Wednesday, March 23, 2016

21 types of pradosham

Courtesy:Sri.PS.Mahadevan

21 பிரதோஷங்களின் பலன்கள் என்ன? 

பிரதோஷம் என்றால் என்ன என்பது நமக்கு தெரிந்த ஒன்றே! மாதத்தில் இருமுறை வரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசித்தால் நம் துன்பங்கள் அனைத்தும் விலகும். சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம்(சனி மஹா பிரதோஷம்) என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பர், ஏன்? சனி பிரதோஷமன்று சிவனை நந்தி பகவானின் இரு கொம்புகளின் நடுவே தரிசித்தால், 120 வருடங்கள் பிரதோஷ வழிபாடு செய்தால் வரும் பலன் நம்மை வந்து சேரும் என்பர். 

சரி, பிரதோஷங்களில் மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த 21 பிரதோஷங்களின் என்ன செய்ய வேண்டும்? அதன் பலன்கள் என்ன என்பதை பாப்போம் ;

1. தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி" நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்]  செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க" வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை]  செய்வது உத்தம பலனைத் தரும்.

 

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி"யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை"த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்" ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் "வ" வடிவில் தெரியும் நட்சத்திர  கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்" ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.
இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். 
இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு  ஈசன் ஈடு இணையில்லா  அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்" ஆகும். 

இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். குறிப்பாக திருக்கடையூர்,  சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்". 

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி" சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்" சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்" சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். 
மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்" எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. சந்திரன் - மனோ காரகன் :

சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது - சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது. சந்திர தசை - சனி புக்தி   அல்லது சனி தசை - சந்திர புக்தி -  இரண்டும் - அவ்வளவு மோசமான நேரங்கள் . நவ கோள்களும் நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல அடியார்க்கு மிகவே'' என்னும் சம்பந்த பிரான் வாக்கிற்கிணங்க நீங்கள் சோம வார விருதம், சோம வார பிரதோஷ விரதம் இரண்டையும் கடை பிடியுங்கள். அதன் பின் சனி உட்பட எந்த கோளாலும் உங்களை பிடிக்க முடியாது. கோளறு பதிகம் சொல்லி ஈசனை 9 முறை தினமும் வலம் செய்யுங்கள். பின்னர்  நவ கோள்  மகிழ்ந்து நம்மை வலம் செய்திடும்  உனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டும் என்று கேட்கும். நவ கோள் உட்பட அண்டத்தில் உள்ள யாவும் அரனின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்குபவையே. 

12. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின்னர்  ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

13. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

14. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். 
பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

15. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

 

16. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம்.

தாருகா வனத்து ரிஷிகள். 

`நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

17. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

18. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

19. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள். 

20. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

21. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும். இதில் நீங்கள் ஏதேனும் ஒருவகை பிரதோஷ விருதம் கடை பிடித்தாலும், அனைத்து பிரதோஷ விருதங்களையும் கடைப்பிடித்தாலும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று அதை சிந்தை மகிழ நீங்கள் கடைபிடித்தால் முந்தை வினைகள் அனைத்தும் நீங்கும். அஷ்ட லக்ஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் வாசம் செய்வார்கள். 

கஷ்டங்கள் யாவும் விலகும். அனைத்து தோஷங்களும் பிரதோஷ விருதத்தால் நீங்கும். ஆனால் ஒரே ஒரு தோஷம் மட்டும் அதனால் நமக்கு வரும்.

அது, சந்தோஷம் ஆகும்!


No comments:

Post a Comment