Monday, June 8, 2015

Sri Appayya Dikshitar charitram



சிவமயம்
ஸ்ரீ மஹாதேவ ஜயம்


ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர்

திவ்ய சரித்ரம்

(Sri appayya dIkshitar divya charthram)

வக்ஷஸ்தலாசாரியர்

புண்ணியம் செய்து பிறந்து வசிக்கும் உத்தமர்களுடன் பிரகாசிக்கும் துண்டீர (தொண்டை) மண்டலம் என்ற நாட்டுக்கு அமராவதி போலவும், பாரத பூமிக்கு ஒட்டியாணம் போலவும், காஞ்சீபுரம் என்ற பெயருடைய ராஜதானி உள்ளது அதில் கருணாஸமுத்ரமான ஸ்ரீ ஏகாம்ரநாதரும், கல்பதரு-சிந்தாமணியான ஸ்ரீ காமாக்ஷியும் ஸாந்நித்யமாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இந்த புண்யபுரியின் ஸமீபத்தில் ஆரணி என்ற நகரம் உள்ளது. அதன் ஸமீபத்தில் அடையப்பலம் என்ற ஒரு சிறு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ஆசாரம், அனுஷ்டானம், எப்போதும் அக்னிஹோத்ரம், இஷ்டி, யாகம், அதிதி ஸத்காரம் போன்ற புண்ணிய காரியங்களைச் சிரத்தையுடன் செய்துவரும் வித்வான்கள், கவிதா ஸாமர்த்யம், ஸகலபாஷாஞானம், ஸகலவேதசாஸ்த்ர ஸம்பத்துடன் விளங்கி வந்தார்கள். அங்கு வசித்துவந்த ஜனங்களுடைய பாண்டித்யம் பிருஹஸ்பதி, வஸிஷ்டரிஷி போன்ற மஹரிஷிகளும் போற்றும்படி விளக்கத்துடன் இருந்தது.
இத்தகைய பெருமைகள் வாய்ந்த அந்த அடையப்பலம் என்ற கிராமத்தில் வக்ஷஸ்தல கணபதியை உபாசனம் செய்து கொண்டு இருக்கும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த ஆசார்யதீக்ஷீதர் என்ற பெயருடன் அத்வைத சாஸ்த்ர உபதேசகர் ஒருவர் இருந்தார். அவர் விஜயநகர ராஜாவான கிருஷ்ணதேவராயரது ஆஸ்தான வித்வானாக அவரால் மிகவும் போற்றப்பட்டு வந்தார்.

ரங்கராஜாத்வரி

வக்ஷஸ்தலாசார்யர் என்ற இந்த மஹானுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களில் முத்தவரான ரங்கராஜார்வரி என்றவர்தான் ஸ்ரீமத் அப்பய்யதீக்ஷிதர் அவர்களின் தந்தையாராவர். ரங்கராஜாத்வரி 'அத்வைத வித்யா முகுர விவரணப்ரகாசம்' முதலான கிரந்தங்களை இயற்றியவர். இவரது மாதாமஹர் (தாயின் தந்தை) வைஷ்ணவகுலத்தைச் சேர்ந்த ஸ்ரீ வைகுண்டாசார்யர் என்பவராவர். அந்தக் காலம் ஸ்மார்த்த-வைஷ்ணவ பேதமில்லாமல் ஸ்நேஹமாக இருந்தமையால் வக்ஷஸ்தலாசாரியர் அந்த வைஷ்ணவரின் பெண்ணை மணந்து கொண்டார். அந்த வைஷ்ணவ மனைவிக்குப் பிறந்த பிள்ளை தான் ரங்கராஜாத்வரி. மாமனார் இஷ்டப்படி பெயர் வைத்தபடியால் வைஷ்ணவப் பெயருடன் விளங்கினார். வக்ஷஸ்தலாசாரியார் கலிபிறந்து 4630-ம் ஆண்டு சிவஸாயுஜ்யம் அடைந்தார்.

ஸ்ரீமார்க்கஸஹாயப் பெருமானின் அனுக்கிரஹம்

அந்த ஸமயம் இந்த நாட்டை சின்னவீரப்ப நாயகரின் புத்ரர் சின்னபொம்ம ராஜா ஆண்டு வந்தார். சிற்றரசர்களான ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீவேங்கடகிரி, கார்வேடி முதலிய தேசத்து ராஜாக்கள் வித்வான்களை ஆதரித்து வந்தனர். நமது ஸ்ரீரங்கராஜாத்வரியையும் இவர்கள் ஆதரித்து வந்தனர். ஸ்ரீரங்கராஜாத்வரியின் வயது இருபத்து நான்கு தான் என்றாலும் உசிதகாலத்தில் விவாஹமாகி இல்லறம் நடத்தி வரும்போது குழந்தை பிறக்கவில்லையே என்று மிகவும் வருந்தி, ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீமார்க்க ஸஹாயரான தனது குலதெய்வத்தை வேண்டினார். சிவபெருமான் ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ மார்க்கஸஹாயர் என்ற பெயருடன் விரிஞ்சீபுரம் என்ற க்ஷேத்திரத்தில் அருள் பாலிக்கும் மூர்த்தியாக விளங்குகின்றார். சிவபெருமான் எங்குக் கோயில் கொண்டாலும், அங்கு ஒரு திருநாமம் ஏற்று நாமரூபமில்லாத மூர்த்தியாக ஞானிகளுக்கும், நாம ரூபத்தை ஏற்று ஒன்றும் அறியாத மனித சமூகத்திற்கும் தமது திருவருளைப் பொழிகின்றார். பிள்ளைப் பேறுவேண்டிய ஸ்ரீரங்கராஜாத்வரிக்கு பரம கருணையுடன் ஸ்ரீமார்க்கஸஹாயர் அசரீரியாக "குழந்தாய் ரங்கராஜ! சிதம்பரத்தில் உனக்கு அருள்புரிகின்றேன். நீ அங்கு வருவாயாக" என்று அருளிச்செய்தார். இந்த அசரீரி வாக்கைக் கேட்ட ஸ்ரீரங்கராஜாத்வரி ஆனந்தத்தில் மூழ்கினார்.

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் அனுக்கிரஹம்

அசரீரி வாக்குகேட்ட ஸ்ரீரங்கராஜாத்வரி உடனே மனைவியுடன் சிதம்பரம் சென்றார். அவர்கள் சிதம்பரம் சென்றவுடன் அவர்களது புத்ரலாப ப்ரதிபந்தகம் அவர்களை விட்டு விலகியது. அந்த தம்பதிகள் தினந்தோறும் சிவகங்கையில் ஸ்நானம் செய்து மூன்று வேளைகளிலும் சிவதரிசனம் செய்து ஸ்ரீநடேசப்பெருமானை ஆராதனம் செய்தார்கள். இப்படி ஐந்துவருஷம் சென்றது. நாள்தோறும் நடராஜ மூர்த்தியின் சன்னிதியில் இருந்து இந்த தம்பதிகள், "ஹே ப்ரபோ! எங்களிடம் எப்போது கருணைவைக்கப்போகிறீர்கள்" என்று மனமுருக வேண்டினார்கள். ஒருநாள் இம்மாதிரி மனங்கரைந்து திருவருளைவேண்டிய பிரார்த்தித்து நின்ற அந்த தம்பதிகட்கு திடீரென்று ஆகாசத்தில் ஒரு சத்தம் கேட்டது. "ஹே பக்தசிகாமணியே! உன்னுடைய தவத்தினால் நான் மனம் மகிழ்ந்தேன். உனக்குச் சீக்கிரமாகப் புத்திரர்கள் இருவரும், பெண் ஒருத்தியும் பிறக்கப் போகிறார்கள்" என்று அருளிச்செய்தார். இதனைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ஸ்ரீரங்கராஜாத்வரி தனது இல்லம் சேர்ந்து அன்று இரவு இருக்கும்போது ஸ்ரீநடராஜப் பெருமான் பூஜகர் உருவத்தில் வந்து பகவானின் அபிஷேக தீர்த்தம் என்று கூறி பழரசத்தைச் சாப்பிடும்படி ஸ்ரீரங்கராஜாத்வரியின் பத்தினியிடம் கொடுத்து மறைந்தார். அந்தப் பழரசத்தை அந்த அம்மையார் சாப்பிட்டதும் சிவபெருமானின் திருவருளால் கர்ப்பம் ஏற்பட்டது.

