Monday, October 6, 2014

Damodara month & Gita reading

Courtesy: Sri.GS.Dattatreyan

  தாமோதர மாதம் ....இம்மாதத்தில் எவரொருவர் மகிழ்ச்சியாக கீதையைப் படிக்கிறாரோ அவர் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறுகிறார்.

தாமோதர மாதம்


புரட்டாசி மாதம் பாசாங்குச ஏகாதசியைத் தொடர்ந்து வரும் பௌர்ணமி முதல் உத்தான ஏகாதசியை அடுத்துவரும் பௌர்ணமி வரையிலுள்ள சமஸ்கிருத மாதமான தாமோதர மாதம் (இவ்வருடம், அக்.8 முதல் நவ.6 வரை), வைஷ்ணவர்களின் மிகப்புனிதமான மாதமாகும். இந்த மாதத்தின்போதே வைஷ்ணவர்கள் சிறப்பாகக் கொண்டாடும் பகுளாஷ்டமி (அக்.16), கோவர்த்தனபூஜை (அக். 24), கோபாஷ்டமி (அக்.31) போன்ற விழாக்கள் வருகின்றன. இது தாமோதர மாதம் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் பகவான் கிருஷ்ணர், பால்ய பருவத்தில் நிகழ்த்திய ஒரு சுவையான லீலையேயாகும்.

தாமோதர லீலை: ஒரு தீபாவளி நாளில், அன்னை யசோதா தயிர் கடைந்து கொண்டிருந்த போது, குழந்தை கண்ணன், பசியுன் அங்கு வந்தாராம். யசோதாவும் குழந்தையை மார்போடணைத்து, பாலூட்டிக்கொண்டிருந்தபோது, அடுப்பில் பால் வைத்த ஞாபகம் அவருக்கு வந்ததாம். அத்தோடு, பால் அடுப்பில் பொங்கும் வாசமும் அடிக்க, குழந்தையை தன் மடியிலிருந்து இறக்கி விட்டுவிட்டு அடுப்பை அணைக்க ஓடினாராம். இதனால், பெருத்த ஏமாற்றமும், கோபமுமடைந்த கண்ணன் சிறுகல் ஒன்றையெடுத்து தயிர்ப்பானையை உடைத்து அதிலிருந்த வெண்ணையையெடுத்து உண்டபிறகு, அன்னையின் மீதிருந்த பயத்தால் கொல்லைப்புறத்திற்கு ஓடி அங்கே ஒளிந்து கொண்டார். பாலை இறக்கி, அடுப்பை சுத்தம் செய்த யசோதாமாதா, மீண்டும் குழந்தையைக்காண வந்தபோது, உடைந்திருந்த தயிர்ப்பானையைப்பார்த்து, இது கண்ணனுடைய வேலையாகத்தானிருக்கும் என்று நினைத்துக்கொண்டே, குழந்தையை வீடுமுழுவதும் தேடத்தொடங்கினார். எங்கும் குழந்தையைக் காணாததால், கோபமுற்ற அவர் ஒரு சிறுகம்புடன் கொல்லைப்புறத்திற்கு வந்தபோது, அங்கே ஒளிந்துகொண்டிருந்த கண்ணனை ஓசைப்படாமல் பின்னாலிருந்து நெருங்கினார். ஆனால் இதை எப்படியோ அறிந்த கண்ணன் தலைதெறிக்க, வீதியில் ஓடி, அன்னையிடமிருந்து தப்பினார். தன்மீது எப்படிப்பட்ட பயமிருந்தால் குழந்தை இப்படி ஓடுவான் என்று நினைத்த அன்னை தன் கையிலிருந்த குச்சியைக் கீழேபோட்டுவிட்டு குழந்தையைத் துரத்த ஆரம்பித்தாராம். வியர்க்க, விறுவிறுக்க நீண்டதூரம் ஓடியபிறகு கண்ணனை ஒருவழியாகப்பிடித்து உரலில் கட்டிபோட்டு தண்டிக்க எண்ணி கயிற்றை எடுத்து வந்தாராம். ஆனால், கயிற்றின் நீளம் இரண்டு விரற்கடையளவு குறைவாக இருந்ததாம். உடனே வீட்டினுள் சென்று இன்னொரு கயிற்றையெடுத்து வந்து இணைத்து நீளத்தைக் கூட்டியபோதும், இருவிரற்கடையளவு குறைவாக இருந்ததாம். இதனால் ஆச்சரியமுற்ற அன்னை யசோதாவும் சலிக்காமல் பலமுறை மீண்டும் மீண்டும் கயிறுகளையெடுத்துவந்து இணைத்தும் முடியவில்லையாம். இந்த நீண்ட முயற்சியால் களைப்புற்ற அன்னையின் முயற்சி வெற்றிபெற, இறுதியில் கண்ணன், தன்னைக்கட்ட அனுமதித்தாராம்.

பெரும் யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் கட்டுபடாத கண்ணனை, அன்பினால் கட்டுப்படுத்தமுடியும் என்பதை உலகிற்கு உணர்த்த அவர் செய்த லீலையே இது. தாம் என்றால் கயிறு என்றும் உதரம் என்றால் வயிறு என்றும் பொருள். கண்ணனின் வயிற்றைக் கயிறால் கட்டிய லீலை நிகழ்ந்ததனாலேயே இந்த மாதம் தாமோதர மாதம் என்றாகியது. வடஇந்தியாவில் கார்த்திக் மாதம் என்ற பெயரும் இதற்குண்டு.

பத்மபுராண, கார்த்திக் மஹாத்மியத்தில் உள்ள தாமோதர மாதத்தின் மகிமைகள் சில:

1. இந்த மாதத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்குச் செய்யும் சிறிய பக்தித்தொண்டும், பலமடங்கு பலனை ஈட்டவல்லது. ஒரேயொரு துளசியிலையை அர்ப்பணிப்பதுகூட, பத்து இலட்சம் பசுக்களைத் தானமளிப்பதற்குச் சமமான பலனைக் கொடுக்கவல்லது.

2. இம்மாதத்தில் எவரொருவர், பகவான் ஸ்ரீஹரியின் கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபடுகின்றாரோ, அவருக்கு பலகோடி யுகங்களில் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும்.

3. இம்மாதத்தில் எவரொருவர் மகிழ்ச்சியாக கீதையைப் படிக்கிறாரோ அவர் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறுகிறார்.

4. இம்மாதத்தில் அதிகாலையில் குளித்து, ஒருவேளை மட்டுமே உண்டு கார்த்திக் விரதத்தைக் கடைபிடிப்பவர், பகவான் ஹரியின் உலகத்தையடைவது நிச்சயம். மேலும் இம்மாதத்தின் கடைசி ஐந்து நாட்களான பீஷ்ம பஞ்சக (பீஷ்மரின் இறுதி நாட்கள்) காலத்தின்போது, வெறும் பால் அல்லது நீருடனிருப்பது இந்த விரதத்தின் முக்கிய அம்சமாகும்.

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற தாமோதர மாதத்தில், உலகம் முழுவதுமுள்ள எல்லா ஹரே கிருஷ்ணா ஆலயங்களிலும் காலை அல்லது மாலை நேரத்தில் சத்யவிரதமுனி அருளிய தாமோதரஷ்டகப் பாடலைப்பாடி பக்தர்கள் நெய்விளக்கு ஆராதனையை நிகழ்த்துகிறார்கள். ஆலயத்துக்கு வரஇயலாதவர்கள் தங்கள் வீடுகளில் இதைச் செய்யலாம். இந்த மாதத்தில் செய்யும் பக்தித்தொண்டு பல மடங்கு பலனை ஈட்டவல்லது என்று பல புராணங்கள் உறுதியளிக்கின்றன. அக்.8 முதல் நவ.6 வரை, தாமோதரமாத நிகழ்ச்சிகள், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ஸ்ரீரங்கம், மதுரை, சேலம் உ<ள்ளிட்ட நகரங்களிலுள்ள ஹரே கிருஷ்ணா ஆலயங்களிலும் மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளன.

