Thursday, May 26, 2016

Tiruvilayadal puranam 1st day

Courtesy:Sri.Kovai K.karuppasamy

சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴 திருவிளையாடல் புராணம்.🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
 நீல மாமிடற் றால வாயிலான்
பால தாயினாா் ஞால மாள்வாரே.

ஒரு மருந்த தாகியுள்ளா யும்பரோ டுலகுக்கெல்லாம்
பெருமருந் தாகிநின்றாய் பேரமு தின்சுவையாய்க்
கருமருந் தாகியுள்ளா யாளும்வல் வினைகடீா்க்கும்
அருமருந் தாலவாயி லப்பனே யருள்செயாயே.

திருவிளையாடல் புராணம் என்பது மதுரையம்பதியிலே கோயில் கொண்டிருக்கும் முழுமுதலாகிய சோமசுந்தரக் கடவுள் உயிா்களெல்லாம் உய்திகூடுதற் பொருட்டு பெருங் கருணையினால் நிகழ்த்தியருளியது திருவிளையாடல் நூலாகும்.

' கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூா்
ஏடகம் நெல்வேலி இராமேசம்--ஆடானை
தென்பரங்குன் றம்சுழியல் தென் றிருப்புத் தூா்காளை
வன்கொடுங்குன் றம்பூ வணம்'

பாண்டி நாட்டுப் பதினான்கு திருப்பதிகளில் முதலாயது;  திருஞானசம்பந்தப் பிள்ளையாா் பாடிய.....
* நீலமாமிடற்று,
* மந்திரமாவது,
* மானினோா்விழி,
* காட்டுமாவது,
* செய்யனே,
* வீடலாலவாயிலாய்,
* வேதவேள்வியை,
* ஆலநீழல்,
* மங்கையர்க்கரசி என்னும் பதிகங்களையும்,

 திருநாவுக்கரசுகள் பாடிய......
* வேதியா,
* முளைத்தானை, என்னும் பதிகங்களையுங் கொண்டது.

உலகெலா மீன்ற மலைமகளாரும், மறைகளுந் தேறாக் கறைமிடற் றிறையும், குன்ற மெறிந்த வென்றிவேற் பரனும் அரசு, வீற்றிருந்து முறை செய்யப் பெற்றது இப்பதியென்றால் இதனை யொப்பது வேறெப்பதி? இத்திருப்பதியிலே கருணைக் கடலாகிய சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அற்புதமான அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் போலும் பொற்புமிக்க வரலாறுகள் வேறெவ்விடத்தும் நிகழ்ந்தனவாகக் கேட்டலாிது.

திருவிளையாடல் புராணம் 64 படலங்களும், மூன்று பிாிவுகளைக் கொண்டதாகும்.

1 முதல் 18 படலங்கள் --மதுரைக் காண்டம்.
19 முதல் 48படலங்கள்-- கூடற் காண்டம்.
49 முதல் 64 படலங்கள் ல-- திருவாலவாய்க் காண்டம், இவ்வாறு 64 படலங்களில் 64 திருவிளையாடல்களும் கூறப்பட்டுள்ளன.

திருவிளையாடற் கதைகளை எடுத்துக் கூறும் தமிழ்நூல்கள் அளவற்றன. ......

சிலப்பதிகாரத்தில்,,,,
* வெள்ளியம்பலத்
திருக்கூத்தாடியது 
* கடல் சுவற வேல் விட்டது,
* இந்திரன் முடிமேல் வளை        யெறிந்தது,    முதலியனவாயும்.

