ஆறுதல் கிடைக்க என்ன செய்யவேண்டும்?
நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை "ஆசுகவி" என்பார்கள். தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம். இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை. அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?
"ஆறுதல் என்பது ஐந்து முறை வரும்படி பாடல் பாட முடியுமா, உம்மால்?" காளமேகத்திடம் சவால் விட்டார் ஒருவர். புன்னகைத்த காளமேகம் உதட்டிலிருந்து அடுத்த நொடி வந்து விழுந்தன நான்கு வரிகள்!
"சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கு மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை; பித்தா! நின்பாதம்
பிடித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!"
பாடிவிட்டு வெற்றிக் களிப்போடு நகைத்தார் காளமேகம். "பாடல் சரி, ஆனால் பொருள் குழப்புகிறதே? சண்முகனுக்கு ஆறுதலை சரி.மற்றவர்களுக்கு இப்பாடல் பொருந்தாதே?" சவால் விட்டவரே தோல்வியை ஒப்புக்கொண்டு தலையைச் சொறிய, காளமேகம் கம்பீரத்தோடு சொன்னார்:
"சங்கரருக்கு ஆறு தலை - அதாவது தலையில் கங்கை ஆறு. முருகனுக்கும் ஆறுதலை. ஐங்கரனுக்கு- அது ஆறுதலை இல்லை, மாறுதலை! யானை முகமாக மாறிய தலை. சங்கைப் பிடித்த திருமாலுக்கும் மாறுதலை. நரசிம்மாவதாரத்தில் சிங்கமாக மாறிய தலை. பித்தனாகிய ஈசன் கால்களைப் பிடித்தோருக்கு இறுதியில் கிடைப்பது ஆறுதல்! அவ்வளவு தான்! "
தமிழை வைத்து என்ன அழகாக வார்த்தை விளையாட்டு விளையாடியிருக்கிறார், பார்த்தீர்களா?
No comments:
Post a Comment