Friday, October 17, 2014

Sthree dharmam

Courtesy: Sri.PAV.Sundaram

திலக தாரணம்
அலக்ஷ்மீகரமானதற்கெல்லாம் பூர்ணகும்பம் வைத்துக் கூப்பிடுவதாக் இப்போது பல நடந்து வருவதில் இன்னொன்று, பெண்கள் முறையாகத் திலக தாரணம் பண்ணிக் கொள்ளாமலிருப்பது. கன்யாக் குழந்தைகளுக்கும் ஸுமங்கலிகளுக்கும் திலகம் இட்டுக் கொள்வதை அத்யாவச்யமான அலங்காரமாக நம் ஆசாரத்தில் விதித்திருக்கிறது. அது முகத்துக்கே ஒரு சோபையைக் கொடுப்பதோடு சுபமான சக்திகளை வரவழைத்துத் தருவது 'ப்ரூகுடி' என்ற புருவ மத்தியில் யோக சாஸ்த்ர சக்ரங்களில் ஒன்று இருக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்தி 'கான்ஸென்ட்ரேட்'  பண்ணுவதற்கு அந்த இடத்திலேதான் நம்முடைய த்யான லக்ஷ்யத்தை வைத்துப் பார்ப்பார்கள். 'ஸரியாக அந்த இடத்தில் திலகம் இட்டுக் கொள்வது நம்மிடமுள்ள நல்ல சக்திகள் வ்ரயமாகாமல் மூடி போட்டுக் காப்பாற்றுகிறது; energy band -ஐ protect பண்ணுகிறது' என்று இந்த நாள் அறிவாளிகளும் சொல்கிறார்கள்.

நல்ல மஞ்சள் குங்குமந்தான் நெற்றிக்கு இட்டுக் கொள்வதற்கானது. ஸுமங்கலிகள் புருவங்களுக்கு மத்தியில் இட்டுக் கொள்வதோடு, அதைவிட முக்யமாக வகிட்டிலும் இட்டுக்கொள்ளவேண்டும். அதுவே பரம ஸெளபாக்யம், ஸுமங்கலிகளின் வகிடு மஹாலக்ஷ்மியின் வாஸ ஸ்தானங்களில் ஒன்று. அம்பாளே தன்னுடைய வகிட்டில் செக்கச் செவேலென்று ஸூர்யோதய ரேகை மாதிரிக் குங்குமம் இட்டுக்கொண்டிருந்ததை ஆசார்யாள் 'ஸெளந்த்ர்ய லஹரி'யில் பாடியிருக்கிறார்.

கன்யாக் குழந்தைகள் சாந்தும் இட்டுக் கொள்ளலாம். அகத்திலேயே அரிசியைக் கருக்கிப் பண்ணிய கருப்புச் சாந்து. கடையிலே கலர் கலராக விற்கிற பொட்டுக்களை வாங்கி ஒட்டிக்கொள்வது அடியோடு தப்பு, அந்தப் பொட்டை சர்மத்தோடு ஒட்டச் செய்கிற கெமிகலோ, எதுவோ ஒன்று அநாசாரமானதாகவே இருக்கும். அதனால் நாளடைவில் சர்மவியாதி ஏதாவது உண்டானாலும் உண்டாகலாம். ஜெலாடினாக அது இருக்குமானால் அதில் மாட்டுக் கொழுப்புக் கூட இருக்கக்கூடும். இப்படி இருந்தால் பரம மங்களமான திலக தாரணம் என்பதே பசுவதைக்கு உடந்தையாக இருக்கிற மஹா பாபம் வரை கொண்டு நிறுத்துவதாக ஆகிவிடும்.

ஸ்த்ரீத்வம் பழுப்பதற்கேற்ற வெளித்தோற்றம்.
இன்னவென்று define பண்ண முடியாமல் மங்களம், லக்ஷ்மீகரம் என்பதாக ஒன்று மனஸை ஒருவித அழகினால் பரிசுத்தப்படுத்தி, ஸந்தோஷிப்பிப்பதாக இருக்கிறது. கன்னிகைகளும் ஸுமங்கலிகளும் அதைப் பரப்பவே ஏற்ப்பட்டவர்கள். வஸ்திரம், தலைப்பின்னல், கொண்டை, திலகம் எல்லாம் அதை வளர்த்துக் கொடுப்பவையாகவே நம் முன்னோர்களால் உருவாக்கப்படிருக்கிறது.

ஆடை-ஆபரணம் என்று சேர்த்துச் சொல்வது. ஆபரணங்களும் ஸ்த்ரீத்வத்துக்கு அவசியமான லக்ஷ்மீகரத்தை உண்டாக்குகிறவை. அதற்காக வாரிப் போட்டுக் கொள்ளச் சொல்லவில்லை. மங்களம் என்பதற்காக எளிய வாழ்க்கை என்ற பெரிய தத்வத்தை விட்டுவிடச் சொல்லவேயில்லை. ஏகமாக, பல தினுஸு நகைகள் போட்டுக்கொள்வது  இல்லாதவர்களுக்கும் ஆசையைத் தூண்டி மனஸைக் கெடுக்கும்; கடன்பட வைக்கும். அதற்காக, எளிமையாயிருக்கிறோம், 'ஸிம்பிள்' என்று சொல்லிக்கொண்டு ஸுமங்கலிகளும், கன்யாக் குழந்தைகளும் காது, மூக்கு, கழுத்து, கை மூளியாக நிற்கக் கூடாது. நாகரிக வாழ்க்கை என்ற பெயரில் மனஸை எவ்வளவோ 'காம்ப்ளெக்'ஸாகப் பண்ணிக் கொண்டுவிட்டு வெளியிலே மட்டும் 'ஸிம்பிள்' என்று இருப்பதில் என்ன அர்த்தம்?
காலத்தின் விபரீதம், திலகம், நகை ஆகியன யாருக்கு வேண்டும், யாருக்கு வேண்டாமென்று சாஸ்த்ரத்தில் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாகப் பண்ணுவதாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது!

