Monday, June 1, 2015

Kanthar anubhooti - Kaapu

Courtesy:Murugan Bhakti

கந்தர் அநுபூதி ---- காப்பு  (பாடல் 1)

 உமா பாலசுப்ரமணியன்
சொல்லால் கட்டிய கோயில்

கந்தர் அநுபூதி என்பது, சொல்லாலே கட்டிய அழகான கோயிலுக்கு நிகரானதாகும். சைவர்கள் எந்த நூலைத் தொடங்கினாலும் முதலில் விநாயகரைத் தொழுது விட்டுத்தான் மற்ற  செய்திகளைச் சொல்ல விரும்புவார்கள். அவ்வகையில் அருணகிரிநாதர் நம்மை கந்தர் அநுபூதி என்னும் கோயிலுக்குள் அழைத்துச் செல்லுகையில், கோயில் வாயிலில் விளங்கும் துவார கணபதிக்கு ஒரு கும்பிடு போட்டு," நான் கந்தர் அநுபூதி நூலை இயற்ற ஆரம்பிக்கிறேன், அதற்கு நீ துணையிருந்து  திருவருள் புரிவாயாக!" என்ற தொனி எழும் வகையில் முதல் பாடலைப் பாடுகிறார் .

எப்பொழுதுமே சான்றோர்கள் தகுதிகள் நிறைந்து திறமைசாலிகளாக இருந்தாலும்,  தங்களை முன்னே நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். அதே போன்று அருணகிரிநாதரும், "முருகப்  பெருமானுக்கு அழகான ஒரு மாலை சாத்த வேண்டும். அந்த மாலை நன்றாக அமைவதற்கு உரிய தகுதி எனக்கு உண்டாகுமாறு விநாயகப் பெருமான் அருள வேண்டும்"  என்று பிரார்த்தனை செய்கிறார்.

கந்தர் அநுபூதி என்ற மாலையை எதற்காகப் பாடுகிறார்? அதனால் என்ன பயன்? என்று நாம் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அதற்குரிய விடையை அவரே விளக்குகிறார்.
Lord Ganesha

"நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக" –என்கிறார்.
கந்தர் அநுபூதி பாடுவதினால் நெஞ்சம் உருகிவிடுமாம்!
நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்து இடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
.

இது கந்தர் அநுபூதியின் முதல் பாடலாகும்

நெஞ்சக் கன கல்
உலகத்திலுள்ள உயிர்கள் யாவும் உடம்பு என்னும் சிறைக்குள் புகுந்து வாடுகின்றன. பிறவிப்பிணியும், மரணப்பிணியும் அவரவர்கள் வினைக்குத் தகுந்தவாறு அமைகிறது. ஒருவன் பிறவி என்னும் கடலில் புகுந்துவிட்டால் இன்ப, துன்ப அலைகளுக்கு உட்பட்டுத்  தத்தளிக்கிறான். யாரேனும் கருணையுள்ளம் கொண்ட ஒருவன்  தோணியைக்  கொண்டு வந்தாலும் சரி அல்லது ஒரு மரக்கட்டை கிடைத்தாலும் சரி, எளிதே அவன் கரையேறிவிடலாம். ஆனால் உலகத்தார் யாவரும் கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் விழுகிறார்களே! அதற்கு என்ன செய்வது? பிறவியாகிய பெருங்கடலில் அழுந்திக் கொண்டே இருந்து, பல பிறவிகளை மேன்மேலும் எடுத்துக் கொண்டே இருக்க  வேண்டியதுதான்!

அவ்வுயிர்களோடு கட்டிவிடப்பட்ட கல் எது தெரியுமா?  அதுதான் " நெஞ்சம் என்ற கனத்த கல்"  என்கிறார் அருணகிரிநாதர். உடம்போடு ஒட்டிக்கொண்டு வருகின்ற கட்டியைப்போல,   பிறக்கின்ற உயிர்களுடன் கூடவே வரும் நெஞ்சம் உடையாது, அதை அறுக்கவும் முடியாது.  ஆனால் அதை உருக்கிவிடலாம். அதனை உருக்கி நீராக ஆக்கிவிட்டால் கடலோடு கலப்பதற்கு வழி பிறந்து, நெஞ்சமே இல்லாது செய்து விடலாம்.
 
நெஞ்சமாகிய கனத்த கல் உருகிவிட்டால், நெஞ்சம் அழிந்து, பாசக் கட்டு விட்டு,  இறைவன் பாதமாகிய புணையை பற்றிக்கொள்ளும் அரிய வாய்ப்பு  கிட்டுகிறது.

" தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அப்பர் வாக்குப்படி சரணாகதியடைந்தவர்களை இறைவன் ஒரு பொழுதும் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
Arunagirinathar at Tiruvannamalai
 
அருணகிரி நாதர் ஒரு திருப்புகழில் நெஞ்சத்தைப் பார்த்துக் கூறுகிறார்

"மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில்
      வருவாய் உரைத்தமொழி                    தவறாதே
  மயில் வாகனக் கடவுள் அடியார் தமக்கரசு
      மனமாயை அற்ற சுக                      மதிபாலன்
  நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல
      நிலை வேர் அறுக்க வல                         பிரகாசன்
 நிதிகா  நமக்கு உறுதி அவரே பரப்பிரம
      நிழலாளியைத் தொழுது                    வருவாயே!"

 
என்று முருகனை உயர்வாகக் கூறி அவனைத் தொழுது வந்தால் பிறவி வேரையே அறுத்துவிட முடியும் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.

Raja Ravi Varma painting of  Sri Shanmukha Subrahmanya Swamiஇயல்சேர் செஞ்சொற் புனை மாலை
திக்குகள் நான்கும் . மேல், கீழ் என்பவற்றையும் சேர்த்தால் ஆறு பகுதியாகும். ஒவ்வொரு திசையையும் நோக்கிக் கொண்டு  முருகன் ஆறு முகங்களோடு எழுந்தருளியிருக்கிறான். அருளைச் சுமந்து கொண்டு இதைப் பெறுவார் யார்? என்று எப்போதும் எவ்விடத்தும் காத்துக் கொண்டிருக்கிறான்.

அருணகிரிநாதர் "உள்ளம் உருக வேண்டும் . அதற்காக  இந்த நூலைப் பாடுகிறேன்" என்றார், "யாரைப்  பற்றிப் பாடப் போகிறீர்கள்?" என்ற வினாவுக்கு விடையாக                            " தன்னைச் சரணாகதி என்று அடைந்தவர்களுக்கு அருள் செய்யும் சண்முகனைப் பற்றிப் பாடப்போகிறேன்"  என்று சொல்கிறார்.
 " நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
 தஞ்சத்து அருள் சண்முகனுக்கு"

ஆறுமுகனை அண்டியவர்களுக்கு, "அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளின்" அருள் நிச்சயம் என்று சொல்லாமல் சொல்கிறார் முனிவர்.

பூ மாலையிலும், பா மாலையிலும் உள்ளம் குளிர்பவன் இறைவன் . அவனுடைய வேறு கோலமாகிய முருகனும் பாமாலையில் மகிழ்பவன் ஆயிற்றே!.  அவனுக்கு முன்னமேயே நக்கீரர் போன்ற பலர் பாமாலை சிறப்பாக அணிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் அவருக்கு மணமுள்ள சொல் மாலையை யாரும் சூடாத வகையில் முருகனுக்கு அணிவிக்க விழைகிறார்  வகுப்புகள் பாடிய அருணகிரியார்.

ஆற்றுக்குக் கரை போலவும், வயலுக்கு வரப்புப் போலவும், பூம்பொழிலுக்கு வேலி போலவும் இருக்கும் தமிழ் இலக்கணத்தின் மரபுப்படி தமிழ்க்கவி  அமைந்தால், அழகு இன்னும் கூடி விளங்கும் என்ற எண்ணம் உதித்தது அருணகிரிக்கு. அதனால் "நான் சண்முகனுக்கு அணியும் மாலை இலக்கண அமைதி உடையதாக,  இயல் சேர்ந்ததாக இருத்தல் வேண்டும்" என்ற நல்லெண்ணம் கொண்டு, "இயல்சேர் செஞ்சொற் புனை மாலை"

செய்வேன் என்கிறார்.  இயலில் பல பிரிவுகள் உள்ளன.  முற்காலத்தில் தமிழ் இலக்கணம் என்பது, எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் என  மூன்று பிரிவுகளாக மட்டும் இருந்தன. பின் யாப்பிலக்கணமும்  இணைந்து நான்காகி, அதற்குப்பின் அணியிலக்கணமும் சேர்ந்து ஐந்தாயின. இயல் சேர்ந்த மாலையில் இந்த ஐந்து இலக்கணங்களும் சிறப்பாகப் பொருந்தியிருக்க வேண்டும். எழுத்துக்களாகிய இதழ்கள், சொல்லாகிய மலர்கள், பொருளாகிய மணம், யாப்பாகிய (செய்யுள்)  மாலை இவைகளுடன் சேர்ந்து அலங்காரமாகிய அழகு -- போன்ற ஐந்து இலக்கண அமைதியுடைய பாமாலையை நான் சண்முகனுக்கு இட வேண்டும்" --  என்பது அருணகிரி முனிவரின் விருப்பம்.

அப்படிப்பட்ட மாலையை, "மூன்று கரணங்களும் சிறப்பான நிலையில் இருக்கும்படியாக நான் சண்முகனுக்கு அணிய வேண்டும்" என்கிறார். அழகாக மாலையும் கட்டியாயிற்று. ஆனால் அதை எப்படி இறைவனுக்குச் சாத்துவது? அழுக்கு படிந்த கைகளுடனா அழகான மாலையை சாத்துவது? கைகளைத் தூய்மையாக வைத்துக் கொண்டு பணிவுடன் முருகனுக்கு அணிவிக்க வேண்டுமல்லவா? அதனால்தான்  "சிறந்து இடவே" என்கிறார்.  "நான் சிறந்து நின்று, முருகனுக்கு அணிய வேண்டும்" என்பது பொருள்.

அருணகிரிநாதர் அழகன் முருகனுக்குத் தாம் அணிவிக்கும் சொல்மாலை அழகாக எப்படி அமைய வேண்டும் என்று திட்டம் தீட்டிவிட்டார். ஆனால் அதைச் செயலில் கொண்டுவருவது தம்மால் சாத்தியமா? என்ற எண்ணம் மேலிட, விநாயகப் பெருமானின் உதவியை நாடினார். சண்முகனுக்கு அலங்காரமாகச் சொல்மாலை அணிவிக்க விநாயகப் பெருமானின் அருள் தேவை என்பதை உணர்ந்தார்.

பஞ்சக்கர ஆனை
விநாயகருக்குப் பல அரிய பெயர்கள் இருந்தாலும் " பஞ்சக்கர ஆனை" என்ற பெயரை வைத்திருக்கிறார் கந்தர் அந்தாதி பாடிய கவி ஏன் இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்?  என்று நாம் சிந்திக்க வேண்டும். ஐந்து இலக்கணமும் அமைந்த சிறந்த மாலையைப் புனைய ஐந்து கரத்தனைப் பணிதல் பொருத்தமாக இருக்கும் அல்லவா? கணபதிக்கு நான்கு கைகளுடன் தும்பிக்கையும் சேர்த்து ஐந்து கைகள்  உண்டு. மற்ற யானைகளுக்கெல்லாம் ஒரு கை தான். மற்ற யானை பிறர் கொடுக்கும் பொருளைத் தன் ஒரு கையால் வாங்கும். ஆனால்  ' பஞ்சக்கர ஆனையோ  தன் ஐந்து கரங்களால் பிறருக்கு வாரி வழங்கும் தன்மை கொண்டதாக விளங்குகின்றது. 

விநாயகர் யானை முகம் கொண்டு இருப்பதால், அவரை யானை என்று குறிப்பிட்டார். மற்றவர் திறத்தில் கணபதி, முகம் மாத்திரம் யானையாக இருப்பவர். ஆனால் முருகனுக்கு இன்பம் அளிக்கும் திறத்தில் அவ்வாறு இல்லை. கணபதி "அத்துயரது கொடு  சுப்பிரமணிபடும் அப்புனம் அதனிடை இபமாகி"  வருவார். வள்ளியம் பெருமாட்டியை முருகனோடு இணைத்து வைக்க யானையாகத்தானே வந்தார்? யானை முகத்தனாக அல்லவே! வள்ளி நாயகியின் பூமாலையை முருகனுக்கு வாங்கித்தர யானையாக வந்த விநாயகரைத் தம்முடைய பாமாலை கந்தனிடம் நல்ல முறையில் சேரும்படிச் செய்ய அவரையே வணங்கி   உதவி நாடலாம் என நினைக்கிறார் போலும்  அருணகிரிநாதர். ஆகவே

"ஆனை பதம் பணிவாம்"  என்று அழகாகப்பாடலை நிறைவு செய்கிறார்.
 
"நெஞ்சக்  கன கல்லும் நெகிழ்ந்து உருக
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்து இடவே

பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்."           

Ganapati and Murugan
இப்பொழுது இப்பாடலின் முழுப் பொருளையும் காணலாம். விநாயக வணக்கமாகிய இந்த அருமையான பாடலில் கந்தர் அநுபூதிக்குப்  பயன் நெஞ்சமாகிய கல் உருகுவது என்பதும், முருகன் தஞ்சமென்று தன் சரணத்தை அடைந்தவருக்கு அருள் புரிபவன் என்பதும், அவனுக்கு அணியும் சொல் மாலை ஐந்திலக்கணமும் பொருந்தியது என்பதும், அது நன்கு நிறைவேறும்படிச் செய்ய ஐந்து கரத்தனாகிய விநாயகரைத் தொழுதார் அருணகிரிநாதர் என்பதும் தெளிவாகின்றன.

உமா பாலசுப்பிரமணியன்
Uma Balasubramanianஇத்தொடர் கட்டுரையை எழுதியுள்ள திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள், அவர் தந்தையார்  வாகீச கலாநிதி அமரர் திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். பல ஆன்மீகப் பத்திரிக்கைகளின் மாத, வார இதழ்களில் சிறந்த ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அமிர்த வர்ஷினி என்ற மின் பத்திரிக்கையில் வெளி வரும் அவரின் ஆன்மீகத் தொடர் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவர் ஒரு சிறந்த திருப்புகழ் ஆசிரியை. ஆர்வம் உள்ள பல திருப்புகழ் அன்பர்களுக்கு அவர் இசையுடன் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார்.

தலைநகர் தில்லியில் குருஜி திரு ஆ.சு. இராகவனிடம் பல ஆண்டுகள் முறையாகத் திருப்புகழ் பயின்றுள்ளார். தலை நகரில் அவரிடம் திருப்புகழ் பயின்ற பல மாணவிகள் இன்று அவர்களே திருப்புகழ் பயிற்றுவிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவை யாவைக்கும் சிகரம் வைத்தாற் போன்று அவர் ஒரு சமூக ஆர்வலர். அவர் தன்னிடம் பயிலும் மாணவிகளை தன்னோடு சமூகத் தொண்டு செய்ய ஊக்குவிப்பார். அவர் தம் இறைத் தொண்டும் தமிழ்த் தொண்டும் மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் வேண்டுவோம்.

வாழ்க தமிழ்! வளர்க முருக பக்தி!