Tuesday, June 16, 2015

Panca Rama Kshetrams

courtesy:Sri.Poova Ragahavan Iyengar

பஞ்ச ராமர் க்ஷேத்திரங்கள்:
உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு. இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு. இதில் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை. அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்திவாய்ந்த ஆலயங்களாகும். இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.

அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம்
அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர்தேவர் எனும் இராம பக்தர் கனவில் இராமர் கோவில் கட்ட தெய்விக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் ஒரு கோவிலே புதைந்து கிடப்பதைக் கண்டார். 1862இல் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். கம்பீரமான இந்தத் திருமேனிக்கு 'ஸ்ரீ வீர கோதண்டராமர்' என்று பெயர். 1905க்குப் பின்னர் கோவில் விரிவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் இராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் தை, ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள் புனித நீராடுகின்றனர். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். நடராஜருக்கும் இந்தக் கோவிலில் சந்நிதி உள்ளது. இந்த தில்லைவிளாகம் கோவிலில் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமரைத் தரிசிக்கலாம். இந்தக் கோவிலில் இராம நவமி, ஹனுமார் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்டஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம்
அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் வடுவூர் தாலுகாவில் உள்ளது. வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்குப் புறப்படத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். இராமர் தன் உருவத்தை சிலையாகச் செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, இராமபிரானிடம், "இராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,''என்றனர். சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையைத் தரும்படி கேட்டனர். அதன்படி இராமர் அவர்களிடம் சிலையைக் கொடுத்துவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர். தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மஹாராஜா தலைஞாயிறு எனும் இடத்தில், அரசமரத்தடியில் விக்ரஹங்கள் இருப்பதாகக் கனவு கண்டார். அங்கு தோண்டியதில் கிடைத்த அற்புதமான இராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேய விக்ரஹங்களை, வடுவூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோவிலுள் பிரதிஷ்டை செய்தார். இந்த வடுவூர் இராமர் பேரழகு. பிராகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இந்த ஆலயந்தின் கோவில் குளம் ஸ்ரீ சரயு தீர்த்தம். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலில் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம்.
அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். இராமாயணச் சொற்பொழிவுகள் செய்து நூற்றுக்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை. ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ இராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைக் களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்தப் பழைமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் இராமர் கதை சொல்லி, இராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு அழகான ஒரு கோவிலை அமைத்தார். இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி விக்ரஹங்கள் உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது. இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.

அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம்.
அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை போகும் வழியில் உள்ளது மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டான். ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல்தலையில் மகுடத்துடன் காணப்படுகிறார் ராமர். பரத்வாஜர் தவம் செய்த இடம் முடிகொண்டான். மூலவர் இராமர், சீதை, லக்ஷ்மணர் மட்டுமே. ஸ்ரீராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்து திரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார். இந்தக் கோவிலில் மூலவர் ஆஞ்சனேயர் இல்லை. இராமரின் வருகை பற்றி பரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சனேயர் சென்று விட்டார் என்பது புராணம். ஸ்ரீராமரை அரசராக உடனே பார்க்க பரத்வாஜர் ஆசைப்பட, பரத்வாஜர் இராமனுக்கு முடிசூட்ட, ஸ்ரீராமர் மகுடத்துடன் இங்கு கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாக ஐதீகம். ஹனுமாருக்கு தனியாக வெளியே ஒரு சந்நிதி உள்ளது. பரத்வாஜர் இராமனுக்கு முடிசூடியதைப் பார்க்காததால் அனுமார் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். ரங்கநாதருக்கு இங்கு தெற்கு நோக்கி சந்நிதி உள்ளது. இந்த ஆலயந்தின் மிகப்பெரிய கோவில் குளம் ஸ்ரீ ராம தீர்த்தம் உள்ளது. சுவாமிக்கு பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம்
அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது. இந்த அதம்பார் கிராமத்தின் அருகில் தாடகாந்தபுரம், நல்லமான்குடி, வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாடகச்சேரி, என்ற சிறிய கிராமங்கள் இராமாயணத்துடன் தொடர்புடையவை. தாடகையை வதம் செய்த இடம் தாடகாந்தபுரம், அழகிய மானை சீதை பார்த்த இடம் நல்லமான்குடி, மான் வலப்புறம் துள்ளி ஓடிய இடம் வலங்கைமான், மாயா மாரீசன் என்று அறிந்து, அதனை வதம்(ஹதம்) செய்ய முடிவெடுத்த இடம் அதம்பார், மானைக் கொன்ற இடம் கொல்லுமாங்குடி, தன் பாத அணிகலன்களை சீதை கழற்றிய அடையாளம் காட்டிய இடம் பாடகச்சேரி. தெளிவாக சிந்தித்து மாரீசனைக் கொல்ல (ஹதம் செய்ய) முடிவு செய்தஇடத்தில் அதம்பார் இராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் விக்ரஹங்கள் ஸ்ரீராமர், சீதை. லக்ஷ்மணர், ஆஞ்சனேயர், மான் உருவில் மாரீசன் மற்றும் பிரதான மூலவர் அதம்பார் வரதராஜப் பெருமாள். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் பிரசித்தம்.
பஞ்ச இராமர் ஸ்தலங்களுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, அவற்றின் மகிமை அறிந்து, தரிசித்து பூஜைகள் செய்பவர்கள், பகை விலக, புத்திர தோஷம் நீங்கி, கிரகதோஷங்கள் மறைந்து, உயர் கல்வி பெற, பிரிந்த குடும்பங்கள் மற்றும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவ, நியாயமான நல்ல சிந்தனை உண்டாக, சித்தசுத்தி பெற்று, தெளிவான முடிவுகள் எடுக்க, பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறக்க, நல்ல பிள்ளைகளை ஈன்று, கல்வி, மற்றும் கலைகளில் புகழும் வெற்றியும் பெற்று, சகல நன்மைகளும் உண்டாகி, பஞ்ச இராமரின் அனுக்ரஹத்தால் வேண்டியவை யாவும் கிடைக்கப்பெற்று, எல்லா நலன்களும் பெருகும் என்பது ஐதிகம்.

Poova Raghavan Iyengar's photo.

No comments:

Post a Comment