Tuesday, July 21, 2015

Oil cake - Periyavaa

courtesy:Sri.Jana Iyengar

ஒரு பிராம்மணர் குடும்ப சூழ்நிலையால் வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருந்தது. பெரியவாளுடைய அத்யந்த பக்தராகையால், சாஸ்த்ரத்தை மீறுகிறோமே, 
பெரியவாளுக்கு ஒப்பாததை செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி எடுத்தது.

ஒருமுறை இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு வருகிறோம் என்பதை விட, தன்னுடைய அன்பான பெரியவாளை தர்சனம் பண்ணப்போகிறோம் 
என்ற எண்ணமே அவருக்கு அம்ருதமாக இருந்தது. சென்னை வந்து இறங்கியதும் நேராக காஞ்சிபுரத்துக்கு விரைந்தார். அதேநாள் காலை பெரியவா சமையல் 
பண்ணும் பாரிஷதர்களை கூப்பிட்டார்….

"இன்னிக்கி சமையல் என்னென்ன பண்ணப் போறேள்?…"

அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! பெரியவா இதுவரைக்கும் பொது சமையல் என்று அத்தனை விஜாரித்ததில்லை. மெனுவை சொன்னார்கள். அதில் சிலவற்றை 
மாற்றி வேறு ஏதோ பண்ணும்படி கூறினார். கொஞ்ச நேரத்தில் இந்த வெளிநாட்டு இந்திய பக்தர் வந்து [ஓடிவந்து] பெரியவா திருவடியில் நமஸ்கரித்தார்.

"க்ஷேமமா இரு! மொதல்ல போயி சாப்டு…அப்றம் வா……" எல்லாருக்கும் ஆச்சர்யம்! வந்த பக்தரை ஏன் முதலில் சாப்பிடச் சொல்கிறார்? அவர் சாப்பிடப் போனதும் 
அருகிலிருந்த பாரிஷதர்களிடம் "ஏண்டா…..அவன் எனக்கு எதாவுது குடுக்கனும்ன்னா….எதை குடுக்கச் சொல்லி கேக்கறது?" என்று சந்தேஹம் வேறு கேட்டார். 
அசந்து போனார்கள்! "அதைக் குடு, இதைக் குடு" என்று கேட்டறியாத பரப்ரம்மம் "எதைக் கேக்கலாம்?" என்று கேட்டால், என்ன பதில் சொல்வது?

அதற்குள் அவர் சாப்பிட்டு விட்டு வந்ததும், சிரித்துக்கொண்டே "என்ன? ஒன்னோட வ்ரதம் பூர்த்தியாச்சா?" என்றார். பக்தரின் கண்களோ கரகரவென்று கண்ணீரை 
பொழிந்தன. புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை பார்த்து பெரியவா சொன்னார்….

"இவன், சீமைலேர்ந்து பொறப்பட்டதுலேர்ந்து பச்சை தண்ணி கூட குடிக்கலை….என்னைப் பாக்காம எதுவும் சாப்டக் கூடாது..ங்கற ஸங்கல்பத்தோட கெளம்பி 
வந்திருக்கான்…..என்ன நான் சொல்றது செரியா?.." அவருடைய புன்னகையில் எல்லாரும் மெய்மறந்தனர்.

இதோ! அடுத்த ப்ரேமாஸ்த்ரம்….."இந்தா…..இவனை அழைச்சிண்டு போயி, எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் எனக்காக வாங்கித் தரச்சொல்லி, வாங்கி 
வெச்சுக்கோங்கோ!"……பக்தரின் கண்ணீர் நிற்கவேயில்லை. "அல்பமான எங்கிட்டேர்ந்தா பெரியவா தனக்குன்னு கேட்டு வாங்கிக்கறார்!"

அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், சுற்றி இருந்தவர்களிடம் தன் அருள் லீலையில் காரணத்தை சொன்னார்…..

"இவனுக்கு எம்மேல ரொம்…ப ப்ரியம். எனக்கு எதாவுது பண்ணனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கான்….ஆனா, சீமைக்குப் போனவாட்டேர்ந்து நான் எதுவும் 
வாங்கிக்க சாஸ்த்ரம் எடம் குடுக்கலை…..அதுக்காக எம்மேல பக்தியா இருக்கறவாளை விட்டுட முடியுமா? அதான் எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் 
வாங்கித் தரச்சொன்னேன். எள்ளுப் புண்ணாக்கை நம்ம மடத்துப் பசுமாட்டுக்கு போடுங்கோ! அது குடுக்கற பாலை நேக்குக் குடுங்கோ! ஏன்னா…பசுமாட்டுக்கு 
எதைக் குடுத்தாலும், அதுல இருக்கற தோஷம் நிவர்த்தி ஆய்டும்…பசுமாடு மூலம் எது வந்தாலும் அதுக்கு தோஷமே கெடையாதோன்னோ? 
அதான். என்னோட பக்தாளோட மனஸை நோக அடிக்கப்டாது "

தர்மமும், காருண்யமும், பக்த வாத்ஸல்யமும் சேர்ந்த "கலவை"யில் உதித்த ஞான சூரியனை சரணடைவோம்