வேறெந்த மொழியிலும் இப்படி ஒரு வார்த்தை விளையாட்டு விளையாட முடியுமா என்பது சந்தேகம் தான்.
உலா என்பது ஒருவகை சிற்றிலக்கியம்.
நாமெல்லாம் வீதியில் உலா (ஊர்வலம்)வரும் சாமியை நள்ளிரவில் வேடிக்கை பார்த்திருப்போம். போய் தேங்காய் பழம் உடைத்து விபூதி பூசிக் கொண்டு வந்து விடுவோம்..ஆனால் அப்படி சமர்த்தாக திரும்பவந்து போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளாமல் உலா வருபவர் மீது பெண்கள் காதல் கொண்டு பாடுவது தான் இந்த உலா.
பேதை முதல் பேரிளம்பெண் வரை தலைவனை காதலிப்பது. அம்மாவின் சேலைத்தலைப்பில் தன்னை மறைத்துக் கொண்டு அம்மா இவர் யார் மகனம்மா (இத்தேரமர்பவன் யார் மைந்தன் இது பன்னுக வென்றாடை முதல் பற்றுதலும் மின்னனையார் ....) (இவர் யார் என்று நேரடியாகக் கேட்கமாட்டாளாம் !..வெட்கமாம்) என்று கேட்பது முதல் காதல் வயப்பட்டு எப்ப வருவாரோ என்று ஏங்குவது வரை.
பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் ராமேஸ்வரர் மீது இயற்றிய உலாவில்(தேவையுலா) இருந்து சில சுவாரசியங்கள்(சிலேடைகள்):-
01. "கண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன்
கண்ணிடந் தப்புவதுங் காதேலா –பெண்ணமுதம்"
கண் இடம் தப்பும் - கண் இடம் மாறி விடும் என
கண் இடந்து அப்பும் -கண்ணை பிய்த்து அப்புதல்
02. "அங்கிதஞ் செய்தது போலங்கை வளையால் முலையால்
லங்கிதஞ் செய்த தடுக்குமோ – இங்கிதந்தான்"
அங்கிதம் செய்தல் -கையெழுத்து இடல்
அங்கு இதம் செய்தல் -அந்த இடத்தில் இதம் செய்தல்
03. "மாறனடித்த மதுரை யிலே யஞ்சாமல்
மாறனடித்த மதம்பாரீர் –நீறணியும்"
மாற நடித்த மதுரையில் - மண் சுமப்பவனாக மாற நடித்தல்
மாறன் அடித்த -மாறன் பிரம்பால் அடித்தல்
04. "மதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம
மதனை யெரித்திட வொண்ணாதோ –விதனஞ்சேர்"
காமமதனை -காமம் அதனை
05. "மாமிக்காய் மாமன்போய் மாமனைக் கொன்றபழி
சேமித் திடாக்கோடி தீர்த்தமும்-காமத்தால்"
[என்னவோ தப்பான விடயம் என்று நினைக்க வேண்டாம்...
மாமிக்காய் -மா மிக்காய் -பெருமை மிகுந்து ;
மாமன் போய் -மா மன் போய் -திருமகள் அரசன் (கண்ணன்) போய்;
மாமனைக் கொன்ற பழி -கம்சனைக் கொன்ற பாவம் தீர!
எப்புடி??
திருவிளையாடலில், ஒன்று இரண்டு மூன்று என்று இறைவனை வரிசைப்படுத்திப் பாடு என்றதும் "ஒன்றானவன் உருவில் இரண்டானவன்" என்று பாடுவார் ஔவையார் . இவரும் ஒன்று இரண்டு மூன்று என்று பாடுகிறார். அதுவும் எப்படி??!!