வெளியடையாளங்கள், புறச்சின்னங்கள் ஆகியவையும் உள்மனப்பான்மையும் ஒன்றோடொன்று ஸ்ம்பந்தப் பட்டிருப்பதால்தான் இப்படிப்பட்ட விஷயங்களை இவ்வளவு தூரம் சொல்வது. ஸ்த்ரீத்வம் என்கிறது உள்ளே நன்றாகப் பழுப்பதற்கு அநுகூலமானதாகவே அவர்களுக்கு வெளித் தோற்றத்திலும் இப்படியிப்படி இருக்கவேண்டும் என்று ஆசாரவிதிகள் ஏற்பட்டிருக்கின்றன.


பதியிடம் பத்னியின் ஆறுவித உறவுகள் 

வீட்டுக் கார்யம் பண்ணுவதில் ஒரு க்ருஹிணி – இல்லக் கிழத்தி என்பாள் – வேலைக்காரி மாதிரியிருந்தாலும் அதனால் அவள் பதிக்கு அடிமை என்று அர்த்தமில்லை. பதிக்கு வேலைக்காரியாக இருப்பதோடு நிற்காமல் இன்னும் பலவாகவும், ஸகலமாகவுமே இருப்பவள் அவள் என்று 'நீதி சாஸ்த்ர'த்தில் சொல்லியிருக்கிறது (ச்லோகம் 50). வைதிகர்களுக்கு 'ஷட்கர்மம்' என்று ஆறு உண்டு: வேதம் ஒதல் – ஒதுவித்தல், யாகம் செய்தல் – செய்வித்தல், தானம் வாங்குதல் – கொடுத்தல் என்று ஆறு. அதே மாதிரி இங்கே (நீதி சாஸ்திரத்தில்) ஸ்த்ரீகளுக்கும் ஷட்கர்மா சொல்லியிருகிறது, என்னென்ன?

கார்யேஷு தாஸீ, கரணேஷு மந்த்ரீ , ரூபேஷு லக்ஷ்மீ,க்ஷமயா தரித்ரீ |
ஸ்நேஹே ச மாதா, சயநே து வேச்யா ஷட்கர்மயுக்தா குலதர்ம பத்நீ ||

ஒன்று : கார்யேஷு தாஸீ – வேலைக்காரியாகக் காரியம் பண்ணுவது.

இரண்டுகரணேஷு மந்த்ரீ – பதிக்கு ஆலோசனை சொல்வதில் மந்த்ரியாக் இருக்க வேண்டும். தான் வைத்ததே சட்டம் என்று பதி இல்லாமல் பத்னியின் ஆலோசனை கலந்தே எதுவும் பண்ண வேண்டும் என்ற அபிப்ராயம் இங்கு ஸ்பஷ்டமாக வருகிறது மந்த்ரி ஸ்தானத்தில் யோஜனை சொல்லுமளவுக்கு ஸ்த்ரீகளுக்கு புத்தி கூர்மை இருப்பதாக நம்முடைய ஆன்றோர் மெச்சியதும் தெரிகிறது.
கார்யேஷு தாஸீ, கரணேஷு மந்த்ரீ -

மூன்றாவதாகரூபேஷு லக்ஷ்மீ – தோற்றத்தில் லக்ஷ்மியாக, அதாவது லக்ஷ்மீகரமாக, இருக்கவேண்டும். மநுதர்ம சாஸ்த்ரத்திலும் 'க்ருஹிணிக்கும் மஹாலக்ஷ்மிக்கும் பேதமில்லை' என்று வருகிறது (அத்யாயம் 9, ச்லோகம் 26).

அப்புறம் நாலாவதாகக்ஷமயா தரித்ரீ – ரூபத்தினால் ஸ்ரீதேவியாக இருப்பவள் பொறுமையால் பூமாதேவியாக இருக்கவேண்டும்.

ஸ்நேஹே ச மாதா என்பது ஐந்தாவது. இங்கேதான் ஸ்த்ரீக்கு நம் தர்மம் எவ்வளவு உச்சஸ்தானம் கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. அன்பு காட்டுவதில் ஒரு தாய் குழந்தையிடம் எப்படியிருப்பாளோ அப்படியே பத்னி பதியிடம் இருக்கவேண்டும் என்று அர்த்தம். அதாவது ஒரு பதிக்கு அவனுடைய பத்னியையே மாத்ரு ஸ்தானத்தில் உயர்த்திக் காட்டுகிறது. ஆதி மூல வேதமும் ஸ்த்ரீயை ஆசீர்வதிக்கும்போது "பத்துக் குழந்தையைப் பெற்றுக்கொள். அப்புறம் பதியையும் பதினோராவது குழந்தையாக்கிக்கொள்" என்கிறது. அடிமை யாயிருந்தால் அப்படிச் சொல்லுமா?

