Thursday, May 21, 2015

Removal of one letter creates difference -Periyavaa

courtesy:Sri.GS.Dattatreyan

English translation here : http://advaitham.blogspot.in/2010/03/deivathin-kural-200-vol-3-dated-20-mar.html

ராம் ராம், இந்த நாள் இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக கூட பிரார்த்திக்கிறேன்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) 193

பண்பாடு

" அறியாதவன் ": வார்த்தை விளையாடல்
சைவ-வைஷ்ணவ ஸமரஸ பாவத்தில் தமிழ் தேசத்தில் சொல்கிற பாபுலர் வசனத்தில்கூட இப்படிச் சின்ன வார்த்தை விளையாட்டு செய்து பெரிய அர்த்த லாபத்தை உண்டாக்குவதுண்டு.
"அரியும் சிவனும் ஒண்ணு;அறியாதவன் வாயிலே மண்ணு; என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது. இதிலே 'அறியாதவன்' என்பதில் வல்லின 'றி'யை இடையினமாக மாற்றி, 'அரியாதவன்' என்று சொல்வார்கள். 'ஹரி'யாகிய 'யாதவ'குலக் கண்ணன் என்று அர்த்தம். அவன் வாயிலே மண்ணைப் போட்டுக்கொண்டுவிட்டு யசோதைக்கு லோகம் முழுவதையும் காட்டினான் அல்லவா? அதைத்தான் ''அரி யாதவன் வாயில் மண்ணு" என்பது.
"ஸரி. அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லிவிட்டு, இப்படி ஒன்று - இவர்களிலே ஹரி லோகம் முழுவதையும் காட்டினவன் என்று - எதற்காகச் சொல்லவேண்டும்?"
எதற்காகவா? இதிலேயும் பெரிய தத்வம் இருக்கிறது. ஒரே பிரம்மம்தான் ஹரி, சிவன் இரண்டு பேரும். அதனாலே அவர்கள் ஒன்றேதான். ஆனால் அந்த ஒரே பிரம்மத்தை நிர்குணம், ஸகுணம் என்று இரண்டு நிலைகளில் நாம் பாவிக்க வேண்டியதாயிருக்கிறது. இந்த இரண்டில் லோக வ்யவஹாரம் அடிப்பட்டுப்போன நிர்குணம்தான் சிவன். லோக வ்யவஹாரத்தை நடத்தும் ஸகுணமே ஹரி. மண்ணைத் தின்று லோகம் முழுவதையும் தன் வாயில் அடங்கியிருப்பதாக அவன் காட்டினபோது இந்த உண்மையைத்தான் உருவகப்படுத்தியிருக்கிறான். 'அரி யாதவன் வாயில் மண்ணு' என்று சொல்லி இதை ஞாபகப்படுத்திவிட்டால், முதல் வரியில் சொன்ன 'அரியும் சிவனும்' என்பதில் விட்டுப்போன சிவன் நிர்குணம் என்பதையும் சொன்னதாகி விடுகிறது.
'றி'யை 'ரி'யாகக் கூட மாற்றாமல் 'அறியாதவன்' என்ற ஒற்றை வார்த்தையை 'அறி யாதவன்' என்று இரண்டாகப் பண்ணிக்கொண்டாலே போதும்!' அறி, யாதவன் வாயிலே மண்ணு' என்றாலே, 'அரியும் சிவனும் ஒண்ணானாலும் இவர்களில் யாதவனாக வந்து மண்ணைத் தின்னவன் ஸகுண ப்ரமம் என்று அறி; அதனால் இன்னொருவன் நிர்குணம் என்றும் அறி' என்று அர்த்தமாகிவிடும்.

ஓர் எழுத்தை எடுப்பதில் அர்த்த விநோதம்

ஒரே ஒரு எழுத்தை ஒரு ஸ்லோகத்தில் அது வருகிற இடங்களிலெல்லாம் எடுத்துவிடுவதால், நிந்தா ஸ்லோகமாக இருப்பது பெரிசாகப் புகழும் ஸ்தோத்ரமாக மாறி விடுகிறது.
"ஸீதா-ராவண ஸம்வாத ஜரீ"என்று சாமராஜ நகர் ராம சாஸ்த்ரி என்பவர் எழுதியிருக்கிறார். காசி சௌகம்பா ப்ரசுரத்தார் அச்சுப் போட்டிருக்கிறார்கள். அதில் பதினெட்டாவது ஸ்லோகம், ஸீதையும் ராவணனும் பேசிக் கொள்வதாக அமைந்திருக்கிறது ஸ்லோகம்.
ராவணன் ஸீதையிடம் ராமனை ஒரேயடியாக நிந்தித்து ஸ்லோக ரூபத்தில் திட்டுக்கிறான். அதற்கு பதிலாக ஸீதை,
" கல ! தம் அஸக்ருந்-மா ஸ்ப்ருச கிரா "
என்கிறாள். "போக்கிரியே! இப்படி அவரை உன் வார்த்தையால் திருப்பித் திருப்பித் தொடாதே! என்று அர்த்தம்; மேம்போக்கான அர்த்தம்.
'கல'- போக்கிரியே!' தம்'- அவரை;' கிரா'- வார்த்தையால்; 'அஸக்ருத்'- திருப்பித் திருப்பி; 'மா ஸ்ப்ருச'- தொடாதே!
ராவணன் வாயால் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியைப் பற்றி பேசுவது அவரை எச்சிலால் தொடுகிறாற்போல் ஸீதாதேவிக்கு அபசாரமாகப்பட்டது போலிருக்கிறது!
இது மேம்போக்கான அர்த்தம் என்றால், உள்ளே பூந்து (புகுந்து) பார்த்தால் என்ன அர்த்தம்? அப்போது, 'தம்'என்றால் 'அவரை' என்று அர்த்தமில்லை. 'தம் கிரா'என்றால் 'த என்ற எழுத்துள்ள வார்த்தையால்' என்று அர்த்தம் ஏற்படும். "போக்கிரியே! "என்று ராவணனைக் கூப்பிட்டு, "திருப்பித் திருப்பி 'த'காரம் உள்ள வார்த்தையால் (ராமரைத்) தொடாதே" என்பதாகப் பொருள் உண்டாகும்*.
அவன் ராமனை என்னென்னவோ நிந்தித்தானே, அந்த வார்த்தைகளில் 'த'நிறைய வருகிறது. "அந்த 'த'வை யெல்லாம் எடுத்துப்போட்டு விடு. போட்டுவிட்டுப் படித்துப் பார்த்தாயானால் தெரியும்" என்று உள்ளார்த்தம்.
அவன் சொன்ன நிந்தா ஸ்லோகம் என்ன?அதில் வருகிற 'த'காரத்தையெல்லாம் நீக்கிவிட்டால் அதன் அர்த்தம் என்னவாகும்?
அதல்பம் நித்ராளு : ரஜநிஷு குவாக் துர்கததம :
மஹா காதர்யாட்யோ மநஸி விதுத-ப்ரோஜ்வலயசா
வதாந் மாம்ஸாதாநாம் பஹூ விமதலாபௌ ஜனகஜே
கதம் ஸ்லோக்யோ ராம :
என்பது ராவணன் சொன்னது.
இதில் கடைசி வரியிலேயே ஸீதை சொன்ன பதிலும் சேர்ந்து, அது முழு வரியாகி ஸ்லோகம் பூர்த்தி அடைகிறது.
கதம் ஸ்லோக்யோ ராம : கல தம் அஸக்ருந் மா ஸ்ப்ருச கிரா **
