Thursday, September 25, 2014

Bridegroom

Courtesy: Smt.Uma Balasubramanian

   தலைவன்   

ஓர் ஊரில் கல்யாணமாகாத பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெற்றோர் அவள் திருமணத்திற்காக ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தனர். அனால்  அந்தப் பெண்ணோ 

"ஆண்களிலெல்லாம் எவன் உயர்ந்தவனோ அவனைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் "என்று வீம்பு பிடித்தாள் அதனால் பெற்றோர்களும் அவள் வழியில் விட்டு விட்டனர்.

அந்தப் பெண் , புருஷர்களுக்குள்ளே உயர்ந்தவன் ராஜாதான் என்று எண்ணி ராஜாவின் பின் சுற்றித் திரிந்தாள் . அவன் "ஏன் என்பின்னால் அலைகிறாய்?" என்று கேட்டால் "எல்லோருக்கும் உயர்ந்தவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்வதாகத் தீர்மானித்தேன் அதனால்தான் தங்கள் பின் வருகிறேன் "என்று சமாளிக்கலாம் என்று எண்ணினாள் . ஒரு  நாள் அந்த ராஜா பல்லக்கில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, எதிரே வந்த சாமியாரைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கி அந்தச் சாமியாருக்குக் கீழே விழுந்து நமஸ்கரித்தான். ஓ! ராஜாவைக் காட்டிலும் இந்தச் சாமியார்தான் உயர்ந்தவர்போல் இருக்கிறது அதனால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் செய்துகொள்ளவேணும் எனத் தீர்மானித்தாள். பின் அந்தச் சாமியாரின் பின் சுற்ற ஆரம்பித்தாள். அந்தச் சாமியாரோடு போகும்பொழுது ஒருநாள் ஒரு ஆலமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரைக் கண்டு  குட்டிக்கரணம் போட்டு , தோப்புக்கரணமும் போட்டு நமஸ்கரித்தார்.. இந்தச் சாமியாரைவிட பிள்ளையார்தான் உயர்ந்தவர் என நினைத்து பிள்ளையாரின் காலடியிலேயே வசிக்க ஆரம்பித்தாள் .ஒரு நாள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று அங்கு வந்து பிள்ளையாரின் மேல் காலை வைத்துச் சிறுநீர் கழித்தது ஓ! பிள்ளையாரைவிட நாய்தான் உயர்ந்ததுபோல் இருக்கிறது என்று   அதன் பின்னே ஓடினாள் . ஓடிக்கொண்டிருந்த  நாயை ஒருசிறுவன்  கல்லால் அடித்தான் அது கத்திக்கொண்டே வெகு தூரம் சென்றது . அந்தச் சிறுவன் தான் உயர்ந்தவன் என்று எண்ணினாள் அப்பொழுது எங்கிருந்தோ ஒரு வாலிபன் வந்து , " ஏண்டா அதைக் கல்லால் அடிக்கிறாய் ?" என்று அந்தச் சிறுவனை மிரட்டியதும் , அந்தச் சிறுவன் ஓடிவிட்டான். இந்த வாலிபன் தான் உயர்ந்தவன் என்று எண்ணி இவன் தான் என் மணவாளன் என்று தீர்மானம் செய்தாள் . தன் பெற்றோருக்கும் அதைத் தெரிவித்தாள். ஆம் ! அவன் தான் பெற்றோரால் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை ! ----" வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டே சுற்றினாள் . கடைசியில் அவன் அவள் அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான் -----
இதன் தத்துவம் என்னவென்றால் எங்கோ தூரத்தில் இருக்கிறான் என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே ! தெரியாதவரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான் ஸ்வாமி . ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்கமுடியாது. அவன் உங்கிட்டேயே இருப்பவன்தான்

  தூராத் அந்திகே ச ------  தூரத்திற்கெல்லாம் தூரம் சமீபத்திற்கெல்லாம் சமீபம் ---   என்று சுருதி சொல்கிறது

No comments:

Post a Comment