Tuesday, September 30, 2014

Sringeri Birudavali & HH Bharathi theerthar

Courtesy: Sri.S.Shankar Narayanan

॥ श्रीगुरुभ्यो नमः ॥
பிருதாவளியும் ஸ்ரீ பாரதீ தீர்த்தரும் 
By    S.Shankaranarayanan, suthamalli gramam, Tirunelveli

அரசர்களைப் புகழக்கூடிய வார்த்தைகளின் தொகுப்பு பிருதாவளி என்று சொல்லப்படுகிறது. அவை உரை நடையாகவோ செய்யுளாகவோ இருக்கலாம். 

சிருங்கேரி ஆசாரியர்கள் தாம் ஞான நிதிகளாக விளங்குவதுடன் மக்களை தர்ம வழியிலும் ஞான வழியிலும் நடத்திச் சென்று காப்பாற்றுகிறார்கள். ஆகவே சத்குரு மஹாராஜர்களாக விளங்கி வருகிறார்கள். எனவே அவர்களைப் போற்றிப் புகழ்கிற முறையில் அவர்களுக்கே உரிய பிருதாவளி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 

தற்போது ஜகத்குருவாக நமக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அனந்தஸ்ரீ விபூஷித 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ.பாரதீ தீர்த்தர் விஷயத்தில் சிருங்கேரி ஆசாரியர்களின் பிருதாவளியிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் பொருத்தமாக இருப்பதை நாம் அனுபவிக்கலாம். இதில் குருநாதருடைய பற்பல திவ்ய மஹிமைகள் வர்ணிக்கப்பட்டிருக்கிறபடியால் இதைப் படித்தாலே அவரை ஸ்தோத்ரம் செய்ததாக ஆகும்.

இந்த பிருதாவளி "ஸ்ரீமத் பரமஹம்ஸ பரவ்ராஜகாசார்யவர்ய" என்று தொடங்குகிறது.

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் பரமஹம்ஸராகத் திகழ்ந்தார் என்று ஸ்ரீவித்யாரண்ய மஹாஸ்வாமிகள் தம் சங்கர விஜய நூலில் கூறுகிறார்:

நீரும் பாலும் என்றவாறு உண்மையான ஆத்மாவும்
பொய்யான உலகமும் ஒன்றாக இருக்கையில்
மற்ற பண்டிதர்களால் பிரித்தறிவதற்கரிய அதனை
ஸ்ரீசங்கரராகிய முனிவர் பிரித்துக் காண்பிப்பதனால்
அவர்தான் பரமஹம்ஸர். அதற்கு வல்லமையில்லாத
மற்றவர்கள் வேப்பம்பழங்களைச் சுவைப்பதில் விருப்பமுள்ள காகங்களே.

பாலில் நீரைக் கலந்துவிட்டால் அவற்றைத் தனித்தனியாக ஒருவராலும் பிரிக்கமுடியாது. ஆனால் ஹம்ஸம் (அன்னப்பறவை) மட்டும் நீரை ஒதுக்கி விட்டு பாலை மட்டும் அருந்தும். அது போல உண்மையான பிரஹ்மமும் பொய்யான உலகமும் பிரிக்க முடியாதபடி ஒன்று சேர்ந்துவிட்டன. வெகு காலமாக யாராலும் அதைப் பிரிக்கமுடியவில்லை. 

ஹம்ஸம் பாலையும் நீரையும் பிரிப்பது போல ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் உண்மையான ஆத்மாவையும் பொய்யான உலகத்தையும் பிரித்துக் காட்டியதால் அவர் பரமஹம்ஸராக விளங்குகிறார். பிரித்துக் காட்டினார் என்றால் வெறுமனே தமது நூல்களில் அந்தக் கருத்தை நிரூபணம் செய்தது மட்டுமல்ல. அந்த எண்ணத்தில் தம் மனத்தை நிலை நிறுத்தி எப்போதுமே அந்த அனுபவத்தில் திளைத்திருந்தார். 

அப்படிப்பட்ட மஹான் சங்கல்பித்து நிறுவிய பீடத்தில் ஆற்றொழுக்கு போல் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் பிரவாகத்தில் தற்போது அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நம் ஆசாரியாள் பரமஹம்ஸர்தான் என்பதில் என்ன ஐயப்பாடு இருக்கமுடியும்? .

ஸ்ரீஆசாரியாளும் 'உண்மையான பிரஹ்மமும், பொய்யான உலகமும், ஒன்றாகத் தோன்றினாலும் வெவ்வேறானவை' என்று தம் புலமை மூலம் நிரூபிக்கக் கூடிய திறமை உள்ளவர். அதோடு நிற்காமல் அந்த ஆனந்த அனுபவத்திலேயே திளைத்து நின்று கொண்டு இருப்பவர். கீழ்க்காணும் உரையாடல் அதை உறுதிப்படுத்தும்.

ஒரு சிஷ்யர்: கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வாரம் ஒரு நாளாவது (ஞாயிற்றுக்கிழமை) சர்ச்சுக்கு செல்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது மாதிரி ஹிந்துக்களும் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட தினத்தை வழிபாட்டிற்கு என்று ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது?

ஸ்ரீஆசார்யாள்: நம் வேத தர்மத்தின்படி நம்முடைய ஒவ்வொரு மூச்சிலுமே இறைவனைப் பற்றிய நினைவு மற்றும் ஆத்மானந்த அனுபவத்தில் திளைத்திருக்க வேண்டுமென்பது நியதி. வாரம் ஒரு நாள் என்பது நமக்குப் பொருந்தாது.

இந்த பதில் ஸ்ரீஆசாரியாளின் அனுபவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஓர் உண்மையான பரமஹம்ஸரின் பதில் எவ்வாறு இருக்கமுடியும்? 

இந்த "பரமஹம்ஸர்" என்ற சொல் "பரிவ்ராஜகாசார்யவர்ய" என்ற பெயர்ச்சொல்லிற்கு அடைமொழியாகக் கூறப்பட்டுள்ளது. "பரிவ்ராஜகர்" என்றால் "பரித்யஜய ஸர்வம் வ்ரஜதீதி பரிவ்ராஜக:" எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறார் என்ற பொருளில் சந்யாசியைக் குறிக்கும்.

பிரஹ்மசாரியாக இருந்து இல்லறத்தை அடைந்து வானப்ரஸ்தனாகி பிறகு சந்யாசி ஆகலாம். தீவிர வைராக்யம் இருந்தால் பிரஹ்மசரியத்திலிருந்தே துறவு பூணலாம். ஆதி குருவாகிய ஸ்ரீசங்கர பகவத்பாதர் இவ்வாறு செய்தவர். அவருடைய மறு அவதாரமாக விளங்கும் நம் ஸ்ரீஆசாரியாளும் பிரஹ்மசரியத்திலிருந்தே சந்யாசம் பெற்றார். அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ. அபிநவ  வித்யாதீர்த்த மஹாசந்நிதானத்திடம் உஜ்ஜயினியில் மாணவனாகச் சேர்ந்து சுமார் இரண்டு வருட காலம் அவருடனேயே இருந்தது முதற்கொண்டே இவர் தாயார், தகப்பனார், சுற்றம் ஆகியவர்களிடம் பற்று நீங்கி வைராக்கியத்துடன் இருந்து வந்தார். (தன் வீட்டிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று) ஆதிசங்கரர் "உபதேச பஞ்சக"த்தில் அருளியபடி நடக்கத் தீர்மானித்தார். மஹாசந்நிதானத்துடன் யாத்திரை செய்து வருங்கால் ஒரு முறை பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப தம் ஆசாரியாரின் அனுமதியுடன் தம் வீட்டிற்குச் சென்ற இவர் யாரிடமும் பேச்சே வைத்துக்கொள்ளாமல் தாமுண்டு தன் ஆன்மிகப் பயிற்சி உண்டு என்று இருக்கத் தொடங்கினார். யாராவது கேள்வி கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில் கிடைப்பதே அரிதாயிற்று. அப்போதிலிருந்தே வைராக்கிய சக்கரவர்த்தியாக இருந்ததைக் கண்டு ஆனந்தித்த அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ. அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் இவரைத் தம் ஆன்மிக வாரிசாக நியமிக்கத் தீர்மானித்தார். 

ஜாபால உபநிஷத்தில் விவரித்துள்ள படி தம் ஆத்மாவில் "ப்ரஹ்மா நீ, யக்ஞம் நீ" என்று அபிமந்த்ரணம் செய்து, வேதமாதாவை மூன்று வ்யாஹ்ருதிகளில் (பூர்புவஸ்ஸுவ:) அர்ப்பணம் செய்து, அந்த ஸ்யாஹ்ருதிகளை அகார, உகார, மகாரங்களில் ஒடுக்க வேண்டும்.
 பிறகு ப்ரணவத்தை ஜபித்து சிகை மற்றும் பூணலைக் களைந்து "ஓம் பூஸ்வாஹா, ஓம் புவஸ்வாஹா, ஓம் ஸுவஸ்வாஹா" என்று கூறி மனத்தாலும், வாக்காலும் துறவு பூணப்பட்டது என்பதற்கு அடையாளமாக, "மயாஸன்யஸ்தம், மயாஸன்யஸ்தம்" என்று மெதுவாக ஒரு முறை, நடுக் குரலில் ஒரு முறை மற்றும் உயர்ந்த குரலில் ஒரு முறை, ஆக மூன்று முறை கூறி "அபயம் ஸர்வ பூதேப்யோ மத்தஸ்வாஹா" என்று உச்சரித்து தம்மால் ஏற்படும் பயத்தினின்று எல்லா உயிர்கட்கும் பரிபூரண விடுதலை தருவதாக அறிவிப்பதற்கு அடையாளமாக "ப்ரேஷோச்சாரணம்" செய்து  ஸன்யாச  ஸ்வீகரணம் செய்ய வேண்டும். 11.11.1974 அன்று இந்த முறையைத் தவறாமல் பின்பற்றி ஸ்ரீஆச்சாரியாள் பரமஹம்ஸ சந்யாசியானார். 

குடீசகர், பஹூதகர், ஹம்ஸர், பரமஹம்ஸர் என்று சந்யாசிகளில் நான்கு விதம் உண்டு. முன்னதை விட பின்னது உயர்ந்தது. மலையடிவாரத்திலோ நதி தீரத்திலோ வாழ்ந்து கொண்டு 'லாபம்-நஷ்டம், சுத்தம்-அசுத்தம், கல்-பொன்' முதலிய த்வந்தங்களை (இரட்டைகளை) சம நோக்குடன் பார்ப்பவர்களாக இருந்து கொண்டு ஆத்ம நிஷ்டர்களாக வாழ்பவர்களே பரமஹம்ஸர் என்ற பிக்ஷூகோபநிஷத் கூற்று. நம் ஆசாரியரிடம் அப்படியே பொருந்துவதை நாம் காணலாம்.

நம் ஆசாரியாளுக்கு இன்னுமொரு விசேஷம். 'விவிதிஷா சந்நியாசி', 'வித்வத் சந்நியாசி' என்று பரமஹம்ஸர்களில் இரண்டு விதம் உண்டு. ஞானானுபவம் பெறுவதற்காக வேதாந்த விசாரம் செய்து வருபவர் முன்னவர். வேதாந்த விசாரம் செய்து ஞானானுபவம் பெற்றவர் பின்னவர். இதில் ஞானானுபவம் பெற்ற வித்வத் சந்யாசிகளே மற்றவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் ஆசாரியர்களாக விளங்க முடியும். இவர்களிலும் எல்லாருமே ஆசாரியர்களாக இருக்க முடியாது. ஏனெனில் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யவேண்டுமென்றால் சமாதி நிலையிலிருந்து இறங்கி வெளியே வரவேண்டும். மனத்தில் த்வைத பாவம் ஏற்படவேண்டும். சீடனுடைய மனப்பக்குவத்தைப் புரிந்துகொண்டு அந்த நிலைக்குக் கீழே இறங்கி வந்து அவனுக்குத் தக்கபடி உபதேசம் செய்யவேண்டும். அப்படி த்வைத நிலையிலிருக்கும் போதும் ப்ரபஞ்சம் பொய் என்ற பாவனையும் இருந்து கொண்டே இருக்கும். 

நம் ஆசாரியாரும் எப்போதும் ஞானநிலையை அனுபவித்துக் கொண்டிருப்பார். ஆனாலும் தம் சீடர்களின் நன்மைக்காக அந்த நிலையிலிருந்து வெளிவந்து உபதேச அனுக்ரஹம் புரியும் திவ்யமூர்த்தியாக இருக்கிறார். ஆகையால்தான் அவர் வெளியே வந்து தர்சனம் கொடுத்துக் கொண்டு நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் நம்மைப் போலவே தோன்றுவார். ஆனால் மனத்தளவில் அவர் எங்கோ, நாம் எங்கோ?.

தற்சமயம் சிருங்கேரியில் நாம் சில சந்யாசிகளை பார்க்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஜகத்குரு அவர்களின் மேற்கண்டபடி உபதேசம் மற்றும் அவருடைய வழிகாட்டுதலின் மூலம் இந்த நிலை அடைந்தவர்கள். மேலும் படிப்படியாக உயர்ந்து ஞானானுபவம் அடைய முயற்சி செய்து வருபவர்கள்.

இது தவிர ஸ்ரீஜகத்குருவிடம் மந்த்ரோபதேசம் பெற்று ஆன்மிக முன்னேற்றப் பாதையில் இருப்போர் அநேகம் பேர். இந்த மாதிரி மந்த்ரோபதேசம் பெறுபவர்கள் பலரை சிருங்கேரியில் நாம் காணலாம்.

பிருதாவளியில் அடுத்து வருவது  "பத வாக்ய ப்ரமாண பாராவாரபாரீண" என்பது.

பதம் என்பது வியாகரண (இலக்கணம்) சாஸ்திரத்தையும், வாக்கியம் என்பது மீமாம்ஸா சாஸ்திரத்தையும், ப்ரமாணம் என்பது நியாய சாஸ்திரத்தையும் குறிக்கிறது. "பத வாக்ய ப்ரமாண பாராவாரபாரீண" என்ற தொடருக்கு கடல் போன்ற இம்மூன்று சாஸ்திரங்களிலும் ஆசாரியாள் நன்கு புலமை பெற்றவர் என்று அர்த்தம்.

வியாகரண சாஸ்திரம் வேத பகவானின் முகம் என்று கூறப்படும். ஆகவே வேதத்தின் உட்பொருளை அறிந்து கொள்வதற்கு இலக்கண அறிவு இன்றியமையாதது. அதே போல உபநிஷதர்த்தங்களை விளக்கிக் காட்டுகிற ப்ரஹ்ம ஸூத்ரம், கீதை முதலானவற்றைப் புரிந்து கொள்ளவும் இலக்கண அறிவு மிகவும் அவசியம்.

 நம் ஆசாரியாளின் இலக்கணப் புலமை அசாதாரணமானது. விநாயக சதுர்த்தி சமயத்தில் ஸ்ரீமடத்தில் நடக்கும் புலவரவை (சாதுர் மாஸ்ய வ்ரத சமயம் பிள்ளையார் சதுர்த்தியன்று ஆரம்பிக்கும் ஸ்ரீ மஹாகணபதி வாக்யார்த்த வித்வத் ஸதஸ்) மிகவும் ப்ரசித்தி பெற்றது. அதில் நம் நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும் பெரும் பண்டிதர்கள் கலந்து கொள்வார்கள். நம் குருநாதரும் மிக்க ஆர்வத்துடன் அங்கு நடக்கும் வாதப்ரதிவாதங்களில் கலந்து கொண்டு தம் அசாதாரணப் புலமையை வெளிப்படுத்துவார்கள். சம்ஸ்கிருதம் தெரியாதவர்கள் கூட அதை அனுபவிக்க முடியும். 

ஒரு முறை ஒரு வித்வான் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உள்ள "ஸர்வாந்தர்யாமிணீ" என்பதில் கடைசியில் வரும் "ண" தவறு என்று அநேக இலக்கண விதிகளை மேற்கோள்கள் காட்டி வாதிட்டார். அந்தச் சமயத்தில் நம் ஜகத்குரு அவர்கள்தான் தம் புலமையால்"ண" காரம்தான் சரியானது என்று அஷ்டாத்யாயீ முதலான நூல்களின் உதவியுடன் நிரூபித்தார்.

வாக்கியம் என்பது மீமாம்ஸா சாஸ்திரத்தைக் குறிக்கும். மீமாம்ஸ என்பதன் அர்த்தம் சிறந்த ஆராய்ச்சி. வேதத்தில் உள்ள சந்தேகம் வரக்கூடிய வாக்கியங்களை ஆராய்ந்து சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இந்தச் சாஸ்திரம் உதவுவதால் இது வாக்கிய சாஸ்திரம் எனப்படுகிறது. மனிதர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களையும் தர்மத்தையும் விவரித்து இயம்பும் வேதத்தின் முற்பகுதி பூர்வ காண்டம் அல்லது கர்ம காண்டம் எனப்படும். வேதத்தின் இந்தப் பகுதிகளில் வரும் வார்த்தைகளை ஆராய முற்படும் சாஸ்திரத்திற்கு பூர்வ மீமாம்ஸை அல்லது தர்ம மீமாம்ஸை என்று பெயர். இதன் ஆசிரியர் ஜைமினி மஹரிஷி ஆவார்.

பிரஹ்ம ஸ்வரூபத்தை உணர்த்தும் வேதத்தின் பிற்பகுதியில் (இவையே உபநிஷத் அல்லது வேதாந்தம் எனப்படும்) காணப்படும் வாக்கியங்களை ஆராய முற்படும் சாஸ்திரம் உத்தர மீமாம்ஸை அல்லது பிரஹ்ம மீமாம்ஸை எனப்படுகிறது. ஸ்ரீவேதவ்யாசர் இதன் ஆசிரியர்.

ஆகவே வேதத்தின் பொருளைச் சரியாக அறிய வேண்டுமென்றால் மீமாம்ஸா சாஸ்திரத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இந்த சாஸ்திரத்தில் நுணுக்கமானவற்றைக் கூட அறிந்து வைத்திருப்பவர் நம் ஸ்ரீஜகத்குரு. 1992ஆம் ஆண்டு ஆசாரியார் இராமேஸ்வரம் விஜயம் செய்திருந்த போது சிருங்கேரி ஜகத்குருக்களுக்கே உண்டான (சிருங்கேரி ஆசாரியாரிடம் உபதேசம் பெற்ற மஹாராஷ்டிர அர்ச்சகர்கள் மற்றும் நேபாள அரசர்கள் தவிர) உரிமையின் பேரில் ஸ்ரீ இராமநாதஸ்வாமியின் கருவறைக்குள் சென்று விரிவான பூஜை செய்தார். தீபாராதனை ஆனதும் அங்கு பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். அதற்கு மறுநாள் அந்தப் பண்டிதர்கள் எல்லாரும் ஸ்ரீமடத்தால் கௌரவிக்கப்பட்டனர். முதல் நாள் வேதம் கூறிய பண்டிதர் அருகில் வந்ததும் ஆசாரியர் அவர் சொன்ன பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுட்டிக்காட்டி "சாஸ்திரிகளே! நேற்று நீங்கள் இந்த இடத்தில் தீர்க்கமாகச் (நெடிலாக) சொன்னீர்கள். அதை ஹ்ரஸ்வமாக (குறிலாக)வும் விஸர்கத்துடனும் சொல்வது தான் சரி. ஏனெனில் அந்த வார்த்தை ஒரு ரிஷியின் பெயர்." என்று கூறி சம்பாவனையை அளித்தார். வேதத்தில் கண்ட அந்த வார்த்தையின் சரியான பொருள் அறிந்த ஆசாரியர் அதைச் சொன்னதில் வியப்பு ஒன்றுமில்லை. என் சிற்றறிவுக்கு இது தான் புலப்பட்டதே தவிர வித்வத் ஸதஸ்களில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களில் நம் குருநாதர் அவர்கள் இந்த சாஸ்திரத்தில் தமக்குண்டான புலமையை வெளிப்படுத்தி அங்கு குழுமியிருக்கும் அறிஞர் பெருமக்களை வியப்பில் ஆழ்த்துவார். பெரும் பண்டிதர்கள் அதை அனுபவிப்பார்கள்.

அதற்கு அடுத்து வரும் நியாய சாஸ்திரத்தைக் குறிக்கும் பிரமாணம் என்பது கௌதம முனிவரால் இயற்றப்பட்டது. பிரத்யக்ஷம் (நேரில் பார்ப்பது), அனுமானம் (ஊகித்து அறிதல்), உபமானம் (எடுத்துக்காட்டு மூலம் புரிய வைத்தல்) மற்றும் சப்தம் என்பவை பிரமாணங்கள் ஆகும். நியாய சாஸ்திரம் என்பது பிரமாணங்களின் லக்ஷணங்கள் (நீலீணீக்ஷீணீநீtமீக்ஷீவீstவீநீs) யாவை? தூய்மையான மற்றும் தூய்மையற்ற பிரமாணங்கள் யாவை? அவற்றை எப்படி கண்டறியலாம் என்பன போன்றவற்றைத் தெரிவிக்கும் பிரிவாகும். இது முதலான விஷயங்களை அறிந்தால்தான் உண்மையான பிரமாணத்தைக் கொண்டு இலக்கணம் (பதம் என்று கூறப்படுகிற வியாகரண சாஸ்திரம்) வாக்கியம் என்று கூறப்படும் மீமாம்ஸா சாஸ்திரம் என்றழைக்கப்படும் ஆராய்ச்சி ஆகிய இவ்விரண்டின் மூலம் வேத வாக்கியங்களின் உட்கருத்தை தாம் அறிவதோடல்லாது தம் சீடர்களுக்கும் புரிய வைக்க முடியும். 

1-5-1979இல் சிருங்கேரியில் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசாரியாரால் நிறுவப்பட்ட சதுராம்னாய பீடாதிபதிகளின் மாநாடு நடந்தது. உத்தராம்னாய பதரி மட பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரிய ஸ்ரீஸ்வரூபானந்த சரஸ்வதீ ஸ்வாமிகள், பூர்வாம்னாய பூரி மட பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரிய ஸ்ரீநிஸ்சலானந்த தீர்த்த ஸ்வாமிகள், பஸ்சிமாம்னாய துவாரகா மட பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீஅபிநவ ஸச்சிதானந்த தீர்த்த ஸ்வாமிகள், தக்ஷிணாம்னாய சிருங்கேரி மட பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய 
அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ. அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆகியோருடன் சிருங்கேரி மடத்தின் இளவல் என்ற முறையில் நம் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ. ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்களும் கலந்து கொண்டார்கள். தம் குருநாதரின் ஆணைப்படி அங்கு சம்ஸ்கிருதத்தில் ஒரு சொற்பொழிவாற்றினார். அதன் பொருளே பிரமாணங்கள்தான். பிரமாணங்களின் வகைகள் குணநலன்கள், குறைகள் முதிலியன பற்றி ஆராய்ந்து அநேக மேற்கோள்களுடன் பொருட்செறிவு மற்றும் இலக்கியச் செறிவு ஆகியவற்றுடன் அது மிகவும் உயர்ந்த தரத்தில் இருந்ததைக் கண்டு ஏனைய பீடாதிபதிகளும் குழுமியிருந்த அறிஞர் பெருமக்களும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

எனவே ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாசந்நிதானம் அவர்கள் பதம், வாக்கியம் மற்றும் பிரமாணம் ஆகிய மூன்று சாஸ்திரங்களிலும் ஒப்புவமையற்ற புலமை பெற்றிருப்பதால் "பத வாக்ய ப்ரமாண பாராவாரபாரீண" என்ற விருது இவரிடம் நன்றாகப் பொருந்தியுள்ளது கண்கூடு.

இதே போல பிருதாவளியில் காணப்படும் எல்லாச் சொற்களும் நம் ஆசாரியாளிடம் பொருத்தம் பெற்று ஏற்றம் பெற்றுள்ளன. மொத்தத்தில் சிருங்கேரி ஸ்ரீமடத்திற்கே உரித்தான பிருதாவளியின் உருவகமாக ஸ்ரீஆசாரியாள் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.

ஜூலை - 12.07.2014,  சனிக்கிழமை, வியாஸ பூஜை  கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இந்தப் பிருதாவளியைச் சொல்லி ஸ்ரீஆசாரியாளை வணங்கி நாம் நற்பயன்களை அடைவோமாக. அதற்காகவே முழு பிருதாவளியும் கீழே தரப்பட்டுள்ளது.

ச்ருங்கேரிஜகத்குருபிருதாவளி:

ஸ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாச்சார்யவர்ய,  
பதவாக்யப்ரமாணபாராவாரபாரீண,  யமநியமாஸனப்ராணாயாமப்ரத்யாஹாரதாரணாத்யானஸமாத்யஷ்ட்டாங்க,  யோகானுஷ்ட்டானநிஷ்ட்ட, 
தபஸ்சக்கரவர்த்தீ, 
அனாத்யவிச்சின்னஸ்ரீசங்கராசார்யகுருபரம்பராப்ராப்த,
ஷட்தர்ஸனஸ்தாபனாசார்ய,
வ்யாக்யானஸிம்ஹா
னாதீஸ்வர, 
ஸகலநிகமாகமஸாரஹ்ருதய,
ஸாங்க்யத்ரயப்ரதிபாதக,  
வைதிகமார்கப்ரவர்த்தக,  
ஸர்வ
ந்த்ரஸ்வந்த்ர, 
ஆதிராஜதானீ, 
வித்யாநகரமஹாராஜதானீ,
கர்னாடகஸிம்ஹாஸனப்ரதிஷ்ட்டாபனாசார்ய, 
ஸ்ரீமத்ராஜாதிராஜகுரு,
பூமண்டலாசார்ய,
ருஷ்யஸ்ருங்கபுராவராதீஸ்வர,
துங்கபத்ராதீரவாஸீ, 
ஸ்ரீமத்வித்யாசங்கரபாதபத்மாராதக, 
ஸ்ரீமஜ்ஜகத்குரு,
ஸ்ரீம
பிநவவித்யாதீர்த்தமஹாஸ்வாமிகுருகமலஸஞ்ஜாத,
ஸ்ரீமஜ்ஜகத்குரு,
ஸ்ரீபாரதீதீர்த்தமஹாஸ்வாமினாம்,
சரணாரவிந்தயோ :
   
சாஷ்டாங்கப்ரணாமான்  சமர்பயாமி / (சமர்பயாஹ : )

PS : 
சமர்பயாமி - Singular
சமர்பயாஹ : - Plural 

No comments:

Post a Comment