ராவணன் சொன்னதற்கு என்ன அர்த்தமென்றால்:"ஏ ஜனக புத்ரியே! ராமன் ராத்ரியில் படுத்துக் கொள்கிறானே, அவனுக்கென்று ஒரு படுக்கை உண்டா? (பெரிய திண்டுகள் போட்டுக்கொண்டு ஏக போக்யங்களோடு காமுகனான ராவணன் சயனம் செய்ததை ஸுந்தர காண்டத்தில் வர்ணித்திருக்கிறது. ஸ்ரீராமரோ இந்த ஸமயத்தில் தபஸ்வியைப் போல ஜடாமுகடதாரியாக காட்டில் கட்டாந்தரையில் சயனம் செய்து வந்தார். அதைத்தான், 'ஒரு படுக்கைக்குக்கூட வக்கில்லாதவன்' என்று இடித்துக் காட்டுகிறான்.) ராமனுக்கு நல்ல வார்த்தை பேசவராது. (இவனிடம் சரணாகதி பண்ணி ஸமாதானமாகப் பேசி தூது அனுப்பாததால் இப்படிச் சொன்னான் போலிருக்கிறது! அல்லது இவனுக்கு நல்ல வார்த்தை பேசத் தெரியாததால் தர்மங்களையே ஸதாவும் பரம அன்போடு பேசிக்கொண்டிருப்பவரை இப்படித் தூற்றியிருப்பான்.) ராமன் தீன நிலையில் ரொம்ப ரொம்பக் கீழே போய்விட்டான். (பரதன் அர்ப்பணம் செய்த ஸாம்ராஜ்யத்தை வேண்டாமென்று தள்ளிவிட்டு, தானாகவே ஸத்யத்துக்காக வனவாஸத்தை மேற்கொண்டவரை, மனநிலையில் எப்போதும் ராஜாவாக இருந்தவரை இப்படிச் சொன்னான்.) ராமன் மஹா பயந்தாங்கொள்ளி. (இது முழுப் பொய்.) என்றைக்கோ ராஜ குமாரனாயிருந்தபோது அவனுக்குக் கொழுந்து விட்டெரிந்த கீர்த்தியெல்லாம் இப்போது போயே போய்விட்டது. ஏதோ சில ராக்ஷஸர்களை அசட்டுத்தனமாகக் கொன்று ஏகப்பட்ட விரோதிகளை ஸம்பாதித்துக் கொண்டுவிட்டான். இவன் எப்படி உயர்ந்தவனாவான்?"
'ராம:'- ராமன் ('ராம:'என்பது நாலாம் வரியில் வருகிறது.) 'ரஜநிஹு - இரவில்; 'அதல்பம்'-படுக்கை (கூட) இல்லாமல்; 'நித்ராளு:'- தூங்குகிறவன். 'குவாக்'- கெட்ட வாக்கே உள்ளவன். 'துர்கத தம:'- துர்த்தசையில் ஸ¨பர்லேடிவ் டிகிரிக்குப் போனவன்! 'மநஸி'- மனஸிலே; 'மஹா காதர்யாட்ய:'- ரொம்பவும் கோழைத்தனம் மண்டிக்கிடக்கிறவன். 'விதுத ப்ரோஜ்வல யசா:'- பெரிசாகப் பிரகாசித்த புகழெல்லாம் போய் விட்டவன். 'மாம்ஸாதானாம்'- மாம்ஸ பக்ஷிணிகளான ராக்ஷஸர்களை;' வதான்'- கொன்றதால்;' பஹு விமத லாபௌ'- மாறுபட்ட மனமுடையவர்களை (சத்ருக்களை) மிகவும் அதிகமாக்கிக் கொண்டுவிட்டவன். (இப்படிப்பட்டவன்) 'கதம்'- எப்படி; 'ச்லாக்ய:'- சிலாகிக்கத் தக்கவனாவான்? 'ஜனகஜே'- ஜனக புத்ரியே! (என்று ஸீதையைக் கூப்பிடுகிறான்.)
இந்த ஸ்லோகத்தில் ராமனைப் பற்றி அவன் சொல்லும் முதல் மூன்று வரிகளில் வரும் 'த'வை எல்லாம் எடுத்துவிட்டுப் பார்க்கலாம். ஆரம்ப 'அதல்பம்' என்பது 'அல்பம்' என்றாகும், இப்படியே 'துர்கததம'வில் இரண்டு 'த'காரமும் போய் 'துர்கம' என்றாகும்.
அல்பம் நித்ராளு : ரஜநிஷு குவாக் துர்கம :
மஹாகார்யாட்யோ மநஸி விது ப்ரோஜ்வல யசா :
வதான் மாம்ஸாதாநாம் பஷுவிமலபௌ.....

இதற்கு என்ன அர்த்தம்? "ராமர் ராத்ரியில் ரொம்பவும் ஸ்வல்பமாகவே தூங்குகிறவர். (லோகத்தில் திருட்டுப் புரட்டு இல்லாமல் ரக்ஷிக்க வேண்டிய ராஜ வம்சத்தினர் மிகவும் குறைவாகவே தூங்க வேண்டும் என்பது சாஸ்த்ர லக்ஷணம். தூக்கத்தை ஜயித்தாலேயே அர்ஜுனனுக்கு 'குடாகேசன்' என்று ஒரு பேர். 'குடாகம்' என்றால் தூக்கம், சோம்பேறித்தனம்.) கெட்டவார்த்தையால் அண்டவே முடியாதவர். ("நீ சொன்ன நிந்தை மொழிக்கு அவர் எட்டாதவர்" என்று ஸீதை சொல்லாமல் சொல்கிறாள். அவன் 'குவாக்', 'துர்கதம' என்று இரண்டு வசவுகளைச் சொன்னான். இப்போது அது 'குவாக்-துர்கம' என்பதாக ஒரே பாராட்டு வார்த்தையாகிறது. 'கெட்ட வாக்கால் எட்ட முடியாதவர்' என்று அர்த்தம்.) பெரிய கார்யங்களைப் பற்றிய ஸங்கல்பங்கள் நிறைந்த மனமுள்ளவர். (இன்னாருக்கு சிக்ஷை ,, இன்னாருக்கு ரக்ஷை இப்படியிப்படி தர்மங்களை நிலை நிறுத்திக் காட்டணும் என்று லோகத்தையே தழுவுவதாக பகவதவதாரத்துக்கு உரிய பெரிய ஸங்கல்பங்களைக் கொண்டவர்.) சந்திரன் எப்படி ஸகலர் மனஸையும் கண்ணையும் குளிரப் பண்ணிக் கொண்டு எங்கேயும் கீர்த்தியோடு இருக்கிறானோ அப்படியிருப்பவர். ராக்ஷஸர்களைக் கொன்றதால் ரொம்பவும் தூய்மையான பிரகாசத்தைப் பெற்றுவிட்டவர்"- இப்படி அர்த்தம் ஒரே ஸ்தோத்ரமாய் மாறிவிடுகிறது.
'ரஜநிஷு அல்பம் நித்ராளு:'- இரவில் ஸ்வல்பமே தூங்குபவர். 'குவாக் துர்கம:'- கெட்ட வாக்கால் அண்டுதற்கரியவர். 'மநஸி மஹா கார்யாட்ய:'- மனஸில் பெரிய கார்யங்கள் நிரம்பியிருப்பவர். 'விது ப்ரோஜ்வல யசா:'- சந்திரன்போல ஜ்வலிக்கின்ற புகழை உடையவர். 'மாம்ஸாதாநாம் வதாந்'- ராக்ஷஸர்களை வதம் செய்ததால்;'பஹுவிமலாபௌ (பஹ§விமல ஆபௌ) '- மிகவும் நிர்மலமான ப்ரகாசம் பெற்று விட்டவர். ('ஆபா' என்றால் ப்ரகாசம்.)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
* ஸம்ஸ்க்ருதத்தில் 'த'விலேயே நான்கு வித ஒலிகள் இருப்பதில் முதலான 'த' மட்டும் இங்கு குறிப்பிடப்படுகிறது.


No comments:

Post a Comment