Thursday, January 22, 2015

Qualities of Bhagavatha

Courtesy: Sri.Ramani Ramaswamy

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே 
ஹே நாத நாராயண வாஸுதேவ

த்ருணாதபி ஸுநீசனே தரோரபி ஸஹிஷ்ணுனா !
அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி : ....கிருஷ்ண சைதன்யர்

ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவன் எப்படி இருக்கவேண்டும் ? 
மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ?

கிருஷ்ண சைதன்யர் : பாகவதனாக ஆக விரும்புபவன் முதலில் இரு குருவை அனுஷரிக்கவேண்டும். ஒன்று துரும்பு, இரண்டு வ்ருக்ஷம்.

துரும்பினிடம் வினயத்தை தீக்ஷையாகப் பெறவேண்டும். துரும்பு எப்போதும் அனைவரது காலடியிலுமே கிடக்கிறது. தயாளுவான யாரவது அதைத் தூக்கி ஆகாசத்தில் வைத்தாலும் அது மீண்டும் முன்போலவே பூமியிலேயே வந்து விழுந்து விடுகிறது. அது கனவிலும் யார் தலை மீதும் ஏறமுயலாது.

அடுத்த குருவான மரங்களிடம் ஸஹிப்புத் தன்மையை தீக்ஷையாகப் பெறவேண்டும். அழகிய மரங்களின் வாழ்க்கை பரோபகார மயமாகவே இருக்கிறது. அது சிறுதும் பேத பாவமின்றி அனைவரிடமும் ஸமபுத்தியுடன் சேவை செய்கிறது. யார் வேண்டுமானாலும் அதன் இனிய குளிர்ந்த நிழலில் இளைப்பாறி தனது வெம்மையைப் போக்கிகொள்ளலாம். அதன் கிளைகளை வெட்டுகிறவனுக்கும் அது குளிர் நிழலையே தருகிறது. அதை நீருற்றி வளர்ப்பவனுக்கும் அதே நிழலைத்தான் தருகிறது. அதற்க்கு சத்ரு, மித்ரன் அனைவரும் ஒன்றுதான். அதனருகில் செல்பவன் யாராயிருந்தாலும் அதன் பூக்களின் நறுமணத்தை நுகர முடியும். அதனிடம் கோந்து வேண்டுமானாலும் சேகரிக்கலாம். அதன் பழுத்த, பழுக்காத கனிகளை யார் வேண்டுமானாலும் பறிக்கலாம். அது யாரையும் எதிர்த்து தடுக்காது. துஷ்ட சுபாவமுள்ளவன் கல்லால் எறிந்தாலும் அது அவர்களிடம் கோபம் கொள்வதில்லை மாறாக அதனிடம் பழுத்த பழமிருந்தால் முதலில் அடித்தவனுக்குத்தான் தருகிறது. நன்கு பழுத்த பழம் இல்லாவிட்டால் செங்கனியையாவது கொடுத்துத் தன்னை அடித்தவர்களிடமும் தன் ப்ரேமையையே காட்டுகிறது. துஷ்ட சுபாவமுள்ளவர்கள் அதன் நிழலில் அமர்ந்து இளைப்பாறுகின்றனர். பிறகு அதன் கிளைகளை வெட்ட விளைகின்றனர். அது சிறுதும் எதிர்ப்பின்றி தனது சரீரத்தை வெட்டிக் கொடுத்து அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்கிறது. ஆகவே மரமாகிய இந்த குருவிடம் பொறுமை, ஸஹிப்புத் தன்மையை கற்றுக் கொள்ள வேண்டும்.

கெளரவம் என்பது கானல் நீர். எனவே கௌரவத்திற்காக அலைபவன் தாகமெடுத்த மான் போல் இங்கும் அங்கும் அலைந்து துடித்து பிராணனை விடுகிறான். எனவே ஹரி பக்தர்கள் ஒரு போதும் கௌரவத்திற்காக ஆசை படக்கூடாது. ஆனால் மற்றவர்களுக்கு எப்போதும் மதிப்பளித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஸம்மான ரூபமான ஸம்பத்தின் குறைவற்ற சுரங்கத்தை பகவான் நமது ஹ்ருதயத்தில் கொடுத்து வைத்திருக்கிறான். செல்வமிருப்பவன், அதை தேவைப் படுபவனுக்குக் கொடுக்க மறுக்கிறான். இதனால் அவன் கருமி எனப்படுகிறான். எனவே ஸம்மான ரூபமான ஸம்பதுடையவன் அதை கொடுப்பதில் கஞ்சத்தனம் செய்யலாகாது. பரம உதார குணத்தோடு இருகரங்களாலும் வாரி வழங்கு. உன்னிடம் கௌரவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு மதிப்பளிக்கத் தவறாதே. உனது இந்த உதாரகுணத்தால் ஸர்வாந்தர்யாமியான ஸ்வாமி பெரிதும் உகந்து மகிழ்வடைவான். அனைவரிடமும் ப்ரியனான ஸ்வாமியையே காண்பாயாக! அனைவரையும் அவன் திருவுருவாகக் கருதி வினயத்தோடு நமஸ்கரிப்பாயாக!. இவ்வாறு இருந்து கொண்டேபகவானின் திவ்ய நாமங்களை கீர்த்தனம் செய்.

இந்த ரம்யமான மாலை பொழுதில் அதுவும் ஸ்ரீஹரிக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் பக்தியையே பிரதானமாகக் கருதிய கிருஷ்ண சைதன்யரின் திருவடிகளை நமஸ்கரித்து நாம சந்கீர்தனத்தை தொடங்குவோம்

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே 
ஹே நாத நாராயண வாஸுதேவ

No comments:

Post a Comment