தீக்ஷிதேந்திரரின் திருவவதாரம்

ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவருளால் கர்ப்பம் தரித்து, பத்து மாதங்கள் பூரணமாக ஆனதும் ஒரு பிரமாதீச வருஷத்தில், புரட்டாசி மாதம், சோமவாரம், கிருஷ்ணபக்ஷம் பிரதமை உத்திரட்டாதி நக்ஷ்த்திரத்தில் ஸாத்விக வேளையில் கன்யா லக்னத்தில் மஹாபாக்கியமான புண்ணிய ஸமயத்தில் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் திருஅவதாரம் செய்தார்கள். இது கலிவருஷம் 4634 என்றும், ஆங்கில ஆண்டு 1554 என்றும் ஸ்ரீசிவானந்தயோகி என்பவர் தமது தீக்ஷிதேந்திர சரிதத்தில் நிரூபித்துள்ளார். திருவவதாரத்தை விளக்கும் இரண்டு ச்லோகங்கள் பின் வருமாறு:
   வீணாதத்வக்ஞ ஸங்க்யாலஸித கலிஸமாபாக் ப்ரமாதீசவர்ஷே   கன்யாமாஸே(அ) த க்ருஷ்ணப்ரதமதியுதே                            (அ)  ப்யுத்தர ப்ரோஷ்டபாத்பே |   கன்யாலக்னே(அ)  த்ரிகன்யாபதிரமிததயாசேவர்திர் வைதிகேஷு   ஸ்ரீதேவ்யை ப்ராக்ய்தோக்தம் ஸமஜநி ஹி விரிஞ்சீசபுர்யாம் மஹேச:||         லக்னே ரவீந்துஸுதயோ: மகரே ச மாந்தெள        மீனே சசின்யத வ்ரூஷே ரவிஜே ச ராஹெள |   சாபே குரெள க்ஷிதிஸுதே மிதுனே துலாயாம்        சுக்ரே சிகின்யலிகதே சுபலக்னஏவம் ||   
கன்யா லக்னத்தில், லக்னத்தில் சூரியனும்-புதனும் இருக்க, மகரத்தில் மாந்தியும், மீனத்தில் சந்திரனும், விருஷபத்தில் சனியும்-ராஹுவும், தனுஸில் குருவும், மிதுனத்தில் செவ்வாயும், துலாத்தில் சுக்கிரனும், விருச்சிகத்தில் கேதுவும் அமைந்த இந்த அற்புதமான ஜாதக அமைப்பில் நமது ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்கள் அவதரித்து அருளினார்கள்.
இப்படிப் பிறந்து விசேஷமாய் பிள்ளை பிறந்த சந்தோசஷத்தை ஸ்ரீரங்கராஜாத்வரி கொண்டாடினார். ஸ்னானம் செய்து கோதானம், பூதானம் ஆகியவைகளை விசேஷமாகச் செய்து, ஜாதகர்மா செய்து, பதினொன்றாம் நாளில் குழந்தைக்கு 'விநாயக சுப்ரமணியன்' என்று திருநாமம் சூட்டி, நாமகரணத்தை வைதிக முறையில் நன்கு செய்தார். அருமையாகப் பெற்ற குழந்தையை அப்ப என்றழைத்தும், அப்பய்ய, அப்பய, அப்ப என்றெல்லாம் அழைத்தும் பரமானந்த நிலையை அடைந்தார். குழந்தை அப்பய்யன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தாய் தந்தையரின் மனம் மகிழ்ச்சியடையும்படி தாலாட்டுதலையும், பாராட்டுதலையும் பெற்று அவர்களுடைய அரும்பெரும் முத்தங்களையும் பெற்று வளர்ந்து வந்தார். இரண்டு வருஷங்கள் சென்றதும், ஸ்ரீரங்க ராஜாத்வரிக்கு இன்னொரு பிள்ளையும் பிறந்தது. அந்தப் பிள்ளைக்குத் தனது தந்தையார் பெயரான ஆசார்ய தீக்ஷிதர் என்ற பெயரை வைத்தார். இவர் ஆச்சா தீக்ஷிதர் அல்லது ஆச்சான் தீக்ஷிதர் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு ஞானாம்பிகை என்று பெயரிட்டார்.

தீக்ஷிதேந்திரரின் வித்யாப்யாஸமும், உபநயனமும்

ஸ்ரீரங்கராஜாத்வரி அவர்கள் தமது மூத்த குமாரரான அப்பய்யருக்குத் தாமே அக்ஷராப்யாஸம் செய்துவைத்து, காவ்யம்-நாடகம்-அலங்காரம்-ஸாஹித்யம் முதலானவற்றைக் கற்பிப்பதற்கு குருராமகவி என்ற கவிச்ரேஷ்டரை நியமித்தார். ஐந்து வயதிலேயே ஸ்ரீஅப்பய்யர் ஸகலவிதமான எழுத்து ஞானமும், ஸகல பாஷா ஞானமும், அழகான முறையில் ஸாஹித்யம் செய்யும் திறமையும் பெற்று விளங்குவதைக் கண்ட தந்தையாரும், குருராமகவியும் பரமானந்த நிலையை அடைந்தார்கள். ஸ்ரீரங்கராஜாத்வரியும் குருராமகவிக்குச் சிறந்த ஸன்மானங்கள் செய்து சிறப்பித்தார். கர்ப்பாஷ்டம வயதில் (அதாவது பிறந்த ஏழாவது வயதில்) அப்பய்யருக்கு நல்லதொரு நாளில் உபநயனம் செய்து வைத்தார். வேதாத்திய யனமும் செய்துவைத்தார். தனது கன்யாரத்னத்தை வாதூல கோத்திரத்தில் பிறந்த சிறந்ததொரு வரனுக்குக் கன்னிகாதானம் செய்தார். இங்ஙனம் தமது சந்ததிகளால் மிக்க பரமானந்த நிலையை ரங்கராஜாத்வரி அடைந்தார்.

ஸ்ரீரங்கராஜாத்வரி சிவபதமடைதல்

ரங்கராஜ தீக்ஷிதர் இங்ஙனம் எல்லா வகையிலும் தன் நிறைவு பெற்றவராக வேலூர் சின்னபொம்மராஜன் என்னுமரசனால் போற்றப்பட்டு வந்தார். அடையப்பலம் கிராமத்தில் சோமயாகம் முதலான பெரிய யாகங்களைச் செய்து முடித்தார். பிறகு ஒரு நாள் தனது புத்திரர்களான இருவரையும் அழைத்து, 'குழந்தைகளே! நீங்கள் வித்யா சம்பத்துடன் அஹங்காரமற்றவர்களாய் என்றும் சந்திரசேகரக் கடவுளைப் பூஜித்து வாருங்கள். அனவரதமும் நீங்கள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்தும், விபூதி ருத்ராக்ஷதாரணம் செய்பவர்களை சிவபிரானாகவே எண்ணி அவர்களை வணங்குங்கள். யக்ஞபதியான பரமேச்வரனை யாகங்களால் ஆராதியுங்கள்" என்று உபதேசம் செய்து சிவசாயுஜ்யம் அடைந்தார். அந்த சமயம் ஸ்ரீஅப்பய்யருக்கு வயது பதினாறே ஆகியிருந்தது. தனது தந்தையின் பிரிவைப் பொறுக்கமாட்டாதவராய்த் துக்கப்பட்டாரேனும், ஒருவாறு தைரியத்தையடைந்து பித்ருகாரியங்களை நன்றாகச் செய்து முடித்தார். தந்தையாரின் கட்டளைப்படி நடந்து கொண்டு அடையப்பலத்தில் வசித்து வந்தார்.

