Monday, July 13, 2015

Kothumbi from Thiruvasagam

Courtesy:Sri.GS.Dattatreyan

இறையன்பர்களுக்குப் பணிவுடன் ,

சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ !
மாணிக்கவாசகர் .
....................................................................

" சட்டோ நினைக்க மனத்து அமுதாம்
சங்கரனை மறப்பேனோ ! மறந்தால்
கெட்டேன் ! கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவி நாம் தொழும்பரை உரு
அறியோம் " என்கிறார் .
இந்தப் பாடலைப் படித்தவுடன் எனக்கு
நமச்சிவாயப் பதிகம் தான் நினைவுக்கு
வந்தது .

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கல்லால்
நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன்
குலமிலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே .
நாவுக்கரசர் .

" சந்தித்த கோவணத்தர் வெண்ணூல்
மார்பர் சங்கரனைக் கண்டீரோ " எனக்
கேட்க " பந்தித்த வெள் விடையில் பாய
ஏறி படுதலையில் என்கொலோ ஏந்திக்
கொண்டு சென்ற சங்கரனைக் கண்டோம் " என்றனர் . அத்தகைய
சங்கரன் என் மனத்துள் ஊறும் அமுது .
அவனைக் கண்டும் அவனோடு ஒட்டிச்
செல்லாத பாவியானேன் .

இப்படிப்பட்ட சங்கரனை மறக்கலாமா !
நினைத்தொறும் , காண்தொறும் ,
பேசும்தொறும் அனைத்து எலும்பும் உள்
நெக ஆனந்தத் தேன் சொரியும் அம்பலவன் அல்லவா ! அவன் !
அவனை நினைக்க நினைக்க மனத்திலே அமுது ஊறும் . இன்பத்
தேன் சொரியும் . அத்தகைய சங்கரனை மறந்தால் கெடுவேன் .

பொலிகின்ற அவன் திருவடி என் மனதுள் புகுதப் பெற்று ஆக்கையைப்
போக்கப் பெற்று மெலிகின்ற என்னை
ஆட்கொண்ட பெருமான் . மன்னும் திரு
உத்தரகோசமங்கைத் தலைவன் .
வினையேன் மனத்து அவன் ஊறும் தேன் . ஞானக் கரும்பின் தெளிவு அவன் . பழச் சுவையும் அவனே !
சித்தம் புகுந்து தித்திக்க வல்ல பெருமான் . என் பிறப்பு அறுத்து ஆட்
கொண்ட வள்ளல் . வண்ணப்பணித்து
என்னை வா என்று கருணை செய்த
கருணாகரன் . அவன் மெய்த் தேவன் .
பித்த உலகில் பிறப்பொடு இறப்பு
என்னும் சித்த விகாரக் கலக்கம் 
தெளிவித்த வித்தகத் தேவன் .

இப்படிப்பட்ட சிவபெருமான் அன்று
திருப்பெருந்துறையில் , தனது கேடு
படாத் திருவடியைக் காட்டினான் .
அத்திருவடிகளை ஒற்றிக் கொண்டு
அவனோடு செல்லாமல் நின்ற பாவி
ஆனேன் . அன்று அவன் திருவடியைப்
பற்றிச் சென்றிருந்தால் இத்தனை காலம் நான் அலைந்து திரிந்து
இருக்க வேண்டாம் . இதுவும் அவன்
செயல் .

திருவடியை பற்றிச் செல்லவில்லை 
ஆயினும் , அவனோடு வந்த 
அடியார்களைத் தொடர்ந்தாவது நான்
சென்றிருக்க வேண்டும் . அதனையும்
விடுத்தேன் .அவன் திருவடி ஒன்றையே 
பற்றி வாழும் , தொழும்பர் கூட்டத்தை
மதிக்கத் தவறிவிட்டேன் . சங்கரனை
மறந்தேன் . சங்கரன் திருவடியை தம்
ஆழ் மனதில் பதித்து வாழும் அடியார்
கூட்டத்தையும் மறந்தேன் .

" மாறி நின்று என்னை மயக்கிடும்
வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து
அமுதே ஊறி நின்று என்னுள் எழும்
பரஞ்சோதியாய் " நின்றான் . அதனை
மறந்தேன் . கெட்டேன் . இனி எந்தக்
காலத்தும் இது நடவாது பார்த்துக்
கொள்வாய் பரம்பொருளே !

யாம் செய்த வல்வினையைக் கழிதரு
காலமுமாய் எம்மைக் காப்பவனே !
உணர்வாய் என் உள் கலந்து தேனாய்
அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழி எமக்குத்
தந்தருளும் தேனார் கொன்றைச் சிவனை இனி மறவேன் என்றார் .

மயக்கங்கள் கொண்ட மனத்தோடு
அன்று உன்னை ஒட்டாத பாவிக்கு ,
உனைப் பிரிந்து வாழும் இச்சிறியேன்
தனக்கு , " வா என்று உன் ஞானத்தால்
தெளிந்த அடியார் கூட்டம் காட்டாயேல் "
மிகவும் வருந்துவேன் . தளர்ந்து
ஒடிந்து உருகா நிற்கும் இந்த உயிர்க்கு
இரங்கி அருள் புரிவாய் .

அறிவின் சிகரமே ! ஆற்றலுடைப்
பெருமானே ! வாழ்வின் மூலமே ! என்
வாழ் முதலே ! என பெருமான் திருவடியில் சென்று அவன் புகழ்
பாடுவாய் , வண்டே என்கிறார் .

" சிட்டாய சிட்டர்க்கே சென்று ஊதாய்
கோத்தும்பீ "
( சிட்டாய -- அறிவுடைப் பொருளாகிய )
....................................................................

No comments:

Post a Comment