Tuesday, April 5, 2016

War between Rama & Anjaneya

Courtesy:Sri.GS.Dattatreyan

ஹனுமன் கதை

ஒரு முறை ஹனுமான் தன் அன்னை அஞ்சனா தேவியை தரிசிக்க ஆவலுற்று ராமரிடம்
அனுமதி பெற்றுக் கிளம்பினார். அதே தருணத்தில் காசி மஹாராஜன் ராமரின்
தரிசனத்திற்காகக் கிளம்பினான். வழியில் நாரதர் காசிராஜனைப் பார்த்து," நீ
எங்கே போகிறாய்?" என்று கேட்டார்." நான் ராமசந்திர மஹாபிரபுவைத்
தரிசிக்கச் சென்று கொண்டிருக்கிறேன்" என்றான் காசிராஜன்.
"எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டுமே!"என்றார் நாரதர்.

"தங்கள் கட்டளை என் பாக்கியம்" என்றான் காசி ராஜன்.
அங்கு அரச சபையில் எல்லோருக்கும் வந்தனம் செய். ஆனால் அங்கு இருக்கும்
விஸ்வாமித்திரருக்கு மட்டும் வந்தனம் செய்யாதே. அவரைக் கண்டு கொள்ளாதே!"
என்றார் கலக நாரதர்.
காசிராஜனுக்குத் தூக்கி வாரிப் போட்ட்து. மஹாமுனிவரான விஸ்வாமித்திரரை
நமஸ்கரிக்கக் கூடாதா! ஐயோ! இது என்ன கோரம்!! விக்கித்து நின்ற அவன்
நாரதரை நோக்கி,"மஹரிஷி விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா?ஏன், ஸ்வாமி"
என்றான்.
"ஏன் என்பது பின்னால் தெரியும். சொன்னதைச் செய்வாயா?" என்று கேட்டார்
நாரதர். கலக்கமுற்ற காசிராஜன் இருதலைக் கொள்ளி எறும்பானான். நாரதரிடம்
அவர் சொல்லியபடி செய்வதாக வாக்களித்து விட்டு, ராமரது அரச சபைக்குச்
சென்று ராமரை ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு ஆனந்தமுற்று
வணங்கினான்.அங்குள்ள வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் வணங்கி ஆசி பெற்றான்.
ஆனால் விஸ்வாமித்திரரை மட்டும் வணங்கவில்லை. சபையில் இந்த அவமரியாதையை
நன்கு கவனித்த விஸ்வாமித்திரர் அங்கு சும்மா இருந்தார்.பின்னர் ராமரைத்
தனியே சந்தித்தார். "ராமா! உன்னை எல்லோரும் "மர்யாதா புருஷோத்தமன்"
என்கின்றனர். மஹரிஷிகளை வணங்கும் மாண்பு மிக்க உன் அரச சபையில் எனக்கு
இன்று மரியாதை கிடைக்கவில்லையே!" என்று வருத்தமுற்றுக் கூறினார்.

துணுக்குற்ற ராமர்," என்ன விஷயம்?" என்றார். இன்று அரச சபைக்கு வந்த
காசிராஜன் என்னைத் தவிர அனைவரையும் வணங்கினான்! வேண்டுமென்றே என்னை
அவமானம் செய்து விட்டான்! இது சரியா?" என்றார் விஸ்வாமித்திரர்.

ராம பிரதிக்ஞை

"ராம ராஜ்யத்தில் பெரும் முனிவரான தங்களுக்கு ஒரு அவமானம் என்றால் அது
அனைவருக்குமே அவமானம் தான்! உங்களை இப்படி அவமதித்த காசி ராஜனை என்
மூன்று பாணங்களால் இன்று மாலைக்குள் கொல்கிறேன்" என்று வாக்களித்தான்
ராமன்.