சின்னபொம்ம அரசனின் ஆதரவு

இம்மாதிரி ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் அடையப்பலம் கிராமத்தில் வசித்து வந்த சமயம், கோடி கன்னிகாதானம் என்ற பிருதத்துடன் கூறிய பாஞ்சராத்ர மதத்தைப் பின்பற்றியவரான ஸ்ரீநிவாஸ குருதாதாசாரியார் என்ற வைஷ்ணவர் சின்னபொம்ம ராஜனை அடைந்து தன்னுடைய மதத்தை அவன் மனத்தில் ஊற வைத்துத் தன்னை அனுசரிக்கும்படிச் செய்தார். அங்ஙனமிருந்தாலும், அரசன் சின்ன பொம்மன் ஸ்ரீ ரங்கராஜாத்வரி இல்லாது தனது சபையின் சோபை குறைந்து விட்டதாக எண்ணி அடையப்பலத்தில் இருக்கும் அவரது இரண்டு குமாரர்களையும் தனது நகரத்துக்கு அழைத்து அவர்களுக்கு இடங்கொடுத்து தனது சபை வித்வான்களாகச் செய்தான். காலக்ரமத்தில் தாதாசாரியர் அரசனால் கெளரவிக்கப்பட்டு மந்திரி பதவியையும் அடைந்தார். சிவபக்தர்களை அவமதிப்பதில் பெரிதும் ஆர்வமுடையவராய், சிவாபராதம் செய்கின்றவராய் இருந்தார். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தாதாசாரியர் செய்யும் காரியங்களைச் சகிக்கமாட்டாதவராய் சிவபெருமானின் முழுமுதல் தன்மையைப் பெரிதும் போற்றியும் சிவபக்தர்களைக் கொண்டாடியும் சாஸ்திர வாயிலாகச் சபையில் பிரகடனம் செய்தார். இவ்விஷயத்தை அறிந்த சிவபக்தர்கள் எல்லோரும் பதினாறே வயதான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் பெருமையை உணர்ந்து புகழ்ந்தார்கள். தஞ்சாவூர், ஸ்ரீகாளஹஸ்தி, வேங்கடகிரி, கார்வேட்டி நகர் போன்ற இடங்களில் உள்ள அரசர்களும் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் சிவபக்திப் பெருமையைக் கேட்டுத் தத்தம் நகர்களுக்கு அழைத்து அவரைப் பெருமைப்படுத்தித் தக்க சன்மானங்கள், பிருதுக்கள் போன்றவைகளால் கெளரவித்தனர். இங்ஙனம் நமது தீக்ஷிதேந்திரர் பல இடங்களிலும் சிவபக்தர்களாலும் மஹாராஜாக்களாலும் போற்றப்படுவதையறிந்து பாரதமாதா சந்தோஷித்தாள் என்றால் மிகையாகாது.

