Thursday, April 2, 2015

Narasimha nakha stuthi


Courtesy:Sri.Kaliyan Ponnadi

அழகியானுடைய நகக்கண்களுக்கு மங்களாசாஸனம்.

II ஸ்ரீநரசிம்ஹ நகஸ்துதி: II

பாந்த்வஸ்மாந் புருஹுதவைரிபலவ ந்மாதங்க மாத்யத்கடா-
கும்போச்சாத்ரிவிபாடநாsதிகபடுப்ரத்யேக வஜ்ராயிதா: I
ஸ்ரீமத்கண்டீரவாஸ்யப்ரததஸுநகரா தாரிதாராsதிதூர-
ப்ரத்வஸ்தத்வாந்தஸாந்தப்ரவிததமநஸா பாவிதா நாகிவ்ருந்தை: II 1 II

லக்ஷ்மீகாந்த ஸமந்ததோsபி கலயந் நைவேஸிதுஸ்தே ஸமம்.
பஸ்யாம்யுத்தமவஸ்து தூரரதோ sபாஸ்தம் ரஸோ யோsஷ்டம: I
யத்ரோஷோத்கரதக்ஷ நேத்ரகுடிலப்ராந்தோத்திதாsக்நி ஸ்புரத்-
கத்யோ தோபவிஸ்புலிங்கபஸிதா ப்ரஹ்மே ஸஸக்ரோத்கரா: II 2 II


நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருக்கிறது. சிலர் தொலைக்காட்சி பார்த்துத் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள் - இன்னும் சிலருக்கு விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு - வேறு சிலருக்கு ஊர் சுற்றுவது ஒரு பொழுதுபோக்கு.... இலங்கையின் அரசனான இராவணனுடைய பொழுதுபோக்கைக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள்.... ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் வம்புச் சண்டைக்குப் போய், அவர்களோடு மோதி ஜெயித்துவிட்டு வருவது தான் இலங்கேஸ்வரனான இராவணனின் பொழுதுபோக்கு. 

அப்படித்தான் அன்று, "யாரோடு போய் மோதிவிட்டு வரலாம்?" என்று தம் அடிப்பொடிகளுடன் ஆலோசனை நடத்தினான் இராவணன். ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். இறுதியில், "பாதாளலோகத்தில் மஹாபலிச்சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாராமே! - அவரோடு இன்று வம்புச்சண்டைக்குப் போகலாம்" என்று முடிவெடுத்தார்கள். இலங்கையிலிருந்து இராவணனின் படை பாதாளலோகம் நோக்கிப் புறப்பட்டது.

மஹாபலிச்சக்கரவர்த்தி பிரஹலாதனின் வழிவந்தவர் ஆவார். ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி இரண்யவதம் நிகழ்த்தியபோது, அருகிலிருந்த பிரஹலாதனை அழைத்து, "இனி உன் தலைமுறையில் யாரையும் கொல்லமாட்டேன்" என்றே வரம் தந்தார். எனவே எம்பெருமான் வாமன அவதாரம் நிகழ்த்தியபோது, பிரஹலாதனின் வழித்தோன்றலான மஹாபலிச்சக்கரவர்த்தியை சம்ஹாரம் செய்யாமல், அவரைப் பாதாளலோகத்துக்கு அரசனாக்கி வைத்தார். மேலும், "அப்பாதாளலோகத்தில் நானே வந்து காவல் செய்வேன்" என்றும் கூறி பாதாளலோகத்தைக் காவல் செய்துவந்தார் எம்பெருமான்.

அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே காவல்காத்து நிற்கும் பாதாளலோகத்துக்குத்தான் அன்றைக்கு வம்புச்சண்டை போடவேண்டித் தேடிவந்தான் இராவணன். வாசலில் காவல்நிற்கும் எம்பெருமானைப்பார்த்து, "மஹாபலியைக்காண இலங்கேஸ்வரன் வந்திருக்கிறேன் - என்று போய்ச்சொல்" என்று விரட்டினான் இராவணன். எம்பெருமானும் மஹாபலியிடம் அனுமதி பெற்று இராவணனை உள்ளே அனுப்பினார். 

இராவணனைப் புன்சிரிப்போடு வரவேற்ற மஹாபலி, "இராவணா!... என்னோடு நீ சண்டையிடுவதற்கு முன் அதற்கான தகுதி உனக்கு இருக்கிறதா? - என்று நான் ஆராய்ந்து பார்க்கவேண்டும் ; முதலில் அதோ! அங்கிருக்கும் பொருளைத் தூக்கிக்காட்டு.... அவ்வாறு அப்பொருளை நீ தூக்கிவிடும்பட்சத்தில் நான் உன்னோடு சண்டைக்கு வரத் தாயாராக இருக்கிறேன்" என்றார். 

