Tuesday, October 21, 2014

Eri pattha nayanar

Courtesy: Smt.Uma Balasubramanian

எறிபத்த நாயனார்------ 
 
 பொன் மலைப் புலிவென்று ஓங்கப் புதுமலை இடித்துப்போற்றும்
 அந்நெறி வழியே  ஆகஅயல் வழி அடைத்த சோழன்;
 மன்னிய அநபாயன் ; சீர் மரபின் மாநகரம் ஆகும்
 தொன் நெடும் கருவூர் என்னும் சுடர்மணி வீதி மூதூர்.
 
 
      -கருவூர்- என்ற தலம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது எங்கும் மக்கள் திரளாகக் கூடி மகிழ்ந்திருந்தனர் . அப்பொழுது ராஜ வீதியில் அலங்காரமாக வந்துகொண்டிருந்த யானைக்கு மதம் பிடித்து , யானைப்பாகர் அதனை அடக்கப் பெரும் பாடு பட்டார். கீழே கையிலே குத்துக் கோலுடன் நின்று கொண்டு களிற்றைக் காவல் புரிந்து வரும் பரிக்கோற்காரர்களும் அதை அடக்க முயன்றும் தோல்வியடைந்தனர்.  யானை வீதியில் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்ததால், கூடியிருந்த மக்களும் அஞ்சி அங்குமிங்கும் ஓடினர்.

அப்போது சிவகாமியாண்டார் என்பவர் வழக்கம்போல் ஒரு கூடைநிறைய மலர்களை ஏந்தி , திருக்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆண்டவனுக்காக மலர் பறிப்பதில் அவருக்கு வெகுவாக விருப்பம் .விடியற்காலையிலேயே எழுந்து , காலைக் கடன்களை முடித்து, வாயைக் கட்டிக் கொண்டு ,,பின் தான் அமைத்த நந்தவனம் சென்று  பயபக்தியுடன் மலர்களைப் பறிப்பார்.  அவற்றின் மேல் தன் மூச்சுக் காற்றுக் கூடப் படாதவாறு அதை எடுத்து வருவார். பூக்கூடை நிறைந்திருந்தாலும் தன்னால் இன்னும் மலர்களைக் கோவிலுக்குக்  கொண்டு செல்ல முடியவில்லையே என மன நிறைவின்றி ஏங்குவார். தம் கையில் உள்ளதடியில் பூக்கூடையைத் தொங்கவிட்டுக் கொண்டு திருக் கோவிலுக்குச் செல்வார். கொண்டு சென்ற மலர்களை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு அணியச் செய்வார்.

தினந்தோறும் இவ்வாறே   தண்டத்தில் பூக்கூடைய மாட்டித் திருக்கோவில் நோக்கிச்  செல்வதைப் பார்த்து மக்களும் அவரது பக்தித் திறத்தை மெச்சினர். கருவூர்த் திருக்கோவிலுக்கு திருவாநிலை என்று தனியே ஒரு பெயரும் உண்டு. அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு , பசுபதீசுவரர் என்ற திருநாமம். ஆநிலையுடைய மகாதேவர்  என்று அப்பெருமானைச் சிலாசாசனங்கள் குறிக்கின்றன.

மதம் கொண்ட யானை தெருவிலே ஓடும்பொழுது , இந்த மகானும் இடையில் சிக்கிக் கொண்டார். முதியவர் ஆதலால் அவரால் ஓட முடியவில்லை. அவரை நோக்கி வந்த யானை ,அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையைத் தாக்கி , தன் துதிக்கையால்  கீழே போட்டுச் சிதைத்தது. மலர்களெல்லாம்  கீழே சிதறின . யானை தம்மை ஒன்றும் செய்ய வில்லையே என சிகாமியாண்டார் நினையாது , இறைவனுடைய பூசைக்குரிய மலர்களைப் பாழ்  செய்து விட்டதே என எண்ணி வருந்தி , மிக்க சினம் கொண்டு ,தன் கையில் உள்ள தடியால் யானையை அடிக்க ஓடினார். அருகிலிருந்த மக்கள் யாவரும் ஏளனமாகச் சிரித்தனர்.முதியவர் யானையின் பின்னே ஓடிக் களைத்து , கீழே விழுந்துவிட்டார். பின் மெல்ல  எழுந்தார் அந்த முதியவர். கீழே சிதறிய பூக்களைப் பார்த்துத் துக்கம் தாளாது  வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்தார்.
 
  ' யானையை உரித்துப் போர்த்த சிவபெருமானே  ஓலம் ! எளியவர்களுக்கு வலிமையாக நின்று துணை புரிபவனே ஓலம் ! அன்புடைய அடியவர்களுக்கு அறிவாய் விளங்குபவனே ஓலம் ! ,தெளிந்த அமுதைப்போன்று இனிக்கும் பெம்மானே ஓலம் !, கங்கையாற்றையும் , சந்திரனையும் சூடியுள்ள திருமுடியிலே சாத்துவதற்காக அல்லவா இம் மலர்களைக் கொண்டு வந்தேன். திரிபுர தகனம் செய்த பெருமாளே ! , இவற்றை யானையா சிந்துவது? யமனை உதைத்த திருவடிகளை உடையோனே ஓலம்! , இது அடுக்குமா? எத்தனையோ அன்பர்கள் கூடியிருக்கும் பெருங்கூட்டத்தில் ஏழையாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கும் பேறு கிட்டுமா? " என்று அவர் ஓலமிட்டு அழுது புலம்பினார்.
             
   அங்கு கூடியிருந்தோர் காதில் இவையாவும் விழுந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
 நெற்றியிலும்  , உடம்பிலும்  திருநீறு விளங்க, கழுத்து, தலை, கை ,,கால் ஆகிய இடங்களில் ருத்திராட்ச மாலை அணிந்து பொலிவுடன் காட்சி தந்த எறிபத்தர் , கையில் கோடாரியுடன் அங்கு வந்தார்.  சிவனடியார்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால் கையிலுள்ள கோடாரியால் வீசித் தாக்கிவிடுவார் அப்படிக் கோடாரியை எறிவதனால்தான் அவருடைய இயற்பெயர் மாறி எறிபத்தர் என்ற பெயர் நிலைத்து நின்றது..
 அவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து மற்றவர்கள் நடுங்கினர். எறிபத்தர் சிவகாமியாண்டாரை நெருங்கி ," ஏன் இப்படி அரற்றுகிறீர்கள்? " என்று கேட்டார். முதியவர் நிகழ்ந்ததைச் சொன்னவுடன் எறிபத்தருக்குக் கோபம் மூண்டது. "சிவனடியார்களுக்கு எங்கே சென்றாலும் பகை யானைதான் " என்று கூறிக்கொண்டே யானையை  நோக்கி ஓடினார்.

' ஆணவத்தை' யானையாகச் சொல்வர் பெரியோர்கள்.  கோப்பெருஞ்சோழர் முற்பிறவியில் சிலந்தியாக இருந்து, திருவனைக்காவில் இறைவன் மேல் வலை பின்னி நிழல் செய்ய அதை யானை கலைத்தது என்பதை  நினைந்துதான் அப்படிச் சொன்னாரோ! அவர் எந்த எந்த யானைகளை நினைத்தாரோ ஒருவரும் அறியார்.
 எறிபத்தர் பட்டத்து யானையின் முன் சென்றார். அது அவரைப் பற்ற வந்தபோது கையிலிருந்த கோடாரியால் ஓங்கி வீசினார். எந்தக் கையால் சிவகாமியாண்டாரது பூக்கூடையைப் பற்றிச் சிதறியதோ, அந்தக் கை துண்டுபட்டுக் கீழே விழுந்தது. உடனே யானையும் இடிபோன்ற முழக்கமிட்டுக் கீழே விழுந்து புரண்டு உயிர் துறந்தது.

எறிபத்தருக்கு இன்னும் சினம் ஆறவில்லை. " இதுதான் அறிவில்லாது விலங்கு என்றால் நீங்கள் யாவரும் பார்த்துக் கொண்டா இருந்தீர்கள் ? என்று பாகரையும் , பரிக்கோற்காரரையும் பார்த்துச் சீறினார். அவர்கள் கூறிய சமாதானத்தைக் கேட்கு முன்னே தம் கோடாரியை வீசி அந்த ஐந்து பேரையும் வீழ்த்தினார்.

கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
 
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக
ஐவரைக் கொன்று நின்றார்; அருவரை அனைய தோளார்.
 
போர்க்களக் காட்சி போல் ,யானை ஒருபக்கம் குருதிப்,பெருக்கில் விழுந்து கிடக்க, ஒருபக்கம் ஐந்து மனிதர்கள் வெட்டுண்டு கிடந்தனர். அங்கு ,இரத்தம் படிந்த கோடரியுடன் எறிபத்தர் ஒரு வெற்றி வீரர்போல் காட்சியளித்தார். 

