Tuesday, July 14, 2015

Sambandhar - Guru pooja day vaikasi moolam

courtesy:Sri.GS.Dattatreyan

சம்பந்தர் குரு பூஜை தினம் - வைகாசி மூலம் - ஜூன் 4 2015:
*
ஞான சம்பந்தப் பெருமானின் திருமணம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருநல்லூர் பெருமணம் எனும் தலத்தில் நிகழ்வதாக நிச்சயிக்கப் படுகிறது. ஒரு வைகாசி மூல நன்னாளில் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள திருமடம் ஒன்றில் மண விழா சிறப்புற நடந்தேறுகிறது.
*
சம்பந்தர் இல்லாளின் கரம் பற்றி, பெற்றோரும் சுற்றத்தினரும் உடன் வர சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலினுள் சென்று மதி சூடும் அண்ணலைப் போற்றிப் பணிகிறார். அச்சமயம் தன் அவதாரத்தை நிறைவு செய்தருளுமாறு பரமனிடம் விண்ணப்பித்து திருப்பதிகம் பாடியருள்கிறார்.
*
கருணைக் கடலான சர்வேஸ்வரர் அசரீரி மார்க்கமாய் 'சம்பந்தா நீயும் உன் துணைவியும், நின் திருமண நிகழ்வினைத் தரிசித்த புண்ணிய சீலர்கள் அனைவரும் உடன் வர நமது ஜோதியுள் புகுந்து எம்மை அடைவீராக' என்று அறிவித்தருள்கிறார். அக்கணமே சந்நிதி முன்பு திருவாயிலோடு கூடிய பேரொளிச் சிவப் பிழம்பொன்று தோன்றுகிறது.
*
அச்சமயம் சம்பந்த மூர்த்தி 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' எனும் திருப்பதிகம் பாடியருளிப் பின் அனைவரிடமும் 'பிறவிப் பிணி தீர இந்த ஜோதியில் புகுவீராக' என்று கூறியருள்கிறார். அனைவரும் பெரு வியப்போடு ஜோதியுள் புகுந்து பெறர்க்கரிய சிவ பதம் பெறுகின்றனர் (திருநீலநக்க நாயனார்; திருநீலகண்ட யாழ்பாணர்; திருமுருக நாயனார் ஆகியோர் உட்பட).
*
இறுதியாக இப்புவி வாழ அவதரித்த ஞான சம்பந்தப் பெருமானும் இல்லாளின் கரம் பற்றி ஜோதியில் புகுந்து திருக்கயிலை ஏகினார். ஆண்டு தோறும் வைகாசி மூலத் திருநாளன்று இத்திருமண வைபவம் நல்லூர் பெருமணம் திருக்கோயிலில் விமரிசையாக நிகழ்த்தப் படுகிறது.
*
இவ்வருடம் வைகாசி மாத மூல நட்சத்திரம் ஜூன் 3ஆம் தேதி இரவு தொடங்கி மறு நாள் இரவு வரை நீடிக்கிறது. நல்லூர் பெருமணம் திருக்கோயிலில் ஞான சம்பந்தரின் திருக்கல்யாண உற்சவம் (ஜூன் 3 - புதன்) இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரையிலான முகுர்த்த நேரத்தில் நடந்தேறும். நற்பலன்கள் யாவையும் பெற்றுத் தர வல்ல அதி முக்கியமான உற்சவமிது.
*
மறு நாள் (ஜூன் 4 - வியாழன்) அதிகாலை 4 மணிக்கு சம்பந்தரின் ஐக்கிய உற்சவம் திருக்கோயிலில் சிறப்புற நடந்தேறும். பிறவிப் பிணி போக்க வல்ல இவ்வற்புத உற்சவங்களை எத்தகு பிரயத்தனம் மேற்கொண்டாவது தரிசித்தல் வேண்டும். அங்ஙனம் தரிசிப்போர்க்கு ஞான சம்பந்தரின் திருவடி சம்பந்தத்தால் கிடைத்தற்கரிய சிவ பதம் கிட்டும். இதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை.
*
சீர்காழி; சிதம்பரம் ஆகிய தலங்களிலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருநல்லூர் பெருமணம் திருக்கோயில். ஆலயத்தின் தொலை பேசி எண் (+91-4364-228 777).

No comments:

Post a Comment