இரு மழுவன் முக்காலன் நாற் கண்ணன்
வேதம் ஐந்தன் ஆறுதலை மேவினோன் -காதல்
எழு சமயம் எட்டுலகும் ஒன்பது திக்கும்
பழுதகலின் பத்து நிதியும் -தொழவருள்வோன்
என்னடா இது? ஒரு மழு ,இரண்டு கால், மூன்று கண், நான்கு வேதம், ஐந்து தலை, ஆறு சமயம் , ஏழு உலகு , எட்டு திக்கு ஒன்பது நிதி என்று தானே சிவனைப் பற்றிப் பாட வேண்டும். இவர் என்ன N +1 என்று ஒன்று சேர்த்து இரண்டு மழு , மூன்று கால், நாலு கண், ஐந்து வேதம், ஆறு தலை, ஏழு சமயம் , எட்டு உலகம் , ஒன்பது திக்கு, பத்து நிதி என்று பாடுகிறாரே , இவருக்கு கணக்கு சொல்லித்தந்த டீச்சர் சரி இல்லையா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் நாம்தான் சரியில்லை. நாம் ஒரே பரிமாணத்தில் யோசிக்கிறோம். கொஞ்சம் கற்பனை குதிரையை தட்டி விட்டால் அவரது புலமை புரியும்.
இரு மழுவன் - பெரிய மழுவை ஏந்தியவன்
முக்காலன் - இறந்த நிகழ் எதிர் என்னும் மூன்று காலமும் ஆனவன்
ஆற்க்கண்ணன் - ஆலமரத்தின் கண் (ஆலமரத்தினடியில்) இருப்பவன்
வேதமைந்தன் -வேதத்தின் பொருளை உரைத்தவனை (முருகனை) மைந்தனாகக் கொண்டவன்
ஆறுதலை மேவினோன் -கங்கை என்னும் ஆறை (நதியை) தலையில் கொண்டவன்
காதல் எழு சமையன் -அன்பு உதிக்கும் மதத்தவன்
நெட்டுலகும் -நெடிய உலகங்களும்
ஒன்பதுதிக்கும் -ஒன்பதாக உதிக்கும்
பழுதகல் இன்பத்து நிதியும் - குற்றமில்லாத இன்பம் தரும் நிதியும்
புண்டரீகக் கண்ணினான் கண்களுக்குக் காட்டாத பொற்பாதங்
கண்ணிலா வந்தகற்குங்காட்டினோன் - கண்ணின்
-தாமரை போன்ற கண்களை உடைய திருமால் கீழே சென்று காண முடியாத பாதத்தை (அடிமுடி) கண்ணோட்டம் இல்லாத (பின்னே என்ன நடக்கும் என்ற தூரநோக்கு இல்லாத) அந்தகனுக்கு (யமனுக்கு) காட்டினோன் -உதைத்தவன்
தாமரைக் கண்ணால்(பெரிய கண்களால்) கூட காண முடியாத பாதத்தை கண் இல்லாத அந்தகனுக்கு (குருடனுக்கு) காட்டினான் என்று இன்னொரு பொருள் வருவது சிறப்பு.
என்பணி கொள்ளும் இராமேசன் -என் பணிவிடையை ஏற்று அருளும் ஈசன்
என்பு அணி கொள்ளும் இராமேசன் - எலும்பை மாலையாக அணியும் ஈசன்
பண்டு பிரிந்த பவளமும் முத்து மெதிர்
கண்டு கலந்தன்ன கனிவாயாள் - பண்டைமக
கடலில் பிறந்த பவளமும் முத்தும் இப்போது மீண்டும் இணைந்தன. எப்படி? simple ...பவளம் போன்ற வாயில் முத்துப் போன்ற பற்கள்..
இப்போது ஒத்துக்கொள்கிறீர்களா! நம் தாய்த்தமிழின் பெருமையை!! இப்படி ஒரு வார்த்தை விளையாட்டு சாதாரண மொழிகளில் விளையாட முடியுமா!
நன்றி: "சமுத்ரா" வலைப்பதிவு
No comments:
Post a Comment