பகுளாஷ்டமி: பல அசுரர்களை வென்ற பகவான் கிருஷ்ணர், ஒருமுறை, விருந்தாவனவாசிகளுக்குப் பலவிதத்திலும் தொல்லைகள் செய்துவந்த, அரிஷ்டாசுரன் எனும் காளை மாட்டின் வடிவிலிருந்த அசுரனைக் கொன்றுவிட்டராம். மதச்சின்னமான காளையைக் கொன்ற பாவத்தைச்செய்த அவருடன் விளையாட ஸ்ரீமதி ராதாராணி உட்பட அனைத்து கோபிகைகளும் மறுத்துவிட்டனர். மேலும் எல்லா புனிதநதிகளிலும் நீராடி அப்பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடினால்தான், சேர்ந்து விளையாடமுடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

அதைக்கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணர், தன்னுடைய கால்கட்டைவிரலால் பூமியை அழுத்தியபோது, ஒரு குண்டம்(குளம்) உருவாகியதாம். உடனடியாக கங்கை, யமுனை போன்ற எல்லா புனிதநதிகளும் அங்குவந்து தோன்றியனவாம். இந்தக்குண்டமே தற்போது, ஷ்யாம குண்டம் என்றழைக்கப்படுகிறது. அனைத்து சிறுவர்களும் ஸ்ரீகிருஷ்ணருடன், அக்குளத்தில் நீராடி மகிழ்ந்தனராம்.

இதைகண்ணுற்ற கோபியர், தாங்களும் அதில் நீராட ஆவலுடன் வந்தனர். ஆனால் அவர்களை, சிறுவர்கள் அனுமதிக்கவில்லை. வருத்தமுற்ற ஸ்ரீமதி ராதாராணி, கோபியரின் வளையல்களையுடைத்து, அத்துண்டுகளால், இன்னொரு குண்டத்தைத் தோண்டினாராம். பின்னர், அனைத்து கோபியரும் மானஸி கங்கா எனும் குளத்திலிருந்து நீரைக் கொண்டுவந்து ஊற்றி, அதை நிரப்ப முயன்றார்கள். உடனே அனைத்து புனிதநதிகளும் அந்தக்குளத்திலும் பாய்ந்துவிட்டனவாம். இந்தக்குளமே ராதாகுண்டம் ஆயிற்று. அது தோன்றிய நாளே, பகுளாஷ்டமியென்று, இன்றளவும், உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள விருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது. பகுளாஷ்டமியன்று நள்ளிரவில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், வெளிநாட்டினர் உட்பட பல பக்தர்கள் இங்கு கூடிப் புனித நீராடுகிறார்கள்.

கோவர்த்தன பூஜை: ஸ்ரீகிருஷ்ணர் ஏழுவயது பாலகனாக இருந்தபோது, தன்னுடைய பெற்றோரும் மற்ற விருந்தாவனவாசிகளும், மழைக்கு அதிபதியான இந்திரனுக்கு விழா எடுக்க பல்வேறு ஏற்பாடுகளைச் செய்வதைக் கண்டார். ஆயர்களின் வாழ்வாதரமான பசுக்களுக்குப் புல் வளர மழையை அளித்த இந்திரனுக்குச் செய்யும் யாகத்தில் படைப்பதற்காக விதவிதமான உணவுப்பண்டங்களைத் தயாரித்திருந்ததைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர், பின்வருமாறு மிகச் சாதுர்யமாகப் பேசினார்: தந்தையே! அவரவருடைய கர்மவினைப்படியே அனைத்தும் நடக்கின்றன! எல்லா உயிர்வாழிகளும் தகுந்த உடலைப்பெறுகின்றன! வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெறுகின்றன! அதற்காக நாம் தேவர்களை வணங்க வேண்டுமா? நம் பசுக்களுக்கு புல்லைத்தரும் கோவர்த்தன மலையை வணங்கலாமே! என்றார். அதற்கு சம்மதித்த நந்தகோபரும் கோவர்த்தன மலையை வழிபடும் விதமாக விழாவை மாற்றினார்.

