Thursday, July 9, 2015

Leave one to get one

Courtesy:Sri.PS.Mahadevan

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது
ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.
வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக குருவாயூர் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, பக்தியோடு குருவாயூரப்பனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், குருவாயூரப்பனைத் தரிசனம் செய்வதுமாக இருந்தார். அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும்போது, தன் சேமிப்பு பணமான, 2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து விட்டுக் குளிப்பார்.

அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார். அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, சாமி தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும் உண்டு. அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து வந்தான்.
கடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து, சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர். அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, 'என்ன குருவாயூர் இது... ஒரு மண்டலமாக விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல. சரியாக நடக்க கூட முடியலயே...' என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன், பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.
'டேய்... திருடன் திருடன்...' என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார் முதியவர்.
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தைக் கடந்து, கருவறைக்குள் மறைந்த சிறுவன், குருவாயூரப்பனாக தரிசனம் தந்தார்.
திகைத்துப் போன முதியவர், 'குருவாயூரப்பா... என்ன நியாயம் இது... என் வாத நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..' என்று கண்ணீர் விட்டார்.
உடனே, குருவாயூரப்பன், 'பக்தா... உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்...' என்றார்.
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி, கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை போனது வருத்தத்தை கொடுத்ததால், 'பகவானே... என் கால்கள் குணமாகி விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே...' என்றார்.
'நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம் கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப் பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை, அவனிடம் கொடுத்தேன்...' என்றார் பகவான். உண்மையை உணர்ந்தார் முதியவர்.
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ, அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்; இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்!

No comments:

Post a Comment