Wednesday, June 8, 2016

MOTHER

Courtesy: http://vedhaththamizh.blogspot.in/2010/02/blog-post_07.html

மாத்ரு தேவோ பவ !!

|| ராதேக்ருஷ்ணா ||

இது இந்து தர்மத்தில்
மிக முக்கியமான ஒரு வாக்கியம் !

யாராலும் மறுக்கமுடியாத
ஒரு வாக்கியம் !

வாழ்க்கையின் ஆதி வாக்கியம் !
உடலின் தொடக்க வாக்கியம் !
உலகில் நிரந்தரமான வாக்கியம் !

பெண்மையின் மதிப்பிற்குரிய வாக்கியம் !

" தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை "
என்பது பழமொழி !

நூலைப் பொறுத்தே
சேலை அமையும் !
நூல் பலவீனமாக இருந்தால்
சேலை சீக்கிரமாக கிழியும் !

தாயைப் பொறுத்தே
குழந்தையின் வாழ்க்கை !
தாயின் எல்லா விஷயங்களும்
குழந்தைக்கு வந்து சேரும் !

உத்தமமான தாய்மார்களால்தான்
இந்த உலகிற்கு அற்புதமான
மஹாத்மாக்கள், மஹதிகள்
கிடைத்துள்ளார்கள் !

தாய்மார்கள் சரியாக
இருக்கும் பட்சத்தில்
எல்லாக் குழந்தைகளுமே
மஹாத்மாக்கள்தான் !

தாயை அடிப்படையாகக்
கொண்டே மொழி,நாடு,
எல்லாமே கொண்டாடப்படுகிறது !

பூமியையும் தாயாகவே நாம்
வணங்குகின்றோம் !

உலகில் தாய்ப்பாலுக்குச் சமமான
சுத்தமான ஒரு பொருளே இல்லை !
தாய்ப்பாலுக்குச் சமமான
சக்தி வேறு எதிலும் இருப்பதில்லை !
உலகில் தாயே குழந்தைகளின்
முதல் வீடாக இருக்கிறாள் !
உலகில் தாயே குழந்தைகளுக்கு
முதல் வழிகாட்டியாக இருக்கிறாள்!

எந்தக் குழந்தையும் தன் தாயின்
அழகையோ,அறிவையோ, கவனிப்பதில்லை!

தாயின் உன்னதமான அன்பிற்கு
மட்டுமே எல்லாக் குழந்தைகளும்
ஏங்குகின்றனர் !

மனிதர்கள் மட்டுமின்றி,
மற்ற ஜீவராசிகளுக்கும்,
தாயே விசேஷமானவள் !

ஒரு தாயின் மனோபலம்,தைரியம்,
நாமஜபம்,பலம்,பொறாமை,பயம்,
வீரம்,குழப்பம்,கோபம், அசட்டுத்தனம், சந்தேகம், அவசரம்,அஹம்பாவம்,
சுயநலம்,சோம்பேறித்தனம்,பக்தி
எல்லாமுமே குழந்தைகளுக்கு
வந்து சேரும் !

தந்தையின் தாக்கமும் குழந்தைக்கு
உண்டு என்பதும் சத்தியம்!

ஆனாலும் தாயின் கர்ப்பத்தில்
இருப்பதாலும்,அவளுடைய
ஆகாரத்தை தொப்புள்கொடி
வழியாக ஏற்பதாலும்,அவளோடு
கர்ப்பத்தில் 10 மாதம் கூட இருப்பதாலும்,
பிறந்தபிறகு அவளிடமிருந்து
தாய்ப்பால் குடிப்பதாலும்,
அவள் மடியில் உறங்குவதாலும்,
அவளின் கொஞ்சலில் சிரிப்பதாலும்,
தாயின் தாக்கம் குழந்தைக்கு அதிகமே !

"சகவாச தோஷம்" என்று ஒரு
வசனமே இதற்கு சான்று !
யாரோடு அதிகமாக ஒட்டி
உறவாடுகின்றோமோ அவர்களின்
தாக்கம் நமக்கு நிச்சயம் வந்து சேரும் !