விருந்தாவனவாசிகள். தாம் சமைத்திருந்த உணவுப்பதார்த்தங்களை கோவர்த்தன மலைக்கு நிவேதித்தனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நந்தகோபருடன் நின்றுகொண்டிருந்த அதேவேளையில், மலையின் மீது ஏறி நின்று அனைத்துப் பதார்த்தங்களையும் ஏற்று மகிழ்ந்தார். பகவான் தான் உணவை ஏற்கிறார் என்பதை அறியாத விருந்தாவனவாசிகள் கோவர்த்தன மலையே நிவேதனங்களை ஏற்றுக்கொள்வதாக நினைத்து மிகவும் ஆனந்தித்தனர். அனியோõர! அனியோரா!- இன்னும் வேண்டும்! இன்னும் வேண்டும்! என்று ஆனந்தக்கூச்சலிட்ட ஸ்ரீகிருஷ்ணருக்குக் கோபியர்கள் மீண்டும் மீண்டும் பல பண்டங்களைப் படைத்தவண்ணம் இந்தனராம். இதைப் பார்த்த பலராமர், ஒரு துளசியை ஸ்ரீகிருஷ்ணரின் திருவாய்க்குள் வீசி அவரைத் திருப்தி அடையச் செய்தாராம். இதன் காரணமாக ஒரு கிராமம், அனியோரா என்ற பெயரால் இன்று அழைக்கப்படுகிறது.

தனக்குச்சேரவேண்டிய அனைத்தையும் யாரோ ஒரு சிறுவன் எடுத்துக்கொண்டதையறிந்த இந்திரன் கடுங்கோபமடைந்தார். சம்வர்த்தகா எனும் மேகத்தை ஏவிக் கடும் மழையை விருந்தாவனத்தின் மீது பொழிவித்தார். ஒவ்வொரு மழைத்துளியும், யானையின் துதிக்கையளவிற்கு இருந்ததாப் புராணங்கள் விவரிக்கின்றன.

கடும் மழையால் நடுநடுங்கி, கதிகலங்கிய விருந்தாவனவாசிகள், பகவான் ஸ்ரீகிருஷ்ணரைசம் சரணடைந்தனர். அவர் அச்சமயத்தில், 90 மைல் சுற்றளவுடனும், 16மைல் உயரத்துடனும் விளங்கிய கோவர்த்தன மலையை, சிறுவர்கள், காளானைச் சுலபமாகப் பிடுங்குவதைப் போல, பெயர்த்தெடுத்து, தன்னுடைய இடதுகை சுண்டு விரலால் அனாயசமாக ஏந்திய வண்ணம், ஒரு பாறைமீது ஏறி நின்று கொண்டார். விருந்தாவனவாசிகளை, தங்களுடைய பசுக்கள் மற்றும் கன்றுகளுடன் அதனடியில் வந்து நிற்கச்செய்து ஏழுநாட்கள் தொடர்ந்து பெய்த பேய் மழையிலிருந்து காப்பாற்றினார். அதன் காரணமாக அவருக்கு கிரிதாரி மற்றும் கோவர்த்தனதாரி என்ற பெயர்கள் சூட்டப்பட்டன.

இந்த லீலையில், முத்தகோபர்கள் சிறுவனான ஸ்ரீகிருஷ்ணருக்கு உதவுவதாக எண்ணி குச்சிகளால், தாங்களும் மலையைத்தாங்கிப்பிடித்தனர்; மூத்தகோபியர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் கைகள் வலிக்கும் என்றெண்ணிப் பிடித்துவிட்டனர்; அவரின் வயதையொத்த சகாக்கள் கேலிபேசி மகிழ்ந்தனர்; சிறுவயது கோபியர்கள், வைத்த கண் வாங்காமல், அவரைப்பார்த்து ரசித்துமகிழ்ந்தனர்; பகவானோ, ஸ்ரீமதி ராதாராணியைக் கடைக்கண்ணால் பார்த்து ரசித்தார். (இதில் காமம் துளி கூட இல்லை என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்;) பகவானின் அனைத்து பக்தர்களும் பங்குபெற்றதால் இந்த லீலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