ரத்னகேட தீக்ஷிதரும் தீக்ஷிதேந்திரரின் திருமணமும்

இங்ஙனம் இளமையிலேயே பெயரும் பெருமையும் பெற்று விளங்கிய நமது ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களுக்குப் பால்யப்பருவம் போய் யெளவனப்பருவம் வந்து நல்லதொரு கிருஹஸ்ததர்மத்தைப் பின்பற்ற வேண்டிய சமயம் வந்தது. அக்காலத்தில் ரத்னகேட தீக்ஷிதர் என்பவர் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் திவ்ய கிருபாபலத்தினால் அம்ருத மயமான வாக்விபூதியுடன் மஹாவித்வானாக உலகத்தில் பிரகாசித்துக் கொண்டு சூரப்பநாயகன் என்ற அரசனால் கெளரவிக்கப்பட்டு அவனது ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரது இயற்பெயர் ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்று இருந்த போதிலும் ரத்னகேட தீக்ஷிதர் என்ற பெயரையும் சேர்த்து ரத்னகேட ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்றே கூறி வந்தார்கள்.
இவ்வாறு ரத்னகேடதீக்ஷிதர் கீர்த்தியுடன் விளங்கி வரும் சமயம், ஒரு சமயம் அவர் காஞ்சி மாநகரில் தனது கிருகத்தில் இருக்கும் பொழுது அவரை வாதத்தில் ஜயிக்க வேண்டுமென்று ஆசைகொண்டு காசியிலிருந்து பண்டிதர்கள் சிலர் ஒரு கூட்டமாக ரத்னகேட தீக்ஷிதர் வீட்டிற்கு விடியற்காலையில் வந்தார்கள். அச்சமயம் வாசலில் ஜலம் தெளித்துக் கொண்டிருந்த தீக்ஷிதரது தர்மபத்தினியைப் பார்த்து "ரத்னகேட தீக்ஷிதர் உள்ளே இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர்களது கருத்தினைத் தனது கூர்த்த மதியினால் உணர்ந்த அந்த அம்மையார் தாமும் ஸாஹித்யத்தில் வல்லவராதலால் அப்போது கோமய ஜலத்தினால் வாசல் தெளிக்க ஜலம் எடுக்கும் முறையை அனுசரித்து தாளபத்தமாய் 'பஞ்சசாமர விருத்தம்' என்ற விருத்தத்தில் ஜலம் தெளித்துக் கொண்டே அந்த பண்டிதர்களுக்கு சுலோகரூமாய் பதில் கூறினார்.
இந்த சுலோகத்தைக் கேட்ட காசி பண்டிதர்கள் ரத்னகேட தீக்ஷிதரின் மனைவியே இத்தகைய ஸாஹித்ய திறமையுடன் இருக்கும் போது, அவர் எத்தகைய திறமையுடன் இருப்பார். அவரைப்பார்த்தால் நாம் அவமானப்பட்டு விடுவோம் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய்விட்டார்கள். இதனால் ரத்னகேட தீக்ஷிதருக்கு நிகரான பண்டிதரே இப்புவியில் இல்லை என்று சொல்லும் நிலைமை உண்டாயிற்று.
ஒருசமயம் சந்திரசேகர பூபாலன் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் மகத்தான பாண்டித்தியத்தைக் கேட்டறிந்து தனது ஆஸ்தான வித்வானான ரத்னகேட தீக்ஷிதரைப் பார்த்து, "நீங்கள் அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா' என்று கேட்டான். இதைக் கேட்ட ரத்னகேடதீக்ஷிதர் கொஞ்சம் கலவரமடைந்த முகத்துடன் "அரசே! நான் அப்பய்ய தீக்ஷிதரின் பால்யத்தில் அவரது அதிகூர்மையான புத்தியை அறிவேன். இப்பொழுது பதினான்கு ஆண்டுகள் ஆனதால் அவர் ஸகல வித்யைகளிலும் நிபுணராக ஆகியிருக்கலாம். சமயம் கிடைத்தால் அவருடன் வாதம் செய்யவும் ஆடையுடன் அந்த வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றேன்' என்று பதில் கூறினார். மஹாராஜாவும் "நல்லது. அவருடன் வாதம் செய்து வாருங்கள்" என்று கூறி காஞ்சிபுரத்துக்கு அனுப்பினான். ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சீபுரத்தில் இருக்கும்போது நவராத்திரி வந்தது. காமகோடி ஜகன்மாதாவை சிறப்பாகப் பூஜித்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பிரத்யக்ஷமாகி "குழந்தாய், ரத்னகேடா! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று அருளிச்செய்தாள். கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக, தன்முன்னே பரமகருணையுடன் பிரத்யக்ஷமான தெய்வத்தை ரத்னகேட தீக்ஷிதர் பல முறை வணங்கினார். உள்ளம் உருக, நாத்தழதழக்க, உடல் புளகாங்கிதமாக தோத்திரங்கள் பல செய்து, "அன்னையே! அடைந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் தெய்வமே! அப்பய்ய தீக்ஷிதர் என்றொருவர் ஸகல வித்தைகளிலும் சிறந்தவர் என்று கேள்விபடுகிறேன். எல்லா வித்யைகளும் அவரிடமே குடிகொண்டு அவரையே வணங்கி நிற்கின்றன என்றும் கேட்டறிகிறேன் தாயே! எனது கீர்த்தியும் உனதருளால் உலகம் அறியுமாதலால் அவரை நான் ஜயிக்கவேண்டும், எனக்கு நீ ஜயத்தை அளிக்க வேண்டும்" என்று வேண்டினார். இதைக் கேட்ட ஜகன் மாதா சிரித்தாள். சிரித்துக் கொண்டே ரத்னகேட தீக்ஷிதரை நோக்கி அருளிச்செய்தாள். "ரத்னகேடா! நீயும் அப்பய்ய தீக்ஷிதரும் வாதம் செய்வது முறையல்ல. நான் ஒரு வழி கூறுகிறேன். உனது பெண்ணான மங்களாம்பிகையை அந்த அப்பய்ய தீக்ஷிதர் என்ற மகானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்துவிடு. இம்முறையில் உனது மனோரதம் நிறைவேறும். உன்னுடைய பாண்டித்யத்தாலும், வயதாலும், எனது அனுக்கிரஹத்தாலும் அப்பய்ய தீக்ஷிதருக்குக் குருவாகவும், மாமனாராகவும் ஆவாய்" என்றருள் பாலித்து மறைந்தனள்.
இங்ஙனம் ஸ்ரீ ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சியில் இருக்கையில், கருணாமூர்த்தியான ஸ்ரீ ஏகாம்பரநாதர் அப்பய்ய தீக்ஷிதரின் கனவில் தோன்றினார். தோன்றி, "குழந்தாய் அப்பய்யா! ஸ்ரீகாஞ்சீபுரம் வந்து சேர்வாய். அங்கு காமாக்ஷீயுபாஸகரான ரத்னகேட தீக்ஷிதர் என்பவர் தனது பெண்ணை உனக்குக் கன்னிகாதானம் செய்து தருவார்" என்று அருளிச் செய்தார். இம்மாதிரி கனவில் அருள் பெற்ற ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் மிக்க மகிழச்சியுற்றவராய் உடனே புறப்பட்டுக் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார். ஏகாம்பரநாதருடைய சந்நிதியில் தகுதியான ஒரிடத்தில் வசித்தார். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் காஞ்சீபுரம் வந்து சேர்ந்த விவரத்தை அறிந்த ரத்னகேட தீக்ஷிதர் தனது பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் இருக்குமிடம் வந்தார். அவரைக் கண்டதும் அப்பய்ய தீக்ஷிதர் எழுந்து அவரை உபசரித்தார். நல்வரவு கூறி அவர் முன்னிலையில் வந்து நின்றார். அவரைப் பார்த்து மகிழ்ந்த ரத்னகேட தீக்ஷிதர். "ஹே குழந்தாய்! மங்கள மூர்த்தியே! இன்று பொழுது விடிந்தது ஒரு பாக்யம். காமாக்ஷியின் பதியான ஏகாம்பரநாதருடைய அனுக்கிரஹத்திற்குப் பாத்திரமான உனது தர்சனம் எனக்குப் பரம சந்தோஷத்தைக் கொடுத்தது. என்னுடைய மங்கள வசனத்தை உன் செவிகளில் ஏற்றுக் கொள்வாய்.
   வித்வன் முகாதனுபமாம் தவ கீர்த்திமாராத்   ச்ருத்வா ப்ரஸாத பரிதஸ்ஸமுபாகதோ (அ )ஸ்மி |   விக்ஞானதச்ச வயஸா தபஸா (அ )பிவ்ருத்தோஸ்மி   அவ்யாஹதோத்ததவசா: ப்ரதிதப்ரபாவ: ||      யத்ராஸ்தே சாம்பவீ வித்யா தத்யாத்தஸ்மை சிரோ (அ )ம்புபி: |   இதி ஜாநாஸி கிம் தன்மே வாணீமேகாம் ச்ருணுஸ்வயம் ||       கச்சித்விபச்சிதம்ருதாயிதமஸ்மதுக்தம்    நோல்லங்கயேத்குசலவானதுநா (அ )ஸ்மி வித்வான் |   தன்னஸ்ஸுதாம் ஜடிதி மங்கலநாயகீம் த்வம்   உத்வாஹ்ய பூரி லபஸேஸுககீர்த்திசோபாம் ||   
குழந்தாய்! அப்பயா! பண்டிதர்களின் வாயிலாக உனது பாண்டித்தியத்தையும், கீர்த்தியையும் கேட்டு மிக்க மகிழ்ச்சியோடு உன்னைப் பார்க்கவே ஒடிவந்தேன். நான் விக்ஞானத்திலும், தவத்திலும், வயஸ்ஸிலும் கிழவனானதால் உன்னிலும் பெரியவனல்லவா? நான் அறிந்த உண்மையை உன்னிடம் கூறுகின்றேன். எந்த இடத்தில் சிவசம்பந்தமான வித்தையும், சிவபக்தியும் இருக்கின்றதோ அங்கே அவர்களைத் தலையாலே போற்ற வேண்டும் என்று நீயும் அறிவாய். அதனால், என் வார்த்தையைக் கவனமாகக் கேள். எனது வார்த்தை அம்ருதத்திற்குச் சமமானது. இதை யாரும் தட்டவும் கூடாது. எனது குமாரியான மங்களநாயகி என்ற அற்புதமான கன்னியாரத்தினத்தை நீ மணந்து கொண்டு மேலும் கீர்த்தியையும், ஸுகத்தையும் அடைந்து சோபையுடன் பிரகாசிக்க வேண்டுகின்றேன்" என்று கூறினார்.
இதைக்கேட்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர், "ஓ பண்டித ரத்தினமே! தாங்கள் யோஜிக்காமல் சொன்ன ஒரு சொல்லுக்காக ஒரு இரவில் காஞ்சி ஜகன்மாதாவின் திருவருளால் உலகம் பூராவும் அமாவாஸை பெளர்ணமி ஆனதை நானறிவேன். எனவே தங்களுடைய மஹிமையையும் அறிந்து, பரமேச்வரனுடைய ஆக்ஞையையும் உணர்ந்து தங்கள் புதல்வியை மணக்க சம்மதத்துடன் வந்துள்ளேன்.
   ஸம்பந்த: கலு ஸாதூநாமுபயோரேவ ஸம்மத: |   சந்த்ரசூடநிதேசேன ஸஜ்ஜா மே பந்துதா (அ )துநா ||   
"நமது சம்பந்தமானது சந்திரசூடனான பரமேச்வரனுடைய ஆக்ஞையின் பேரில் ஏற்படுவதால் இருவருக்கும் சம்மதமே ஆகும். நான் ஸன்னத்தமாக இருக்கின்றேன். நல்லதொரு முஹூர்த்தத்தில் தங்களது புதல்வியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள்" என்று கூறினார்.
ரத்னகேட தீக்ஷிதர் பெருமகிழ்ச்சி அடைந்தார். திருமணச் செய்தியை பந்துக்கள் அனைவருக்கும் அனுப்பி அனைவரையும் வரவழைத்தார். கல்யாணமண்டபத்தை நிர்மாணம் செய்து வாழைமரங்கள் கட்டி, தோரணங்களால் அலங்கரித்தார். நல்லதொரு முஹூர்த்தத்தில் கன்னிகையும் கனக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸர்வாலங்கார பூஷிதையாகவும் ஸர்வ மங்கள சோபிதையாயும் திகழும் மங்களநாயகியை மணவறையில் வைத்து, ஸாக்ஷாத் பரமேச்வரனாகவே வரனை பாவித்து, வரவேற்று, வரபூஜை செய்து மங்களநாயகியை ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதருக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். ஸ்ரீமத் தீக்ஷிதரும், மங்களநாயகியை பாணிக்கிரஹணம் செய்து கொண்டு, மாங்கல்யதாரணம் செய்து, அக்னி ப்ரதக்ஷிணாதிகள் செய்து, விதிப்படி அழகாக விவாஹத்தை நடத்தினார். பின்னர் சிறந்த உணவளித்து பிராமணர்களுக்கு அபரிதமான ஸ்வர்ண தக்ஷிணையும் தீக்ஷிதேந்திரர் பெரு மகிழ்ச்சியுடன் வழங்கினார். இந்த சமயம் ஒரு மஹாகவி ஒரு ச்லோகம் கூறினார்.
   அப்பய்யயஜ்வன்யவநீஸுராணாம் அன்னம் ஸுவர்ணம்                                      ஸரஸம் ததானே |   அபர்ணமாஸீத்கதலீதரூணாம் ந கேவலம் ப்ருந்தமபி த்விஜானம் ||   
ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரரின் திருமணத்தில் பிராமணோத்தமர்கட்கு அன்னமும் தங்கமும் கொடுக்கும் பொழுது இப்புவியிலுள்ள வாழைமரங்கள் எல்லாம் இலை இல்லாமல் ஆயின. (அதை வடமொழியில் அபர்ணம் என்ற பதத்தால் கூறி), வாழை மரங்கள் மட்டுமா இலை இல்லாமல் போயின? ஏழை பிராமணர்களுடைய ஸமுதாயத்திற்கும் அபர்ணமாயிற்று. இங்கு அபர்ணம் என்ற பதத்திற்குக் "கடன் ஒழிந்தது" என்ற பொருள்பட கவி கூறினார். இத்தகைய பெருமையுடன் திருமணம் நடந்தேறியது.
ரத்னகேட தீக்ஷிதரும் காமாக்ஷியின் க்ருபையால் மனம் சந்தோஷம் அடைந்தார். அப்பய்ய தீக்ஷிதரிடம் வாதம் செய்வதற்காகத் தன்னை வாதத்திற்கு அனுப்பின சந்திரசேகர பூபாலனிடம் நடந்த விருத்தாந்தத்தைக் கூறி அவர் மனமும் சந்தோஷமடையத் செய்தார்.