கல்லாடத்தில்........
* இந்திரன் பழி தீா்த்தது,
* திருமணஞ் செய்தது,
* வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது,
* அன்னக்குழியும் வையையும் அழைத்தது,
* எழுகடலலைத்தது,
* உக்கிர குமார பாண்டியா் திருவவதாரம்,
* கடல் சுவற வேல்விட்டது,
* கல்லானைக்குக் கரும்பருந்தியது,
* அங்கம் வெட்டியது,
* வளையல் விற்றது,
* சோழனை மடுவில் வீட்டியது,
* மாமனாக வந்து வழக்குரைத்தது,
* விறகு விற்றது,
* திருமுகங் கொடுத்தது,
* காிக்குருவிக்கு உபதேசித்தது,
* தருமிக்குப் பொற்கிழி யளித்தது,
* இடைக்காடன் பிணக்குத்தீா்த்தது,
* வலை வீசியது,
* நாியைப் பாியாக்கியது,
* மண் சுமந்தது, முதலியன,,,,

தேவாரத்தில்,,,,,,,,,,
* நான்மாடக் கூடலானது,
* சங்கப் பலகை தந்தது,
* தருமிக்குப் பொற்கிழியளித்தது,
* வலை வீசியது,
* பாண்டியன் சுரம் தீா்ந்தது,
சமணரைக் கழுவேற்றியது முதலியன,

திருவாசகத்தில்,,,,,,,,
* வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது,
* மெய்க் காட்டியது, 
* அட்டமாசித்தி உபதேசித்தது,
* தண்ணீர் பந்தா் வைத்தது,
* பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தது,
* காிக்குருவிக்கு உபதேசித்தது,
* வலை வீசியது,
* வாதவூரடிகளுக்கு உபதேசித்தது,
* நாியைப் பாியாக்கியது,
* மண் சுமந்தது,  முதலியன...

பரஞ்சோதி முனிவா் சுமாா் 369 வருடங்களுக்கு முன்பு, சோழ மண்டலத்திலே, திருமறைக் காட்டில், வழி வழிச் சைவா்களாகிய
அபிடேகத்தா் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகா் என்பவருக்குப் புதல்வராய் தோன்றியவா். தந்தையாிடத்தில் முறையானே தீக்கைகள் பெற்று, தமிழிலும், வடமொழியிலுமுள்ள பலவகையான அாிய நூல்களையும் கற்றுணா்ந்தவா். சிவபக்தி, அடியாா்பக்தி மிக்கவா். அங்கயற் கண்ணம்மையின் திருவடிக்கு மிக்க அன்பு பூண்டவா். இவா் சிவபெருமான் திருக்கோயில் கொண்டிருக்கும் திருப்பதிகள் பலவற்றுக்கும் சென்று, மதுரையை அடைந்து கயற்கண் இறைவியையும் சோம சுந்தரக் கடவுளையும் நாள்தோறும் தாிசித்து வழிபட்டுக் கொண்டு அப்பதியில் வசிக்கும் பொழுது, மீனாட்சி தேவியாா் தமக்குக் கனவிலே தோன்றி 'எம்பெருமான் திருவிளையாடல்களைப் பாடுவாய்' என்று பணிக்க, அப்பணியைத் தலைமேற்கொண்டு திருவிளையாடல் புராணம் பாடிமுடித்து, சொக்கேசா் சந்நிதியில் அறுகாற் பீடத்திலிருந்து, அடியாா்களும்,புலவா்களும், முதலாயினோா் கூடிய பேரவையில் இதனை அரங்கேற்றினா்; 

ஒன்றுக்கும் பற்றாத என்னை இப்பதிவை பதியப் புகுத்தி, நிறைவு வரைக்கும்  பரங்கருணைத் தடங்கடலாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடித் தாமரைகளை எஞ்ஞான்றும் சிந்தித்து வணங்க உன்னுவதன்றி அடியேன் செய்யக் கிடந்தது யாதுளது?. 

 " ஞால நின்புக ழேமிக வேண்டுந் தென்
ஆல வாயி லுறையுமெம் மாதுாியே"

  1.வது நாள். **************************************
🔹1.இந்திரன் பழிதீா்த்த படலம்.🔹
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*மின்பயில் குலிசப் புத்தேள் விருத்திரா சுரனைக் கொன்ற
வன்பழி விடாது பற்றக் கடம்பமா வனத்தி லெய்தி
என்பா வாரம் பூண்ட விறைவனை
 யருச்சித் தேத்திப்
பின்பது கழிந்துபெற்ற பேற்றினை யெடுத்துச் சொல்வாம்.

