Courtesy: Sri.R.Goutam
http://mahaperiyavaa.wordpress.com/2014/01/07/vaikunta-ekadasi-mahimai-periyavas-upadesam/
Om Namo Narayana!
ஏகாதச்யாம் து கர்த்தவ்யம் ஸர்வேஷாம் போஜ நத்வயம்மி
சுத்தோபவாஸ:ப்ரதம: ஸத்கதாச்ரவணம் தத:மிமி
"ஹே ஜனங்களே! ஸகல பிராணிகளே! ஏகாதசி புண்ணிய காலத்தன்று ஸர்வ பிராணிகளும் செய்ய வேண்டி காரியங்கள் இரண்டு; முதலாவது – சுத்தோபவாஸம்; இரண்டாவது இரவும் பகலும் ஸத்கதா ச்ரவணம்; இந்த இரண்டைத் தவிர மற்றொரு காரியத்தில் அன்று, வேறு காரியத்தில் ஒரு பிராணியும் பிரவிருத்திக்கக் கூடாது. அன்று பகல் இரவு இரு வேளைகளிலும் அன்ன போஜனமும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தவனுக்கு, சாஸ்திரத்தில் மகாபாவம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தச் சாஸ்திரத்தை அடியிற் கண்டபடி அறிக.
மாத்ருஹா பித்ருஹா சைவ ப்ராத்ருஹா ததா I
ஏகாதச்யாம் து யோ புங்க்தே பக்ஷயோருபயோரபி II
என்ற மநு வசனமே பிரமாணமாகும்.
சுக்லபக்ஷமோ கிருஷ்ணபக்ஷமோ இரண்டு பக்ஷங்களிலும் ஏற்படும் ஏகாதசி தினத்தில் எந்தப் பிராணி புஜிக்கிறானோ, அவன் தாயைக் கொன்றவனாகவும், தகப்பனைக் கொன்றவனாகவும், சகோதரனைக் கொன்றவனாகவும், தத்துவோபதேசம் செய்த ஆசார்யனைக் கொன்றவனாகவும் ஆகிறான் என்பது மேற்கண்ட சாஸ்திரத்தின் தாத்பரியமாகும்.
இவ்விதம் மஹா கோரமான பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் இரண்டு பஷங்களிலும் ஏகாதசி தினத்தில் உபவாச தினத்தை அநுஷ்டிக்க வேண்டும். உபவாஸம் என்ற சப்தத்தின் பொருளோ உப ஸமீபே வாஸயதி இதி உபவாஸ: என்ற ஸமாஸத்தை அநுசரித்து, விஷ்ணுவினுடைய ஸமீபத்தில் தன் மனத்தை வஸிக்கும்படி, அதாவது இரவும் பகலுமாக விஷ்வினுடைய கதாச்ரவணமோ, விஷ்ணுவினுடைய நாம ஸங்கீர்த்தனமோ, விஷ்ணுவினுடைய ஸ்வரூப த்யானமோ செய்துகொண்டு அன்று காலத்தைக் கழிக்க வேண்டும்.
நாத்யச்நதஸ் து யோகோஸ்தி ந சைகாந்தமநச்நத: என்ற வாக்கியத்தை அநுசரித்து, அமிதமாக, அளவு கடந்த புஜிப்பவனுக்கோ, ஸர்வ ப்ரகாரத்திலும் ஆஹாரம் செய்யாமலிருப்பவனுக்கோ தியானயோகம் ஸித்திக்காது என்று தெரிகிறபடியால், ஏகாதசி தினத்தன்று விருத்தர்களோ பாலர்களோ, அவர்கள் பழத்தையோ க்ஷீரத்தையோ அல்பமாக உட்கொள்வதனால் தோஷம் ஏற்படாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏகாதசி விரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்ததாக ஸ்ரீமத் பாகவதாதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏகாதசி விரதத்தை அநுஷ்டித்தவனுக்கு மகாவிஷ்ணு ஸுலபமாகிறார் என்பதே இந்தக் கதையின் தாத்பர்யமாகும். விரதங்களுக்குள் ஏகாதசி விரதமே நித்ய விரதமாயும், உயர்ந்த விரதமாயும் ஆகும். ஸர்வ பிராணிகளும் அதை அநுஷ்டித்தே தீரவேண்டும். அந்த விரதத்தை அநுஷ்டிக்கிறவர்களுக்கு மோக்ஷம் கையிலுள்ள நெல்லிக்கனி போல் ஸுலபமாகக் கிடைக்கும்.
ஏகைவ தஸா அவஸ்தா யஸ்யாம் திதௌ வ்ரதாநுஷ்டாநதத்பராணாம் நரணாம் ஏகாதசீ என்ற ஸாமஸத்தை அநுசரித்து, எந்தத் திதியில் மேற்சொன்ன விரதத்தை அநுஷ்டிக்கிற மனிதர்களுக்கு முக்தி என்ற ஒரே நிலையைத் தவிர வேறு பிறப்பு இறப்பு என்ற அவஸ்தை இல்லாமல் ஆகுமோ அந்தத் திதிக்கு ஏகாதசி பெயர் ஏற்ப்பட்டது என்று தெரிகிறபடியால், அந்தத் திதியில் உபவாஸம் என்ற விரதத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு மோக்ஷம் என்ற பரம புருஷார்த்தம் கைக்கு எட்டினதாகவே ஆகிறது என்பது ஸித்தமாகிறது.
அதிலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. மற்ற ஏகாதசிகளில் உபவாஸம் முதலான விரதத்தை அநுஷ்டானம் செய்யாமல் தவறினவர்கள், வைகுண்ட ஏகாதசியன்றாவது அந்த விரதத்தை அநுஷ்டித்தார்களேயானால், மற்ற ஏகாதசிகளிலும் விரதாநுஷ்டானம் செய்தவர்களாகவே அவர்களைக் கருதி வைகுண்டததில் நித்யஸ¨ரிகளுடைய பதவியை அளிப்பதில் பகவான் நியதராக இருக்கிறார். ஒவ்வொரு வருஷத்திலும், தனுஸ்ஸில் ஸ¨ரியன் இருக்கும்பொழுது சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியன்று மகாவிஷ்ணு தம் சயனமான ஆதிசேஷ பகாவனிடமிருந்து யோகநித்தியிலிருந்து விழித்துக் கொண்டு, எவர் எவர் விரதாநுஷ்டானம் செய்தவர்கள், மோக்ஷத்தை யாருக்கு அளிக்க வேண்டும் என்று கவனிக்கும் தினமானதால், அன்றாவது இந்த விரதத்தை அநுஷ்டித்து, மகாவிஷ்ணுவினுடைய ப்ராஸத்திற்குப் பாத்திரராக வேண்டுமென்று கோருகிறோம்
ஏகாதசியின் ஏற்றம்
வ்ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.
ந காயத்ர்யா : பரம் மந்த்ரம் ந மாது : பர தைவதம் *
ந காச்யா : பரமம் தீர்த்தம் நைகாதச்யா : ஸமம் வ்ரதம் **
ந காச்யா : பரமம் தீர்த்தம் நைகாதச்யா : ஸமம் வ்ரதம் **
'காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை;அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை) ;காசிக்கு மேலே தீர்த்தமில்லை'என்று சொல்லிக் கடைசியில் 'ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதுமெதுவுமில்லை'என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் 'மேலே'ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு 'ஸமமாக'ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு 'மேலே'மட்டுமில்லாமல், அதற்கு 'ஸமமாக'க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிற்ப்பித்துச் சொல்லியிருக்கிறது.