   வாயில் காப்பாளர்கள் உடனே அரண்மனைக்குச் சென்று   பட்டத்து யானையை யாரோ கொன்று விட்டார்கள் என்ற தகவலை அளித்தார்கள்.

உடனே அரசன் ,  இத் தகவலை காவலாளிகளுக்கு யார் சொன்னர்கள் என்று கேட்க  அவர்களும் அங்கு குழுமியிருந்த கூட்டத்தில் இருந்தவர்களே கூறியதாகத் தெரிவித்தார்கள்.

 உறையூரிலிருந்து ஆண்டுவந்த சோழமன்னர் பரம்பரையில் உதித்த  அரசன். கருவூரிலும் அரண்மனை கட்டிக் கொண்டு பல காலம் வந்து தங்கி வாழ்பவன். அவன் பெயர் புகழ்ச்சோழன். சிவபெருமானிடம் மிக்க அன்பு பூண்டு , பல சிவாலயங்களைப் பாதுகாப்பது, சிவனடியார்களுக்கு  வேண்டிய நன்மைகள் புரிவது போன்ற  தொண்டுகளில்  ஈடுபட்டிருந்தான்.
     
காவலாளிகள் கூறிவற்றைக் கேட்டபோது அரசனுக்குச் சினம் மூண்டது.யானையை கொல்வது என்பது எளிதான காரியம் அன்று  இது ஏதோ பகைவர்களின் சதிச் செயல் , அவர்கள் படையுடன் தான்  வந்திருக்கவேண்டும் என எண்ணி, பொறுமை இழந்து சேனைத் தலைவர்களுடன்   யானை , குதிரை, காலாட்படை எனப் படைகளைத்  திரட்டி , தானும் குதிரையின் மேல் ஏறி, சம்பவ இடத்திற்குச் சென்றான்..

 யானை இரத்தத்தில்  படுத்துக் கிடந்தது அருகில் எறிபத்தர் நின்று கொண்டி ருந்தார் . பகைவர்கள் ஓடியிருக்கவேண்டும் என எண்ணி ,"அவர்கள் எங்கே?" என்று கேட்டான். 
 
 " இதோ இங்கே நிற்கிறாரே! இவர்தான் யானையைக் கொன்றார் " என்று எறிபத்தரைக் காட்டி அருகில் இருந்தவர்கள் கூறினர் .
 
அவரைப் பார்த்த மாத்திரத்தில் அரசனின் உடம்பு நடுங்கியது. இந்தப்பெரியவருக்குக் கோபம் உண்டாகும்படி ஏதோ நேர்ந்திருக்கிறது என்று யூகித்தான். அவரைக் கைது செய்யாது , குதிரையினின்றும் கீழே இறங்கி," நல்ல வேளை ! யானை இவரை ஒன்றும் செய்யாமல் கடவுள்தான் காப்பாற்றினார் " என்று மனதில் நினைத்து  ஆறுதல் அடைந்து எறிபத்தர் முன் சென்றான்.கண்ணீர் மல்க அவர்காலில் வீழ்ந்தான். " இங்கே என்ன அபசாரம் நேர்ந்ததோ அதை நான் அறியேன். யானை இறந்து பட்டது என்பது மாத்திரம் தெரிந்து கொண்டேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது  தங்கள் உள்ளம் வருந்தும்படியான தீங்கு நடந்திருக்க வேண்டுமென்று. அந்தத் தீங்குக்குப் பிராயச் சித்தமாக யானையையும் , பாகரையும் தண்டித்தது போதுமா? தாங்கள் அருள் செய்ய வேண்டும் " என்று பணிவுடன் கூறினான் அரசன்.

 " சிவகாமியாண்டார் இறைவனுக்கு அணிவிப்பதற்காகக் கொண்டுபோன பூக்களை யானை சிதறியது. பாகரும், குத்துக்கோற்காரரும் அதைத் தடுக்கவில்லை . அதனால்தான் இப்படிச் செய்தேன்" என்றார் எறிபத்தர்.

 அதைக் கேட்ட வேந்தன் மறுபடியும் அவர் காலில் வீழ்ந்து " அவருக்கு நேர்ந்த இந்த அபராதம் மிகப் பெரியது. என்னுடைய ஆட்சியில் என் யானை ஒரு சிவனடியாருக்குத் தீங்கு செய்தது என்றால்  நான் உலகில் இருந்து என்ன பயன்?  இந்த அபராதத்துக்கு யானையையும் , பாகரையும் கொன்றது போதாது , யானைக்கு உரியவனான என்னையும் கொல்வதே முறையாகும் ,தாங்கள் தங்கள் புனிதமான  கோடாரியால்  என்னைக் கொல்லவேண்டாம். என்னுடைய வாளால்  .என்னை வீசி அபராதத்தினின்றும் என்னை விடுதலை செய்வீராக! " என்று கூறி வாளை எடுத்து அவரிடம் நீட்டினான்.