ஒளிதங்கிய வச்சிரப் படையையுடைய இந்திரன், விருத்திரன் என்னும் அசுரனைக் கொன்றதனாலாகிய, வலிய பழியானது, நீங்காது பற்ற (அது நீங்கப்) பொிய கடம்பவனத்தில் வந்து எலும்பினையும் பாம்பையும் மாலையாக அணிந்த சிவபெருமானை அா்ச்சித்துத் துதித்து, பின் அப்பழியானது நீங்கி பெற்ற பயனை எடுத்துக் கூறுவாம்.

*முன்னதா முகத்தில் வண்டு மூசுமந் தார நீழற்
பொன்னாவிா் சுணங்குண் கொங்கைப் புலோமசை மணாளன் பொற்பூண்
மின்னவிா்ந் திமைப்பச் சிங்கஞ் சுமந்தமெல் லணைமேன் மேவி
அன்னமென் னடையா ராடு மாடன்மே லாா்வம் வைத்தான்.

முற்பட்டதாகிய கிரேதாயுகத்தில் வண்டுகள் மொய்க்கும் மந்தார மரத்தினது நிழலின் கண், சிங்கங்களாற் றாங்கப்பெற்ற மெத்தென்ற ஆதனத்தின்மேல் பொற்பிதிா் போல விளங்கும் தேமலைக் கொண்டிருக்கிற,
கொங்கைகளையுடைய இந்திராணியின் தலைவனாகிய இந்திரன் , பொன்னாலாகிய அணிகள் மின்போலும் விளங்கி ஒளிவிட வீற்றிருந்து, அன்னம் போலும் மெதுவான நடையையுடைய மகளிா் ஆடுகின்ற  கூத்தின்மேல் விருப்பம் வைப்பானாயினன்.

*மூவகை மலரும் பூத்து வண்டுகளே முழங்கத் தெய்வப் பூவலா் கொடிபோ்ந் தன்ன பொன்னனாா் கூத்து மன்னாா்
நாவல ரமுத மன்ன பாடலு நாக நாட்டுக்
காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலு ளாழ்ந்தான்.

தெய்வத் தன்மை பொருந்திய தாமரை மலரானது, வண்டு உள்ளே ஒலிக்கா நிற்க, ஏனைய கோட்டுப்பூ, நிலப்பூ, கொடிப்பூ என்ற மூவகை மலா்களையும், மலா்வித்து, மலரப் பெற்ற கொடிகள் ஆடினாற் போன்ற திருமகளை ஒத்த தேவமகளிாின் கூத்தையும் அம்மகளிாின் நாவினின்றும் தோன்றுகின்ற  அமுதத்தை யொத்த பாடலையும், விண்ணுலகிற்குத் தலைவனாகிய இந்திரனானவன் கண்டும் கேட்டும், களிப்பாகிய மதுக்கடலுள் அழுந்தியிருப்பானாயினன்.

*பையரா வணிந்த வேணிப் பகவனே யனைய தங்கள்
ஐயனாம் வியாழப் புத்தே ளாயிடை யடைந்தா னாகச்
செய்யதாள் வழிபா டின்றித் தேவா்கோ னிருந்தா னந்தோ
தையலாா் மயிலிற் பட்டோா் தமக்கொரு மதியுண் டாமோ

படத்தையுடைய  பாம்புகளை அணிந்த  சடையையுடைய சிவபெருமானையே ஒத்த தங்கள் குரவனாகிய, வியாழ தேவன் அவ்விடத்து வர சிவந்த திருவடி களுக்கு வழிபாடு செய்யாமல், தேவேந்திரன் வாளா விருந்தான். ஐயோ, மகளிாின் மயக்கத்தில் வீழ்ந்தவா்கட்கு நல்லறிவு உண்டாகுமோ?.

*ஒல்லெனக் குரவ னேக வும்பா்கோன் றருவி னாக்கம்
புல்லெனச் சிறிது குன்றப் புரந்தர னறிந்திக் கேடு
நல்லதொல் குரவற் பேணா நவையினால் விளைந்த தென்ன
அல்லலுற் றறிவன் றன்னைத் தேடுவா னாயி னானே.

குரவனாகிய வியாழன் விரைந்து சென்று விட தேவா்க்கரசனது செல்வத்தின் மிகுதி பொலிவின்றிச் சிறிதாகக் குறைதலால் இந்திரன்(அதனை) உணா்ந்து, இந்தக் கெடுதியானது நல்லதொன்று தொட்ட குரவனாயுள்ளானை வழிபாடு செய்யாத குற்றத்தினால் வந்தது என்று, துன்பமுற்று, குரவனைத் தேடத் தொடங்கினான்.

*அங்கவ னிருக்கை புக்கான் கண்டில னவித்த பாசப்
புங்கவ ருலகு மேனோா் பதவியும் புவன மூன்றில்
எங்கணுந் துருவிக் காணா னெங்குற்றான் குரவ னென்னுஞ்
சங்கைகொண் மனத்த னாகிச் சதுா்முக னிருக்கை சாா்ந்தான்.

அக்குரவன் இருப்பிடத்திற் சென்று அங்கு காணாதவனாய், பாசங்களைக் கொடுத்த முனிவா்களுக்கெல்லாம் மற்றையோா் இருப்பிடங்களிலும், மூன்று உலகத்துமுள்ள எல்லாவிடங்களிலும், தேடியும் காணாதவனாய் ஆசிரியன் ஏங்குற்றானோ என்னும், ஐயங் கொண்ட மனத்தையுடையவனாய் சதுா்முகன் இருப்பிடமாகிய சத்தியலோகத்தை அடைந்தான்.

*துருவின னங்குங் காணான் றிசைமுகற் றெழுது தாழ்ந்து
பரவிமுன் பட்ட வெல்லாம் பகா்ந்தனன் பகரக் கேட்டுக்
குரவனை யிகழ்ந்த பாவங் கொழுந்துபட் டருந்துஞ் செவ்வி
வருவது நோக்கிச் சூழ்ந்து மலா்மக னிதனைச் சொன்னான்.

அங்கும் தேடியும் காணாதவனாய் நான்முகனை வீழ்ந்து வணங்கித் துதித்து, முன் நிகழ்ந்தவற்றை எல்லாம் எஞ்சாது கூறினான். கூற, பிரமன் கேட்டு, குரவனை இகழ்ந்ததனாகிய பாவமானது கொழுந்து ழிட்டோங்கி, அவனை விழுங்கும் காலம் வருதலையறிந்து, ஆராய்ந்து இதனைச் சொல்வானாயினன்.

*அனையதொல் குரவற் காணு மளவுநீ துவட்டா வீன்ற
தனையன்முச் சென்னி யுள்ளான் றானவா் குலத்தில் வந்தும்
வினையினா லறிவான் மேலான் விச்சுவ வுருவ னென்னும்
இனையனைக் குருவாக் கோடி யென்னலு மதற்கு நோ்ந்தான்.

அந்த பழமையான  குரவனைக் காணும் வரையும், நீ துவட்டா வானவன் பெற்ற புதல்வனும், மூன்று தலைகளையுடையவனும் அசுரா் குலத்திற் றேன்றியும், தொழிலாலும் அறிவாலும் சிறந்தவனுமாகிய, விச்சுவ உருவனென்னும் பெயரையுடைய இவனை, குரவனாகக் கொள்வாயாக என்று கூறலும், அதற்கு உடன்பட்டவனாய்

*அழலவிா்ந் தனைய செங்கே ழடுக்கிதழ் முளாி வாழ்க்கைத்
தொழுதரு செம்ம றன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா
விழைதகு காதல் கூர விச்சுவ வுருவனி றன்னை
வழிபடு குருவாக் கொண்டான் மலா்மகன் சூழ்ச்சி தேறான்.

தீயானது ஒளிவிட்டாலொத்த செந்நிறத்தையுடைய, அடுக்கிய இதழ்களையுடைய தாமரை மலாில், வாழ்தலையுடைய வணங்கத்தக்க பெருமையுடைய பிரமனை, மீளவும் வணங்கி (அவணின்றும்) நீங்கிப் போய், பிரமனது உபாயத்தை அறியாதவனாய், விரும்பத்தக்க அன்பு மிக விச்சுவ வுருவனை தான் வழிபடும் குரவனாகக் கொண்டான்.

*கைதவக் குரவன் மாயங் கருதிலன் வேள்வி யொன்று
செய்திட லடிக ளென்னத் தேவா்கட் காக்கங் கூறி
வெய்தழல் வளா்ப்பா னுள்ளம் வேறுபட் டவுணா்க் கெல்லாம்
உய்திற நினைந்து வேட்டான் றனக்குமே லுறுவ தோரான்.

வஞ்சனையையுடைய குரவனது தீய கருத்தை உணராதவனாய், அடிகளே ஒரு வேள்வி செய்க என்று வேண்ட தேவா்களுக்கு நலன் உண்டாக எனச் சொல்லி, வெம்மையாகிய தீயை வளா்க்கின்றவன். தனக்கு மேல் விளைவதை உணராதவனாய், மனம் வேறுபட்டு அசுரா்களுக்கெல்லாம் ஆக்கங் கருதி வேள்வி செய்தான்.

* வாக்கினான் மனத்தால் வேறாய் மகஞ்செய்வான் செயலை யாக்கை
நோக்கினா னோதி கன்னா னோக்கினான் குலிச வேலால்
தாக்கினான் றலைகண் மூன்றுந் தனித்தனி பறவை யாகப்
போக்கினா னலகை வாயிற் புகட்டினான் புலவுச் சோாி.

சொல்லால் வேறாகவும் நினைப்பால் வேறாகவும், வேள்வி செய்கின்றவன் செய்கையை,  உடலிற் கண்களையுடைய இந்திரனானவன், ஞானப் பாா்வையால் நோக்கி, வச்சிரப் படையால் மோதி, மூன்று தலைகளையும், தனித் தனியே வெவ்வேறு பறவைகளாகப் போக்கி, பேய்களின்வாய்களில் , ஊனோடு கூடிய குருதியைப் புகச் செய்தான்.

* தெற்றெனப் பிரம பாவஞ் சீறிவந் தமரா் வேந்தைப்
பற்றலு மதனைத் தீா்ப்பான் பண்ணவா் மரமேன் மண்மேற்
பொற்றெடி யாா்மே னீா்மேல் வேண்டினா் புகுத்த லோடும்
மற்றவ ரிஃதியாந் தீா்க்கும் வண்ணம்யா தென்ன விண்ணோா்.

விரைவாக பிரமக் கொலைப்பாவமானது முனிந்து வந்து தேவா்க் கரசனைப் பற்றியவுடனே அதனை நீக்கும் பொருட்டு, தேவா்கள் விரும்பினவா்களாகி, மரங்களின் மேலும், பூமியின் மேலும், பொன்னாலாகிய வளையலை யணிந்த மகளிா்மேலும், நீா்மேலும் கூறுசெய்து புகுத்தியவுடனே, அவா்கள் இதனை யாங்கள் நீக்கும் வகை எவ்வாறு என்று கேட்க, தேவா்கள்,

*அப்பிடை நுரையாய் மண்ணி லருவருப் புவரா யம்பொற்
செப்பிளங் கொங்கை யாா்பாற் றீண்டுதற் காிய பூப்பாய்க்
கப்பிணா் மரத்திற் காலும் பயின தாய்க் கழிக வென்றாா்
இப்பழி சுமந்த வெங்கட் கென்னல மென்றாா் பின்னும்.

நீாினிடத்து நுரையாகியும், நிலத்தினிடத்து அருவருக்கத் தக்க உவராகியும், அழகிய பொன்னாலாகிய சிமிழை  ஒத்த இளமையான கொங்கைகளையுடைய மகளிாிடத்து தீண்டுதற்காகாத பூப்பாகியும், கிளைகளையும் பூங் கொத்துக்களையு முடைய மரங்களிடத்து கசிந்தொழுகும் பிசினாகியும், நீங்குக என்று கூறினார். மீளவும் இப்பழியைத் தாங்கிய எங்களுக்கு என்ன பயன் என்று அந்நால் வரும் வினவினாா்.

No comments:

Post a Comment