Courtesy: Sri.Mannargudi Sitaraman Srinivasan
அஹம் ப்ரஹ்மாஸ்மி, சிவோஹம் என்று சொல்லுகிறீரே? நீரே பிரம்மம், நீரே
சிவம் என்றால் எப்படி? வேறு மாதிரிதானே தெரிகிறது?" – என்று மற்ற
ஸித்தாந்திகள் அத்வைதியைக் கேட்கிறார்கள். எல்லாம் பிரம்மம் என்றாலும்
தனியாக ஜீவன்கள் மாதிரி தெரியத்தானே செய்கிறது? இதற்கு அத்வைதி பதில்
சொல்லியாக வேண்டும். அத்வைத சாஸ்திரங்களில் இரண்டு விதமாக விடை
சொல்லியிருக்கிறது.
ஸ்வாமி நாமாவதெப்படியென்றால் அது இரண்டு தினுசு. ஒன்று: சூரியன் நன்றாகப்
பிரகாசமாக இருக்கும்பொழுது தண்ணீரில் கையைத் தோய்த்துக் கீழே தெளித்தால்
ஆயிரம் துளிகள் விழுகின்றன. அந்த ஆயிரம் துளிகளிலும் ஆயிரம் சூரியர்கள்
தெரிகிறார்கள். ஒரே சூரியன் அப்படி ஆயிரமாகத் தோன்றுகிறான். எந்தப்
பதார்த்தத்தில் தெரிகிறானோ அதற்குத் தக்கபடி அவனுடைய அளவும்
இருக்கின்றது. இதுபோலவேதான் பிரம்மமாகிற ஒரே சைதன்யம் (அறிவு) பலவிதமான
மனிதர்கள், பிராணி வர்க்கங்களில் பலவாறான அறிவுகளாகப் பிரதிபலித்து வேறு
வேறு என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. வாஸ்தவத்தில் ஒரே சூரியன் மாதிரி ஒரே
சைதன்யம்தான். இந்த வாதத்தை 'பிம்ப ப்ரதி பிம்ப வாதம்' என்று
சொல்வார்கள்.
அந்தத் துளிகளையெல்லாம் அழித்துவிட்டால் அப்பொழுது பிம்பம் ஒன்றும்
இராது. நம்முடைய மனசில்தான் பேதமாகத் தோன்றுகிற பிரதிபிம்பங்கள்
உண்டாகின்றன. இவை போய்விடும். ஆனால் சூரியன் இருக்கும். பவர் ஹவுஸில்
யந்திரம் ஓடினால் எலெக்ட்ரிஸிடி உண்டாகிறது; அதனால் வெளிச்சம்
உண்டாகிறது. யந்திரம் நின்றால் எலெக்ட்ரிஸிடி நின்றுவிடும். வெளிச்சமும்
இராது. ஓட்டந்தான் மனஸ். அந்த ஓட்டத்தை நிறுத்திவிட்டால் மனஸ் இல்லாமல்
போய்விடும். அப்பொழுது பிரதிபிம்பமும் இல்லை. பிரதிபிம்ப சூரியன் மாதிரி
துளித்துளி அறிவோடு இருக்கிற நாம், அசல் சூரியனாக அறிவுமயமாகி விடலாம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய
ஸ்வாமிகள்
No comments:
Post a Comment