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் பெருமை

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரும் திருமணமானதும், தன் மனைவியுடன் பிரம்மவாஸ்து என்ற இடத்தில் வசித்து ச்ரெளத, ஸ்மார்த்த கர்மாக்களை அனுஷ்டானம் செய்து கொண்டு பல தேசங்களிலிருந்து வரும் சிஷ்யர்களுக்குப் பாடங்களைப் போதித்துக்கொண்டும், சிவபெருமானைக் கொண்டாடும் சிவபாரம்யமான கிரந்தங்களைச் செய்து கொண்டும், அளவுகடந்த சிவபக்தி செய்து கொண்டும், சிவார்ச்சனை செய்து கொண்டும் திக்கெட்டிலும் அவரது கீர்த்தி பரவும்படி தகழ்ந்தார். பிறகு காஞ்சீபுரம் சென்று அங்கே சிலகாலம் வசிக்கும்போது பல தேசங்களிலிருந்தும் சாஸ்த்ராப்யாசம் செய்ய சிஷ்யர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாஸ்த்ர ப்ரவசனங்கள் செய்து கொண்டும் பரமசிவ பாரம்யத்தை உலகத்தில் நிலைநாட்ட வேண்டி சிவார்ச்சனம் செய்ய வேண்டிய வழிகளையும் கிருஹஸ்தர்களுக்கு உபதேசித்து சிவபக்தியை உலகத்தில் பரப்பியும் சிறந்து விளங்கினார்.
தீக்ஷிதேந்திரருக்கு வயது இருபது ஆயிற்று. இவருடைய கீர்த்தி நன்கு பரவி உலகம் இவரை நன்றாக அறிந்து பாராட்டியது. ஒரு சமயம் இவர் அடையப்பலம் கிராமத்தில் தங்கியிருந்தபொழுது காசியிலிருந்து க்ஷேத்திர யாத்திரையாக வந்த மஹாபண்டிதர்கள் சிலர் அங்கு வந்தார்கள். தீக்ஷிதருடைய பெருமையைக் கேட்டு அவரைச் சென்று பார்த்தார்கள். பார்த்து "தீக்ஷிதர் அவர்களே! உமக்கு எந்த சாஸ்திரத்தில் பரிச்சயம்?" என்று கேட்டார்கள்.
   நாஹமதீதி வேதே ந ச படிதீ யத்ர குத்ரசிச்சாஸ்த்ரே |   கிந்து தரேந்துவதம்ஸினி புரஹம்ஸினி பும்ஸி பூயஸீ பக்தி: ||   
நான் வேதம் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை. ஓரிடத்திலும் சாஸ்திரம் படிக்கவில்லை. அர்த்தசந்திரனைத் தலையில் வைத்திருக்கும் திரிபுரஸம்ஹார மூர்த்தியான பரமசிவனிடத்தில் பக்தியானது எனக்கு நிரம்ப உள்ளது என்ற கருத்து உடைய இந்த ஸ்லோகத்தில் வ்யாகரணமானது மிகவும் சாமர்த்தியமாய்ப் பிரயோகம் பண்ணப்பட்டிருந்ததால் அந்த பண்டிதர்கள் மிக்க சந்தோஷமடைந்தார்கள். பிறகு அவர்கள் இராமேசுவர யாத்திரையை முடித்துக் கொண்டு காசிக்குச் சென்று தாங்கள் செல்லுமிடமெல்லாம் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரின் பெருமையைப் பிரகடனப்படுத்தினார்கள். இவ்வாறு தீக்ஷிதேந்திரர் அவர்களின் பெருமை உலகெங்கும் பரவத் தொடங்கியது.


ஜ்யோதிஷ்டோம, வாஜபேயாதி யாகங்கள் செய்தல்

இவ்விதம் சிலகாலம் சென்ற பிறகு ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அடையப்பலத்தில் தங்கியிருந்து ஸோமயாகம் செய்தார். ஸகல மனிதர்களும் மனம் பரமானந்த நிலையை அடைந்தவர்களாய் தரிசனம் செய்து கடைத்தேறினார்கள். தீக்ஷிதேந்திரரும் வஸிஷ்ட மஹரிஷியைப் போன்று யாகத்தைச் செய்து தக்ஷணையைக் கொடுத்து, கொடையாளியாகப் பிரகாசித்தார். இவ்வளவு அழகாகப் பூர்த்தி அடைந்த யாகத்தை வேலூர் சின்னபொம்ம ராஜனுடைய ஆஸ்தான வித்வானாக இருந்த தாதாசாரியார் என்பவர் மாத்திரம் நிந்தித்தார். இதை அறிந்து அப்பய்யதீக்ஷிதர் கவலை இல்லாதவராய்ப் பரமேச்வரனை ஆராதித்து வந்தார்.
பிறகு ஒரு சமயம் காஞ்சீபுரம் அடைந்து வாஜபேயம் என்ற மஹாயாகத்தைச் செய்து வரும்பொழுது அந்த யாகத்தில் பதினேழு ஆடுகள் ஈச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டிய நிலையில் அவை உயிரற்ற நிலையில் இருந்ததைக் கண்டு மிகவும் துக்கமடைந்து வேதங்களிலே ஆடுகள் உயிரிழக்கவில்லை என்று கூறுவதை நம்பி அவைகள் நல்லகதி அடைகின்றன என்பதை எண்ணி பிரார்த்திக்கலானார்.
   யாப்ரஹ்மணோ நிச்வஸிதம் யதுக்தி: ஸத்யாநிசம் யஜ்ஜபதோ                                                 விமுக்தி: |   ஸைவ ப்ரமாணம் நநு மாத்ருசாநாம் ச்ருதே நமஸ்தே பவதீ கதிர்ந: ||      விஹிதம் விபரீதமேகத: ஸ்யாத் ததபி ஸ்யாத்குஹசிச்ச ஸாதுகர்ம |   கஹநாம் கதிமஸ்ய கர்மணோ (அ )பி ச் ருதிபாவம் ச ந வித்மஹே                                                 மஹேச ||   
வேதமானது பரப்ரம்மத்தின் மூச்சுக்காற்றாகத் தோன்றியது என்றும், அதை ஜபிப்பதால் முக்தியே கிடைக்கும் என்றும், அதுவே பிரமாணமாகச் சொல்லுவதால் என் போன்றவர்களுக்கு வேதம் தான் கதி. "ஏ பரமேச்வரா! மஹேசா! வேதத்தாலே கூறப்பட்ட கர்மாவானது நல்லது. அதன் உண்மையை அறிவது மிகவும் கடினமானது, அதன் உண்மையை அறிந்து அக்கர்மாவைச் செய்பவர்கள் நற்கதி அடைகின்றார்கள் என்பதை நம்பி நான் இந்த புண்ணிய கர்மாவைச் செய்தேன். சம்போ! நீதான் என்னை ரக்ஷிக்க வேண்டும். இந்த ஆடுகளை நான் ஹிம்ஸை செய்தாலும், ஹிம்ஸை செய்யவில்லை என்று வேதம் கூறுவதை நம்பி இப்புண்ணிய கர்மாவைச் செய்வதால் இவை சாகவில்லை என்பதை இவ்வுலகம் அறியட்டும்" என்று வேண்டினார். அந்த சமயம் இந்த யாகத்தை தூஷிக்க வந்த ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த யாகத்தின் அத்தனை ஆடுகளின் ஜீவன்களும் அற்புதமான தேவசரீரம் எடுத்து திவ்ய விமானமேறி பீதாம்பரதாரிகளாய் ஆகாயத்தில் எல்லா தேவர்க்ளும் பார்க்க தீக்ஷிதேந்திரரை வாயார வாழ்த்திக்கொண்டே பரலோகமடைந்தன. திவ்ய சரீரத்துடன் மறைந்த ஆடுகளைப் பார்த்த ஜனங்கள் அப்பய்ய தீக்ஷிதரை நிந்தித்தது கொடும்பாவம் என்பதை உணர்ந்து அவரை வணங்கினார்கள்.
அப்பய்ய தீக்ஷிதர் வாஜபேய யாகத்தை சாஸ்திரம் கூறியபடி செய்து ஸ்வர்க்காரோஹணம் என்ற கர்மா உள்பட செய்து அவப்ருத ஸ்னானம் செய்தார். அவப்ருத ஸ்னானம் செய்தபிறகு வாஜபேய யாகம் செய்தவரை கெளரவிக்கும் முறையில் நாடாளும் மன்னர் ஒருவர் வெண்குடை பிடிப்பது சம்பிரதாயமாக இருந்த்து. தாதாசாரியாரால் கலைக்கப்பட்ட வேலூர் சின்னபொம்மராஜனைத் தவிர மற்ற அரசர்கள் பலர் யாகத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் ஸ்ரீதீக்ஷிதேந்திரரின் அனுமதியின் பேரில் தஞ்சாவூர் மன்னன் நரசிம்மபூபாலவர்மன் என்றவன் தீக்ஷிதர் அவப்ருத ஸ்னானம் செய்த பின்னர் வெண்குடை பிடித்து கெளரவித்தான்.
பல கவிகள் அப்பய்ய தீக்ஷிதரை ஸ்துதிகளால் கொண்டாடினார்கள். உலகமெல்லாம் போற்றும் முறையில் நமது தீக்ஷிதேந்திரர் மிகப் பெரியதான இந்த வாஜபேய யாகத்தை முடித்துவிட்டு தமது சொந்த ஊரான அடையப்பலத்திற்கு வந்து சேர்ந்தார்.