இப்படி ஐந்தைச் சொன்னபின் கடைசியாகத்தான் அவள் பதிக்குச் சிற்றின்பம் அளிப்பவளாயும் இருக்க வேண்டும் என்று சொல்லி, அதில் வேசிகள் மாதிரி இருக்கவேண்டும் என்று (நீதி சாஸ்த்ரத்தில்) சொல்லியிருக்கிறது. சயநே து வேச்யா.

கார்யேஷு தாஸீ, கரணேஷு மந்த்ரீ , ரூபேஷு லக்ஷ்மீ,க்ஷமயா தரித்ரீ |
ஸ்நேஹே ச மாதா, சயநே து வேச்யா ஷட்கர்மயுக்தா குலதர்ம பத்நீ ||

அடிமைத்தனமல்ல; ரக்ஷணையே
நடுவிலே மநுவைப் பற்றிச் சொன்னேன்; அவர் க்ருஹிணியை மஹாலக்ஷ்மியாகச் சொல்லியிருப்பதாகச் சொன்னேன். அவர் பேரில்தான் நவீனக் கொள்கைக்காரர்களுக்கெல்லாம் ஒரே கோபம். 'ஸ்த்ரீகள் ஸ்வாதந்த்ரியம் (சுதந்திரமாயிருக்கும் நிலை) பெறத்தக்கவர்களல்ல; அவர்கள் பால்யத்தில் தகப்பனாரின் ரக்ஷணையிலும், நடுவயஸில் பதியின் ரக்ஷணையிலும், விருத்தாப்யத்தில் புத்திரர்களின் ரக்ஷணையிலும் இருக்க வேண்டும்' என்று அவர் சொல்லியிருப்பதாலேயே கோபம். ஆனால் நான் முன்னேயே சொன்ன மாதிரி ஸ்வாதந்த்ரிய்த்துக்கு நேர் எதிரான சரணாகதியும், அதற்கான அடக்கமும்தான் சாஸ்த்ரங்களின் பரம லக்ஷ்யமாகையால் அப்பேர்ப்பட்ட லக்ஷ்யத்தை அதிகம் கஷ்டப்படாமல் ஸ்த்ரீகள் ஸாதிக்க முடிவதைத்தான் மநு மனஸில் கொண்டு அதையே அவர்களுக்குக் கண்டிப்பான விதியாகப் போட்டுக் கொடுத்தார். அப்போதும் பிதாவோ, பர்த்தாவோ, புத்திரர்களோ அந்த ஸ்த்ரீயை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும்படிச் சொல்லாமல் காப்பாக ரக்ஷிக்க வேண்டும் என்று நல்ல வார்த்தையாகவே போட்டிருக்கிறார்.

பிதா ரக்ஷதி கெளமாரே பர்த்தா ரக்ஷதி யெளவநே|
ரக்ஷந்தி வார்தகே புத்ரா: ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யமர்ஹதி ||
(மநுஸ்ம்ருதி 9.3)

ஸாதாரணக் கல் இறைபடுகிறமாதிரி நவமணிக்கற்களை இறைபடவிடுவார்களா? நவமணி மாதிரிதான் பெண்கள். அதனால்தான் பெண்மணி, நாரீமணி என்றே சொல்வது. புருஷமணி, ஆண்மணி என்று சொல்கிற வழக்கமேயில்லை. 'அந்தப் புருஷர்கள் லோக வியவஹாரத்தில் வெளியிலே இறை படட்டும்; ஸ்த்ரீகளை அப்படி ஸ்வந்த்ரம் கொடுத்து இறைபட விடவேண்டாம். ஸ்வதந்த்ரத்தினால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே கெடுதி விளைவித்துக் கொள்ளலாம். அவர்களை வெளியில் விட்டால் புருஷர்களாலும் அவர்களுக்குக் கெடுதி விளையலாம். இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் நவமணிகளைக் காப்பாகப் பெட்டியில் வைத்து ரக்ஷிக்கிற மாதிரி ஸ்த்ரீகளையும் க்ருஹத்தில் காப்பாக அந்தந்த பிராயத்துக்கு ஏற்ப, அப்பா, அகமுடையான், பிள்ளை என்பவர்களின் ரக்ஷணையில் வைத்துவிடுவதான் ஸரி' என்றே மநுதர்ம சாஸ்த்ரம் அப்படி விதி பண்ணிற்று. 

எந்த அப்பாவும் குமாரியை அடிமை மாதிரி பாவித்துக் கொடுமை பண்ண மாட்டார்தான். பிள்ளையும் அம்மாவை அப்படியே! சாஸ்த்ரப்படிப் பார்த்தாலும் ஒரு புத்ரனானவன் அப்பாவுக்கும் முந்தைய ஸ்தானம் அம்மாவுக்குத்தான் தரவேண்டும். அப்படிப்பட்டவன் அவளைக் கொடுமை பண்ணினால் அது ப்ராயச்சித்தமேயில்லாத பாபமாகத்தான் சாஸ்த்ரத்தில் வரும். மநுவின் ச்லோகத்தில் ஒரு ஸ்த்ரீயை பர்த்தாவும் அவளுடைய அப்பா-பிள்ளைகள் போலவே ரக்ஷிக்க வேண்டும் என்றுதான் இருக்கி தவிர, 'ஆட்-ஊட்' அதிகாரம் செய்து அடிமை – கொடுமைப்படுத்தணும் என்று இல்லை –பர்த்தா ரக்ஷதி யெளவநே என்றே இருக்கிறது.
கொடுமைப்படுத்தணும் என்று அவர் சொல்லாதது மட்டுமில்லை. இன்னோரிடத்தில் ஸ்பஷ்டமாகவே அவர்களை ரொம்பவும் கெளரதையாக, பூஜிதையாக நடத்த வேண்டும் என்றும் சொல்கிறார்.

யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: |
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா:|| 
(மநுஸ்ம்ருதி 3.56)

'எங்கே பெண்கள் பூஜிதையாக நடத்தப்படுகிறார்களோ, அங்கேயே தெய்வங்கள் ஸந்தோஷம் அடைந்து ப்ரீதி செய்கிறார்கள். எங்கே அப்படி நடத்தவில்லையோ, அங்கே எடுத்த காரியம் எதுவும் பலிக்காது' என்று அர்த்தம்.

அமர நிலைக்கு உய்விக்கும் அடக்கம்
அந்த ஸ்த்ரீ தர்மம் என்பது முக்யமாக அடக்கத்தில்தான் இருக்கிறது என்பதுதான் திரும்பத் திரும்ப நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்; கடைப்பிடிக்க வேண்டிய லக்ஷ்யம்.

அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது திருக்குறள். ஆனாலும் சராசரி  புருஷப்ரஜையால் அப்படி ஒரளவுக்கு மேலே இருப்பதற்கு முடியாமல் அவனுடைய பெளருஷ இயற்கை இருக்கிறது.  இந்த லோக நாடக விசித்திரத்தில் அன்றாட வாழ்க்கை நடத்த அவனுடைய அந்தப் பெளருஷமும் வேணடித்தானிருக்கிறது. அதே ஸமயத்தில்  ஸ்த்ரீயோ மனஸ் வைத்தால் அவளுடைய இயற்கைக் குணத்தால் அவனைவிட இந்த அம்சத்தில் ரொம்பதூரம் முன்னே போக முடியும்  என்பதையும், அப்படி இருப்பதே லோக நாடகத்தில் தவிர்க்க முடியாமல் புருஷர்களால் சேர்கிற மிளகாய்ப் பொடியை சமனம் செய்யும் நெய்யாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் சாஸ்த்ரங்கள் அமர நிலைக்கே கதவைத் திறந்துவிடும் அடக்கத்தைக் குறிப்பாக ஸ்த்ரீகள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய தர்மமாக விதித்திருக்கின்றன. அதாவது, அடக்கத்தை விதித்ததனால் ஸ்த்ரீகளை ஒரு இருட்டு உலகத்தில் அடைத்து வைக்காமல் அமரத்வம் என்ற ஜ்யோதி லோகத்திலேயே சேர்ப்பதுதான் சாஸ்த்ரகாரர்களின் உத்தேசம்.

சாஸ்த்ர லக்ஷ்யம், ஆண்-பெண் யாரானாலும் முடிந்த மட்டும்  அடங்கியிருக்கணும் அந்த 'முடிந்த மட்டும்' என்பது பெண்கள் விஷயத்தில், தனக்கென்று எதுவுமேயில்லை என்று ஆகி விடுகிற சரணாகதி வரையில் 'ஈஸி'யாகப் போக முடியும் என்பதால்தான் ஐடியல் நிலையில் ஒரு ஸ்த்ரீ பதியின் சித்தப்படியே பணிந்து நடக்கவேண்டும் என்று வைத்தது.
மஹான்கள் தங்களுக்கென்று எதுவுமேயில்லை, எல்லாம் 'தெய்வசித்தம்'  என்று சரணாகதி செய்துதான் தாங்களே தெய்வமாகியிருக்கிறார்கள். புருஷர்களில் தேடித் தேடி துர்லபமாகக் கிடைக்கக்கூடிய மஹான்கள் அப்படி  ஆனவர்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு தெய்வத்திடம் சரணாகதி செய்வது சிரமமாயிருக்கிறது என்பதால் புருஷனுக்கு குரு என்பவரையும், அதே குரு ஸ்தானத்தில் ஸ்த்ரீக்குப் பதி என்பவரையும் சாஸ்த்ரங்கள் காட்டிக் கொடுக்கின்றன. ஆனாலும் நடைமுறையிலோ உத்தம குணம் பொருந்திய  குருவிடமுங்கூடப் புருஷ சிஷ்யர்களால் பரிபூர்ண சரணாகதி செய்யமுடியாமலே இருந்திருக்கிறது. அதே ஸமத்தில் அதமனான பதியிடமும் சரணாகதி பண்ணி அவன் எத்தனை கஷ்டப்படுத்தினாலும் பொருட்படுத்தாமல் பொறுமையோடு அவனுக்குப் பணிவிடை செய்து  வந்திருக்கிற பதிவ்ரதா சிரோமணிகள் தலைமுறை தோறும் நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அப்படி எங்கேயாவது நிச்சயம் இருப்பார்கள். அவர்களுடைய பழைய  கர்மாவுக்காகவே அவர்கள் பதியிடம்  கஷ்டப்படுவது. அதை எதிர்த்துப் போகாமல் அவர்கள் பொறுத்துக்கொண்டு, 'தன்செயலில்லை' என்று இருப்பதால் அவர்களுக்குப் புது கர்மா எதுவும் சேராது. இப்படிப் புது கர்மா சேராமல், பழைய கர்மாவை முழுக்க                      அநுபவித்துக் தீர்த்துவிட்டால் அதுவே கர்ம நாசம். அதனால் ஸ்ம்ஸார பந்த நாசம், எதற்கு மேலாகவோ ஈடாகவோ ஒரு ஆத்ம லாபம் கிடையாதோ, எதற்காகத்தான் ஞானிகளும் யோகிகளும் படாதபாடு படுகிறார்களோ, அந்தப் பெரிய லக்ஷ்யத்தை ஒரு ஸாதாரணப் பெண்ணே ஸாதித்து விடுகிறாள். அவள் 'உதிக்காதே!' என்று ஆக்ஞை பண்ணினால் ஸூர்யனே உதிக்காமலிருக்கிறான்; 'பதியின் உயிரைத் திருப்பித் தா!' என்று அவள் கேட்டால் யமன் அப்படியே பண்ணுகிறான்; அவளுடைய பாதிவ்ரயத்தை (கற்பு நெறியை) சோதிக்க வந்த த்ரிமூர்த்திகளின் மேல் அவள் தீர்த்த ப்ரோக்ஷணம் பண்ணினால் அவர்கள் பச்சைக் குழந்தைகளாகி விடுகிறார்கள்; * அவள் 'பெய்'யென்று சொன்னால் வருண பகவான் மழையைக் கொட்டுகிறான் – 'பெய்யெனப் பெய்யும் மழை' என்று திருவள்ளுவர் சொல்கிறார்;  மழை பெய்வது மட்டுமில்லை – ஊரே நெருப்புப் பிடித்துக் கொள்ளட்டும் என்று அவள் சபித்தால் உடனே அக்னி பகவான் அப்படிப் பண்ணுகிறார் என்று கண்ணகி கதையில் படிக்கிறோம்; ஹநுமாரின் வாலில் நெருப்பு வைத்தபோது அது குளிர்ந்திருக்க வேண்டும் என்று ஸீதை சொன்னால், அப்படியே அங்கே அக்னி பகவான் (சிரித்து) தன்னுடைய வாலைச் சுருட்டிக் கொள்கிறான்! (*ஸ்ரீசரணர் இங்கு குறிப்பிடும் மூன்று கற்புக்கரசியர் முறையே நளாயினியும் சாவித்திரியும்  அநஸூயையும் ஆவர்.)