அஷ்ட வர்ஷாதிக : மர்த்ய : அபூர்ணாசீதி வத்ஸர :*
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ : உபயோ அபி **
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ : உபயோ அபி **
என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், 'மர்த்ய', அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது. என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்;அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை 'எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி'னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை;ரூலாகப் போடவுமில்லை.
பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.
இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளைஅன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் < /b>கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச்சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாத்தைக் கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால்அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது:
ப்ரதிக்ராஸம் அலௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம் .
வயிற்றுக்காக வாயைத் திறக்காத உபவாஸ நாட்களில் பேச்சுக்காகவும் வாயைத் திறக்கப்படாது என்பதோடு இன்னொரு நியமத்தையும் சேர்த்துக் கொள்வதுண்டு. வாயைத் திறக்கக்கூடாத அந்த நாளில் கண்ணை மட்டும் மூடக்கூடாது என்று நியமம்!இராப்பூராவும் கண் விழித்துக்கொண்டு, பகவத் சிந்தனை, கதை, கீர்த்தனை, பாராயணம் இதுகளிலேயே செலவழிக்க வேண்டும். வாயை மூடுவதாலேயே இப்படிக் கண்ணை மூடாமலிருக்கிற தெம்பு மன ஈடுபாடு இரண்டும் உண்டாகும். ('கண்ணை மூடக்கூடாது'என்பது 'தூங்கக் கூடாது'என்ற அர்த்தத்தில். நாள் முழுதும் கண்ணைத் திறந்துகொண்டே இருக்கணும் என்ற அர்த்தத்தில் இல்லை) , சிவராத்திரிக்கும் வைகுண்ட ஏகாதசிக்கும் ராக்கண் விழிப்பதை முக்யமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். விடிய விடிய ஸினிமா பார்த்து புண்யத்துக்கு ('புண்யத்தை'இல்லை) மூட்டை கட்டுவதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது!பிரதி ஏகாதசிக்குமே இந்த நியமம் சொல்வதுண்டு. ஏகாதசியில் செய்யவேண்டியது "போஜன த்வயம்"இல்லை, "போஜன த்ரயம்";அதாவது உபவாஸம், பஜனை என்ற இரண்டோடு 'ஜாகரணம்'என்று மூன்றாவதாக ராக்கண் முழிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுண்டு.
கீதையில் 'பட்டினி கிடக்கிறவனுக்கு யோகம் வராது'. தூங்காமலே இருக்கிறவனுக்கு யோகம் வராது ( நாத்யச்னதஸ்து யோகோஸ்தி … ஜாக்ரதோ நைவசார்ஜுந ) என்று இருந்தாலும் அந்த ஜெனரல் ரூலுக்கு அநுகூலம் பண்ணுவதற்காகவே அதற்கு மாறாக ஒவ்வொரு புண்ய தினங்களில் பட்டினி கிடந்து கொண்டு, கண்ணைக் கொட்டாமல் விழித்துக்கொண்டு ஈச்வர ஸ்மரணம் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் சாஸ்திரந்தான் ப்ரமாணம் ( தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே ) என்றவர்தான்.
Story of Durvaasa Maharishi and Ambarisha Maharaja
ஸுர்ய வம்சத்தில் அம்பரீஷன் என்ற அரசன் இருந்தான். அந்த ராஜன் விஷ்ணு பக்தர்களுக்குள் பெரிய பக்தனும் ஆவான். அந்த மகாநுபாவன் ஏகாதசி தினத்தன்று சுத்தோபவாஸம் இருந்து, ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் இந்த உபாயங்களால் மகாவிஷ்ணுவை ஸ்வாதீனமாகச் செய்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்துவந்தான். பகவானான மகாவிஷ்ணு அவனுடைய மேலான பக்தியைப் பார்த்து, அவனுடைய ராஜாங்கத்தை ரக்ஷிப்பதற்காக,
அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா:பர்யுபாஸதேமி
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்மிமி
என்று தாம் செய்த பிரதிக்கினையை அநுஸரித்து, அந்த ராஜனுடைய அரண்மனை வாசலில், தம் ஸுதர்சன சக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அந்த ராஜனை ரக்ஷித்து வந்தார். அதனால் அந்த ராஜனுக்கு ஸாமந்த ராஜாக்கள் மூலமாக ஒருவிதப் பீதியும் ஏற்பட நியாமில்லாமல் ஆகிவிட்டது.