சின்னபொம்மராஜன் ஆதரவில் வேலூர்நகர வாஸம்

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் இவ்வளவு அழகாக வாஜபேய யாகத்தை நடத்தி அடையப்பலம் திரும்பிய செய்தியையும், யாகத்தின் சிறப்பையும் பல வித்வான்கள் மூலமாக அறிந்த சின்னபொம்மராஜா, தாதாசாரியனின் துர்போதனையினால் தான் அந்த யாகத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்தினான். ஆகையால் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பி, அவருக்குத் தங்கப் பல்லக்கு அனுப்பி தனது சபைக்கு எழுந்தருளுமாறு வேண்டினான். தனது ஸபை தீக்ஷிதரின் தந்தையான ரங்கராஜ தீக்ஷிதராலும், பாட்டனாரான ஆசாரிய தீக்ஷிதராலும் அலங்கரிக்கப்பட்டிருந்த்து. எனவே தற்பொழுது அப்பய்ய தீக்ஷிதராலும் அலங்கரிக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். இம்மாதிரி இரண்டு மூன்று தடவை அரசன் அழைத்த பிறகு பல்லக்கில் ஏறி வேலூர் நோக்கி வந்தார். அங்ஙனம் வரும் போது சின்னபொம்ம ராஜா தீக்ஷிதேந்திரரை ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் அருகில் வந்து உபசரித்து, வரவேற்று, தன் சபைக்கு அழைத்து வந்தான். அந்த நாள் முதல் அரசனின் வேண்டுகோளை ஏற்று, அவனது ஆஸ்தான வித்துவானாக வேலூர் நகரில் வசித்து வந்தார். அங்கு ஆஸ்தான வித்வானாக இருந்து கொண்டே அக்னிஹோத்ராதி கர்மானுஷ்டானங்களை முறைப்படி செய்து கொண்டும் சிவபூஜை செய்து கொண்டும் அரசனுக்கு சிவபக்தியை உபதேசித்துக் கொண்டும் ஸபையை அலங்கரித்துக் கொண்டு வந்தார். வேலூர் நகர மக்கள் தீக்ஷிதேந்திரரின் உபதேசத்தினாலும், சின்னபொம்மனின் நீதியோடு கூடின ஆட்சியினாலும் சமய நெறியில் ஈடுபட்டு சிவபக்தியில் திளைத்து வந்தார்கள்.
சின்னபொம்மனுடைய சபையில்தான், ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் தமது வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கழித்தார். இங்கிருக்கையில் தான், பல பிரசித்தி பெற்ற நூல்களை இயற்றினார். இங்குதான் சிவார்க்கமணிதீபிகை என்ற மிகச் சிறந்த நூலுக்காக கனகாபிஷேகமும் செய்யப்பட்டார். இவற்றை விவரமாய் பின்னால் கூறுவோம்.


தாதாசாரியார் செய்த கொடுமைகள்

1) ஆபிசாரப் பிரயோகம்:-

இங்ஙனம் தீக்ஷிதேந்திரரின் கீர்த்தி மேலும் மேலும் பெருகுவதை தாதாசாரியாரால் பொறுக்க முடியவில்லை. அப்பய்ய தீக்ஷிதருக்கும், அவர் பொருட்டு மன்னனுக்கும் இடையூறுகள் செய்ய முற்பட்டார். ஒரு ஆபிசாரக் கிரியையின் மூலம் அரசனின் அந்த்ப்புரத்து ஸ்த்ரீகள் அனைவருக்கும் மற்றும் நகர மக்களுக்கும் ஒரு நோயை உண்டு பண்ணினார். இது ஜூர்த்திரோஹம் என்று சொல்லப்படும் ஒரு வகையான விஷஜுரம் என்று கூறப்படுகிறது. இதை அறிந்த அரசன் மிக்க மனம் வருந்தினான். மணி, மந்திரம், ஒளஷதம் என்ற மூவகை சிகிச்சை முறைகளாலும் முயற்சித்தும் இந்த ஜுரம் நீங்கவில்லை. அரசனின் மனக்கலக்கம் அதிகமாகியது. சிறந்த புத்திமானாகையால் இது தாதாசாரியாரின் துஷ்கிருத்தியமாகவே இருக்கும் என யூகத்தால் அறிந்தான். அறிந்து கொண்டு தீக்ஷிதேந்திரரைச் சரணடைந்து இந்த விஷஜுரத்தினின்றும் அந்தப்புரத்து ஸ்த்ரீகளையும் நகர மக்களையும் காத்தருளுமாறு வேண்டினான். சிறந்த சிவபக்த சிகாமணியான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் கருணையே உருவானவர் அன்றோ? அரசனின் நிலைக்கு மிகவும் இரங்கிய வராய், "நமோவ : கிரிகேப்ய:" என்ற வேதமந்திரத்தால் அபரிமிதமான ஒரு ஹோமத்தைச் செய்து சிவபிரானருளால் அந்த நோயினைப் போக்கினார். இது தாதாசாரியாரின் செயலே என்றறிந்த தீக்ஷிதர் மன்னனைப் சமாதானப் படுத்தினார். இந்த நிகழ்ச்சியினால் அரசனுக்குச் சிவபக்தி மேலும் அதிகரித்தது. தீக்ஷிதர் மீதும் பக்தி அதிகமாகியது.