இந்த மாதிரி ஒரு பெண்ணைத் தெய்வமாக உயர்த்து வதற்காகத்தான் அவனை சாஸ்த்ரம் பதியிடம் சரணாகதி செய்ய வேண்டும் என்று சொல்கிறதே தவிர, இஷ்டப்படிக் கொடுமைப்படுத்தும் புருஷர்களைக் கொண்டு ஸ்த்ரீகளை அடக்கி நசுக்கி வைப்பதற்காக இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மநுவும், தர்ம சாஸ்த்ரங்களைச் செய்த மற்ற ரிஷிகளும் ஸம்ஸ்த ப்ராணிகளுக்கும் நல்லதையே நினைத்துக் கருணை காட்டியவர்கள். அப்படிப்பட்டவர்கள் ம்ருதுவான ஸ்வபாமுள்ள ஸ்த்ரீகளை ஹிம்ஸிக்க வேண்டுமென்று ஸ்வப்னத்திலும் நினைத்திருக்க மாட்டார்கள். தாடகை மாதிரியான துஷ்ட ராக்ஷஸியைக் கொல்லக் கூட ராமர் போன்றவர்கள் -குரு ஸ்தானத்திலிருந்த விச்வாமித்ரர் மாதிரியாவனர்கள் ஆஜ்ஞை பண்ணியும்கூட – யோஜனை பண்ணுமளவுக்கு ஸ்த்ரீ வதையைத்தடுத்து அவர்களுக்குக் கூடுதலாக தயா தாக்ஷிண்யம் காட்ட வேண்டும் என்று அவர்கள் எழுதி வைத்திருப்பதை மறந்து  வாயில் வந்தபடி பேசக்கூடாது. ஆனதால், 'ஸாதிப்பதற்குப் பரம கஷ்டமான சரணாகதியையும் ஸாதித்து அதனால் தெய்வமாக உயர்வதற்கு ஒரு ஸ்த்ரீயால் முடிகிறதே! முடிகிற அதை அவர்கள் செய்து மேன்மையைப் பெறட்டுமே!' என்பதால்தான் அதை விதியாகக் கொடுத்தார்கள்.

அடிமையல்ல; உற்ற ஸகா
பதி செய்வதை எதிர்க்கேள்வியே கேட்காமல், ஏற்றுக்கொள்வதுதான் ரொம்பவும் ச்லாக்யம் என்றாலும், மஹா பதிவ்ரதைகளில் சில பேரும் அவனுடைய அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கு நல்லதாகத் தோன்றுவதை அவனுக்கு எடுத்துக் சொன்னதுண்டு. அப்படிப்பட்டவர்களை சாஸ்த்ரங்களும் எடுத்துக் காட்டாகச் சொல்லி ஸ்தோத்ரிப்பதுண்டு.