யாரோ ஒரு பாலகன் என்று எண்ணிய இந்திரனோ தன்னுடைய சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தாலும், கோவர்த்தன மலையைத் தாக்கினார்; பகவான் தன்னை ஏந்தியிருந்ததால், அது மலர்களை எறிந்ததைப் போலிருந்ததாம் கோவர்த்தன மலைக்கு. ஏழுநாட்களுக்குப் பிறகும் அன்ன ஆகாரமின்றி சலிக்காமல் நின்ற அசாராதண செய்கையைக் கண்ட இந்திரன், இவன் யாரோ ஒரு சிறுவனல்ல; பகவானால்தான் இத்தகைய செயலைச் செய்யமுடியும் என்றுணர்ந்து மழையை உடனடியாக நிறுத்தினார். ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான சுரபி (பசு) மாதாவை முன்னிறுத்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டார்; முப்பத்துமுக்கோடி தேவர்களும் ஆடம்பரமான முறையில் அபிஷேக, ஆராதனைகளைச் செய்து தங்களுடைய மரியாதையை ஸ்ரீகிருஷ்ணருக்குத் தெரிவித்தனர். ஆனால் இந்த படாடோபமான ஆராதனைகளைவிட விருந்தாவனவாசிகளின் எளிமையான அன்பே, பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கவர்த்ததாம்; அதில் தான் அவர் முழுத்திருப்தியடைந்தாராம். பகவானிடம் பயபக்தி தேவையில்லை; அன்பு கலந்த பக்தியாலேயே அவரைக்கவர முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், இரு காரணங்களுக்காக இந்த லீலையை நிகழ்த்தினார். ஒன்று தன்னுடைய மிகச்சிறந்த பக்தனான கோவர்த்தனின் புகழை உயர்த்துவதற்காக; மற்றொன்று, நாள் முழுதும் தன்னைக் கண்டு ரசிக்க எண்ணிய இளம் கோபியரின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக.

கோபாஷ்டமி: ஸ்ரீகிருஷ்ணர், சிறுவயதில் கௌமார பருவத்தில், மற்ற கோபர்களுடன் (இடைச்சிறுவர்கள்) சேர்ந்து, கன்றுக்குட்டிகளை மேய்த்து வந்தாராம். இலட்சக்கணக்கான கன்றுகளை மேய்த்தபோதும், ஒவ்வொரு கன்றையும் தனித்தனியாக அறிந்துவைத்திருப்பாராம் ஸ்ரீகிருஷ்ணர். ஒருமுறை, தன் தாயிடமிருந்து, அதுவரை பிரிந்திராத கன்று ஒன்றை முதன்முறையாக மேய்ச்சலுக்கு இட்டுச்சென்றபோது, அது அழுதுகொண்டே சென்றதாம். இலட்சக்கணக்கான கன்றுகளுக்கிடையேயும் இதைக் கண்டுகொண்டே ஸ்ரீகிருஷ்ணர், அதனருகில் சென்று, நீ கவலைப்படாமல் சுவையான புல்லைச்சாப்பிட்டுவிட்டு மற்ற கன்றுகளுடன் விளையாடு; மாலையில், உன்னை உன் தாயிடம் பத்திரமாகக் கொண்டுசேர்ப்பேன் என்று சமாதானப்படுத்தினாராம். இப்படியாக, ஒவ்வொரு கன்றின் மீதும் தனிக்கவனம் செலுத்தியதால் ஸ்ரீகிருஷ்ணருக்கு, வத்ஸபால் (வத்ஸ-கன்று) என்ற பெயருமுண்டு.

வயதுமுதிர்ந்து, பௌகண்ட பருவத்தை எட்டியபோது, பசுக்கள் மற்றும் காளைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல விரும்பிய அவர், தன் பெற்றோரை அதற்குச் சம்மதிக்குமாறு வேண்டினாராம். மகனை நாள் முழுவதும் பிரியவேண்டுமே என்றெண்ணி மறுத்த, தந்தை நந்தகோபரரையும், அன்னை யசோதாவையும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவைத்தாராம், ஸ்ரீகிருஷ்ணர்.

அதற்கெனக் குறித்த நாளில், சிறப்புவழிபாடுகள், பிராமணர்களுக்குத் தானம் வழங்குதல் என தடபுடலாக செய்துமுடித்தபிறகு, ஸ்ரீகிருஷ்ணருக்குத் துணையாக (பகவானை, ஏதுமறியா குழந்தையாகவே அவர்கள் பாவித்ததால்) அவருடைய சகாக்களையும் மாடுமேய்க்க, விருந்தாவனக்காடுகளுக்கு, நந்தகோபர் அனுப்பிவைத்தாராம். அன்றுமுதல் ஸ்ரீகிருஷ்ணர்., கோபால் என்றும் அழைக்கப்பட்டாராம். இந்நாளே, கோபாஷ்டமியென்று, தற்போது வடஇந்தியாவில், கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான பசுக்களை நீராட்டி, நன்கு அலங்கரித்து, உணவு படைத்து, வழிபடுகின்றனர்.


No comments:

Post a Comment