Tuesday, November 4, 2014

Krishnan & gokulashtami

courtesy: Sri.GS.Dattatreyan

அவனைப் பற்றிய எல்லாமே மதுரம் தான் " மதுரா நாதன் பற்றி மகாபெரியவர் !!!
கோகுலாஷ்டமி 17-08-2014-பெரியவா சொன்ன கண்ணன்)
(இன்று 

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயனத்தில்ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று நடுநிசியில் பிறந்தார்.

நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள்.
நமக்கு உத்தராயணம் அவர்களுக்கு பகல்.
தக்ஷிணாயணம் அவர்களுக்கு ஒரு இரவு.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகிறது. இம்மாதிரியே நம்முடைய ஒரு மாதம் பித்ருகளுக்கு ஒரு நாள் ஆகிறது.

நமது சுக்ல பக்ஷம் அவர்களுக்கு பகல், க்ருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது.

அஷ்டமி திதி நடுவில் வருவதால் அன்று அவர்களுக்கு நடுநிசி பொழுது ஆகிறது. இதனால் என்ன ஏற்படுகிறது, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் எல்லா தினுஸிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம்.

ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருட்டு நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரகாலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை. அவருடைய பெயரும் கிருஷ்ணன்.

கிருஷ்ண என்றால் கருப்பு என்று பொருள்.அவனுடைய மேனியும் கருப்பு. இப்படி ஒரே கருப்பு மயமான ஸமயத்தில் தானும கருப்பாக ஆவிர்பவித்தாலும் அவனே ஞானஒளி.

காளமேகங்களுக்கு இடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றியதான ஒளி.

ஞான ஒளி ஆதலால் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக்கொண்டு இருக்கிறது.அஞ்ஞானத்தால் இருண்டு இருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும்.

உடலுக்கு ஒளி அளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கு எல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன்.

தென்நாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான்.அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது.

அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்ககள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத்பாகவதம் புரான சிரேஷ்டமாக விளங்குகிறது.

அவனைப்பத்தின அத்…தனையுமே மதுரந்தான்!" தன்னுடைய மதுரமதுரக் குரலில், மதுரமான சிரிப்போடு மதுராநாதனைப் பற்றி பெரியவா சொன்னார்….

"அவன் பொறந்ததே மதுரைல. நம்ம பாண்ட்யதேசத்து மதுரை இல்லே! இங்கே மதுரமயமா அம்பாள் இருக்கா……அவகிட்டேர்ந்துதான் சங்கீதம் பொறந்தது. நான் சொன்னது வடமதுரை. அங்கே அவன் பொறந்த ஒடனேயே அப்பாக்காரர் வஸுதேவர் கொழந்தையை தூக்கிண்டு கோகுலத்துல கொண்டு போயி விட்டுட்டார். யமுனையோட மேலக்கரைல கோகுலம்; பிருந்தாவனம்..ல்லாம் கீழக்கரை. ஆத்துல அளைஞ்சுண்டே தாண்டிப்போய் கோகுலத்ல யசோதைக்கு பக்கத்ல விட்டுட்டு, அப்பத்தான் அவளுக்கு பொறந்திருக்கற பொண் கொழந்தையை தூக்கிண்டு ஜெயிலுக்கு திரும்ப போய்ட்டார்….இங்கே எல்லாமே திருட்டு மயம்.." பெரிதாக சிரித்தார்.

…."அங்க ஜெயில் காவலாளிகளுக்கு தெரியாம திருட்டுத்தனமா வெளில வந்தது, இங்க கோகுலத்ல ப்ரஸவிச்சவளுக்கும் சரி, ப்ரஸவம் பாத்தவாளுக்கும் சரி, பொறந்தது பொண் கொழந்தைன்னோ…அதுக்கு பதில புள்ளைக்கொழந்தையை வஸுதேவர் வெச்சுட்டு போனதோ, தெரியாது! இங்கேயும் திருட்டுத்தனம்! க்ருஷ்ணன்..ன்னாலே ஒரே திருடு.ங்கறோமே! வெண்ணையையும் திருடினான்….மனசையும் திருடினான்! நவநீத சோரன், சித்த சோரன்…ங்கறோமே…..அவனுக்கு அந்த திருட்டு புத்தி எப்டி வந்துதுன்னா…..அவனோட அப்பா அவன் பொறந்த ஒடனேயே பண்ணின திருட்டுத்தனந்தான், அவனுக்கும் பிதுரார்ஜிதமா வந்துடுத்துன்னு தோண்றது!…" கண்ணனின் திருட்டில் ஊறிய புன்னகை பெரியவா முகத்தில் சோபை பெற்றது…….தொடர்ந்தார்….

"ஆனா, அப்டி நெனைக்கறது செரியில்லே! சும்மாக்காக வேடிக்கை பண்ணினேன். வஸுதேவர் பாவம், ஸாது! கொஞ்சங்கூட திருட்டுபொரட்டே தெரியாதவர்! அவரை திருட்டுத்தனம் பண்ணப் பண்ணினதே இந்தக் கொழந்தைதான்! அது பொறந்த ஒடனேயே காவலாள்ளாம் மயக்கம் போட்டா மாதிரி தூங்கினதாலதான் அவர் ஜெயில்லேர்ந்து தப்பிச்சு போக முடிஞ்சுது…ஜெயில் பூட்டு தானா தொறந்துண்டது……அங்க கோகுலத்துலேயும் எல்லாரும் தூங்கி வழிஞ்சதாலதான் அவர் கார்யத்தை சௌகர்யமா முடிக்க முடிஞ்சுது. இதெல்லாம் பாவம் அந்த அப்பாவி மனுஷரா பண்ணினார்? அவருக்கு பிள்ளையா வந்தானே ! ஒரு அப்பன்! அவன்தான் இத்தனையும் மாயாவித்தனமா பண்ணினது!

அயோத்திக்கப்புறம் சப்த மோக்ஷபுரில, மதுரா இருக்கு. அவன் அவதாரம் பண்ணின ஊருக்கே அவனோட ஸ்வபாவம் இருக்கே! க்ருஷ்ணன்..ன்னா என்ன? மதுரந்தான்! தித்திப்புன்னா….தித்திப்பு! அப்டியொரு தித்திப்பு அவன்! மதுரம்ன்னு சொல்லறச்சே கூட "dhu "கொஞ்சம் கடுமையா இருக்கு. இன்னும் நைஸா "ஸ்வாது"ன்னும் ஒரு வார்த்தை இருக்கு. "ஸ்வாது" லேர்ந்துதான் "ஸ்வீட்" வந்தது…..இப்போ, நான் ஒரு விஷயம் செரியா சொல்லலைனா….கொஞ்சம் apologise பண்ணிக்கறா மாதிரி சரி பண்ணிக்க பாத்தேனோல்லியோ?…கிருஷ்ணனா இருந்தா, அப்டி பண்ண மாட்டான்! அவன் பண்ணறதுல… ஸரி, ஸரியில்லை..ங்கற ரெண்டே கெடையாது! அந்த வார்த்தைகளே அவனோட அகராதியில ஏறாது! அவன் பண்ணற சகலமும் மதுரம், மதுரம்…ங்கற ஒண்ணுதான்! மத்தவா பண்ணினா ஸரியில்லாததெல்லாங்கூட அவன் பண்ணறப்ப, மதுரந்தான்! இதை நெனைச்சுத்தான் பரம பக்தரான ஸ்ரீ வல்லபாச்சார்யார்… ங்கறவர் "மதுராதிபதே அகிலம் மதுரம்"..ன்னு பாடி வெச்சுட்டுப் போய்ட்டார்."

No comments:

Post a Comment