courtesy:GS.Dattatreyan
மூலதோ ப்ருஹ்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாயதே
நம:" மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் அரசு நாம் போற்றி வணங்கி வலம்
வருவதற்குச் சிறந்த மரம்.
நாம் செய்யும் காரியங்கள் நல்லவையாக அமைய வேண்டும் என்று நினைத்துப் பலவகைக்
காரியங்களைச் செய்கிறோம். பெரியவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது
நிறையவே உண்டு. கோவிலுக்குச் செல்கிறோம்; தெய்வத்தை வலம் வருகிறோம்; இதைப்
பிரதக்ஷணம் என்று வடமொழியில் கூறுவார்கள். இதை ஏன் செய்கிறோம், இதனால்
கிடைக்கும் பலன் என்ன? வலம் வரும்போது என்ன ஸ்தோத்திரம் செய்ய வேண்டும்
என்பவற்றைப் பெரியோரிடமிருந்து அறிந்து கொண்டு செய்தல் முறையான செயலாகும். ஒரு
குளக்கரைக்குச் செல்கிறோம், அங்கு ஒரு மரத்தடியைச் சுற்றிலும் நாகர்
விக்ரகங்களோடு, ஒரு விநாயகரையும் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். பொதுவாகப்
பிள்ளையார் மரத்தடியில் வீற்றிருப்பார். அந்த மரம் என்ன பெயர் உடையது? அதன்
பயன்கள் என்னென்ன? இதைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
இந்த அரசமரம் என்பது நெடிதுயர்ந்து கிளைகள் உள்ளதாக, இதய வடிவில் இலைகள்
கொண்டதாக வளரும் இயல்பு கொண்டது. இந்த அரசமரம் 'அச்வத்த விருட்சம்' என்று
வடமொழியிலும் குறிப்பிடப்படும். இது ஆலமரம், அத்திமரம் போன்று புனிதத் தன்மை
கொண்டது. நம் சனாதன தர்மமான இந்து மதம், சமண மதம், பௌத்த மதம் இவை இந்த
பிப்பலாச விருட்சத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. இந்த அரணி, அஷ்வதா, போதி மரம்
என்றும் பலவாறு அழைக்கின்றனர். இந்தப் பலாச விருட்சம், கல்வி தேவதையான
சரஸ்வதியோடு சம்பந்தப்பட்டது என்று அறிகிறோம். சரஸ்வதி நதியானது பிரும்மாவின்
கலசத்திலிருந்து தோன்றி வெளிப்பட்டு வருவது பலாச மரத்திலிருந்து என்று
கூறுவர். அப்படி வெளிப்பட்ட சரஸ்வதி நதி ஹிமாசல மலையில் வழிந்து ஓடிவருவதாக
கந்தபுராணம் கூறுகிறது. வாமனபுராணமும் சரஸ்வதி பலாச மரத்திலிருந்து தோன்றியதாக
உறுதி செய்கிறது. ரிக் வேதமும் சரஸ்வதி நதியை "பலாச பரஸ் ரவனா" என்று போற்றிக்
கூறுகிறது. கௌதம புத்தர், இந்தப் பிப்பலாச மரத்தின் அடியில் தியானம் செய்தார்.
அவர் ஞானம் எய்தியதை நாம் சரித்திரம் வாயிலாக அறிகிறோம். இந்தப் போதி மரத்தின்
அடியில் அமர்ந்து தியானம் செய்தால் ஞானம் கிட்டும். ஜபம் செய்தால் மனம் ஒரு
நிலைப்படும். தெய்வ சிந்தனை மீதூறும்.
இந்தப் Peepul tree, Mangoli phyta என்னும் பிரிவைச் சேர்ந்தது. Moraceae
என்னும் குடும்பத்தின் வகையிலானது திவீரீus ஸிமீறீவீரீவீsணீ என்பது இதன்
தாவரப் பெயர் ஆகும். இந்த மரம் ஒரு பெரிய பிராண வாயு (ஆக்ஸிஜன்)
தொழிற்சாலையாகச் செயல்படுகிறது. பொதுவாகவே எல்லாத் தாவரங்களும் சூரிய ஒளியில்
கார்பன்-டை-ஆக்ஸைடு, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களைத்
தயாரித்துச் சேமிக்கும். அந்த நிகழ்வின் போது பிராணவாயுவான ஆக்ஸிஜன்
வெளிப்படும். இது நாம் உயிர் வாழத் தேவையான வாயுவாகும். அடர்ந்த கிளைகளும்,
பசுமை இலைகளால் நிறைந்து காணப்படும். இந்த மரமானது அதிக அளவு பிராணவாயுவை
வெளியேற்றுகிறது. இந்த ஆக்ஸிஜன் நாம் சுவாசிக்கும்போது, நம் நுரையீரல்களைச்
சென்று அடைகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இதயத்தை அடைந்து, அங்கிருந்து
மூளை முதல் கால்கள் வரை சுத்த இரத்தம் பம்ப் செய்யப்படுவதால், நம் மூளையும்,
பிறஉறுப்புகளும் ஆற்றல் அதிகம் பெறுகின்றன. நம் மூளையிலுள்ள நரம்பு செல்கள்
சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. சிந்திக்கும் ஆற்றல் கூடுகிறது. அரசமரம் அறிவை
வளர்க்கும் என்று பெரியோர் கூற்று. அதன் அடியில் தியானம் செய்தால் ஞானம்
ஏற்படுவது உறுதிதானே?

