Tuesday, September 3, 2013

LOAN

Courtesy: Sri.Mayavaram Guru
 
கடன் அனைவருக்கும் தீங்கு - மஹா பெரியவா

சிக்கனம் தன் சேமிப்புக்காக அல்ல, பரோபகாரத்துக்காகவே என்பது போலவே, கடன் வாங்காமலிருப்பதும் தன் நன்மையைக் கருதி மட்டுமில்லாமல், பரோபகார உத்தேசத்தின்மீதே இருக்க வேண்டும். கடன் பட்டுவிட்டால் அதை அடைப்பதற்கே பாடுபடுவது ஒரு கடன். அடைந்த பிறகு, ஏற்கெனவே கடன் வாங்கின பழக்கத்தில் மறுபடி மறுபடி கடனுக்குப் போவது என்றுதான் அனர்த்தமாகப் போய்க்கொண்டிருக்கும். இப்படி தனக்கே இல்லாத நிலையை உண்டாக்கிக் கொண்டால் பிறருக்கு எப்படிச் செய்வது?

ஆசார்யாள் 'ப்ரச்நோத்ர ரத்ன மாலிகா' என்று கேள்வியும் பதிலுமாக ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். அதிலே ஒரு கேள்வி, ''உலகத்தில் தீட்டாக ஆவது எது?'' என்பது: '' கிமிஹ ஆசௌசம் பவேத் ?''

சுசி என்றால் சுத்தம். அசுசி (என்றால்) அசுத்தம். அசுசியுள்ளது ஆசௌசம். தேவ கார்யங்களுக்கு உதவாத படி ஆக்குகிற சாவுத் தீட்டு, பிரஸவத் தீட்டு முதலானவற்றையே சாஸ்திரங்களில் ஆசௌசம் என்று சொல்லியிருக்கிறது. இங்கே, சிஷ்யன் ''ஆசௌசம் எது?'' என்று கேட்பதாகவும், அதற்கு குரு பதில் சொல்வதாகவும் ஆசார்யாள் சொல்லுகிறார். அந்தப் பதில் என்ன?

ருணம் ந்ருணாம்

''ந்ருணாம்''என்றால் ''மநுஷ்யனுக்கு'', ''மநுஷ்யனாகப் பிறந்த எல்லாருக்கும்'' என்று அர்த்தம். ''ருணம்'' என்றால் 'கடன்', ''மநுஷ்ய ஜன்மா எடுத்தவனுக்குப் பெரிய தீட்டு கடன் படுவதுதான்'' என்று ஆசார்யாள் சொல்கிறார். ஏன் அப்படிச் சொன்னார்?

தீட்டு வந்தால் என்ன பண்ணுகிறோம்? இந்தக் காலத்தில் ஒன்றும் பண்ணுவதில்லை. ''தீட்டாவது, துடக்காவது? எல்லாம் ஸ¨பர்ஸ்டிஷன்'' என்று ஆலய ஸந்நிதானம் உள்பட எல்லா இடத்திலும் ஆசௌசங்களைக் கலந்து கொண்டிருக்கிறோம். பலனாகத்தான் துர்பிக்ஷம், நூதன நூதன வியாதிகள், மஹாக்ஷேத்ரங்களிலேயே விபத்துக்கள் என்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஆகையால் ஐம்பது வருஷத்துக்கு முன்வரை இருந்த நடைமுறையை வைத்தே, ஆசார்யாள் எழுதினதற்கு அர்த்தம் சொல்கிறேன். இரண்டாயிரம் வருஷம் முந்தி அவர் இருந்தபோதும், அவருக்கும் எத்தனையோ ஆயிரம் வருஷம் முந்தியும் இதே ஆசார - ஆசௌசங்கள்தானே அநுஷ்டானத்திலிருந்திருக்கின்றன? 