 எறிபத்தர் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அரசன் தன் நிலையை மறந்து , தன் களிற்றின் பெருமையை மறந்து, ஓர் சிவனடியாருக்கு இழைத்த தீங்கைத் தம்மைக் காட்டிலும் மிகுதியாக எண்ணி வருந்துவதை உணர்ந்தார். " ஆஹா! என்ன உத்தமமானஅன்பு !"  என்று எண்ணினார். அரசன் எங்கேனும் தன் வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள நேரும் என அஞ்சி ,   அந்த வாளை  உடனே அரசனிடமிருந்து வாங்கிக் கொண்டார்.    

 அதைக் கண்ட சோழன் முகம் மலர்ந்து , எறிபத்தர் தம்மேல் வாளை வீசுவதற்கு ஏதுவாகப் பணிந்து நின்றார்.

 ஆனால் எறிபத்தர் மனத்தில் புயல் கொந்தளித்தது, குமுறியது ,' என்ன காரியம் செய்தேன் !, முறை தவறாது நிற்கும் மன்னன், இறைவனிடம் அன்பு செய்யும்   பக்தன், அடியார்களுக்கு அடியாராக இருந்து அவர்கள் துன்பம் களையும் சிறந்த நெஞ்சன் , அப்படிப்பட்டவனின் மனம் புண்படும்படி நாம் நடந்துகொண்டோமே ! ' என்ற சிந்தனை அவர் உள்ளத்தில் ஓடியது." இத்தனை உத்தமருக்குத் தீங்கு இழைத்த நானல்லவா குற்றவாளி! இந்தக் குற்றத்துக்கு தண்டனையை நாமே அளித்துக் கொள்வதுதான்  உத்தமம்  ' என்று மனதில் புலம்பி . கையிலிருந்த வாளைத் தன் கழுத்தில் வைத்து அறுத்துக் கொள்ளப்போனார்.
  
அரசன் 'அந்தகோ ! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் ?'"என்று அவர்கையிலிருந்த வாளைப் பறித்தான் . எறிபத்தர் அசையாமல் நின்றிருந்தார்.

 அப்போது யாவரும் வியக்கும்படி வானில் ஒரு குரல் எழுந்தது. " உங்கள் அன்பின் வலிமையை உலகத்துக்குக் காட்டும் பொருட்டே  இறைவன் திருவருள் இந்த நிகழ்ச்சியைக் கூட்டியது " ----
 
அதேசமயத்தில் கீழே விழுந்த யானையும் , பாகனும் , குத்துக்கோற்காரரும் உயிர் பெற்று எழுந்தனர்.

 எறிபத்தர் மனமுருகி காவலன் காலில் விழுந்தார் . அரசனும் எறிபத்தர் கையிலிருந்த வாளைப்பற்றி  வீசி எறிந்துவிட்டு , அவர் காலில் விழுந்தான். அப்போது சிவகாமியாண்டாரும் அங்கு வந்து சேர , என்ன ஆச்சரியம் ! அவருடைய பூக்கூடை பூக்களால் நிறைந்திருந்தது. எல்லோரும் சிவபெருமானின் கருணையையும் , அடியவர்களின் அன்புச் சிறப்பையும் உணர்ந்து நெகிழ்ந்து ஆரவாரித்தனர்.

மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல்
உற்றிடத்து அடியார்முன் சென்று உதவியே, நாளும் நாளும்
நல்தவக் கொ:ள்கை தாங்கி, நலம் மிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின்  முன் ஆம் கோ முதல் தலைமை பெற்றார்.
 

எறிபத்தநாயனார் நாளும் நாளும் அடியார்களுக்குத் தொண்டு செய்து,தவக் கொள்கையை மேற்கொண்டு, பின் நலமிக்க திருக்கயிலை மலையினில் இறைவரது கணநாயகத் தலைமை பெற்றார்.

தேன் ஆரும் தண் பூங் கொன்றைச் செம் சடையவர் பொன் தாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த திருப் பணி இயம்பல் உற்றேன்
 

No comments:

Post a Comment