இராவணன் அலட்சியமாக நடந்துசென்று அப்பொருளைத் தூக்க முயன்றான் ; அது நகரவே இல்லை. பின் சுதாரித்துக்கொண்டு, தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து அப்பொருளைத் தூக்க முயன்றான். அது சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. தொடர்முயற்சிகளால் வியர்த்து, விறுவிறுத்துப் பின் சோர்ந்துபோனான் இராவணன். பொறுமையிழந்த நிலையில், "இது என்ன பொருள்?" என்று மஹாபலியைப் பார்த்துக் கேட்டான் இராவணன். 

"அப்படிக்கேள் இராவணா!" என்று கூறி இடிஇடியெனச் சிரித்தார் மஹாபலிச் சக்கரவர்த்தி. "அது ஒன்றுமில்லை இராவணா!.. முன்பு ஒருமுறை எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், நரசிம்ஹ அவதாரம் எடுத்து என்னுடைய பாட்டனாராகிய இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தாரல்லவா! அப்படி சம்ஹாரம் செய்யும் முன்பாக, இரண்யகசிபுவைத் தன் தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்துப் பலமுறை பலசுற்று சுற்றினார் ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி.... அவ்வாறு சுற்றியபோது, என் பாட்டானார் தன் காதில் அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதி கீழே தெரித்து விழுந்துவிட்டது. என் பாட்டனார் நினைவாக அதனைப் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன் ; அதைத்தான் தற்போது உன்னைத் தூக்கச் சொன்னேன்" என்று விலாவாரியாகச் சொன்னார் மஹாபலி. 

இராவணன் பயத்தில் வெலவெலத்துப் போனான். அடிப்பொடிகளைக் கூட்டிக்கொண்டு இலங்கைக்கு ஓட்டம் பிடித்தான். 

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ஹ அவதாரம் எடுக்கப் புறப்பட்ட காலத்தில், அவரோடு கூடவே - சங்கு, சக்கரம் முதலான அவரது திவ்ய ஆயுதங்களும் புறப்பட்டன. அவைகளுக்கெல்லாம் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார் ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தி.... "நான் புதுமையான அவதாரம் நிகழ்த்தப் போகிறேன் - இந்த அவதாரத்தில் எனது நகக்கண்களே எனக்கு ஆயுதம்" என்று முடிவெடுத்தார் ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி. 

இரண்யகசிபு அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதியின் வைபவத்தை விலாவாரியாகப் பார்த்தோம். அக்கடுக்கனின் கதையே இப்படியென்றால் இரண்யகசிபுவின் வல்லமையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இரண்யனின் உடலைத் தன் மடியிலே கிடத்தி, தன் விரல் நகத்தினாலே கீண்டு அவனை சம்ஹாரம் செய்தார் நரசிம்ஹ மூர்த்தி ; என்று சொன்னால் நம் அழகியானுடைய பலத்தை என்னவென்று சொல்வது?.... இந்த பலத்தைக் கண்டு தேவர்களெல்லாம் "அகோபலம்.... அகோபலம்..." என்று முழங்கினார்கள். அப்பெயரே ஆந்திர தேசத்திலுள்ள திவ்யதேசத்தின் திருப்பெயராயிற்று....

இத்துணை பெருமை வாய்ந்த ஸ்ரீநரசிம்ஹஸ்வாமியின் நகக்கண்களை, "வள்ளுகிராளன், கூருகிராளன், வாளுகிர்ச்சிங்கம்" என்றெல்லாம் மங்களாசாஸனம் செய்துள்ளார் திருமங்கை ஆழ்வார். (உகிர்-நகம்)

துரைப்பெரும்பாக்கத்தில் நித்யவாசம் செய்யும் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ஹஸ்வாமியுடைய நகக்கண்களை திருமேனியில் கவசம் சாத்தியுள்ளதால் நாம் சேவிக்க முடியாது. ஆனால் அழகியான் சன்னிதியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஸ்வாதி மஹோத்ஸவ தினத்தன்று, திருமஞ்சனம் நிகழும் காலத்தில் அவனது நகக்கண்களைக் கண்குளிரக்கண்டு, ஸ்ரீநரசிம்ஹ நகஸ்துதிஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ஹ ஸ்வாமி(அழகியான்) உடைய நகக்கண்களை மங்களாசாஸனம் செய்வோம். 





No comments:

Post a Comment