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும்போது, விபூதி யோகம் பற்றி
அர்ச்சுனனுக்கு விளக்குகிறார். எங்கும், எல்லாமுமாகத் தான் வியாபித்துள்ளதைக்
கூறும் போது, "அச்வத்த ஸர்வ வருக்ஷாணாம்" என்று தான் மரங்களுள் அச்வத்த மரமாக
உள்ளதை எடுத்துக் காட்டுகிறார். தெய்வம் தானே அரச மரமாக உள்ளதாகக் கூறும்போது,
அம்மரம் விருட்ச ராஜாதானே? புருஷோத்தம யோகம் பற்றிக் கூற வரும் பகவான்
"அச்வத்த மேனம் ஸுவிருட மூலம்" என்று இந்தப் பிரபஞ்சத்தை வலுவுடைய வேருடன்
கூடிய அச்வத்தமாகக் கூறுகிறார்.
அச் வத்த ஸ்தோத்திரம் இந்த விருட்சத்தைப் போற்றிக் கூறுகிறது. இம்மரம் தெய்வ
அம்சம் உடையது. ஏனென்றால் அரசின் அடிப்பகுதியில் பிரும்ம தேவனும்,
நடுப்பகுதியில் விஷ்ணுவும், மேற்பகுதியில் பரமேஸ்வரனும் வாசம் செய்கின்றனர்.
"மூலதோ ப்ருஹ்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாயதே
நம:" மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் அரசு நாம் போற்றி வணங்கி வலம்
வருவதற்குச் சிறந்த மரம். இம்மரத்திற்கும், அதன் அடியில் வீற்றிருக்கும்
தெய்வமான விநாயகப் பெருமான் நாக தேவதைகட்கும், நாம் பூஜைகள் செய்து, நிவேதனம்
படைத்துப் பிரதக்ஷிணம் செய்து வந்தால் நம் பாபங்கள் விலகும். தர்ம சாஸ்த்திரம்
கூறும் சத்திய வாக்கு என்ன என்றால், நாம் இந்த மரத்தைக் காலைப் பொழுதில் காலை
10.40 மணி வரைதான் பூஜை செய்து, வலம் வரவேண்டும் என்பது இதற்கு உரிய காரணம்.
சூரியன் உதயமானதிலிருந்து அந்தக் கிரணங்கள் பட்டவுடன், இந்த மரத்தின் அடர்ந்த
இலைகள் ஒளிச்சேர்க்கை அதிக அளவில் நிகழ்த்துகின்றன. பிராண வாயுவான ஆக்ஸிஜன்
அதிக அளவு வெளியேற்றப்படுகிறது. எனவே ஆற்றல் அதிகம் வெளியேறுகிறது. நாம் அரச
மரத்தை வழிபடுவதற்கு உகந்த நேரமும் காலை 10.40 மணி வரைதான். அதன் பின்னர்
மதியம், மாலை, இரவு ஆகிய நேரங்கள் சங்கம காலம் எனப்படும். பொதுவான உண்மை எது
என்றால், இந்த விருட்சமும் சுவாசிக்கிறது மற்ற மரம், செடி, கொடி போல. ஒளிச்
சேர்க்கை நடைபெறும் போது பிராணவாயு மட்டும் அதிகம் வெளிப்படும். இம்மரம் மற்ற
நேரங்களில் நம் போலவே ஆக்ஸிஜனை சுவாசித்து கார்பன்-டை-ஆக்ஸைடு எனப்படும்
கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. எனவே 10.40 மணிக்கு மேல் அரசமரத்தை வலம்
வருதல் கூடாது. பெரியோரின் கூற்று எத்தகைய விஞ்ஞான சம்பந்தமுடையதாக உள்ளது
பாருங்கள்!
இந்த அற்புத ஆற்றல் பெற்ற 'அரசு' என்னும் மரத்தின் அடியில் வீற்றுள்ள
தெய்வங்களுக்கு நல்லெண்ணெய், பால், ஜலம் ஆகியவை தவிர சந்தனம் போன்ற வாசனைத்
திரவியம் கொண்டும் அபிஷேகம் செய்வித்து வெல்லமும், எண்ணெயும், நிவேதனமாக
செய்யலாம். இந்த அரசமரம், ஆலமரம், அத்திமரம் ஆகியவற்றின் வகையாகும். இந்தப்
பாலுள்ள மரங்களின் சமித்துகளை (குச்சிகள்) எல்லாவிதமான தெய்விக ஹோமங்கள்
நடத்துவதற்குப் பயன் படுத்துகிறோம். நம் நாட்டில் போபால் என்ற ஊரில் இயங்கி
வந்த தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து, வெளிப்பட்டுக் காற்றோடு கலந்து ஊர்
முழுவதும் வியாபித்தது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால்
ஊனம், குருட்டுத் தன்மை ஏற்பட்டது. அங்கு ஏதோ ஓர் இடத்தில் நடத்தப்பட்ட ஒரு
ஹோமத்தில் இந்த பிப்பலாச சமித்துகளைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட புகை,
விஷவாயுவின் பரவுதலை அந்தப் பகுதியில் கட்டுப்படுத்தியதால் இங்கு இருந்தவர்கள்
தாக்குதலுக்கு இரையாவதலிருந்து தப்பியதாக உள்ள செய்தியே இந்த 'அரசின்' அற்புத
ஆற்றலைக் கூறுவதாக அமைகிறது.

அரச மரத்தின் பட்டையை இடித்துத் தென்னங்கள்ளில் ஊறவைத்து, ஒரு வாரம் சூரிய
ஸ்புடம் போட்டு, அதாவது வெயிலில் வைத்து எடுத்த பின்பு, அதனைப் புற்று நோய்
கண்டு புரையோடியிருக்கும் புண்களில் போட்டால், அதில் உள்ள ஆயிரக்கணக்கான
Maggoti எனப்படும் சிறு புழுக்கள் வெளிவந்து செத்து விழும். இதன் பட்டை என்ன
ஒரு ஆற்றல் கொண்டது பாருங்கள். இந்த மரத்தைச் சுற்றி வலம் வந்து வணங்கி
கீழ்வரும் சுலோகத்தைக் கூறுதல் வெண்டும்.
"மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அந்ரத:
சிவரூபாய வருக்ஷ ராஜாயதே நம:
ஆயுர் பலம் யசோவர்ச ப்ரஜா: பசீவஸுனிச |
ப்ரஹ்ம்ப்ரக்ஞாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹி வனஸ்பதே"
இந்த வரிகளின் விளக்கம்:
"ஹே! விருட்சங்களின் பதியான அரசே! ஆயுர் பலம், யசஸ், காந்தி, குழந்தைகள்,
வேதம், புத்தி, மேதை" ஆகியவற்றை எமக்குத் தாருங்கள்."
"ஸததம் வருணோ ரக்ஷேத் த்வாமாராத் வருஷ்டி ராச்ரயே |
பரிதஸ்த்வாம் நிஷேவந்தாம் தருணானி ஸுகமஸ்துதே |"
என்று நாம் ப்ரார்த்திக்க வேண்டும். இதன் உப பொருள் யாதெனில் "அரசே! வருண
பகவான் உம்மை நான்கு பக்கங்களிலிருந்தும் ரக்ஷிக்க வேண்டும். மழை உமக்கு
அருகில் இருக்க வேண்டும். தங்களைச் சுற்றிலும், நான்கு பக்கங்களிலும் புற்கள்
இருக்க வேண்டும்" என்பது.
புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த அரசின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய
முடியும். தியானம் செய்யும் போது மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை மனத்தினுள்
தோன்றும். தன்னாலும் இயலும் என்னும் நம்பிக்கை பெருகும். நல்ல சிந்தனை நம்மைச்
சுற்றிலும் Positive energy எனப்படும், ஆற்றல் மீதூறும். இதனால் நல்ல உறக்கம்
கிட்டுவதோடு, பயம் காரணமாக ஏற்படும் துர்ஸ்வப்னம் நிச்சயமாக வராது. நேத்ர
ரோகம், கை நடுக்கம், கவலை, சத்ரு பயம் ஆகியவை நீங்கும். கீழ்வரும் ஸ்லோகத்தின்
உட்பொருள் உணர்த்துவதும் இதுவே.