ராமரின் இந்த சபதம் காட்டுத்தீ போல எங்கும் பரவி காசிராஜனையும் அடைந்தது.
அவன் ஐயோ என்று அலறியவாறே நாரதரை நோக்கி ஓடினான். "நீங்களே எனக்கு அபயம்!
உங்களால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது!" என்று அலறினான்.
நாரதரோ புன்முறுவலுடன் கூறினார்:" பிரதிக்ஞையை நானும் கேட்டேன். மூன்று
பாணங்கள் சும்மா விடுமா, என்ன? ஆனாலும் நீ பயப்படாதே! உடனடியாக அஞ்சனா
தேவியிடம் சென்று அவரின் காலைக் கெட்டியாகப் பற்றிக் கொள்! அவர் உனக்கு
அபயம் அளிப்பதாகச் சொன்னாலும் விடாதே! மூன்று முறை அபயம் அளிக்குமாறு
கேள்! மூன்று முறை அவர் அப்படி உறுதி அளித்ததும் காலை விடு; கவலையையும்
விடு" என்றார் நாரதர்.
அஞ்சனாதேவியும் ஆஞ்சநேயனும்
காசிராஜன் கணம் கூடத் தாமதிக்கவில்லை.உயிர் பிரச்சினை ஆயிற்றே. ஓடினான்,
அஞ்சனா தேவியின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர்ப் பிச்சை
தருமாறு வேண்டினான். "காலை விடு! குழந்தாய்! அபயம் கேட்டு வந்த உன்
உயிருக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். என்ன விஷயம்? ஏன் இப்படி
பயப்படுகிறாய்?என்றார் அஞ்சனாதேவி.

"மூன்று முறை அபயம் அளித்து வாக்குறுதி தாருங்கள்.அப்போது தான் கால்களை
விடுவேன்" என்றான் காசி ராஜன். அஞ்சனாதேவியும் மூன்று முறை வாக்குறுதி
அளித்தார். காசிராஜன் நடந்த விஷயம் அனைத்தையும் சொன்னான். அஞ்சனாதேவிக்கு
தூக்கிவாரிப் போட்டது.

ராமரின் மூன்று பாணங்கள் இன்று மாலைக்குள் உன்னைத் தாக்குமா!அதிலிருந்து
உன்னை யார் காப்பாற்றுவது?" என்றார் அஞ்சனா. ஆனால் தான் அளித்த
வாக்குறுதியை நினைத்துப் பார்த்து ஒரு கணம் மயங்கி நின்றார்.

அப்போது உற்சாகத்துடன் அனுமார் உள்ளே நுழைந்து." அம்மா! " என்று கூவி
அவர் கால்களில் பணிந்து வணங்கினார். அஞ்சனாதேவியின் திடுக்கிட்ட
முகத்தைப் பார்த்த அனுமன், "என்ன விஷயம் தாயே ! நான் வந்ததில் கூட
உற்சாகம் காண்பிக்கவில்லையே!" என்று வினவினான்.
அஞ்சனா காசிராஜனுக்குத் தான் அளித்த வாக்குறுதியைக் கூறி ராமரின்
பிரதிக்ஞையையும்கூறி ," இப்போது என்ன செய்வது? மகனே! நீ தான் காசிராஜனைக்
காப்பாற்ற வேண்டும்.உன் அன்பான அம்மாவின் வேண்டுகோள் இது" என்றார்.

அனுமன் பதறிப் போனான். பிரபுவின் பாணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல
மூன்றிலிருந்து யாரேனும் பிழைப்பார்களா, என்ன? "ஆனால், தாயே! இது வரை
என்னிடம் நீங்கள் ஒன்று கூடக் கேட்டதில்லையே! முதல் முறையாக ஒன்றைக்
கேட்கிறீர்கள்! அதைச் செய்யாமல் இருந்தால் நான் உண்மையான மகன் அல்லவே!
வருவது வரட்டும்! காசிராஜன் உயிருக்கு நான் உத்தரவாதம். ராமரின் பாணங்களே
வந்தாலும் சரி தான்!", என்றான் உறுதியான குரலில் அனுமன். அஞ்சனாதேவியும்
காசிராஜனும் மகிழ்ந்தனர்.