2) க்ஷுத்ரதேவதையால் தீக்ஷிதரின் பூஜையறையை அசுத்தம் செய்தல்:-

தான் செய்த செயல் தீக்ஷிதரின் கீர்த்திக்கே காரணமானதால் மிகுந்த கோபமடைந்த தாதாசாரியார் மேலும் இன்னல்களைச் செய்யலுற்றார். ஒரு நாள் இரவு க்ஷுத்ரதேவதை உபாஸகன் ஒருவனுடைய உதவியால் தீக்ஷிதேந்திரர் இல்லத்தின் பூஜையறை அருகில் ரத்தம், மாமிசம் இவைகளைப் போட்டு அசுத்தம் செய்தார். மறுநாள் விடியற்காலையில் தீக்ஷிதேந்திரர் ஸ்நானம் செய்ய புறப்பட்ட பொழுது பூஜையறையின் அருகில் துர்கந்தம் வீசுவதையறிந்தார். ஒரு தீபத்தின் உதவியால் அங்கிருந்த மாம்ஸாதிகளைக் கண்டார். கண்டு மனம் வருந்தினார். வருந்தி சிவபெருமானை நோக்கி 'அத்யவோசததி வக்தா' என்ற தொடங்கும் ஸ்ரீருத்ர மந்திரத்தின் பகுதியை ஜபித்தார். ஜபித்தவுடன் ஒரு சிவபூதம் அங்கே தோன்றி அந்த அசுத்தம் அனைத்தையும் போக்கி சுத்தம் செய்தது. தாதாசாரியரின் ஏவலினால் தீக்ஷிதருக்கு இந்தத் தீங்கினைச் செய்த அந்த க்ஷுத்ரதேவதா உபாஸகனும் நோயினால் பீடிக்கப் பட்டான். இவையறிந்த நகர மக்களும், அரசனும் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரைப் போற்றினார்கள்.

3) விஷதீர்த்தபானம்:-

தாதாசாரியார் மனம் குமுறியது. தீக்ஷிதேந்திரரை எப்படியும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற துரெண்ணம் கொண்டார். விஷ்ணு கோவில் அர்ச்சகருக்கு நூறு பொன் நாணயங்கள் 'லஞ்சம்' கொடுத்து தீக்ஷிதேந்திரர் விஷ்ணு தரிசனத்திற்கு வரும் போது தீர்த்தப் பிரஸாதம் அளிக்கையில் அதில் விஷத்தைக் கலந்து கொடுக்கும்படி ரகசியமாக ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி மஹாவ்யதீபாத தினத்தில் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் தமது பரிவாரத்துடன் சிவாலய தரிசனம் செய்து விபூதிப் பிரஸாதம் பெற்றுக் கொண்டு, விஷ்ணு ஆலய தரிசனத்திறுகும் வந்தார். பக்தர்கள் பலர் திரளாகக் கூடினர். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரருக்குத் தீர்த்தப் பிரஸாதம் கொடுக்கும்போது தாதாசரியாரின் ஏற்பாட்டின்படி அர்ச்சகர் விஷம்கலந்த தீர்த்தத்தை தீக்ஷிதருக்குப் பிரஸாதமாகக் கொடுத்தார். குற்றமுள்ள நெஞ்சு உடையராகையால் விஷதீர்த்தம் கொடுக்கும் போது அர்ச்சகரின் கரங்கள் நடுங்கின. தீக்ஷிதேந்திரர் இதனைக் கவனித்தார். நடந்ததை உணர்ந்து கொண்டார். ஆயினும், அந்த விஷதீர்த்தத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். காலகூட விஷத்தினை உண்டருளிய பரமேச்வரனைத் தியானித்துக் கொண்டு அந்த விஷதீர்த்தத்தினை எவ்வித சலனமுமின்றி உட்கொண்டார்.
இம்மாதிரிகூறி தீக்ஷிதேந்திரர் அந்த விஷங்கலந்த தீர்த்தத்தை உட்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தார். தாதாசாரியாரின் சிஷ்யர்கள் தீக்ஷிதர் மடிந்து விடுவார் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார்கள். ஆயினும் தீக்ஷிதேந்திரரின் சீடர்கள் அவர் மரிக்கமாட்டார் என்றே நம்பினார்கள். தீக்ஷிதேந்திரர் வீடு திரும்பியதும் இந்த விஷயத்தைக் கேட்ட மன்னவன் பல வைத்தியர்களை அழைத்து வந்தான். தீக்ஷிதேந்திரர் எத்தகைய துன்பமும் இல்லாது அவர் நலமாக இருப்பதைக் கண்டு வணங்கி தனது மாளிகையைச் சென்றடைந்தான். இந்த சம்பவத்தினால் மன்னவனுக்கு தீக்ஷிதரிடம் பக்தியும் தாதாசாரியரிடம் வெறுப்பும் அதிகமாகியது.

4) சிவநிர்மால்ய விசாரம்:

விஷ தீர்த்தத்தினாலும் தீக்ஷிதரை ஒன்றும் செய்ய முடியவொல்லையே என்று கலங்கிய தாதாசாரியர் சின்னபொம்ம ராஜனிடத்தில் சிவநிர்மால்யம் சாப்பிடக் கூடாது என்றும், சிவநிர்மால்யம் சாப்பிடுபவர்கள் அசுத்தர்கள் என்றூம் அரசனின் மனதைக் கலைத்தார். அரசன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரை அழைத்து சிவநிர்மால்யம் சாப்பிடக் கூடாது என்று சாஸ்திரம் இருக்கிறதா? என்று கேட்டான். அதற்கு ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்,
   சிவஸ்ய நிர்மால்யமசாம்பவானாமபோஜ்யமர்ஹம் விமலாந்தராணாம் |   ஸத்ப்ராஹ்மணோச்சிஷ்டமபோஜ்யமங்க்ரிஜாதைர்ஹி போதாயன தர்மஸூத்ரம் ||      ஸர்வெளஷதீனாம் பதிரஸ்ய புஷ்பம் கங்காதிதீர்த்தம் து கபர்த்த ஜாதம் |   கிம் வஸ்து நிர்மால்யவிஹீனமாஸ்தே விசார்யமாணே சிவ ஏவ ஸர்வம் ||   
சிவபெருமானுடைய நிர்மால்யம் சிவபக்தர்களைத் தவிர வேறு யாரும் சாப்பிடக் கூடாது. பரிசுத்தமான மனம் படைத்த சாதுக்களான சிவபக்தர்களால் தான் சாப்பிடத் தகுதி உடையது. ஸத்ப்ராம்மணர்கள் சாப்பிட்ட மிச்சமானது பலரும் சாப்பிடக் கூடாது என்று போதாயன தர்மஸூத்திரத்தில் கூறியிருக்கிறபடியால் சிவநிர்மால்யத்தைப் பரிசுத்தமான சிவபக்தர்கள் சாப்பிடுவதில் எவ்விதக் குற்றமும் இல்லை. கங்காஜலமே சிவநிர்மால்யம் தான். எல்லா ஒளஷதிகளும் சிவபெருமானைச் சார்ந்ததே. வ்ருக்ஷாணாம் பதயே என்று வேதம் சொல்லியிருப்பதால் எல்லாமே சிவத்தைச் சார்ந்தது தான். எனவே எல்லோரும் சிவபக்தி செய்து எல்லோதும் சிவநிர்மால்யத்தை சாப்பிடலாம் எனக் கூறியருளினார். இதைக்கேட்ட அரசன் தனது ஸந்தேஹகத்தைப் போக்கிக் கொண்டான்.