ஸீதையைவிட ஒரு பதிவிரதை உண்டா? ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியே அவள், வனவாஸத்துக்கு  அவளை ராமர் அழைத்துக்கொண்டு  போகமாட்டேன் என்றபோது அவள் பயப்படாமல் அவருக்கு எதிர்வாதம் பண்ணித்தானே கடைசியில் அவரும் ஒப்புக்கொள்ளும்படி ஆயிற்று? அப்புறம் தண்டகாரண்யத்தில் ரிஷிகள் ராமரிடம் வந்து தங்களை ஹிம்ஸிக்கும் ராக்ஷஸ வர்க்கத்தை அவர் நாசம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அப்படியே செய்வதாக  வாக்குக் கொடுக்கிறார். அதற்கு ஸீதை ஆக்ஷேபம் தெரிவிக்கிறாள். 'வனவாஸம் என்று வந்தோம். அதற்கேற்ப இங்கு நாம் தபஸ்விகளாக ஸாத்விக ஜீவனம் நடத்துவதுதான் முறை. ராக்ஷஸ வதத்தில் இறங்க வேண்டியதில்லை' என்கிறாள். தன்னுடைய பதிபக்திக்கு அழகாக, ஸ்மாரயே த்வாம் ந சிக்ஷயே(வால்மீகி ராமாயணம், அரண்ய காண்டம், ஸ்ர்கம் 9) அதாவது. 'உங்களுக்கே தெரிந்ததைத்தான் ஞாபகப்படுத்துகிறேனே தவிரப் புதுசாக நான் ஒன்றும் உபதேசிக்கவில்லை' என்றும் சொல்கிறாள், ஆகக்கூடி, அவர் எது சொன்னாலும் அப்படித்தான் என்று இல்லாமல்தானே அவள் ஒரு மாற்று அபிப்ராயம் எழுப்பியிருக்கிறாள்? அவள் சொன்னதற்கு ராமர் ஸந்தோஷப்பட்டு அவளை'தர்மஜ்ஞே!' – 'தர்மம் தெரிந்தவளே!' – என்று கூப்பிட்டு, ஆனாலும் தாம் செய்ததுதான் க்ஷத்ரிய தர்மம், அதுவும் அவளுக்குத் தெரிந்ததுதான் என்று அவள் பாணியிலேயே பதில் சொல்கிறார். (வால்மீகி ராமாயணம், அரண்ய காண்டம், ஸ்ர்கம் 10) அப்புறம் அவளும் அதை ஒப்புக் கொள்கிறாள்.

வதை கார்யம் வேண்டாமென்கிற இடத்தில் ஸீதை, 'உங்களிடம் ஸ்நேஹத்தினாலேயே (ஸ்நெஹாய) சொல்கிறேன்' என்கிறாள். 'ஸ்நேஹம்' என்பது கவனிக்க வேண்டிய 'பாயிண்ட்'. பதிக்குப் பத்னி ஸ்நேஹிதை – ஸகா – companion; அடிமையில்லை என்கிற பாயின்ட் விவாஹத்தில் வருகிற 'ஸப்தபதி' முதலான வேத  மந்த்ரங்களைப் பார்த்தாலே போதும், பெண்டாட்டி புருஷனுடைய slave இல்லை; அவனுடைய companion தான் என்பதற்கு, பெண்டாட்டியைப் புருஷனுக்கு அடிமையாக வேத தர்மம் நினைக்கவேயில்லை; 'வாழ்க்கைத் துணை நலம்' என்று அதிகாரப் பெயரே கொடுத்து திருவள்ளுவர் சொல்கிறபடி இரண்டு பேரும் கைகோத்துக்கொண்டு துணையாக ஒருவரையொருவர் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றிக் கொண்டு போகிறார்கள் என்றே நினைத்தது. ஸ்ப்தபதி முடிவில் வரன் (மணமகன்) வதூவிடம் (மணமகளிடம்) 'இந்த ஸப்தபதியினால் நாம் ஸ்நேஹிதர்களாகி விட்டோம். பரஸ்பரம் நாம் இந்த ஸ்நேஹத்திலிருந்து எந்நாளும் பிரிக்கப்படாமலிப்போமாக! நாம் ஒன்று  சேர்ந்தே ஸங்கல்பங்கள் செய்வோம். வாழ்க்கையின் ஸகல அம்சங்களையும் ஒன்று சேர்த்தே அ நுபவிப்போம் என்றெல்லாம் ஸ்பஷ்டமாகச் சொல்கிறான். 'க்ருஹத்துக்கு ராணியாக இரு!' (ஸம்ராஜ்ஞீ பவ) என்றே வதூவுக்குச் செய்கிற வேத மந்த்ர ஆசீர்வசனம்: 'அடிமையாய் இரு' என்றில்லை.

விவாஹ ஸம்ஸ்காரத்தில் இன்னொரு வேத மந்த்ரம் இதற்கு முன்னதாக இருக்கிறது. அதைப் பார்த்தால் இந்தக் காலத்து women's lib – காரர்களையும் (பெண்கள் சுதந்திர இயக்கத்தினரையும்) வேதம் மிஞ்சி விடுகிறது என்று கூடத் தோன்றும்! அதில் 'அகமுடையான் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்' – மூர்தானம் பத்யு: ஆரோஹ – என்றே வருகிறது! வாஸ்தவத்தில் (இதன்) தாத்பர்யம், பதியைப் பத்னி தனக்கு அடிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதல்ல. ஒருவரை நாம் ரொம்பவும் அளவுக்கு மீறி மெச்சுவதைத் 'தலையில் தூக்கி வைத்துக்கொள்வது' என்கிறோம்மல்லவா? அந்த மாதிரி, ஒரு க்ருஹிணி க்ருஹத்தை நன்றாகப் பரிபாலனம் செய்து பதி ரொம்பவும் மெச்சிக் கொண்டாடும்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதே தாத்பர்யம். அப்படியானாலும் ஒரு பதி தன் பத்னியை அடிமையின் ஸ்தானத்தில் வைத்திருக்காமல், தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லுமளவுக்கு மெச்சி, போற்றி, கெளரவம் கொடுத்தே நடத்த வேண்டும் என்றுதானே இதிலிருந்து ஆகிறது?

