மருத்துவச் செலவுகளுக்காவது இந்தப் பணம் உதவுமே: நாம சங்கீர்த்தன கலைஞர்களை காக்கும் கல்யாணராமன்"
உடையாளூர் கல்யாணராமன் - நாம சங்கீர்த்தனம் என்னும் பஜன் பாடல்களை பாடுவதில் பிரபலமானவர் என்பது இசைப் பிரியர்களுக்குத் தெரியும். ஆனால், நலிவடைந்த இசைக் கலைஞர்கள் பலரை அவர் வாழவைத்துக் கொண்டிருக்கிறார் என்பது இசை உலகம் அவ்வளவாக அறியாத ஒன்று. 'பாகவதர் சேவா டிரஸ்ட்' என்ற அமைப்பின் மூலம் நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
டிரஸ்ட் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? அதுகுறித்து கல்யாணராமனே விளக்குகிறார்..
``17-ம் நூற்றாண்டில் அவதரித்த மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் இந்த உலகத்துக்குத் தந்தது நாம சங்கீர்த்தனம். இதில் சமஸ்கிருதம் மாத்திரமல்ல; தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட எல்லாமே இருக்கிறது. கலியுகத்தில் சாதி, மத, இன, மொழி பேதங்கள் இல்லாமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதைத்தான் நாம சங்கீர்த்தனம் வலியுறுத்துகிறது. கடவுளின் பெயரைச் சொல்லி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழிகளிலும் இதைப் பாடமுடியும். இது பக்தியை பரப்புவது மட்டுமின்றி, பெரியவர்களை மதித்தல், தர்ம சிந்தனையை வளர்த்தல் உள்ளிட்ட நற்பண்புகளையும் நமக்குச் சொல்லித் தருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாம சங்கீர்த்தனத்தைப் பாடும் இசைக் கலைஞர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள். நாம சங்கீர்த்தனம் பாடும் மூத்த கலைஞர்கள் பலர் நலிவுற்ற நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்று சிந்தித்தேன். அவர்களுக்கு உதவுவதற்காக 'பாகவதர் சேவா டிரஸ்ட்' என்ற அமைப்பை உருவாக்கினேன். இந்த அமைப்பின் மூலம் 50 வயதைக் கடந்த நாம சங்கீர்த்தன இசைக் கலைஞர்களுக்கு உதவித் தொகை அனுப்பினோம்.
தொடக்கத்தில் பத்துப் பேருக்கு மாதம் ரூ.500 வீதம் உதவித் தொகை அனுப்ப ஆரம்பித்தோம். இப்போது அந்த எண்ணிக்கை அறுபதாக வந்து நிற்கிறது. இந்த 60 பேருக்கும் இப்போது மாதம் ரூ.1,250 உதவித் தொகை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் இந்தத் தொகையை வைத்து அவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்துகொள்ள முடியாது என்றாலும், வயதான கலைஞர்களின் மருத்துவச் செலவுகளுக்காவது இந்தப் பணம் உதவுமே என்ற நல்லெண்ணத்தில்தான் இதை நாங்கள் விடாது செய்து கொண்டிருக்கிறோம்.
இதற்காக நாங்கள் யாரிடமும் வசூலுக்குப் போவதில்லை. என்னுடைய கச்சேரி நடக்கும் சபாக்களில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவுவது குறித்த எங்களது முயற்சியை எடுத்துச் சொல்வோம். இசைப் பிரியர்கள் தங்களால் ஆன உதவியைச் செய்வார்கள். அதைக் கொண்டும் எனது வருமானத்தில் இருந்தும் இன்னும் பல நண்பர்களின் உதவியோடும் இந்தச் சிறு சேவையை செய்து கொண்டிருக்கிறேன்.
இதுமட்டுமில்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை சென்னை கிருஷ்ண கான சபாவில் நடக்கும் விழாவில் மூத்த நாம சங்கீர்த்தன கலைஞர்களை அழைத்து கவுரவப்படுத்துகிறோம். எங்களுடைய கவலை எல்லாம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நாம சங்கீர்த்தனக் கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் காக்கப்பட வேண்டும் என்பதுதான்..'' உள்ளார்ந்த அக்கறையுடன் சொல்கிறார் கல்யாணராமன்.
No comments:
Post a Comment