"அம்மா! விஷயம் கஷ்டமான ஒன்று! உடனே போக எனக்கு அனுமதி கொடுங்கள்!""
என்று கூறிய அனுமன், காசிராஜனை நோக்கி,"உடனே நீங்கள் சரயு நதி சென்று
கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி ராம ராம என்று ஜபிக்க ஆரம்பியுங்கள்! இன்று
மாலை வரை நமக்கு நேரம் இருக்கிறதே!" என்று கூறினான்.
மூன்று பாணங்கள்! மூன்று நாமங்கள்!!
காசிராஜன் சரயு நதிக்கு ஓடோடிச் சென்று கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி
பயபக்தியுடன் ராம நாமத்தை ஜபிக்கலானான் விஷயம் வெகு சீக்கிரம் பரவி
மக்கள் கூட்டம் சரயு நதிக் கரையில் கூடியது. இங்கே அனுமன் ராமரிடம்
திரும்பி வந்து அவர் சரண கமலங்களைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான்."ஸ்வாமி! எனக்கு ஒரு வரம் அருள வேண்டும்" என்று
பிரார்த்தித்தான்.

"இது என்ன அதிசயம்! காலம் காலமாக நான் வரம் தருகிறேன் என்று சொல்வது
வழக்கம்! நீ மறுப்பதும் வழக்கம். இன்று நீயே கேட்கிறாயே. வரத்தைத் தந்து
விட்டேன். கேள் எது வேண்டுமானாலும்" என்றார் ராமர்.

"ஸ்வாமி! தங்கள் நாமம் பாவனமானது. அதைச் சொல்லும் எந்த பக்தனுக்கும்
எப்படிப்பட்ட தீங்கும் வராமல் நான் காக்க வேண்டும்.அதில் எப்போதும்
வெற்றி பெற வேண்டும். இந்த வரத்தை அருளுங்கள்" என்றான் அனுமன்.

"வரம் தந்தோம்.

நீ ராம நாமத்தை ஜபிப்பவனை எப்போதும் காக்க முடியும்! இதில் தோல்வியே
உனக்கு ஏற்படாது!"என்று வரத்தை ஈந்தார் ராமர்.

ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து சரயுவுக்குத் தாவிய அனுமன்
காசிராஜனிடம்,"விடாதே! தொடர்ந்து ராம நாமத்தை ஜபி! நான் உன் பக்கத்தில்
இருக்கிறேன்!" என்றான்.விஷயம் விபரீதமானதை மக்கள் அனைவரும் உணர்ந்து
விட்டனர்.சரயுவில் முழு ஜனத்திரளும் திரண்டு விட்டது.

ராமர் காசிராஜன் சரயு நதியில் இருப்பதை அறிந்து கொண்டார். "எதுவானாலும்
சரி! என் பிரதிக்ஞையை நிறைவேற்றுவேன்! இதோ, எனது முதல் பாணத்தைத்
தொடுக்கிறேன்" என்று தன் முதல் அம்பை எடுத்து காசிராஜனை நோக்கி விட்டார்.
அம்பு காசிராஜனை நோக்கி வந்தது.

ஆனால் காசிராஜன் ராம நாமம் ஜபிக்க அனுமான் அருகில் நிற்க செய்வதறியாது
திகைத்த ராமபாணம் இருவரையும் வலம் வந்து வணங்கி ராமரிடமே திரும்பியது.
திடுக்கிட்ட ராமர்," என்ன ஆயிற்று?" என்று வினவினார். " என்ன ஆயிற்றா!
அங்கு காசிராஜன் உங்கள் நாமத்தை ஜபித்தவாறே இருக்க அனுமனோ அவன் அருகில்
நிற்கிறார்.

இருவரையும் வலம் வந்து வணங்கி வந்து விட்டேன்" என்றது பாணம்.
ராமர் சினந்தார். தனது அடுத்த பாணத்தை எடுத்து ஏவினார். அது காசிராஜனை
நோக்கி வந்தது. இப்போது அனுமன் காசிராஜனை நோக்கி, " இதோ பார்!
இப்போதிலிருந்து சீதாராம்! சீதாராம் என்று ஜபிக்க ஆரம்பி" என்றார்.

காசிராஜனும் சீதாராம் சீதாராம் என்று மனமுருகி ஜபிக்க
ஆரம்பித்தான்.வேகமாக வந்த இரண்டாவது பாணம் மலைத்து நின்றது. அன்னையின்
பெயரைக் கேட்டவுடன் காசிராஜனை வலம் வந்து வணங்கித் திரும்பியது.

