Wednesday, June 3, 2015

COCK

Courtesy:Dr.K.Rajaram

சேவல் இருத்து வசம்
by Dr K. Rajaram

சேவல் இரு துவசம்(த்வஜம்) அதாவது சூரனுடல் மாமரமாய் நின்று வேற்படையால் பிளந்து வெளி வந்த சேவல் கந்தனின் தேர்க் கொடி கம்பத்தில் இருந்து முழங்கிற்று.

சேவற்றிருத்து வசம் என்று இந்தச் சொல்லைப் .பிரித்தால் வரும்பொருள் என்ன?

கந்தனின் சேவல் அவன் வசம் நம்மை இருத்துகிறது! இதுவே தமிழ் மொழியின் தனிச் சிறப்பு! அம்மொழியின் தலைவன் கந்தன். கந்து என்றால் பற்றுதல்.அவன்பாலும் அவன் மொழியின்பாலும் பற்றுதல் ஏற்படுவது நமது பாக்கியமே!
 
அவன் தலைக்கருகே சேவலும், அவன் பாதத்தின் அருகே மயிலும் உறைந்தன. இதன் பொருள் என்ன? ஞானம் என்பது தலையில் ஒளிர்வது. அதுவே சேவல். பக்தி என்பது அவன் சரணகமலாலயத்தில் இருப்பது. அதுவே மயில். வைரம் போன்ற வேல் வைராக்கியத்தை குறிப்பது. அது நமது கல்மனத்துள் பாய்ந்து ஒரு குஹையை உண்டாக்கியபின் குஹன் அங்கு வந்து உறைவான்.
 
உருகிய கல்மனம் மீண்டும் உறைந்து கடினமாகாது அவன் பார்த்துக்கொள்வான். வேலும், சேவலும், மயிலும் பயந்த நம் தனி வழிக்குத் துணை! வழியில் வரும் நம் வினைகளாகிய அலகுகள் (பேய்கள்) சேவலின் பெரு முழக்கத்தால் அஞ்சி ஓடும்!
 
"சரவணச் சிறுவன் அயில் உருவி இரவிச் சிரமிசையில் வெகு சினமொடு அடியுதவும் அறுமுதவன் சேவற்றிரு துவசமே" என்று அருணகிரியார் சேவல் விருத்தத்தில் பாடுகிறார். அண்டகோளமும் அதிரும்படி  சேவல் முழங்கும் ஒலி அவன் வசம் நம்மை இருத்துகிறது. (சேவல் இருத்து வசம்!).
 
அக்னி தேவனே சேவல்!
சூரனைப் பிளந்தபின்னரே சேவலும் மயிலும் தோன்றின என்பது தவறு! ஞானமாகிய சேவல் அக்னி தேவன் ஆவான். அவனே கந்தவேளின் கொடி த்வஜத்தில் அமர்ந்தான் என்று கச்சியப்ப சிவாசார்யர் பாடுகிறார்.

ஏவலோடும் எரிதழற்  பண்ணவன்
வாவி குக்குட மாண்கொடியாகியே
தேவ தேவன் திரு நெடுந்தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட...
 
வாயு தேவனே மயில்!
அதுபோல வாயுதேவன் விரைந்துசெல்லும் மயிலாக கீழே அமர்ந்தான். முன்பு சிவபெருமானது நெற்றிக் கண்ணில் தோன்றிய தீப் பொறியினை அக்னியும் வாயுவும் எடுத்து படாதபாடுபட்டு சரவணப் பொய்கையில் சேர்த்தனர். அவர்களே இங்கு சேவலும் மயிலுமாக உறைந்தனர். முறையே ஞானத்தையும் பக்தியையும் உணர்த்துகின்றனர். பின்னர் சூரனுடல் பிளந்து வந்த அகங்காரமும் மமகாரமும் முறையே சேவல் மயிலுடன் ஒன்றி அதனால் அவை மேலும் பிரகாசமாயின!
 