"அக்ஷிஸ்பந்தம் புதகஸ்பந்தம், துஸ்வப் நம் துர்விசிந்தனம் சத்ரூணாம் ச
ஸமுத்தானம் ஹ்ய ச்வத்த சமய ப்ரபோ"
இந்த அரசினைத் தொட்டால் பாபம் போகும். பார்த்தால் ரோகம் போகும். அண்டி
நின்றால் ஆயுள் விருத்தியடையும். இதனை இந்த வரிகள் உணர்த்துகின்றன. அவ்வரிகள்
வருமாறு
"யம் த்ருஷ்வா முச்யதே ரோகை
ஸ்பரிஷ்டவா பாபை: ப்ரமுக்யதே.
யதா ச்ரயாச்சிரஞ்ஜீவி தமச்வத்தம் நமாம்யஹம்"
"ருக் யஜீஸ் ஸாம்மந்த்ராத்மா ஸர்வரூபி பராத்பர:
அச்உத்தோ வேதபிலலோ ஸெனருஷிபி: புரோச்யதேவதா"
இந்த அஸ்வத்த மரமானது ருக், யஜுர், ஸாம வேதங்களின் ரூபமாகவும், காரணமாயும்
உள்ளது. ரிஷிகள் போற்றிவரும் இதன் தாவரப் பெயர் "Ficus Religiosa" என்பதாகும்.
சமஸ்கிருதப் பெயர் "பிப்பலாஸம்" எனவே ஆங்கிலமும் இதனை "The peepul tree"
என்கிறது.
'அஸ்வத்த பிரதக்ஷணம்' என்பது சிலர் பிரார்த்தித்து எடுத்துக் கொள்ளும் ஒரு
விரத அனுஷ்டான முறையாகும்.
திங்கட்கிழமையும், அமாவாசையும் ஒன்று கூடி வரும் நாளில் 'பிரதக்ஷிண
அமாவாசை'யான அந்தத் தினத்தன்று அஸ்வத்த மரக்கன்றினை பிரதிஷ்டை செய்தல், வேப்ப
மரத்தோடு விவாஹம் செய்து வைக்கப்பட்ட மரங்களைப் பிரதக்ஷிணம் செய்தல் ஒருவிதமான
வழிபாட்டு முறையாகும்.
"அமா ஸோமவார புண்யகாலே அஸ்வத்த பிரதக்ஷிணம் கரிஷ்யே" என்று கூறி நமஸ்கரிக்க
வேண்டும். ஒன்றுபட்ட மனத்தோடு, பக்தியோடு, "மூலதோ ப்ரஹ்மரூபாய மத்யதோ விஷ்ணு
ரூபணே, அக்ரத: சிவரூபாய வ்ருக்க்ஷராஜாயதே நம:" என்று அரசினை வலம் வரும்போது
கூற வேண்டும். பிரதக்ஷிணம் செய்யும்போது அவரவர் சக்திக்கு ஏற்றபடி,
கற்கண்டுகளோ, பட்சணங்களோ கொண்டு வந்து ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அரச
மரத்தின் அடிப்பகுதியில் போட்டு வருதல் சரியான எண்ணிக்கையில் பிரதக்ஷணத்தை
முடிப்பதற்கு ஏதுவாகிறது. 108ஆம் எண்ணிக்கையில் அந்தக் கடைசி வலத்தை முடித்த
பின்னர், அங்கு கூடி உள்ள குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் அவற்றைப்
பிரசாதமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு பலருக்கும் பங்கிட்டுக் கொடுப்பது சிறந்த
புண்ணியம் சேர்க்கும்.
ரோகம் (நோய்) கண்டுள்ளவர்கள், மலட்டுத்தன்மை நீங்க வேண்டுபவர்கள், செவ்வாய்,
வெள்ளிக் கிழமைகள் தவிர, மற்றைய வார நாள்களில் வயிறு மரத்தின் மீது படுமாறு
ஆலிங்கனம் செய்து வந்தால் ரோகங்களும், தோஷங்களும் நீங்கும். சனிக்கிழமைகளில்
இந்த அரசு என்னும் விருட்சம் கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்துவதாகக்
கூறப்படுகிறது. அனேகமாக சனிக்கிழமை விடுமுறை நாளாகவே பெரும்பாலும் உள்ளது.
இயற்கை நம்மை, அந்த நாளிலாவது அரசமரம் இருக்கும் இடம் தேடிவந்து, அதனைப்
பிரதக்ஷணம் செய்து முழு மனத்தால் ப்ரார்த்தனை செய்து இருகைகளாலும் அந்த மரத்தை
அணைத்துக் கொண்டு வேண்டிவருவது தீராது என்று சொல்லப்பட்ட நோயும்
தீர்ந்துபோய்விடும் என்று நிச்சயமாக நம்பலாம். தேவலோகத்து தன்வந்திரி பகவான்
ஆன ஸ்ரீநாராயணன் அதில் வாசம் செய்வது காரணமாக அந்த மரத்தின் தண்டுப்பகுதி
மருத்துவ ஆற்றல் அதிகம் உடையாதக உள்ளது.
இந்த அரச மரமான பிப்பலாச மரம் பயனுள்ளதாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.
இந்த அரணி என்னும் மரத்தின் கட்டைகளைக் கடைந்துதான் நெருப்பை மூட்டி யாகம்
செய்து வந்தனர். திருப்பேரூர் ஸ்தல புராணம் பங்குனி உத்திரத் திருநாளிலே
தாண்டவ மூர்த்தியான நடராஜர் இம்மரத்தடியில் தெய்வ நடனம் புரிய, தேவர்கள்
தரிசித்து ஆனந்தமடைந்ததாகக் கூறுகிறது. இதயக் கோளாறு, படபடப்பு, சிறு நீரகக்
கோளாறுகள், சிறுநீர் அதிக அளவில் வெளியேறுதலைக் கட்டுப்படுத்தும் தன்மை
இம்மரத்திற்கு உரிய மருத்துவத் தன்மைகள் என்று மருத்துவக் குறிப்புகள்
கூறுகின்றன.
இந்த மரம் வௌவால்கள், பறவைகள் ஆகியவை இதன் பழங்களைத் தின்று தம் எச்சங்களோடு
விதையை வெளியேற்றுகின்றன. பல இடங்களிலும் விழுந்து முளைக்கின்றன. கோபுரங்கள்,
கட்டடங்கள் ஆகியவற்றில் விழுந்து முளைக்கும் போது சிறு செடியாகக் காற்றிலுள்ள
நீரை மட்டும் உறிஞ்சி வளரும். அதனைப் பிடுங்கி வேறு இடத்தில் நடாவிட்டால் அது
வளரத் தொடங்கிய இடத்தில் ஆழமாக வேரூன்றி பாதிப்பை ஏற்படுத்தும். ஆழ்ந்து
செல்லும் வேர்ப்பகுதியும் நீண்டு வளரும். தண்டுப் பகுதியும் உச்சியில் அடர்ந்த
இலைகள் கொண்டு கிளைத்து வளரும் தன்மையுடைய இம்மரம் நீண்ட ஆயுள் கொண்டது. இதனை
வெட்டுல் கூடாது. இதன் இலைகள் இதயவடிவத்தில் இருக்கும். இலைகள், பழங்கள்,
மரப்பட்டைகள் எனப் பல மருத்துவக் குணம் உடைய இம்மரம் ஒரு மருத்துவ அற்புதம்.
எல்லா மரங்களுமே பிராணவாயுவை வெளிப்படுத்துவதால்தான் காற்று மண்டலத்தில்
ஆக்ஸிஜன் சரியான அளவில் உள்ளது. கர்நாடகா, கேரளா-இங்கு உள்ளவர்கள் 'விருட்ச
சாஸ்திரம்' அறிந்தவர்கள். இந்த இடங்களில் தெய்வ நம்பிக்கையும், தெய்வ
வழிபாடும் அதிகம். எனவே இங்கே அரசமரமான (ஆக்ஸிஜன் உற்பத்தித் தொழிற்சாலைகள்)
இந்தப் பிப்பலாச விருட்சங்கள் அதிகம் காணப்படுகின்றன. மாசும், தூசுமான நம்
வாயு மண்டலம் சுத்திகரிக்கப்பட அதிக அளவில் அரசு மரங்களை வளர்ப்பது நம் கடமை.
சுற்றுச் சூழல் இயற்கை ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்
கொள்ளச் சிறந்த வழி. 'அரசு' போன்ற பயன் தரும் மரங்களை வளர்த்து வருவதாகும்.
தெய்வம் விருட்சங்களில் வாசம் செய்வதால் அவற்றை வணங்குவது நம் தலையாய
கடமையாகிறது. இது நம் நாட்டிற்கும், இயற்கை வளத்தையும், சுற்றுச் சூழலையும்
பற்றி பேசிவரும் நமக்கும் நன்மை பயக்கும்.
விருட்சங்களுக்கு வணக்கம்.
விருட்ச ராஜாவான அரசிற்கு வணக்கம்.
விருக்ஷ ராஜாய நம:
No comments:
Post a Comment