" ஏன் திரும்பி வந்தாய்?"என்று கேட்ட ராமரிடம் அன்னையின் பெயரையும்
தங்களின் பெயரையும் உச்சரிப்பவரை வணங்குவது அன்றி வதை செய்வது முடியுமா?"
என்று பதில் சொன்னது பாணம். கோபமடைந்த ராமர், "நானே நேரில் வந்து
காசிராஜனை வதம் செய்கிறேன்" என்று மூன்றாவது பாணத்துடன் சரயு நதிக்கு
வந்தார்.
ராமரே வேகமாக வரவிருப்பதை அறிந்த அனுமன் காசிராஜனை நோக்கி, " ராமருக்கு
ஜயம்! சீதைக்கு ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம்!" என்று ஜபிக்க ஆரம்பி
என்றார். காசிராஜனும்,"ஜய ராம் ஜயஜய சீதா ஜயஜயஜய ஹனுமான்!" என்று ஜபிக்க
ஆரம்பித்தான். ஆனால் களைத்திருந்த அவனது குரல் கம்மியது. உடனே அனுமன் தன்
ஒரு அம்சத்தை அவன் குரலில் புகுத்தினார்.

இப்போது கம்பீரமாக அவன் குரல் ஒலித்தது. இதையெல்லாம் பார்த்த வசிஷ்டர்
பெரும் கவலை அடைந்தார்.ஒரு புறம் ராமர், மறு புறம் அவரது பக்தனான அனுமன்!
வேகமாக அனுமனிடம் வந்த அவர்," ஹே! அனுமன்! ராமரின் பிரதிக்ஞையைப் பற்றி
உன்னை விட வேறு யார் நன்கு அறிந்திருக்க முடியும். இந்த காசிராஜனை விட்டு
விடு. ராம பாணத்தால் அவன் பெறப் போவது யாருக்கும் கிடைக்க முடியாத
மோக்ஷமே!" என்று அறிவுரை பகர்ந்தார்.

அனுமனின் விரதம்

அனுமனோ அவரை நோக்கி," மா முனிவரே! நமஸ்காரம்! ராம நாமத்தை ஜபிப்பவனைக்
காப்பது என் விரதம்! இதில் என் உயிர் போனால் தான் என்ன! காசிராஜனைக்
காப்பது என் தர்மம்" என்றான். ராமர் பாணத்துடன் அருகில் வந்து
கொண்டிருந்த அந்த சமயத்தில் விஸ்வாமித்திரர் நடக்கும் அனைத்து லீலையையும்
பார்த்துக் கொண்டிருந்தார்.

வசிஷ்டர் காசிராஜனை நோக்கி, "மன்னா! இதோ இருக்கிறார் விஸ்வாமித்திரர்.
இவரை வணங்கு!" என்றார்.
காசிராஜன் ராமசீதா ஹனுமானுக்கு ஜயம் என்று கூறியவாறே விஸ்வாமித்திர்ரை
அடிபணிந்து வணங்கினான். விஸ்வாமித்திர்ர் மனமகிழ்ச்சியுடன் காசிராஜனுக்கு
ஆசி அளித்து "நீடூழி வாழ்வாயாக" என்றார்.

அருகில் வந்த ராமரை நோக்கி," இதோ, காசி ராஜன் என்னை வணங்கி ஆசி பெற்று
விட்டான்! என் மனம் குளிர்ந்தது. உன் அம்பை விட வேண்டாம்!" என்று கட்டளை
இட்டார். குருதேவரை வணங்கிய ராமர் தன் மூன்றாம் அம்பை அம்பராதூணியில்
வைத்தார்.

ராமருடன் நடந்த போட்டியில் பக்த ஹனுமான் வென்றதைக் கண்ட மக்கள் அனைவரும்
ராமருக்கும் ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம் என்று கோஷமிட்டனர்.

நாரதர் உணர்த்திய ராம பக்தனின் மஹிமை

நடந்ததை எல்லாம் பார்த்த அஞ்சனா தேவி ஆஞ்சனேயனை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தார்.

கலக நாரதரோ ராம நாம மஹிமையையும் பக்த ஹனுமானின் சிறப்பையும் அனுமனின்
அன்னை மீதான பக்தியையும் விஸ்வாமித்திரரின் மஹிமையையும் உலகிற்கு
உணர்த்திய வெற்றியில் புன்முறுவல் பூத்தார்.

ஸ்ரீ சீத்தா ராமர் ஸ்ரீ பாதங்களே சரணம்.

No comments:

Post a Comment