செவிக்கு அணிகலன் (கந்தர் அந்தாதி-26) செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்ட கன்மச் செவிக்குன்ற வாரண வேலாயு தஞ்செற்ற துற்றனகட் செவிக்குன்ற வாரண வள்ளிபொற் றாண்மற்றென் றேடுவதே. அருணகிரியார் வில்லிபுத்தூராருடன் போட்டியிட்டுப் பாடிய கந்தர் அந்தாதி நூலின் 26ஆவது செய்யுள் இது. இச்செய்யுளைப் பின் வருமாறு பிரித்துப் படிக்க வேண்டும். செவிக்கு உன் தவா ரண நல்கு இசை பூட்ட, வன்சிந்தை அம்பு செ வி குன்ற, வாரணம் அஞ்சல் என்று ஆண்டது. நீண்ட கன்ம செ இக்குன்று அவா ரண வேலாயுதம் செற்றது. உற்றன, கட் செவி குன்ற! வாரண வள்ளி பொற்றாள், மற்று என் தேடுவதே.
பதவுரை: கட்செவி குன்ற! கண்ணையே செவியாகக் கொண்ட பாம்பின் உருவமுடைய திருச்செங்கோட்டு மலையில் விளங்கும் முருகப் பெருமானே! - செவிக்கு- எனது செவிக்கு (ஆபரணமாக)
- உன் தவா ரண- உனது தவிராத உரிமையை
- நல்கு- கொடுக்கும்
- இசை பூட்ட- திருப்புகழை அணிவிக்க
- வன் சிந்தை- வலிய என் இதயமாகிய
- அம்புசெ- தாமரையிலிருக்கும்
- வி- பறவையான ஆன்மா
- குன்ற- வருந்தும்போது
- வாரணம்- உனது கொடியிலிருக்கும் கோழி (தோன்றி)
- அஞ்சல் என்று- அஞ்சாதே என்று
- ஆண்டது- என்னை ஆட்கொண்டது
- நீண்ட கன்மசெ- பெரியதான முன் வினையால் வரும் பிறவிக்கு வித்தாகிய
- இக்குன்று அவா- மலை போன்று குவிந்துள்ள ஆசையை
- ரண வேலாயுதம்- போர் புரிகின்ற உனது வேலாயுதமானது
- செற்றது- வென்று விட்டது.
உற்றன வாரண வள்ளி பொற்றாள்- தெய்வயானை, வள்ளி ஆகிய இரு தேவியருடைய பொற்பாதங்கள் என் தலை மேல் வந்து வீற்றன.
மற்று என் தேடுவதே- இனி நான் தேடிச் செல்ல வேறு என்ன உள்ளது? (ஒன்றுமில்லை).
[வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் தமது மானச பூசை பாராயண நூலில் பூரண அனுக்கிரகம் பெற்ற நிலைக்குச் சான்றாக இப்பாடலைக் குறிப்பிட்டுள்ளார்.]
கருத்துரை: செங்கோட்டு வேலவனே! உன் திருப்புகழைக் கேட்டதுமே உனது கொடியிலுள்ள கோழி என் ஆன்மாவை ஆண்டுகொண்டது. பிறவிக்கு வித்தாகிய ஆசை என்னும் குன்றை உன் வேலாயுதம் அழித்தது. உன் இரு தேவியரின் பொற்பாதங்கள் என் தலை மேல் வந்தமர்ந்தன. வேறு நான் தேடுவதற்கு இனி ஒன்றுமேயில்லை.
சித்ரா மூர்த்தி சென்னை
சித்ரா மூர்த்தி, சென்னை |
|
No comments:
Post a Comment