தெய்வங்களின் உதாரணம்
நம்முடைய தெய்வங்களைப் பார்த்தாலே பெண்களுக்கு எவ்வளவு உசந்த ஸ்தானம் தந்திருக்கிறதென்று தெரியும். ப்ரஹ்மா தன்னுடைய நாக்கிலேயே ஸரஸ்வதியை வைத்துக் கொண்டிருக்கிறார், மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷஸ்தலத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்; பரமேச்வரன் அம்பாளுக்குப் பாதி சரீரத்தையே கொடுத்திருக்கிறார். நவயுகப் பெண்கள் தங்கள் பர்த்தாவின் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டிருக்கிறார்களென்றால் நம்முடைய புருஷ தெய்வங்களோ தங்கள் ஸதிகளின் பெயரைத் தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டிருக் கிறார்கள் – உமாமஹேச்வரன், கெளரீசங்கரன், லக்ஷ்மீ நாராயணன், ஸீதாராமன், ராதாகிருஷ்ணன் என்றிப்படி. நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் பார்த்தால் ஸ்த்ரீகளுக்கே முழு முக்யத்துவம் கொடுத்து ஸுமங்களி ப்ரார்த்தனை என்று இருக்கிற மாதிரி புருஷர்களுக்கு இல்லை. ஸுவாஸினி பூஜை செய்கிற மாதிரி புருஷர்களை உட்கார்த்தி வைத்துப் பூஜை செய்வதில்லை. ஸ்த்ரீகளுக்குத் தான் ரவிக்கைத்துண்டு தாம்பூலம் உண்டே தவிரப் புருஷர்களுக்கு வஸ்த்ரம் வைத்துக் தருவதில்லை. நவராத்ரி-கொலு ஒன்பது நாள் ஸ்த்ரீகளின் கோலாஹலத்துக்கே இருக்கிற மாதிரிப் புருஷர்களுக்கு என்ன இருக்கிறது?

பானை பிடித்தவள் பாக்யம்
பாக்யத்துக்கெல்லாம் உறைவிடமாக ஸ்த்ரீயைத்தான் வைத்திருக்கிறது. புருஷனை நீண்ட ஆயுள் உடைய 'சிரஞ்சஜீவி' என்று சொல்வதோடு நிறுத்திவிடுகிறோம். அந்த சிர ஜீவனத்தில் (நீண்ட ஆயுள் காலத்தில்) எல்லாம் சுபமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஸ்த்ரீகளைத்தான் சொல்லும்போது நீண்ட ஆயுள் கொண்ட 'சிராயுஷீ' என்பதோடு விடமால் 'ஸெளபாக்யவதி', ஸெளபாக்யவதி' என்றும் சேர்த்துச் சொல்கிறோம்.
'ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்யம்' என்பதாக, ஒரு க்ருஹத்தின் ஸுபிக்ஷத்துக்கு க்ருஹிணியையே மத்யமாக வைத்துப் பழமொழியும் ஏற்பட்டிருக்கிறது. க்ருஹம் என்பது அவளுடைய ராஜ்யம். 'க்ருஹம்' என்ற வார்த்தைக்கு 'க்ருஹிணி' என்றும் அர்த்தமுண்டு. அதனால்தான் க்ருஹப்ரவேசத்துக்கு நாள் பார்க்கும்போதுகூட க்ருஹிணியின் நக்ஷத்ரத்துக்கே முக்யமாகப் பார்ப்பது. 'இல்லாள்' என்று அவளுக்குப் பேர் இருக்கிற மாதிரி 'இல்லான்' என்று புருஷனக்குப் பேர் இல்லை. (சிரித்து) 'இல்லான்' என்றால் ஒன்றும் இல்லாதவன் என்றுதான் அர்த்தம். அவள்தான் இல்லத்தில் அரசு செய்கிறாள்; அதிகாரத்தினால் இல்லாமல் அடக்கத்தினாலேயே அப்படிச் செய்கிறாள்.
அவளாகவே அப்படி இருப்பதுதான் அழகு; உத்தமம்.
சாஸ்த்ரம் எதிர்பார்ப்பது, பெண்கள் தாங்களாகவே அடங்கியிருப்பதைத்தானே தவிர, மற்றவர்கள் அவர்களை அடக்கி வைக்கும்படி அது சொல்லவில்லை. அதையே இப்போதும் நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வுரையின் ஸாராம்சம்
ஸ்த்ரீத்வம்-பெளருஷம் இரண்டும் அடங்குவதான மநஷ்யத்வம் என்று பொதுவாக இருக்கிறதே. அதற்கே அடக்க குணம் அவச்யந்தான். ஆனாலும் பெளருஷம் ஒரளவுக்கு மேல் அடங்காது. பராசக்தி விசித்ரமாகச் செய்திருக்கிற இந்த லோக நாடகத்தில் புருஷர்கள் அப்படி ஒரே அடக்கமாக இல்லாமல் காரியங்களைச் செய்வதும் அவசியமாயிருக்கிறது. அவர்கள் ஒரே அடக்கமாக இருக்க வேண்டியதில்லை என்பதால் ஒரேயடியாக அடங்காமல் வெறித்தனத்தில் போக வேண்டும் என்று ஆகாது. துரதிருஷ்டவசமாக இப்போது அப்படித்தான் ஆகிக்கொண்டு வருகிறது. இது, புருஷர்களைவிட அடங்கியிருக்க வேண்டிய ஸ்த்ரீகள் அப்படியில்லாமல் பெளருஷ வியாபாரங்களில் ஈடுபடுவதன் தொடர்ச்சியாக, அவர்களை மிஞ்ச வேண்டும் என்று புருஷ வர்க்கம் போகிற போக்கால்தான். அதன் நிகர விளைவாக, ஸாத்விகத்துகும் மனத்ருப்திக்கும் பெயரெடுத்த நம் தேசத்தில் ஒரே ஹிம்ஸையும் அதிருப்தியும் அசாந்தியும் போட்டியும் பூசலும் வலுத்து வருகிறது. இப்படியே போனால் தேசமே ரண பூமியாகி விடும்.
அப்படி ஆகாமல் காப்பாற்றுவது பெண்களின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் அடங்கியிருக்க ஆரம்பித்தால்போதும், அடுப்படியிலிருந்து விறகை இழுத்தால் மேலே பொங்க ஆரம்பிக்கிற பால் தானே தணிகிற மாதிரி புருஷர்களின் வெறித்தனமான அடங்காமை கட்டுப்படும். தேசம் ரண பூமியாகாமல், ஸ்வர்க்லோகமாக மாறும்.

அடக்க குணம் மட்டுமில்லை; 'பெண்மை' என்பதற்கே விசேஷமாக உரித்தானதாக நான் சொன்ன எல்லா குணங்களும் இன்றைக்கு விருத்தியாக வேண்டும். அப்படி ஆனால்தான் பல தினுஸான வனமுறைகளால் அஸுரலோகமாகிவரும் தேசத்துக்கு லகான் போட்டு, சாந்தியும் த்ருப்தியும் ஸெளக்யமும் goal – ஆக இருக்கிற பாதையில் திருப்பிவிட்டதாகும். நமக்கு தர்மங்களை வகுத்துக் கொடுத்திருப்பவர்கள், தர்மம் என்ற வ்ருக்ஷத்துக்கு ஸ்த்ரீகளே வேர் என்ற உயர்ந்த அபிப்ராயம் உடையவர்கள். ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: என்றே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றேன். 'மூலம்' என்றால் வேர். வேர் நன்றாக இருந்துவிட்டால் மரம் முழுசுமே நன்றாக இருந்து விடுமல்லவா? அப்படி, ஸ்த்ரீகள் தங்கள் தர்மத்தில் ஸரியாய் இருந்துவிட்டால் போதும், புருஷர்களும் அப்படி ஆகி, லோகமே தர்மத்தில் நிலைப் பட்டுவிடும். அதுதான் இப்போது கார்யம்.

இத்தனை ஆயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் பெண்மை என்று இருந்து வந்திருப்பதை எப்படியாவது நாம் ரக்ஷித்துத் தர வேண்டியதே கார்யம். அதை நாம் ரக்ஷித்துக் கொடுத்தால் அது நம்மை ரக்ஷிக்கும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – தர்மத்தை ஒருத்தன் ரக்ஷித்தால் அந்த தர்மம் அவனை ரக்ஷிக்கும் என்று மஹாபாரத வசனம். அப்படி தர்மம் என்று மநுஷ்ய ஜாதிக்குப் பொதுவாக இருப்பதில் குறிப்பாக ஸ்த்ரீ தர்மம் என்பதை இன்றைக்கு அந்த ஸ்த்ரீகள் ரக்ஷித்துக் கொடுத்தாலே புருஷ தர்மமும் தன்னாலேயே சீர்ப்பட ஆரம்பித்து எல்லா இடத்திலும் தர்மமும், அதோடு கைகோத்துக்கொண்டு வருகிற க்ஷேமமும் தழைக்கும்.

இதுதான் ஸமூஹம் முழுவதன் க்ஷேமத்தையும் உத்தேசித்து நான் பெண்களுக்குச் சொல்வது.'உங்களுக்கு இல்லாத எந்தப் பெருமையும் புருஷர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கே ஜாஸ்திப் பெருமை. அப்படி யிருக்கும்போது நீங்கள் ஏன் அவர்கள் மாதிரி ஆக வேண்டும்? அப்படி உங்களைக் குறைத்துக் கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே உசந்து நில்லுங்கள்' என்று சொல்கிறேன்.
இப்போது மற்ற விஷயங்கள் எப்படிப் போனாலும் அம்பாள் பக்திவளர்ந்து வருகிறது. இப்படி ஸ்த்ரீ ரூபமாகப் பரமாத்மாவை பக்தி பண்ணுவதில் ஸ்த்ரீகள் விசேஷமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அம்பிகைதான் ஸ்த்ரீகளுக்குத் தாங்கள் ஸ்த்ரீகளாகவே இருக்கவேண்டும் என்ற ப்ரஜ் ஞையையும், அதிலேயே பெருமித உணர்ச்சியையும் ஊட்டி சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களால் இத்தனை காலம் சோபையுடன் வாழ்ந்து வந்த ஸ்த்ரீத்வத்துக்கு – பெண்மைக்கு – இக்காலத்திலும் எக்காலத்திலும் ரக்ஷணம் தர வேண்டும்.

Please read the complete booklet attached for more interesting topics.

Encl : ஸ்த்ரீ தர்மம் - 48 pages Booklet in Tamil is attached for your leisure study.



No comments:

Post a Comment