ராம் ராம், இந்த நாள் இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
தெய்வத்தின் குரல் 141 (பாகம் 3)
உபவாஸம்
பண்டிகை, வ்ரதம் ; ஏகாதசிச் சிறப்பு
பகவத் பரமாகவே பண்டிகைகள் என்று சிலதை வைத்திருப்பதோடு வ்ரதங்கள் என்றும் சிலவற்றை வைத்திருக்கிறது. பண்டிகை என்பது நாம் ஆடை ஆபரணங்களுடன் அலங்காரம் பண்ணிக்கொண்டு, பகவானுக்கு அலங்காரம் பண்ணிப் பூஜை செய்து, அவன் ப்ரஸாதமாக அறுசுவை உணவு சாப்பிட்டு ஆனந்தமாயிருப்பது -- போகிப்பண்டிகை, தீபாவளிப் பண்டிகை மாதிரி. புது வஸ்த்ராதிகள், அலங்காரம், பஞ்சபக்ஷ்ய போஜனம் முதலியன இல்லாமல், வழக்கமாகச் சாப்பிடுகிற மாதிரிக்கூட இல்லாமல், நியமத்தோடு உபவாஸமிருந்து பூஜை பண்ணுவது வ்ரதம். க்ருத்திகை வ்ரதம், ஷஷ்டி வ்ரதம், சதுர்த்தி வ்ரதம், ரிஷிபஞ்சமி வ்ரதம், ப்ரதோஷ வ்ரதம், ஸோமவார வ்ரதம், ச்ரவண வ்ரதம், பயோவ்ரதம், இது எல்லாவற்றையும்விட ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி வ்ரதம் என்று பல ஏற்பட்டிருக்கின்றன. எல்லா மதங்களிலுமே feasting, fasting என்று இந்த இரண்டும் இருக்கின்றன.
மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்கு அப்புறம் ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்றிருக்கிறது. ஏகாதசியில்தான் பூர்ண உபவாஸம்.
மற்ற வ்ரதங்களைப் புராண, ஆகமங்கள் சொல்கின்றன. அதில் சிவபரமான புராணாகமங்கள் சொல்பவைகளை வைஷ்ணவர்கள் அநுஷ்டிக்க மாட்டார்கள்; வைஷ்ணவ கிரந்தங்களில் சொல்லியுள்ளதை சைவர்கள் செய்ய மாட்டார்கள். ஏகாதசியோவென்றால் ஒவ்வொரு sect மட்டும் எடுத்துக்கொள்ளும் புராண ஆகமங்களில் மட்டுமின்றி ஹிந்து என்று பெயர் இருக்கிற அத்தனை பேருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் இதை ஸர்வஜன அநுஷ்டானமான வ்ரதம் என்று சொன்னேன்.
விஷ்ணு நித்ரை செய்து கொண்டிருந்தபோது லோகத்தை ஹிம்ஸை பண்ணிய ஒரு அஸுரனைக் கொல்வதற்காக அவருடைய சரீரத்திலிருந்தே ஸ்த்ரீ ரூபமாக ஒரு சக்தி வெளியே போய் ஸம்ஹாரம் செய்துவிட்டு வந்ததாகவும், விழித்துக் கொண்ட பகவான் அவளுக்கே ஏகாதசி என்று பேர் கொடுத்து இந்த ஏகாதசி வ்ரதத்தை ஏற்படுத்தினாரென்றும் பாத்ம புராணத்தில் கதை வருகிறது. மஹாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்திரியாகவும், மோஹினியாகவும் அவதாரங்கள் எடுத்து, க்ஷீராப்தியில் அம்ருதம் கடையப் பண்ணி அதை எடுத்துக் கொடுத்த நாளே ஏகாதசி என்பதாலும் அதைப் பொதுவில் விஷ்ணு ஸம்பந்தமுள்ளதாக நினைக்கிறோம். ஆனால் இந்த அம்ருத மதன ஸமயத்தில் முதலில் உண்டான காலகூட விஷத்தைப் பரமேச்வரன் புஜித்ததை முன்னிட்டுத்தான் அன்று எவரும் சாப்பிடக் கூடாது என்று ஏற்பட்டிருப்பதாக சைவர்கள் சொல்வதுண்டு.
இப்படி சைவம், வைஷ்ணவம் இரண்டுக்கும் ஏற்கத் தக்கதாயிருப்பதோடு ஹிந்துவாகப் பிறந்தவனில் எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டவனாயினும், எந்த ஜாதியைச் சேர்ந்தவாயினும் ஸகலருக்குமான வாழ்க்கை விதிகளைப் போடுகின்ற தர்மசாஸ்த்ரமும் ஏகாதசி உபவாஸத்தை விதித்திருப்பது அதன் விசேஷத்தைக் காட்டுகிறது.
தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் உபவாஸ நாட்களைச் சொல்கிறேன். ஒவ்வொரு பக்ஷத்திலும் வரும் ஏகாதசியன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை, அமாவாஸ்யை, பௌணர்மி ஆகிய நாட்களில் பகலில் மட்டும் போஜனம் செய்து இரவில் உபவாஸமிருக்க வேண்டும். ஒவ்வொரு பக்ஷத்திலும் அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் பகலில் சாப்பிடாமல், ராத்திரி மட்டும் ஆஹாரம் பண்ண வேண்டும்.
ராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்திரி ஆகியனவும் பூர்ண உபவாஸ தினங்களாகச் சொல்லப்ப்ட்டிருக்கின்றன. ஆனால் சிவராத்திரியில்தான் இதை ஓரளவுக்கு விதிப்படிச் செய்வதாகவும் மற்ற இரண்டு தினங்களில் பூஜைக்கு அப்புறம் சாப்பிடுவதாகவும் (கிருஷ்ண ஜயந்தி பூஜை ராத்ரியில் செய்யப்படுவதால் பலஹாரம் செய்வதாகவும் -இதில் ஏகப்பட்ட பக்ஷண தினுஸுகள் சேர்ந்துவிடும்) நடந்து விடுகிறது.
குருவார வ்ரதம் என்பது நடைமுறையில் பரவியிருக்கிறது.
தக்ஷிணத்தில் எல்லாவற்றையும்விட அதிக வழக்கிலிருப்பது சனிக்கிழமை வ்ரதம்தான். ரொம்பப் பேர் அன்று ராத்ரி போஜனம் பண்ணுவதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேங்கடரமண ஸ்வாமியை உத்தேசித்து இந்த வ்ரதம் ஏற்பட்டிருக்கிறது. " கலௌ வேங்கடநாயக :" [கலியுகக் கடவுள் ஏழுமலையானே] என்பதற்கேற்க, அவரது வ்ரதமே வெகுவாக அநுஷ்டானத்திலிருக்கிறது -- சாஸ்த்ரத்தில் அது இல்லாவிட்டாலும்.
இதேபோல ஸோமவார வ்ரதமும் இங்கே சைவர்களிடையேயும், ஸ்மார்த்தகளிடையேயும் ஓரளவு நிறையவே வழக்கிலிருக்கிறது. வடக்கேயோ சைவ வைஷ்ணவ வித்யாஸமில்லாமல் எல்லோருமே ஸோமவார விரதமிருக்கிறார்கள். அதனால்தான் லால்பஹாதூர் சாஸ்திரிகூட ரொம்பவும் உணவு நெருக்கடி ஏற்பட்டபோது எல்லாரும் திங்கட்கிழமை உபவாஸமிருப்பது என்று வைத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னார். திங்கட்கிழமை ராத்ரி ராஜாங்க விருந்துகள் நடத்துவதில்லை என்றேகூட நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்படி ராஜாங்க ரீதியிலேயே ஸோமவார 'ஒரு பொழுது' விதிக்கப்பட்டதிலிருந்து, உபவாஸங்களுக்கு சாஸ்த்ரத்தில் சொன்ன பலன்களோடு உணவுப் பிரச்னையை குறைப்பதில் பங்கு இருக்கிறதென்பதும் புதிதாகத் தெரிய வந்திருக்கிறது. சாஸ்த்ரப் பிரகாரம் எல்லோரும் உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் உணவிலே நமக்கு எப்போதும் 'ஸர்ப்ளஸ்', ஏற்பட்டு, 'எக்ஸ்போர்ட்' பண்ணி 'எக்ஸ்சேஞ்ச்' கூட நிறைய ஸம்பாதித்து விடலாம்!
சாந்த்ராயணம் என்னும் ஒரு வ்ரதம் உண்டு. உடம்பைப் போட்டு ரொம்ப வருத்திக் கொள்ளப்படாது தான் என்பது நம் மதக் கொள்கையானாலும், எத்தனை ஸாதனைகள் பண்ணியும் சித்த சுத்தி வராதவர்கள், தங்களுக்கு மற்றவர்களைவிட ஜாஸ்தியாயிருக்கிற பூர்வ பாப கர்மாதான் இப்படிப் பழி வாங்குகிறதென்று புரிந்து கொண்டு அதைக் கழிப்பதற்காக உடம்பை வருத்திக் கொண்டு சில அநுஷ்டானங்களைப் பண்ணும்படி சாஸ்த்ரம் விதிக்கிறது. இதற்கு 'க்ருச்ரம்' என்று பெயர். இப்படிப் பண்ணினால் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அதற்குப் பதில் 'க்ருச்ர ப்ரதிநிதி'யாக இத்தனை ஆயிரம் காயத்ரி பண்ண வேண்டும் என்றும் இருக்கிறது. இப்படி 'ஸ்ப்ஸ்டிட்யூட்'டைச் சொல்லிவிட்டதால், இந்த 'ஸப்ஸ்டியூட்'டுக்கும் 'ஸப்ஸ்டிட்யூட்', அதற்கும் 'ஸப்ஸ்டியூட்' என்று போய், ஒரு கோதானம் பண்ணிவிட்டால் அது க்ருச்ரத்துக்கு ஸமானம் என்று ஆகி பசுவுக்குப் பதில் அதன் விலையைத் தக்ஷிணையாகத் தருவதாக ஆரம்பித்து, இந்தத் தக்ஷிணையையும் குறைத்துக் கொண்டே போய், தற்போது பரிஹாஸத்துக்கு இடமாக, ஒரு பிராம்மணனுக்கு ஆறே காலணா தக்ஷிணை கொடுத்துவிட்டால் க்ருச்ரம் அநுஷ்டித்தாகி விட்டது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்! பாப பரிஹாரமாக உடம்பை வருத்திக் கொள்வதற்காகவே சாந்த்ராயண விரதம் ஏற்பட்டிருக்கிறது. சந்திரகலை வளர்வது தேய்வதைப் பொறுத்து போஜனம் செய்யும் அன்ன கவளத்தின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்வதுதான் சாந்த்ராயணம்.
இதை ஆரம்பிக்கிற திதியையட்டி இரண்டு தினுஸுகள். ஒன்றை 'கட்டெறும்பு சாந்த்ராயணம்' என்றும், மற்றதை 'கோதுமை சாந்த்ராயணம்' என்றும் வேடிக்கையாகச் சொல்லலாம். கட்டெறும்பு எப்படியிருக்கிறது? தலை பெருத்து ஆரம்பிக்கிறது; அப்புறம் நடுவில் சிறுத்துத் தேய்ந்துவிடுகிறது; மறுபடி பின்பாதி பெருத்துக் கொண்டு போகிறது. இதே மாதிரி ஒரு தினுஸு சாந்த்ராயணத்தைப் பௌர்ணமியன்று ஆரம்பித்து, அன்று பதினைந்து கவளம் சாப்பிடவேண்டும். மறுநாளான க்ருஷ்ணபக்ஷப் பிரதமையன்று பதினாலு கவளம், அதற்கு மறுதினமான த்விதியை பதின்மூன்று கவளம் என்று இப்படியே குறைத்துக்கொண்டே போய் அமாவாஸ்யையன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும்; அப்புறம் மறுதினமான சுக்லபக்ஷப் பிரதமையன்று ஒரு கவளம், த்விதியைக்கு இரண்டு கவளம் என்று ஏற்றிக் கொண்டே போய் பௌர்ணமியில் பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.
கோதுமை எப்படியிருக்கிறது? ஊகமுள் மாதிரி சிறுத்து ஆரம்பிக்கிறது. நடுவிலே பெருத்து மறுபடி சிறுத்து முடிகிறது. இதேபோல் சாந்த்ராயண நியமத்தை சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, அன்றைக்கு ஒரே ஒரு கவளம் போஜனம் செய்யவேண்டும். அப்புறம் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு கவளம் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.பௌர்ணமியன்று பதினைந்து கவளமாகும். அதற்கு மறுநாளிலிருந்து கிருஷ்ணபக்ஷம் பூராவும் ஒவ்வொரு கவளமாகக் குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸ்யையன்று சுத்த உபவாஸத்துடன் முடிக்க வேண்டும்.
சாந்த்ராயணத்தில் முழுப்பட்டினி கிடக்கும் நாள் தவிர மற்ற தினங்களில் ஒரே வேளைதான் சாப்பிட வேண்டும் - அன்றைக்கு எத்தனைக் கவளமோ அந்தக் கணக்குப்படி.
விரதங்களைப் பொதுஜனங்கள் 'ஒரு பொழுது' என்பார்கள். அநேகமாக பகலில், அன்னம் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதையும் இரவில் இட்லி, தோசை போன்வற்றைச் சாப்பிடுவதையும் வ்ரதாநுஷ்டானமாக நினைக்கிறார்கள். சாஸ்திரப் பிரகாரம், அன்னத்துக்கு பதில் இப்படி வயிறு நிறைய, நல்ல புஷ்டியுள்ள இட்லி, தோசை இத்யாதிகளைச் சாப்பிடுவது உபவாஸமாகாது. "பல (ஆ) ஹாரம்" என்று அதில் சொல்லியிருக்கிறபடி வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதுதான் நிஜமான உபவாஸம்.
No comments:
Post a Comment