உத்தமமான தாய்மார்கள் பலருண்டு !

அவர்களைப்போல் மற்ற
தாய்மார்களும் ஆகிவிட்டால்
இந்த உலகமே ஞானபூமியாகிவிடும் !

தன்னுடைய 4 குழந்தைகளையும்
ஞான மார்க்கத்தில் அனுப்ப
சதா சர்வதா அந்த குழந்தைகளிடம்
"நீ நிரஞ்சனனாவாய்" என்ற
மாதா மதாலசாவே! எங்கள்
தாய்மார்களுக்கு ஆசி கூறுங்கள் !

தான் எத்தனை அவமானப்பட்டாலும்,
அதையெல்லாம் தாங்கிக்கொண்டு,
ராமனைக் காட்டுக்கு அனுப்பி,
தன் பிள்ளை பரதனின் பக்தியை
பரிசோதித்த மாதா கைகேயியே !
எங்கள் தாய்மார்கள் உன்னைப்போல்
பக்தி செய்ய ஆசி கூறுங்கள் !

ராஜனான கணவன் உத்தானபாதன்,
தன்னை ஒதுக்கிவைத்தபோதிலும்,
தன் பிள்ளைக்கு "ஹரியைப் பிடி",
என்று சொல்லி துருவனை 5 மாதங்களில் ஸ்ரீ ஹரியை தரிசிக்க வைத்த சுநீதி மாதாவே !
எங்கள் தாய்மார்கள் உன்னைப் போலிருக்க மனதார ஆசீர்வாதம் செய்யுங்கள் !

பகவான் ராமனுக்கென ஒரு பிள்ளை
லக்ஷ்மணனையும்,பாகவதனான பரதனுக்கென ஒரு பிள்ளை சத்ருக்னனனையும் தந்த,
உத்தமி மாதா சுமத்ரா தேவியே !
எங்கள் அன்னையரும் உன்னைப்போல் பிள்ளைகளை வளர்க்க அனுக்ரஹியுங்கள் !

தன் பிள்ளை மௌனியாக,ஞானியாக,
ஒரு புளியமர பொந்தில் உட்கார்ந்திருந்த போதும்,
அந்தக் குழந்தையை சீவிச் சிங்காரித்து,
மகிழமாலை சூட்டி அதைக் கொண்டாடின,
ஸ்வாமி நம்மாழ்வாரின் மாதா உடையநங்கையே!
எங்கள் அன்னையரும் உன்னைப்போல்
பிள்ளைகளிடம் எதையும் எதிர்ப்பாராதிருக்க
ஒரு பார்வை பாருங்கள் !

முஹம்மதியர்களின் அக்கிரமத்தை அழித்து, சனாதன இந்து தர்மத்தை நிலைநாட்ட, தன் பிள்ளையான சத்ரபதி சிவாஜியை, வீரத்தையும்,இந்து தர்மத்தையும் தாய்ப்பாலாகத் தந்த வீர மாதா ஜீஜாபாயியே !
எங்கள் மாதாக்களும் உன் போல் வீரத்தைத் தாய்ப்பாலூட்ட அருள் செய்யுங்கள் !

வேலைக்காரியாக இருந்தாலும், தன் குழந்தை சத் சங்கத்தில் திளைக்க வேண்டுமென்று, 5 வயது பிள்ளையை மஹாத்மாக்களுக்குக்
கைங்கர்யம் செய்ய அனுப்பி,
அவனை ப்ரும்மரிஷி நாரதராக மாற்றிய, உன்னதத் தாயே!
எங்கள் அன்னையரும்
தங்கள் குழந்தைகளை சத்சங்கத்திற்கு அனுப்ப ஒரு உத்தரவு தாருங்கள் !

இளவயதில் விதவைக்கோலம் எய்திய போதும், அசராத நாம ஜபம் செய்து,தன் பிள்ளைகளையும்
க்ருஷ்ண பக்தியில் திளைக்க வைத்து, அவர்களின் சொத்தான ஹஸ்தினாபுர ராஜ்யத்தை அவர்கள் பெற, பக்தியோடு க்ருஷ்ணனைப் ப்ரார்த்தித்து ஜெயித்துக் காட்டிய
பாண்டவர்களின் தாயே குந்தி தேவி!
எங்கள் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளை க்ருஷ்ண பக்தி செய்ய அனுமதிக்கச் செய்யுங்கள் !

ஒரே ராத்திரியில் தன்னுடைய 5 பிள்ளைகளையும் கொன்ற, அஸ்வத்தாமனைக் கொல்ல
அனைவரும் சொன்ன போதும், அவனை வணங்கி அவன் தாய் க்ருபிக்கு புத்திர சோகம் வேண்டாம் என்று அவனுக்கு உயிர் பிச்சை அளித்த த்யாக மாதா த்ரௌபதியே!
எங்கள் தாய்மார்களும் இப்படி வாழ
ஒரு முறை ஆசீர்வதியும் !

பெற்ற பிள்ளையானாலும், ஞானியானதால், அவன் திருவடி அலம்பின தீர்த்தத்தைப்
பருகி,அவனது மோக்ஷத்தில் ஆனந்தித்த, ரங்கநாதனின்
ஸ்வீகார புத்ரன் பராசரபட்டரின்
திருத்தாயார் ஸ்ரீமதி ஆண்டாளே !
எங்கள் அன்னையரும் உம் போல்
ஞானத்தைக் கொண்டாட அனுக்ரஹியுங்கள் !

பிறந்த பல பிள்ளைகளை இழந்தும்,
உயிரோடிருந்த இரு பிள்ளைகளையும்,
இளவயதில் சன்னியாசியாக அனுமதித்த, ஸ்ரீ க்ருஷ்ணனையே கலியுகத்தில் க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவாய் பெற்ற கலியுக யசோதா சசீ மாதாவே !
எம் தாயாரும் உன்னைப்போல் உலகிற்கு நன்மை செய்ய தைரியம் தாருங்கள் !

இது போல் கோடி கோடி
மாதாக்கள்தான் இந்த உலகைக்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் !

இன்னும் நான் சொல்லாத
மாதாக்கள் பலருண்டு !
புராணங்களிலும், இதிஹாசங்களிலும்
பலகோடி அன்னையர்களின்
வைபவம் உண்டு !
பக்தர்களின் வாழ்க்கை சரிதங்களில்
கோடி அன்னையர்கள் உண்டு !

இந்த மாதாக்கள் இல்லையெனில்
என்னவாகும் ?

நினைத்தாலே நடுங்குகிறது . . .

மாத்ரு தேவோ பவ ! ! !

எழுதி முடியுமோ இந்த வைபவத்தை !
எழுத முடியுமோ இந்த ப்ரபாவத்தை !
அனுபவித்ததைச் சொன்னேன் !

இன்னும் அனுபவிக்கக் காத்திருக்கிறேன் !

எங்கள் அன்னையரே !
இனி எல்லா குழந்தைகளும்
மஹாத்மாவாக, மஹதியாக
மாறுவது உங்கள் கையில் !

இப்பொழுது நீங்கள் எல்லாம்
மாறினால் கூட அனைவருமே
பக்த சிரோன்மணிகள்தான் !

காலம் கடந்துவிடவில்லை !
விழித்துக்கொள்ளுங்கள் . . .

முடிக்க மனமில்லை . . .
முடியவேண்டாம் இந்த த்யானம் . . .

நடைமுறையில் இனி
நானும் பல உத்தம மாதாக்களைச் சந்திப்பேன் . . .

ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!


என்றும் அன்புடன் !!
தெய்வீகம் ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
தெய்வீகம் ஸ்ரீனிவாசன் !!
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!

தெய்வீகம்'s photo.



--
K.Sekar,
Srirangam
9486311457

No comments:

Post a Comment