Sunday, July 26, 2015

Excerpts from the discourses of HH.Mahaperiyavaa

Courtesy:Sri.GS.Dattatreyan

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி(1907-1994)

"ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால் இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும் கூட வேறுவேறான பொருட்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) இவையும் வேறு வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம் தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள், உபநிஷதமும், சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்துவிட்டார்கள்."

"உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், 'உலகம் இறுதி சத்தியமல்ல. இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம். இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே என்பதுதான். இதையே மேற்கண்ட ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்லுகிறார்கள். பிரம்மமே பரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் "உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல" என்கிறார்கள்.

இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு வியாகரண விதி. 'ஜ' வரிசை சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் 'யமுனா' 'ஜமுனா' வாயிற்று. 'யோகீந்திர' என்பது 'ஜோகீந்தர்' என்றாயிற்று. 'ஜீவ' என்பது 'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. *பிப்பலம் என்பது 'ஆப்பிள்'(apple) என்றாயிற்று. அறிவு விருட்சம் என்பதும் நம் 'போதி' விருட்சம் தான். 'போதம்' என்றால் 'ஞானம்". புத்தருக்கு போதி விருட்சத்தின் கீழ் தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே? ஆனால் அவருக்கும் முந்தியே அரசமரத்துக்கு போதி விருட்சம் என்ற பெயர் இருந்தது. (மேற்கூறிய நூல்: பக்கம் -135-136)
* இதற்கு ஒரு பாரா முன்னதாக உபநிஷதத்தில் இதே old testament கதை, பிப்பல மரத்தை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருப்பதை விஸ்தரிக்கிறார் பரமாச்சாரியார்.

"பழைய தர்மங்கள் எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக்கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்." (மேற்கூறிய நூல் பக். 284)

"தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை "கோக்ராஸம்", என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 'க்ராஸம்' என்றால் ஒரு வாயளவு (mouthful): இங்கிலீஷில் புல்லை grass என்பது கூட இதிலிருந்தே வந்திருக்கலாம்." (மே. நூல் பக். 316)

"வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்யத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரஹணம் என்று கொஞ்சம் கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது." (மே. நூல் பக். 424)

"இப்போது கூட, நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வெங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்: மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், "வீட்டில் இப்படி அபிப்ராயம்: சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை: அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி (feeling)க்கு மதிப்பு (respect) கொடுத்தேன்: என்று ஜம்பமாக சொல்லிக்கொள்வார்கள்." (மே நூல் பக். 576)

"Action and reaction are equal and opposites (செயலும் பிரதிச் செயலும் சம சக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவும் இருக்கும்) என்ற "Newton Law" எல்லாக் காரியங்களையும் பற்றின 'கர்மா தியரி'யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை; எண்ணத்தின் பிரதிபலனையும் மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி 'natural forces' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான். Mental plane, metaphysical plan, physical plane, மூன்றையும் கோத்து தம் மதத்தில் சொன்னதை physical plane -இல் (பௌதீக மட்டத்தில்) மட்டும் சொல்வதே ந்யூட்டன் லா:......"(மே. நூல். 3ஆம் பாகம்: பக் 392)

"வெறும் physical plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால் சூர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயண்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப் பலவிதமாக ஊகம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்தி தான்.......ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்ப பெரியவர்கள் அது தான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். (மே நூல்: 3-ஆம் பாகம்: பக். 393)

"விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். 'நாத தநூம் அனிஸம் சங்கரம்" என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். "தநூ" என்றால் சரீரம், இதுவே ஈஸ்வரனின் சக்தியோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே சப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்." ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வர சப்தஸ்வர") ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது,. வாஸுதேவாச்சார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், மகாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுக்கும் புரியாமல்தான் இருந்தது. அப்புறம் சங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், சட்ஜமும், பஞ்சமமும் பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்தே ஒவ்வொன்றாகத் தோன்றிய என்றும் அர்த்தம் தொனிக்கும்படி பிரமாணங்கள் அகப்பட்டன. (மே. நூல் பக். 811-12).
"சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் முக்கியமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பது தான் 'நித்யம்'. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் 'பூர்ணம்'. இப்படி எக்காலத்திலும், எவ்விடத்திலுமான நிறைந்திருப்பதே சப்தம் என்று நம் பூர்வீகர்கள் சொன்னதை இப்போது தான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. (மே. நூல் பக். 814)

"இப்போது தான் வயசு ஒன்றைத் தவிர ஜனநாயகப் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகுதியும் வைக்காமல் விட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணய சட்டத்தை) நிறைவேற்றிய சபைக்கு அக்கிராசனராக இருந்த ராஜேந்திர பிரசாதே இதை ஆட்சேபித்துப் பார்த்தார். "சட்டத்தைப் பற்றி வாதிக்க வேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக் கொடுக்கவேண்டிய ஜட்ஜுகளுக்கும் அனேக க்வாலிஃபிகேஷன்கள் வைத்திருக்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பி.க்களுக்கும் ஒன்றும் வேண்டாம் என்றால் கொஞ்சம் கூட சரியாயில்லையே" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் அவர் சொன்னதறகு கான்ஸ்ட்டியூவெந்த் அசெம்ப்ளி ஒத்துக்கொள்ளவில்லை. (மே. நூல் பக். 854).

"நிர்வாணம் என்பதற்கு நேர் அர்த்தம், 'தீபத்தை ஊதி அணைப்பது'. ஒரே சூடாக தகித்துக்கொண்டு, பிரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவதுதான் நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற மாதிரி வேறே எதையும் பண்ண முடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க வைத்துத்தான் வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும். அப்போதும் கூட அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக நினைத்த பிறகும், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று சொல்லுகிறார்கள். அக்னி அணுக்களால் ஆனது அல்ல (அக்னி எரிவதற்குத்தான் ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள்தான் என்று நினைத்துவிடக் கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத் தான் அடியோடு ரூபமே இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவதுதான் நிர்வாணம். பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. (மே. நூல். 5ஆம் பாகம் பக். 648)

"அபிநவ சங்கரர்": அவர்களுடைய ஆர்குமெண்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடிய கல்வெட்டில் ஒரு 'பகவத் சங்கர'ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பது போல தங்களுடைய சிரசுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத் பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்? 'கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. 8ஆம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து 9ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பாகம் வரை ஆசார்யாளின் காலம்' என்பதற்கும் ஒத்துப் போகிறதே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்பது ஒரு ஆர்குமெண்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் சங்கேதக் கணக்கு ஸ்லோகம்- கலியில் 3889-ஆம் வருஷமான கி.பி.788 -ஐச் சொல்லும் "நிதிநாகேபவஹ்ன்யப்தே ஸ்லோகம்." (மே.நூல் 5-ஆம் பாகம் பக் 835).

மேலே தரப்பட்டிருப்பவை காஞ்சி பரமாச்சார்யர், ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி (1894-1895) அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். அவரைத் தரிசிக்க வந்து குழுமும் பக்தர்களுக்கு அவ்வப்போது அவர் உபதேசங்கள் செய்வதுண்டு. இப்பிரசங்கங்களுக்கு ஏதும் முன் தயாரிப்புகள் கிடையாது. அவ்வப்போது அவர்கள் முன் தம் மனதில் தோன்றுவதைச் சொல்வார். மேலே கொடுக்கப்பட்ட பகுதிகள், எவ்விதத் தேர்வும் இன்றி யதேச்சையாக கண்களில் பட்டவை (இதுகாறும் வெளிவந்துள்ள ஆறு பாகங்களின் சுமார் 6000 பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. கண்ணில் பட்டவற்றில் துறைக்கு ஒரு மேற்கோள் என்று மாத்திரமே ஒரு சில துறைகளோடு நிறுத்திக்கொண்டேன். மாதிரிக்கு ஒரு துணுக்கு என்று) பரமாச்சாரியாரின் படிப்பும் அக்கறைகளும் என்ஸைக்ளோபீடியா என்று சொல்லும் அளவுக்கு விஸ்தாரமும் ஆழமும் கொண்டவை.

வரலாறு, தத்துவம், இசை, மொழியியல், சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம், பெளதீகம், தொல்லியல் என அடுக்கிக்கொண்டே போகலாம், அவரது அறிவு விஸ்தாரமும் தீக்ஷண்யமும் விரிந்துகொண்டே போகும். இவற்றோடு உடன் நிகழ் கால அரசியல், சமூக பிரச்சினைகளையும் நிலவரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தன் 13ஆவது வயதில் சங்கராச்சாரியாராக பீடமேறிய பையனுக்கு மடத்தைச் சேர்ந்த சம்பிரதாயங்களும் பீடாதிபதியாக அந்தப் பையன் தெரிந்துகொள்ள வேண்டிய மத சாஸ்திரங்கள் அனுஷ்டானங்கள், புராணங்கள், சடங்குகள், பின் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி இவற்றைத் தவிர வேறு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்? வேறு எதுவும் யார் கற்றுக் கொடுப்பார், கற்பதற்கு நேரம் எங்கு இருக்கும்? இவற்றைக் கற்பதே, முழு நேரக் கடும் பயிற்சியாக இருக்கும். பின் எங்கிருந்து அவர் ஆங்கிலமும், அவருக்கு இப்போது தெரியவந்துள்ள அத்தனை இந்திய மொழிகளில் பயிற்சியும், உயர் கணிதமும் தொல்பொருளியலும் கல்வெட்டு இயலும் ஃப்ரெஞ்சும் ஆஸ்ரமத்துக்குள் இருந்து கொண்டு எப்படிக் கற்றார்?

ஆசிரமத்துக் கடமைகள் போக அவருக்கு நேரம் எப்போது கிடைத்தது? யார் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்? அவராகத் தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஆசிரமமும் இத்துறை ஒவ்வொன்றிற்கான பேராசிரியர்களை வரவழைத்து பீடாதிபதிக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்ய முடியாது. அவராகக் கற்றுக்கொண்டால் அதற்குத் தடை எழாது மடத்திலிருந்து. அதற்காக அவர் இர்விங் வாலஸ், எர்ல் ஸ்டான்லி கார்ட்னர், க்ரேஸ் மெடாலியஸ் என்று படித்துக்கொண்டிருக்க முடியாது. நூற்றாண்டுகள் பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களும் மடத்தின் கண்ணியமும் சமூகத்தில் அதற்கு உள்ள மரியாதையும் பங்கப்படாத வரை, சங்கராச்சாரியார் எந்த சாஸ்திரம் படித்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. ஒரு பீடாதிபதிக்கு இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மன உந்துதல் இருக்க வேண்டும். அத்தோடு ஆசிரமத்துப் பொறுப்புகளை நிறைவேற்றிய பிறகு இவற்றைக் கற்க நேரம் இருக்கவேண்டும். அந்த மனம் இந்தப் பதினோரு வயதுப் பையன் தன் வளர்ச்சியில் எப்படிப் பெற்றான், அதுவும் ஆஸ்ரமத்துச் சூழலில் என்பது ஒரு கேள்வி. அத்தோடு இதற்கான நேரம் எப்படிப் பெற்றான் என்பது அடுத்த கேள்வி.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி