Courtesy:Sri.Mayavaram Guru
அருள் செய்வதிலும் நாடகம்.
ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய்
விட்டெதென்று கவலையுடன் ஒரு அம்மா வந்தார்.அவரை
கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.
பேச்சின் இடையில் "பெற்றம்" என்றால் என்ன? என்று பெரியவா
கேட்டார். பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் "கால் நடைகள்"
என்று பொருள் கூறி: திருப்பாவையில் கூட" பெற்றம்
மேய்த்துண்ணும் குலம்" என்று வந்திருக்கிறதே என்று
தான் சொன்னதை நிறுவினார்.
இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று கேட்டார்.
பெரியவா. ஆமாம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப்
பயன்படுத்தியிருக்கிறார் என்றார் அவர். அவர் அது சரி எந்த இடத்தில்
எதற்காகப் பாடினார் தெரியுமா? சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ப்ரவை
நாச்சியார் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டு, மீண்டும்
சங்கிலி நாச்சியார் என்பவரைத் தேடி போனார். அவள் மிக
எச்சரிக்கையாக,தன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம்-
அதிலும் அந்த ஊர்க்கோயிலில் உள்ள இறைவனைத் தொட்டுச்
செய்ய வேண்டும், அப்போதுதான் திருமணம் என்று சொல்லி
விடுகிறாள்.சிவபெருமான்தான் தம்பிரான் தோழராயிற்றே!
பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவில் சங்கிலி சொன்னதற்கு
சுந்தரரும் ஒப்புக்கொண்டார். நேரே ஆதிபுரீஸ்வரரிடம் போனார்.
நடந்ததைச் சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செய்து
கொடுக்கும்போது நீ இந்த சந்நதியில் இல்லாமல் வெளியே
மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்துவிடு.ஏனெனில் என் சத்தியத்தைக்
காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் உன்மேல்
ஆணையிட முடியாது என்கிறார்.சுவாமி ஒப்புக்கொண்டார்.
அதோடு நிற்காமல் சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவில் வந்து
"சுந்தரரை மகிழ மரத்தடியிலே சத்தியம் பண்ணித் தரச் சொல்லு"
என்று சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்தார். அவளும் கோயிலுக்கு
சுந்தரருடன் வந்ததும்,சுவாமி மேல் ஆணையிட வேண்டாம்.இந்த
மரத்தடியில் சத்தியம் செய்யுங்கள் போதும் என்று சொல்லி,
இக்கட்டில் அவரை மாட்டிவிட்டாள். சுந்தரர் பரமன் திருவிளையாடலைத்
தெரிந்து கொண்டார். வேறு வழியில்லாமல் சத்தியம் செய்தார்.
சிறிது நாட்கள் கூட அதைக் காப்பாற்ற முடியவில்லை.திருவாருர்
தியாகேசனைப் பிரிந்து இருக்க இயலாமல் கிளம்பிவிட்டார்.
திருவொற்றியூர் எல்லயைத் தாண்டியதும் இரண்டு கண்களும்
பார்வை இழந்தன.
சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும்
சமம்தான்!" தண்டித்தாலும் நீயே கதி!" என்று சிவனைப் போற்றி
சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகிவிட்டது.
இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா,
"இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்" என்று
முடித்தார். இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக்
கூடியவர் பெரியவா.
ஆலந்தான் உகந்து அமுது செயதானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாரே"
என்ற அந்த தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும்
பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச்
செய்தார்.
ஏதோ, "பெற்றம்" என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல்
பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி
பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி
வழிகாட்டிய அனுக்கிரகம் இது.
சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி
மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.
இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற
ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்.
No comments:
Post a Comment