இப்படி இருக்கும் பொழுது ஒரு ஏகாதசியன்று வழக்கம் போல் சுத்தமான உபவாசத்தை அநுஷ்டித்து பகவானான விஷ்ணுவைக் கிரமப்படி ஆராதித்துவிட்டு, மறு தினத்தில் துவாதசி காலபாரணையைச் செய்ய ஸித்தமாக இருந்தான். அன்றைத் துவாதசியோ, மூர்த்தார்தாவாசிஷ்டாயாம் த்வாதச்யாம் பாரணாம் வ்ரதீ என்ற வாக்கியத்தை அநுசரித்து, ஸ¨ரியன் உதித்து ஒரே நாழிகை மட்டும் துவாதசி மீதியாக இருந்தது. ஏகாதசி வ்ரத பல ஸித்தி துவாதசியில் பாரணை செய்தால்தான் பூர்த்தியாகும். த்ரயோதசி வந்தால் பகல்போஜனத்தைத் தர்மசாஸ்திரம் நிஷேதித்திருக்கிறது.
த்ரயோதஸ்யாம் திவாபுக்திர் ப்ரஹ்மஹத்யாஸமா ஸ்ம்ருதா I
ப்ரதோஷ சிவமாராத்ய ராத்ரிபுக்திர் விமுக்கிதா II
என்ற ஸ்ம்ருதி ப்ரகாரம் திரயோதசி திதியில் பகலில் போஜனம் செய்தால், ப்ரமஹத்தி தோஷமும், ஸாயங்காலத்தில் பரமேஸ்வரனைப் பூஜித்துவிட்டு ராத்திரியில் ப்ரதம ஜாமத்தில் போஜனம் செய்வது மோக்ஷம் என்ற பலனைக் கொடுக்கக் கூடியதென்றும் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது.
இந்தக் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் சாஸ்திரத்தை அம்பரீஷ மகாராஜா அறிந்தவனாதலால் ஒரு நாழிகை மட்டும் புச்சம் இருக்கும் துவாதசிக்குள் பாரணை செய்யவேண்டுமென்ற ஆவலுடன், எல்லா அநுஷ்டானங்களையும் அதற்குள் முடித்துக்கொண்டு, பாரணை செய்ய ஸித்தனானான் .
அந்தத் தருணத்தில், துர்வாஸ மகரிஷி தம் சிஷ்யர்களுடன் ராஜனுடைய கிருஹத்தில் போஜனம் செய்ய வேண்டுமென்ற விருப்பமுள்ளவராக அதிதியாக வந்து சேர்ந்தார். ராஜன் பரம பக்தியுடன் துவாதசி புண்ணியகாலத்தில், சிவபக்த அக்ரேஸரரான துர்வாச மஹரிஷி போஜனத்தைக் கருதி வந்தது நமது பெரிய பாக்கியத்தை ஸ¨சிக்கிறது என்று ஆனந்தித்து, மஹரிஷியை வரவேற்று உபசரித்தான். மஹரிஷியோ, தாம் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்யவேண்டுமென்ற ஆவலுடன் ராஜனிடம் அதைத் தெரிவித்துவிட்டுத் தம் சிஷ்யர்களுடன் ஸரயூ நதிக்குச் சென்றார்.
ராஜன்,"துவாதசி அல்பமாக இருப்பதானால், சீக்கிரம் தங்கள் ஆகமனத்தை எதிர்பார்க்கிறேன்"என்று பிரார்த்தித்தான். மஹரிஷி, "ஒரு க்ஷணத்திற்குள் வருகிறேன்"என்று சொல்லிவிட்டு நதிக்குச் சென்றார். சொன்னபடி மஹரிஷி துவாதசி முடிவதற்குள் வரவில்லை. ராஜனோ, துவாதசி போய்விடுமே என்று கவலையை அடைந்தான். துவாதசி பாரணை செய்யாமற் போனாலோ, ஏகாதசி வ்ரதபலன் ஸித்திக்காது என்று சொன்னோம். அதற்காக, அசிதம் ச அநசிதம் ச பவதி என்ற சாஸ்திரமானது, ஸாளக்ராம அபிஷேக தீர்த்தத்தை ஒரு உத்தரணி உட்கொண்டால், துவாதசி பாரணை செய்த பலனும் ஸித்திக்கும்;அதிதியை விட்டுப் போஜனம் செய்தான் என்ற தோஷமும் வராது என்ற தாத்பர்யத்தைக் கூறுகிறபடியால் அதை அநுசரித்து ஸாளக்ராம தீர்த்தத்தை ப்ராசனம் செய்து ஏகாதசி விரத பலன் ஸித்திக்கும்படியாகவும் செய்துகொண்டு, அன்ன போஜனத்திற்காகத் துர்வாஸ மஹரிஷியை எதிர்பார்த்துக்கொண்டு வந்தான்.
மஹரிஷி சிஷ்யர்களுடன் சற்று நேரம் கழித்து வந்து, ஸாளக்ராம தீர்த்தத்தை ராஜன் ப்ராசனம் செய்ததற்காக, "மகா தபஸ்வியான என்னை முதல்முதலில் பூஜிக்கச் செய்யாமல் c பாரணை செய்தது தவறு"என்று கோபித்துச் சபிக்க ஆரம்பித்தார்.
ராஜன் எவ்வளவோ அவருடைய காலில் விழுந்து மேற்காட்டிய சாஸ்திர வசனத்தையும் பிரமாணமாக அவரிடம் நிரூபணம் செய்து, "ஸாளக்ராம தீர்த்தத்தை மட்டும் நான் ப்ராசனம் செய்தேன்; அன்ன போஜனம் நான் செய்யவில்லை;க்ஷமித்துக்கொள்ள வேண்டும்"என்று கெஞ்சிக் கதறியும் துர்வாஸ மஹரிஷி கொஞ்சமேனும் பொறுமையை அடையாமல் பரம கோபத்தை அடைந்து தம்முடைய ஜடையைத் தட்டி அதிலிருந்து ஒரு பிசாசை (பூதத்தை) த் தபோமஹிமையினால் ஸ்ருஷ்டித்து, ராஜனைப் பக்ஷிக்கும்படி ஏவினார். உடனே ராஜனுடைய யோகக்ஷேமத்தை வஹிக்க, பகவானான விஷ்ணுவினால் அரண்மனை வாசலில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சக்கரம், தான் ராஜனை ரக்ஷிப்பதற்காக ஆக்ரோஷத்தை அடைந்து, துர்வாஸரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசைத்தான் பக்ஷிப்பதற்கு சப்தித்துக்கொண்டு வெளிக்கிளம்பிற்று. பிசாசோ, துர்வாஸ மஹரிஷியினிடம் சென்று, "விஷ்ணு பக்தனான அம்பரீஷணிடம் நான் பிரவேசிக்கச் சக்தியற்றவனாகி விட்டேன்;ஸுதர்சன சக்ரம் என்னை விரட்டிக்கொண்டு வருகிறது. அந்தச் சக்கரத்துடன் எதிர்த்துப் போராட எனக்குச் சக்கி இல்லை. என் பசியையோ அடக்கவும் முடியவில்லை. எனக்கு ஆஹாரம் இப்பொழுது தேவையாக இருக்கிறது. உம்மையே நான் பக்ஷிக்கிறேன்"என்று செல்லி, துர்வாஸரையை பலாத்காரம் செய்து பக்ஷிக்க ஆரம்பித்தது.
துர்வாஸ மஹரிஷி தமது தபோமஹிமையால் விஷ்ணு பக்தனைக் கொல்லப் பிசாசை ஸ்ருஷ்டித்தாரே தவிர, அதை உபஸம்ஹாரம் ஹாரம் செய்யச் சக்தியற்றவராக ஆகிவிட்டார். தம் சிஷ்யர்களோடு துர்வாஸ மஹரிஷி பிசாசுக்குப் பயந்து ஓட ஆரம்பித்துவிட்டார். பிசாசோ துர்வாஸரை விரட்டிக்கொண்டு ஓடுகிறது. பிசாசையோ ஸுதர்சன சக்ரம் பக்ஷிக்க விரட்டுகிறது. இவ்வித துர்வாஸ மஹரிஷி ஒரு லோகம் மீதியின்றி ஓடியும், தம் ஆத்மாவைத் தாம் ரக்ஷித்துக்கொள்ளக் கஷ்டப்பட்டும் முடியவில்லை. இந்திரலோகம், பிரம்மலோகம், கைலாஸம் முதலான ஸ்தலங்களுக்குச் சென்று, தம்மைக் காப்பாற்றத் தமக்கு யாராவது உதவி செய்வானோ என்று எதிர்பார்த்தும், ஒருவராலேயும் இவரை, இவர் ஸ்ருஷ்டித்த பிசாசினின்றும் ரக்ஷிக்க முடியாமல் ஸுதர்சன சக்ரத்திற்குப் பயந்து பின்வாங்கிவிட்டார்கள். கடைசியில் வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவின் காலில் விழுந்தார். பகவானான விஷ்ணு, அஹம் பக்தபராதீந:என்றதனால், "ஹே பிராம்மணா!நான் பக்தனுக்கு உட்பட்டவன். உம்மை ரக்ஷிக்கும் விஷயத்தில் எனக்கு ஸ்வாதந்த்ரியம் இல்லை. சரணாகதி செய்தவனை நான் ரக்ஷிக்கிறேன் என்று சொன்னதும், எனக்கு நேரில் அபசாரம் செய்தவனைக் குறித்து மட்டுமே தவிர, என் பக்தனுக்கு அபசாரம் செய்தவனைக்கூட, என்னை சராணகதி செய்ததற்காக, நான் ரக்ஷிக்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை. ஆகையால், என்னால் ஒன்றும் ஸாத்தியமில்லை. அம்பரீஷனிடம் போம்"என்று துர்வாஸ மஹரிஷியை மஹாவிஷ்ணுவும் கைவிட்டுவிட்டார்.
துர்வாஸ மஹரிஷி கதியில்லாமல் அம்பரிஷி மகாராஜனிடத்தில் சிஷ்யர்களுடன் சரணாகதி செய்ய வந்தார். ராஜனோ, "பிராம்மணோத்தமர்கள் தாங்கள். என்னைத் தாங்கள் சராணாகதி செய்யக் கூடாது. நான் எந்த அபராதமும் செய்யவில்லையே;தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இவ்விதம் கோபம் வரலாமா?"என்று சொல்லி க்ஷமாபணம் செய்துவிட்டு, மஹரிஷியின் காலில் விழுந்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, திவ்ய போஜனாதிகளைச் செய்து வைத்து, துர்வாஸ மஹரிஷியினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசையும் தன் பக்திமகிமையினால் உபஸம்ஹாரம் செய்து, ஸுதர்சன சக்ரத்தையும் பொறுத்துக்கொள்ளும்படி பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டு, பிராம்மணோத்தமருடைய ஆசீர்வாதத்திற்கும் பாத்திரமானான்.
No comments:
Post a Comment