5) விஷபானம்:

மேலும் மேலும் தோல்வியே அடைந்த தாதாசாரியார் தீக்ஷிதருக்குத் துன்பம் விளைவிக்கத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார். ஒரு சமயம் அறிஞர்கள் நிறைந்த சபையிலே நீலகண்டன் என்ற சொல்லின் பொருள் பற்றிய விசாரம் ஏற்பட்டது. காலகூட விஷத்திற்குப் பயந்த தேவர்கள் ஸதாசிவனான பரமசிவனைச் சரணடைந்த அவரது பெருமையை பாகவத ச்லோகத்தின் மூலம் தீக்ஷிதர் நிரூபித்தார். மற்றும் மும்மூர்த்திகளுக்கும் மேலாய் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட சிவம் என்ற பெயருடைய பரப்ரம்ம ஸ்வரூபமான கைலாசவாசியான ஸ்ரீகண்டருத்ரனின் பெருமையை ப்ரஜாபதி செய்த ஸ்தோத்திரத்தில் காலகூட ஸம்ஹரணம் பிரம்மாதி தேவர்களுக்கு அசாத்தியமானது. தங்களையே சரணாக நாங்கள் வந்துள்ளோம் என்று கூறியிருப்பதையும் ஞாபகப்படுத்தினார். அப்பொழுது தாதாசாரியார் பரிஹாஸமாக ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரைப் பார்த்து ஓ! நீலகண்ட உபாஸகரான அப்பய்ய தீக்ஷிதரே! காலகூட பக்ஷணத்தினால் சிவன் ஸகல தேவதைகளுக்கும் தலைவன் என்பதை நிரூபிக்கும் வகையில் நீங்களும் விஷபானம் பண்ணமுடியுமா? எனக் கேட்டார். முன்னர் ரகசியமாக தீர்த்தப் பிரஸாதத்தில் கலந்த விஷம் செயல்படவில்லை என்று அறிந்திருந்தும், பயங்கரமான விஷத்தை அரச சபையில் காட்டி இதைச் சாப்பிடமுடியுமா என்று பரிஹஸித்தார். அந்தப் பரிஹாஸ வார்த்தையினையும் மதித்து ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் இதில் என்ன சந்தேஹம்? என்று உடனே பதிலளித்து அந்த க்ஷணமே சிறிதும் தயக்கமின்றி 'நமோ நீலக்ரீவாயச சிதிகண்டாய ச' என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே அந்த விஷத்தை, அரசன் எவ்வளவோ தடுத்தும், ஒரு சிறு பாலகன் கற்கண்டுக் கட்டியை விழங்குவது போல அநாயாஸமாக உட்கொண்டு எவ்விதமான குறையுமில்லாமல் பரம ஆரோக்யத்துடன் இருந்தார்.
   குலிசம் குஸுமதி தஹனஸ்துஹிநதி வாராம் நிதி: ஸ்தலதி |   சத்ருர்மித்ரதி விஷமப்யமருததி சிவ சிவேதி ப்ரலபதோ பக்த்யா ||   
சிவ சிவ என்று பக்தியுடன் கதறும் பொழுது இந்திரனின் வஜ்ராயுதமும் மலராகிறது, நெருப்பு பனிக்கட்டியாகின்றது, கடலும் நிலமாகின்றது, பகைவனும் நண்பனாகின்றான், கொடிய விஷமும் அம்ருதமாகின்றது என்ற கருத்துடைய இந்த ச்லோகம் இங்கே கவனத்திற்குரியது.
சைவசமயாசாரியரில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு சமணர்கள் நஞ்சினை பாலில் கலந்து கொடுத்தனர். திருநாவுக்கரசர் இந்த நஞ்சினை உண்ட வரலாற்றை சேக்கிழார் என்ற தெய்வப்புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்கள் இங்கு ஒப்புநோக்குதற்குரியது.
   "நஞ்சுமமுதாம் எங்கள் நாதரடி யார்க்" கென்று   வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே   செஞ்சடையார் சீர்விளக்குந் திறலுடையார் தீவிடத்தால்   வெஞ்சமணர் இடுவித்த பாலடிசில் மிசைந்திருந்தார்.   
எங்கள் நாதனான பரமேச்வரனின் அடியார்க்கு விஷமும் அம்ருதமாகும் என்ற உறுதியுடன் வஞ்சனை மிகுந்த சமணர்களின் தீச்செயலை நன்கறிந்தே அவர்களிட்ட இந்த விஷங்கலந்த பாற்சோற்றை உண்டு ஊனமின்றி இருந்தார் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
    பொடியார்க்குந் திருமேனிப் புனிதற்குப் புவனங்கள்   முடிவாக்குந் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால்   படியார்க்கு மறிவரிய பசுபதியார் தம்முடைய   அடியார்க்கு நஞ்சமுத மாவதுதான் அற்புதமோ?   
திருநீறு விளங்கும் திருமேனியினையுடைய புனிதராகிய இறைவருக்கு, உலகங்களையெல்லாம் அழிக்கவல்ல துன்பம் நீங்கும்படி முன்னைவிஷமானது அமுதமாகுமாகில், யாவர்க்கும் அறிவரிய தன்மையராகிய பசுபதியாருடைய அடியார்க்கு நஞ்சு அமுதமாவதும் ஒரு அற்புதமோ?
மேற்கூறியவைகளால் தீக்ஷிதேந்திரர் சிவனருளால் விஷபானம் செய்தது வியப்பன்று என்று புலனாகின்றது.

6) தனது வலது கையில் தீக்ஷிதர் அக்னியைக் காண்பித்தல்:

சின்னபொம்மராஜன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரிடம் அதிக பக்தியுடன் இருந்தது தாதாசாரியருக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. எப்படியும் அரசனுக்கு அவர் மீது உள்ள மதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்ட தாதாசாரியார் தீக்ஷிதர் மீது ஒரு குற்றம் சாட்டினார். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அரசனை ஆசீர்வதிக்கும் போது எப்பொழுதும் இடது கையில் ஆசிர்வதிப்பார். இதையே அரசனிடம் குற்றமாகக் கூறி அப்பய்ய தீக்ஷிதர் உங்களை இடது கையினால் ஆசீர்வதிப்பது அவரது செருக்கினைக் காட்டுகிறது என்று கூறி அவனது மனதைக் கலைக்க முயன்றார். அரசனும் இதை தீக்ஷிதரிடமே கேட்டு விட்டான். மறுநாள் சபையில் இதைப் பற்றிய விசாரம் வரும் போது மற்றைய பண்டிதர்கள் அனைவரும் மெளனமாக இருந்தார்கள். தீக்ஷிதேந்திரர் உடனே எழுந்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வண்ணம் உண்மையான ஒரு பிராமணனின் வலதுகையில் அக்னி இருப்பதால் அந்த பிராமணன் தனது இடதுகையினால் தான் ஆசீர்வதிக்க வேண்டும். எந்த வஸ்துவை நோக்கி அந்த பிராமணனின் கை தூக்கப்படுகிறதோ அது அவனது கையின் அக்னியால் எரிந்து விடும் என்று கூறினார். இந்த விளக்கத்தை ஏற்க மற்றையோர் தயக்கம் காட்டினர். அத்தகைய அக்னி தீக்ஷிதரின் வலது கரத்தில் இருக்கிறதா என்று அறிய விரும்பினர். ஸ்ரீதீக்ஷிதர் உடனே அரசனைப் போன்று ஒரு படம் ஒன்றை ஒரு வஸ்திரத்தில் எழுதி வரச் சொன்னார். அங்ஙனமே ஒரு வஸ்திரத்தில் அரசனின் படம் எழுதி சபைக்குக் கொண்டு வரப்பட்டது. தீக்ஷிதர் அந்த உருவத்தினை நோக்கித தனது வலது கரத்தினைக் காட்டினார். உடனே அந்த வஸ்திரம் எரிந்து சாம்பலாயிற்று. நெருப்பின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. உடனே அரசன் தீக்ஷிதரை வணங்கி அக்னியை அடக்கிக் கொள்ளும்படிச் செய்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அரசனுக்கு தீக்ஷிதரிடம் பக்தி மிகவும் அதிகமாகியது.
இங்ஙனம் தீக்ஷிதருக்குத் தாம் இழைக்கும் ஒவ்வொரு இன்னலும் அவருக்குப் பெருமையையே உண்டாக்குவதை அறிந்த தாதாசாரியார் மனம் புழுங்கினார். பாவம், தாதாசாரியர்! இவரது லீலைகளைப் பின்னரும் கூறுவோம்.
...

[Message clipped]  

No comments:

Post a Comment