இந்த சிந்தனையை வேறு ஒரு சம்பவத்தின் மூலமும் விளக்கலாம். நவ ப்ரஜாபதிகளுள் கடைசியான தக்ஷனின் ஒரு பெண் அதிதி. அவள் கச்யப முனிவரை மணந்து ஆதித்யன் முதலிய தேவர்களை பெற்றெடுத்தாள். ஆதித்யன் என்ற சூரியன் அப்போதுதான் தோன்றினான் என்பதால், அதற்கு முன்புவரை அகில உலகமும் இருள் சூழ்ந்து இருந்தது என்று அர்த்தமில்லை!
 
சாக்ஷாத் நாராயணனே சூர்யனாக இருந்துவருகிறான்.
 
"த்யேய: சதா சவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண" என்று த்ரிகாலமும் சந்த்யாவந்தனத்தில் பிராம்மணர்கள் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். அதாவது சூர்ய நாராயணனே சூர்ய மண்டலத்தின் நடுவே நின்று அவனை இயங்கச் செய்கிறபடியால் அந்த நாராயணனை தியானிக்கிறோம். அதேபோல சூரன் மயிலும் சேவலுமாகிய காலத்துக்கு முன்பே வாயுவும் அக்னியும் அவ்வடிவுடன் அமர்ந்து தொண்டு செய்தனர்.
 
அடியார்களின் பழவினை, தற்போது செய்வினை என்ற இருவினைகளாம் அலகையை (பேயை) பற்றி இழுத்து அதன் கண்களைப் பிடுங்கி உடல்தன்னைப் பிளந்து சிறகைக் கொட்டி ஆடுமாம் சேவல்! இது சேவல் விருத்தத்தில் அருணகிரியாரின் முழக்கம்! சேவலின் முழக்கத்தைப் போல எதிரொலிப்பது அருணகிரி வாக்கு!
 
ஞான முழக்கம்
இந்த முழக்கம் வரும் சமயம் எது? அதிகாலையில் அருணோதயத்துக்கும் முன்பு சேவலும் கோழியும்(குக்குடமும்) நம்மை தமோகுணமாகிய அஞ்ஞான இருளிலிருந்து துயில் எழுப்புகின்றன. அறியாமையிலிருந்து ஞான முழக்கம் நம்மை எழுப்புவதை நாம் அறிந்தும் எழாது  படுக்கையில் உறங்குகிறோம்.
 
அவற்றுக்குள்ள அறிவு நமக்கு வராதது ஏன்? அருணோதயத்தில் லேசாக வெளிச்சம் கீழ் திசையில் வரத்தொடங்கும். ஆனால் அதற்கு முன்பே (இருள் சூழ்ந்த நிலையிலேயே) குக்குடத்துக்கு எப்படி விடியப்போகும் நேரம் தெரிகிறது என்பது விஞ்ஞானிகளுக்கே ஓர் அதிசயமாக இருக்கிறது ! ஒரு குடத்துள் மறைந்து இருக்கும் ஞான ஒளி குக்குடத்தால் வெளி எங்கும் பரவி நிற்கிறது!
 
"வடிவேலும், திக்கு அது மதிக்க வரு குக்குடமும், ரக்ஷைதரு சிற்றடியும், பன்னிருதோளும், செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழை விருப்பமொடு" அதிகாலையில் பாடிப் பயனுற முதலில் நாம் செய்யக் கிடப்பது என்ன? ஒன்றும் செய்யாதுக் கிடப்பதிலிருந்து விழித்து எழ வேண்டும்!
Andal 
ஆண்டாள் திருப்பாவை 18வது பாசுரத்திலும், திருவெம்பாவை 8வது பாடலிலும் குக்குடம் கூவும் விழிப்புணர்ச்சியைக் காணலாம். "கூவின பூங்கூயில் கூவின கோழி குருகுகள் இயம்பின! இயம்பின சங்கம்!" என்ற மாணிக்கவாசகரின் திருப் பள்ளியெழுச்சி பாடலிலும் இந்த ஞான முழக்கத்தை அனுபவிக்கலாம். ஞான ஸ்கந்தனின் துவசத்தில் உறை சேவல் முழங்கும் ஒலி நம்மை அவனுள் வசப்படுத்தும். சேவல் இருத்தும் வசம் அதுவே!
 

No comments:

Post a Comment