ஒருத்தனுக்குத் தீட்டு ஸம்பவித்துவிட்டால் அந்த நாளில் என்ன பண்ணுவார்கள்? மற்றவர்கள் அவன் கிட்டேயே வரமாட்டார்கள். மேலே பட்டு விடப்போகிறான் என்று தள்ளித் தள்ளியே போவார்கள். கடனாளியாக இருக்கிறவனைக் கண்டும் பயந்து, ''எங்கே நம்மைக் கேட்டுவிடுவானோ?'' என்று மற்றவர்கள் ஒதுங்கித்தானே ஓடுகிறார்கள்! இவனும் கடன் கொடுத்தவன் எங்கே எதிர்ப்பட்டு விடுவானோ என்று பயந்துகொண்டு ஜன ஸமூஹத்தின் கண்ணில் படாமல் ஒளிந்துகொண்டுதான் போவான். தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போவது என்பார்கள், அடையாளம் தெரியாமலிருப்பதற்கு தன்னைத்தானே இப்படிப் பெரிய ஆசௌசம் ஏற்பட்டு விட்டதுபோலக் கடனாளி ஸமூஹ ப்ரஷ்டம் செய்து கொண்டுவிடுகிறான்.

ஒருத்தன் கடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதால் அத்தனை பேருக்கும் கஷ்டம். ''கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்'' என்று கம்பரே சொன்னபடி, கடன் வாங்கிவிட்டவன் கொடுத்தவனை நினைத்து எப்போதும் பயந்துகொண்டு கஷ்டப்படுகிறான்; தப்பித்துக்கொள்வதற்காகப் பொய் சொல்கிறான்; மிஞ்சினால் கடனை அடைப்பதற்காகத் திருடவும் துணிகிறான். கடன் பட்டாரைப் போல, அல்லது அதை விடவும், ''கடன் கொடுத்தார் நெஞ்சமும்'' கலங்கிக் கொண்டுதான் இருக்கம் - பணத்தை அழுதவன் இவன் தானே? அது திரும்பி வருமா வராதா என்று எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பான். கடன் கொடுத்தவனான இவனுக்கு எத்தனை எரிச்சலும் மனக் கொதிப்பும் உண்டாயிருக்கிறது என்பது ''கடன்காரன், கடன்காரி'' என்று வசவு ஏற்பட்டிருப்பதிலிருநந்தே தெரிகிறது.

கடன்காரன் என்றால் கடன் கொடுத்தவன், வாங்கினவன் என்று இரண்டு தினுஸாகவும் அர்த்தம் பண்ணிக்கொள்ள இடமிருக்கிறது! வளர்ந்த குழந்தைகள் செத்துப்போனால், ''கடன்காரன் (கடன்காரி) போயிட்டானே (போயிட்டாளே) ''என்று தாயாக இருக்கப்பட்டவள் மனஸ் நொந்து பிரலாபிப்பதுண்டு. இங்கே கடன்காரன் என்றால் பூர்வ ஜன்மத்தில் நமக்குப் பணமாகவோ உழைப்பாகவோ கொடுத்தவன் என்று அர்த்தம். அப்படிக் கொடுத்ததை, கடனைத் திருப்பி வாங்கிக்கொள்கிற மாதிரி வாங்கிக்கொள்ளவே இப்போது பிள்ளையாகப் பிறக்கிறான். பெற்றவர்களுக்குச் செலவு, தேஹ ச்ரமம் எல்லாம் வைக்கிறான். இவற்றில் தான் முன் ஜன்மாவில் கொடுத்த அளவுக்குத் திரும்ப அவர்களிடம் வாங்கிக் கொண்டவுடன் கடன் தீர்ந்தாயிற்று என்று கண்ணை மூடிக்கொண்டு போய்விடுகிறான்.

''ஜன்மாந்தர கடன்காரன்'' என்று சொல்கிற போதும் பூர்வஜன்மத்தில் நாம் ஒருத்தனால் பெற்றதைத் திரும்ப நம்மிடமிருந்து வாங்கிக்கொள்ள அவன் வந்திருக்கிறான் என்றே அர்த்தம். ஒருத்தன் கடன் படுவதனால், கடன் படுகிறவன் மட்டுமில்லாமல் கடன் தருகிறவனும் கஷ்டத்துக்கு ஆளாகிறான் என்று சொல்ல வந்தேன். இப்போது நவீன 'ஐடியாலஜி' போய்க்கொண்டிருக்கிற போக்கில் கடன் கொடுத்தவர்தான் அதிகக் கஷ்டத்துக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. 

ஸர்க்காரே கடன் வாங்கிப் பெரிய பெரிய திட்டம் போடுவதாக இருப்பதால் போலிருக்கிறது, கடன்பட்டவர்களுக்குத்தான் இப்போது ஸர்க்காரில் எல்லா சலுகையும்! வெளி தேசங்களில் உள்ள லக்ஷரிகள்தான் இப்போது நம் ஸர்க்காருக்கு 'டார்கெட்' (குறிக்கோள்) ! வாஸ்தவத்தில் தேசத்தில் திருப்தியும் ஆத்யாத்மிகமான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமானால், ஜனங்களுக்கு இடையில் பொறாமையும் போட்டிகளும் போகவேண்டுமானால், 'வாழ்க்கைத் தரம்' என்று சொல்வதைக் குறைப்பதற்குத் தான் திட்டம் போடவேண்டும். ஆனால் வாழ்க்கைத் தரத்தை மேல் நாடுகளின் தரத்துக்கு உயர்த்தியே தீரவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு வேண்டாத வஸ்துக்களை அத்யாவசியத் தேவையாக ஆக்குவதற்கே ஸர்க்கார் திட்டம், திட்டம் என்று ஓயாமல் போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக, இந்த தேசத்திலுள்ள எல்லா ஜனங்களின் கடனையும் சேர்த்து வைத்து ஸர்க்காரே ஒன்றுக்கப்புறம் எத்தனையோ ஸைஃபர்கள் போடுகிற தொகை லோகம் பூராவும் கடன்பட்டிருக்கிறது. வேண்டாத வஸ்துக்களில் ஜனங்களுக்கு அபிருசியை உண்டாக்கி விட்டு, அதனாலேயே அவர்களை சம்பள உயர்வுக்காக எப்போது பார்த்தாலும் சண்டை, ஸ்டிரைக் என்று இறங்குவதற்குத் தூண்டிக்கொண்டிருக்கிறது. 

'திட்டம்' என்ற பெயரில் திட்டமில்லாமல் செய்கிற காரியத்தால் ஏற்பட்டிருக்கிற inflation -ல் (பணவீக்கத்தில்) என்ன (வருமானம்) வந்தாலும் போதமாட்டேனென்கிறது. ஜனங்கள் கடனாளியாக வேண்டியிருக்கிறது. இதற்கு ஸர்க்காரே 'இன்ஸென்டிவ்' தருவதாக இருக்கிறது! ஜனங்களைக் கடன் வாங்குவதற்கு நன்றாகப் பழக்கி வைக்கிற ரீதியில் கிராமத்துக்கு கிராமம் பாங்குகள் திறந்து அநேக ஜனங்களுக்கு 'லோன்' கொடுக்கிறது.

இதனாலே எத்தனையோ பொய், மோசடி, கரப்ஷன், பாங்கு சொல்கிற இனத்துக்காக் கடன் வாங்குவதாகச் சொல்லிக்கொண்டு அதை வேறு காரியங்களுக்குப் பிரயோஜனப்படுத்துவது, அதற்காக inspection staff -க்கு 'அழுவது' முதலில் பல பேர் மனுப்போடும் போட்டியில் 'லோன்' வாங்குவதற்கே அதிகாரிகளுக்கு 'நைவேத்யம் பண்ணுவது' என்றெல்லாம் ரொம்பக் குழறுபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. 

அப்புறம் கடனைத் திருப்பி வசூலிப்பதும் கஷ்டமாகிறது. கட்டாயப்படுத்தி வாங்கினால் 'வோட்' போய்விடப் போகிறதே என்ற பயத்தில் கடனை write off பண்ணி விடுகிறார்கள்! சொந்தப் பணமா என்ன, ஜனங்கள் வரி முதலானவைகளைக் கொடுத்துதானே என்பதால் ஸுலபமாகக் கடனை வஜா செய்துவிட்டு நல்ல பெயரும், வோட்டும் ஸம்பாதிக்கப் பார்க்கிறார்கள். அதோடு போகவில்லை. சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்தவன் அல்லது குத்தகைப் பணம் பெற வேண்டியவன் முதலியவர்களெல்லாருங்கூடத் தங்கள் பணத்தை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதாக அவர்களை வயிறெரிய வைத்து, 'மொரடோரியம்' என்று 'ஆர்டினன்ஸ்' போட்டு விடுகிறார்கள்.

ஏழைகளுக்கு வாஸ்தவமாக நன்மை பண்ணுவதை யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் பொதுவாக அடக்கப் பண்பும் எளிமையும் உள்ள நம் ஏழை ஜனங்களை வீண் டாம்பீகத்திலும், பலவிதமான பொய் பித்தாலாட்டங்களிலும் தூண்டிவிட்டு, 'பட்ட கடனைத் தீர்க்கத்தான் வேண்டும் என்ற பெரிய தர்மத்துக்கு விரோதமாக நாம் போனாலும் ஸர்க்கார் நமக்குத்தான் ஆதரவாக இருக்கும்' என்று துணிச்சல் கொள்ள வைப்பது நன்மை இல்லவே இல்லை; தீமைதான். 'வோட்டுப் பெட்டி பலம் நமக்குத் தானிருக்கிறது' என்று அவர்களை எண்ண வைத்து, அதற்காக தர்ம பலத்தையும் தெய்வ பலத்தையும் அவர்கள் இழக்கும்படிச் செய்வது அவர்களுக்குச் செய்கிற தீமைதான்.

கடன் கொடுத்தவன் எப்படியெல்லாம் கடின சித்தனாகிக் கொடுமை பண்ணுகிறான் எனபதும் எனக்குத் தெரியாமலில்லை. அநியாய வட்டி வாங்குவது, எத்தனை திருப்பினாலும் அசலில் கழித்துக் கொள்ளாமல் வட்டியிலேயே கழித்துக் கொள்வது என்று அவர்களும் அநேக அக்ரமங்கள் பண்ணத்தான் பண்ணுகிறார்கள்.

கடன் வாங்குவது என்ற தப்பை ஒருவன் பண்ணுவதால்தான் இப்படி இன்னொருத்தன் (கடன் கொடுப்பவன்) பாவம் செய்பவனாக ஆகிறான். கடைசியில் ஸர்க்கார் அவனுக்கு நாமம் போடுகிறபோது அவனும் கஷ்டப்படுகிறான்.

ஆதலால், அடிமுதலில் எவனானாலும் கடன் என்றே போகாமல் தன் வருவாயில்தான் காலம் தள்ளுவது என்று ஆக்கிக்கொள்ள வேண்டும். கடன் கஸ்தியால்தான் அநேகர் திருடர்களாவது போலி ஸந்நியாஸிகளாகி ஊரை ஏமாற்றுவது. மானஸ்தர்களில் பலர் குடும்பத்தோடு பிராணஹானி பண்ணிக் கொள்வதாகவும் அவ்வப்போது பேப்பரில் பார்க்கும்போது மனஸ் வேதனைப்படுகிறது.

முன்னயே சொன்ன மாதிரி கடன் கொடுத்தவன், கடன் பட்டவன் என்ற இரண்டு பேர் மட்டுமில்லாமல் ஊரார் எல்லாருமே ஒருவன் கடனாளி என்றால் ''அவன் எங்கே நம்மை உபத்ரவம் பண்ண வருவானோ?'' என்று ஓடும்படியிருக்கிறது. கடன் பழக்க்த்தினால் இப்படி லோகம் முழுக்க சிரமங்கள் ஏற்படுவதால்தான், இந்த லோகத்திலேயே அதுதான் பெரிய தீட்டு என்று ஆசார்யாள் தீர்ப்புப் பண்ணிவிட்டார். பரோபகாரம் என்பதைச் சொல்லும்போது, உபகாரம் பண்ணாவிட்டாலும் பர அபகாரம் எப்படியெப்படிப் பண்ணாமலிருக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டுமல்லவா? Ten Commandments (கிறிஸ்தவர்களின் பத்துக் கட்டளைகள்) கூட எல்லாமே negative -ஆகத்தானே (இன்னின்னவற்றை செய்ய வேண்டும் என்பதற்குப் பதில் கூடாது என்பதாகத்தானே) இருக்கின்றன! வைதிகமான ஸாமான்ய தர்மங்களிலுள்ள அஸ்தேயம் (திருடாமை) , யோக சாஸ்திரத்திலுள்ள அபரிக்ரஹம் (பொருள் சேர்த்துக்கொள்ளாமை) என்பதாக 'நெகடிவ்'ஆக உள்ள இரண்டுமே பரோபகாரத்துக்கு அங்கம்தான். இந்த இரண்டையும் பின்பற்றினால் கருமித்தனம், ஊதாரித்தனம், கடன் வாங்குவது எல்லாமே போய்விடும்.

1 comment: