Thursday, June 4, 2015

Famine & Sundarar

Courtesy:Sri.Mayavaram Guru

குண்டையூர் என்னும் ஊர். திருவாரூருக்கு அருகாமையில் உள்ள இவ்வூரில் வாழ்ந்து வந்த குண்டையூர்க் கிழார் என்னும் பெரியார், திருவாரூரில் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நெல், பருப்பு போன்ற பொருட்களைத் தவறாமல் அனுப்பி வைப்பார். 

இவ்வாறு செய்யுங்கால், ஒருமுறை மழை பொய்த்தது. அதனால் நிலத்தில் விளைச்சல் குன்றியது. சுந்தரருக்கு அனுப்பி வைக்கப் போதுமான பொருட்கள் இல்லாமல் வருத்தப்பட்டார் குண்டையூர்க் கிழார். 

மனவுளைச்சலோடு இரவு உண்ணாமல் உறங்கிப் போனார். உறக்கத்திலும் இந்தச் சிந்தனையோடு இருந்த கிழாரின் கனவில் சிவபெருமான் காட்சி தந்தார். ""சுந்தரனுக்குப் படி அமைக்க (நெல் போன்றவற்றை இறைவனின் தொண்டர்களுக்குக் கொடுப்பதற்குப் "படி அமைத்தல்' என்று பெயர்) உனக்கு நெல் தந்தோம்'' என்று கூறிவிட்டு மறைந்தார். சிவபெருமான் குபேரனை ஏவி விட, குபேரன் நெல்லை மலை மலையாகக் கொண்டு சென்று குண்டையூரில் குவித்தான். 

காலையில் எழுந்தவுடன் நெல்மலைகளைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார் கிழார். திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் செய்தி சொன்னார். ""அவ்வளவு நெல்லையும் வண்டியேற்றிக் கொண்டுவர முடியாது. 

தாங்கள் வந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அருள வேண்டும்'' என்று வேண்டினார். சுந்தரரும் திருவாரூர் சென்று நெல்மலைகளைப் பார்த்தார். 

விண் முட்டி நின்ற நெல்மலைகளை "எப்படி எடுத்துப் போவது? சுந்தரர் மட்டும் இவ்வளவு நெல்லையும் திருவாரூர் கொண்டு போக என்ன செய்வார்? 

குண்டையூர்க் கிழாரையும் அழைத்துக் கொண்டு அருகாமையிலுள்ள திருக்கோளிலி திருத்தலத்திற்குச் (இப்போது திருக்குவளை என்று வழங்குவது) சென்றார் சுந்தரர். நெல்லைக் கொண்டு போக வேலையாட்களைத் தரும்படி வேண்டினார். சிவபெருமான் வேண்டுகோளைச் செவிமடுத்தார். "இன்று இரவு பூத கணங்கள் நெல்லைக் கொண்டு வந்து திருவாரூரில் குவிப்பர்'' என்று வானில் அசரீரி எழுந்தது. 

மறுநாள் காலை திருவாரூர் வீதியெங்கிலும் நெல் குவிக்கப் பெற்றிருந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவர் மனைவி பரவை நாச்சியாரும் மிகவும் மகிழ்ந்தார்கள். மலை மலையாய்க் குவிந்திருந்த நெல்லைக் கண்டு வியந்தார்கள். "அவரவர் வீட்டு வாசலில் குவிந்து கிடக்கும் நெல்லை அவரவரே எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று முரசறைந்தார்கள். ஊரே பஞ்சம் தீர்ந்து செழித்தது. 

திருக்கோளிலியில் ஆள் கேட்டு சுந்தரர் அருளிச் செய்த பதிகம்: 

""நீள நினைந்தடி யேன் உமை 

நித்தலும் கைதொழுவேன் 

வாளன கண்மடலாள் அவள் 

வாடி வருந்தாமே 

கோளிலி எம்பெருமான் குண்டை 

யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் 

ஆளிலை எம்பெருமான் அவை 

அட்டித் தரப்பணியே.'' 

இந்தப் பதிகத்தில், தன் மனைவி பசியால் வாடுதலையும், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் வாழ்வு நடத்தத் தன் மனைவியாம் பரவை வாட்டமுறுதலையும் குறிப்பிட்டு வேண்டுகிறார் சுந்தரர். 

திருக்கோளிலி இத்தலத்தினைச் சென்றடையும் வழி: திருவாரூர் எட்டுக்குடி சாலையில் எட்டுக்குடிக்கு முன்னால் உள்ள தலம். திருவாரூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்து அடிக்கடி பேருந்து உள்ளது. நேரே செல்லலாம். 

இறைவன் - பிரமபுரீசுவரர், கோளிலி நாதர், கோளிலி நாதேஸ்வரர், (திருவாரூரில் பெருமான் புற்றிடங் கொண்டவராக விளங்குதல் போல இங்கு இறைவன்) வெண்மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார். 

இறைவி - வண்டமர்பூங்குழலி
 

No comments:

Post a Comment