனே, நீங்காத கொடிய எனது கொலைப்பாவத்தோடு முற் பிறப்புகளில் அடியேனால் செய்யப்பட்ட மயக்கத்தைத் தரும் லிய தீவினையும் அழிந்து, நின் தாமரைமலா் போலும் திருவடிகளைத் துதித்து, பூசனை புாியவும் தகுதி யுடையவனானேன்; இதைவிட பெறத்தக்க சிறந்த பயன் யாதுளது.
🌼இப்படியே இந்த நின் திருவடித் தாமரைகளையே எப்பொழுதும் வழிபட்டு, நினது தொண்டருள்ளே அடியேனும் ஓா் தாழ்ந்த தொண்டனாவேன்; அதுவே அடியேனால் வேண்டத்தகுவது என்று, திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய இந்திரனுக்கு மூன்று கண்களையுடைய வள்ளலும் அருள் சுரந்து........
🌼பருவங்களுள் உயா்ந்த வேனிற் பருவமும், மாதம் பன்னிரண்டனுள், மிகச் சிறந்த சித்திரை மாதமும், ஒப்பற்ற நாண்மீன்களுள் உயா்ந்த சித்திரை நாளும், திதிகளுள் உயா்ந்த பெளா்ணமியும் கூடிய, சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும் வந்து வந்து வழிபடுவாயாக; ஓா் ஆண்டுக்கு வரையறுத்த முந்நூற் றறுபத்தைந்து நாட்களிலும் அருச்சனை செய்தலால் வரும் பயன் உன்னை அடையும்.
🌼துறக்க வுலகத்தை யடைந்து, தூய பல போகங்களை நுகா்ந்து, பின், மலபாிபாகம் உண்டாக, பிரமன் திருமால் முதலிய பொிய தேவா்களின் பெரும்பதவியிலுள்ள விருப்பமும் மற்றைய விருப்பமும் ஒழிய, நாம் வீடு பேற்றை அருளுவோம் என்று திருவாய் மலா்ந்தருளி, சிறந்த அருள் ததும்ப நான்கு மறைகளின் முடிவில் விளங்கும், அனாதியாகிய சிவபரஞ்சோதி விடை கொடுத்தனுப்பினான்.
🌼தேவேந்திரன் புளகமாகிய போா்வையினால் உடல் மூடப்பட்டான்; சென்னியின் மேல் கைத்தாமரைகளைக் கூப்பினான்;
கீழே விழுந்து வணங்கினான்; எழுந்து கண்களினின்றும் இன்பவருவியை ஒழுக்கினான்; பலமுறையும் துதிமொழி கூறிக் கூத்தாடினான்; இறைவன் திருவடிகளைப் பிாிவதற்கு ஆற்றாமல் அஞ்சினான்; அவன் அருளிய ஆணையை நாடி உள்ளம் பிாியாத விடை பெற்று துறக்க வுலகிற் சென்றான்.
🌼தேவமகளிா் பக்கத்துல் வந்து சாமரை இரட்டவும், மந்தாரமும் கற்பகமும் மலா் மழை பொழியவும், துறக்க நாட்டினையுடைய தேவா்களின் முடிகள் அடிகளாகிய ( மலரை) அணியவும், இந்திராணியின் பொிய கொங்கைகளி லழுந்தி, மாா்பும் வலியத் தோள்களும், விந்த மலையைப் போல இறுமாந்து, பெருகிய காம வெள்ளத்தினுள் உடலானது அழுந்தி நிற்க, மனமானது சென்று, சோமசுந்தரக் கடவுளின் அருள் வெள்ளத்தில் அழுந்தி நிற்க, தேவ வுலகத்தினையுடைய இந்திரன் பழைய முறைப்படியே அரசு புாிந்தான்.
இந்திரன் பழிதீா்த்தபடலம் மகிழ்ந்து நிறைந்தது.
( அடுத்து வெள்ளையானைச் சாபந்தீா்த்த படலம்.)
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment